"முத்துவேல் கருணாநிதி ஸ்டாலினாகிய நான்' என்று கடந்த 7-ம் தேதி மு.க.ஸ்டாலின் முதல்வராகப் பொறுப்பேற்றபோதே பலரது புருவமும் ஆச்சர்யத்தில் உயர்ந்தது. இரண்டு வார கால ஆட்சியில் அந்த ஆச்சரியத்தை நம்பிக்கையாக மாற்றுவதில் பெருமளவு வெற்றி பெற்றிருக்கிறார். கொரோனா பேரிடரைக் கடக்கும்போதுதான் ஸ்டாலின் தனது நிர்வாகத் திறமைக்குரிய மதிப்பெண்ணை மக்களிடம் பெறுவார். அதனைப் பெறுவதற்காக ஒவ்வொரு துறை சார்ந்தும் அவர் தீவிர கவனம் செலுத்துவதை எதிர்க்கட்சிகளாலும் மறுக்க முடியவில்லை.

Advertisment

cm-stalin

கொரோனா தடுப்பூசி விவகாரத்தில் மத்திய அரசின் ஆரம்பகட்ட தன்னிச்சையான போக்குகளும், குழப்பமான முடிவுகளும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தின. மாநில அரசுகள் தடுமாறின. தடுப்பூசிகளை மாநிலங்களுக்குப் பிரித்தளிப்பதில், கொரோனா பரவல் அதிகமாக உள்ள தமிழகத்துக்கு வழங்குவதைவிட கொரோனா பாதிப்பு குறைவாக உள்ள மாநிலங்களுக்கு பெருமளவு தடுப்பூசிகள் வழங்கப்பட்டிருப்பது தெரிய வந்தது. இதனைச் சுட்டிக்காட்டிய முதல்வர் ஸ்டாலின், தமிழகத்துக்கு தடுப்பூசிக்கான தேவை அதிகமிருப்பதாக பிரதமருக்கு கோரிக்கை வைத்தார். எனினும், அதற்காகக் காத்திருக்காமல், தமிழகத்துக்கான தடுப்பூசிகளை இறக்குமதி செய்வ தற்கு உலகளாவிய ஒப்பந்தங்கள் செய்யப்படும் என்று அறிவித்து செயலில் இறங்கினார்.

Advertisment

தடுப்பூசியைப் போலவே மருத்துவமனைகளில் ஆக்சிஜன் சிலிண்டருக்கான தட்டுப்பாடு நிலவுவதால், தூத்துக்குடியிலிருந்து, மேற்கு வங்கத்திலிருந்து, நெதர்லாந்திலிருந்தெல்லாம் ஆக்சிஜனை தமிழகத்துக்கு வரவழைத்தார். அதோடு, ஆக்சிஜனை நிரப்பி மருத்துவமனைகளுக்கு அனுப்புவதற்கான காலி சிலிண்டர்கள், கண்டெய்னர்களையும் தமிழகத்திலுள்ள தொழில் நிறுவனங்களிருந்தும், சிங்கப்பூரிலிருந்தும் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டார்.

இந்த பற்றாக்குறைக்கு நிரந்தரத் தீர்வாக, ஆக்சிஜன், தடுப்பூசிகள் மற்றும் உயிர் காக்கும் மருந்துகளை தமிழ்நாட்டிலேயே உற்பத்தி செய்வதற்கான நடவடிக்கை கள் எடுக்கப்படும் என்று முதல்வர் அறிவித்தார். இதனடிப்படையில், தமிழகத்தில் உற்பத்தி செய்ய முன்வரும் நிறுவனங்களோடு, தமிழக அரசின் டிட்கோ நிறுவனம் கூட்டாண்மை அடிப்படையில் இணைந்து செயல்படுமென்றும் தெரிவித்தார்.

