புதுச்சேரி -காரைக்கால் மாவட் டம் நெடுங்காடு தனித் தொகுதியில் 1980 முதல் எம்.எல்.ஏ.வாக 6 முறை இருந்தவர் சந்திரகாசு. காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் துணைசபாநாயகர், சபா நாயகர், அமைச்சர் என வலிமையாக இருந்தார். காங்கிரஸிலிருந்து ரங்கசாமி பிரிந்து என்.ஆர்.காங்கிரஸ் துவங்கியபோது, அக்கட்சியில் இணைந்தார். 2011-ல் நெடுங்காடு தொகுதியில் வெற்றி பெற்றவருக்கு வேளாண்துறை அமைச்சர் பதவி தந்தார் ரங்கசாமி. அமைச்சராக இருந்தபோது உடல்நிலை சரியில்லாத காரணத்தால் 2016 தேர்தலில் தன் மகள் சந்திர பிரியங்காவுக்கு சீட் கேட்டு ரங்கசாமியிடம் கோரிக்கை வைத்தார் சந்திரகாசு. 

Advertisment

தனது நெருங்கிய நண்பர் என்பதால் 2016-ல் சந்திரகாசு மகள் சந்திர பிரியங்காவை நிறுத்தினார் ரங்கசாமி. நடிகையாக வரமுயற்சித்தவர் எம்.எல்.ஏ. வாக வெற்றிபெற்றார். மகளின் வெற்றியைப் பார்த்துவிட்டு 2017-ல் சந்திரகாசு மறைந்துவிட் டார். இளம்வயதில் எம்.எல்.ஏ.வான சந்திர பிரியங்கா, ரங்கசாமியை "அப்பா... அப்பா...' என அழைத்தபடி வலம் வந்தார். 2021-ஆம் ஆண்டு தேர்தலில் மீண்டும் வெற்றிபெற்ற சந்திரபிரியங்காவை தனது அமைச்சரவையில், போக்குவரத்துத் துறை, ஆதிதிராவிடர் நலத்துறை, தொழிலாளர் நலத்துறை அமைச்சராக்கினார் முதலமைச்சர் ரங்கசாமி. 

இரண்டரை ஆண்டுகள் அமைச்சராக இருந்த சந்திர பிரியங்காவிடமிருந்து 2023 அக்டோபர் மாதம் திடீரென அமைச்சர் பதவி பறிக்கப்பட்டது. "நான் ஜாதீய ரீதியிலும், பாலியல் ரீதியிலும் தொடர்ந்து தாக்குதலுக்கு உள்ளாவதாக உணர்கிறேன். ஆதிக்க சக்திகளுக்கு எதிராக தொடர்ந்து போராடி அமைச்சராக நீடிக்கமுடி யாது என்பதால் பதவியிலிருந்து விலகுகிறேன்' என சந்திரபிரியங்கா வெளியிட்ட அறிவிப்பு... புதுவையை பரபரப்பாக்கி அடங்கியது. 

இந்நிலையில் திடீரென அமைச்சர்கள் இருவர்மீது குற்றம்சாட்டி ஆகஸ்ட் 30-ஆம் தேதி வீடியோ வெளியிட்டு பரபரப்பாக்கியுள்ளார். அந்த வீடியோவில், "மாநிலத்தில் பேனர் வைக்க கட்டுப் பாடு உள்ளது. அனுமதியில்லாமல் வைக்கப்படும் பேனர்கள் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்துகிறார்கள். என் ஆதரவாளர்கள் வைத்த ஒரு பேனர் சம்பந்தமாக அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்துள்ளார்கள், எனக்கும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் வந்துள்ளது.  இதன் பின்னணியில் ஒரு அமைச்சர் இருக்கிறார். நான் என் வேலையைப் பார்த்துக்கொண்டிருக்கிறேன். என்னை ஏன் தொந்தரவு செய்கிறீர்கள்? நான் அமைச்சராக இருந்தபோது இரண்டு அமைச்சர்கள் எனக்கு பலவித தொந்தரவு தந்தார்கள், அதையெல்லாம் கடந்துதான் அரசியலில் இருக்கிறேன். எனக்குத் தந்த தொந்தரவு குறித்து நான் வெளியே சொல்வதில்லை. எனக்கு தொந்தரவு தருவது யார் என்பதை வெளிப்படுத்தவே இந்த வீடியோ. நான் இதையெல்லாம் பொறுத்துக்கொண்டிருக்க காரணம், அய்யா என்.ஆர்.தான். என் தந்தையைப் போன்ற அவர், "இதையெல்லாம் கண்டு கொள்ளாமல் அரசியல் பணியைப் பார்' எனச் சொன்னதால் என் வேலையைப் பார்க்கிறேன். உங்கள் தொகுதியில் பெண் வாக்காளர்கள் இருக்கிறார்கள், நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்'' என 12 நிமிட ஆடியோவில் பேசியுள்ளார். 

Advertisment

pondy1

இதுகுறித்து முன்னாள் அமைச்சர், எம்.எல்.ஏ. சந்திரபிரியங்காவை தொடர்புகொண்டு நாம் கேட்டபோது, "நான் அமைச்சர் பதவியில் இருக்கும்போதும் அமைச்சர்களின் டார்