Advertisment

mahesh

ரெம்டெசிவர் மருந்தைப் பெறுவதற்காக சென்னை கீழ்ப் பாக்கத்தில் நீண்ட வரிசையில் மணிக்கணக்காக நின்று மக்கள் அவதிப்படுவதைத் தடுப்பதற்காக, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கிடைக்க வழிவகை செய்தார். ஆனால் கொரோனா பரவலுக்கு இதுவும் ஒரு காரணமாகிவிடக்கூடாது என்ற எண்ணத்தில், ரெம்டெசிவர் மருந்துகளை மருத்துவமனைகள் மூலமாகவே தேவைப்படும் கொரோனா நோயாளிகளுக்கு விநியோகிக்க உத்தரவிடப்பட்டது. கொரோனா பேரிடர் போர்க்கால நடவடிக்கை களுக்கிடையில், ஆட்சிப் பொறுப்பேற்றதுமே தேர்தல் வாக்குறுதியில் குறிப்பிட்டபடி, பெண்களுக்கு இலவச பேருந்து சேவை, ஆவின் பால் விலை குறைப்பு ஆகியவற்றை நடைமுறைப்படுத்தினார். கொரோனா ஊரடங்கால் பொருளாதாரச்சூழல் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 4,000 ரூபாய் நிவாரண உதவி வழங்கும் திட்டத்தில் முதல் தவணையாக 2,000 ரூபாயை இம்மாதத்திலேயே வழங்குவதற்கான செயலில் இறங்கினார்.

"உங்கள் தொகுதியில் ஸ்டாலின்' என்ற பெயரில் தமிழகமெங்கும் பெறப்பட்ட மனுக்களுக்கு 100 நாட்களில் தீர்வு காணப்படும் என்று தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் ஸ்டாலின் பேசியபோது, எடப்பாடி பழனிசாமி, ஹெச்.ராஜா உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் அனைவரும் கிண்டலடித்தனர். ஆனால், ஆட்சிப் பொறுப்பேற்றவுடன், இதற்கு தீர்வு காண்பதற்காகவே "உங்கள் தொகுதியில் முதலமைச்சர்' என்ற துறை உருவாக்கப்பட்டு, சிறப்பு அலுவலராக ஷில்பா பிரபாகர் சதீஷ் என்பவர் நியமிக்கப்பட்டார். இத்துறையின்மூலமாக, கடந்த 18ம் தேதி முதற்கட்டமாக, சென்னை, திருவள்ளூர், இராணிப்பேட்டை, வேலூர், திருவாரூர் மற்றும் தேனி உள்ளிட்ட 6 மாவட்டங்களைச் சேர்ந்த 549 பேரின் புகார் மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டதன்மூலம் தன்மீதான விமர்சனங்களுக்குப் பதிலளித்தார்.

இதற்கிடையே, மத்திய அரசின் புதிய கல்விக்கொள்கை தொடர்பாக விவாதிப்பதற்காக, மாநில கல்விச் செயலாளர்களின் கூட்டத்திற்கு மத்திய அரசு ஏற்பாடு செய்தது. பழைய குலக்கல்வி முறை, இந்தி-சமஸ்கிருத திணிப்பு, மாநில உரிமைகள் பறிப்பு ஆகியவற்றைக் கொண்ட புதிய கல்விக்கொள்கையை தி.மு.க.வும் அதன் கூட்டணிக் கட்சிகளும் எதிர்த்து வந்தன.

அதை அனுமதிக்கமாட்டோம் என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி ஏற்கனவே அறிவித்த நிலையில், இந்த விவகாரம் குறித்து அமைச்சர்கள் மட்டத்தில் இல்லாமல், செயலாளர்கள் மட்டத்தில் ஆலோசனை நடத்துவது தவறு என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியாலுக்கு தனது எதிர்ப்பை கடிதத் தின்மூலம் தெரிவித்தார். அதோடு, அந்த ஆலோசனைக் கூட்டத்தையும் தமிழக அரசு புறக்கணித்தது.

மாநிலங்களுக்கான ஜி.எஸ்.டி. உள்ளிட்ட நிதிப்பங்கினைப் பெறுவது, நீட் தேர்வை ரத்து செய்வது, வேளாண் சட்டங்கள், சி.ஏ.ஏ. சட்டத்தை அமல் படுத்த மறுப்பது உள்பட பல்வேறு சவால்கள் அணிவகுத்து நிற்கின்றன. மத்திய அரசு என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டிருந்ததற்கு பதில் எழுதும்போது ஒன்றிய அரசு என ஸ்டாலின் குறிப்பிட்டதிலிருந்தே உற்று நோக்க ஆரம்பித்துவிட்டது டெல்லி.

-தெ.சு.கவுதமன்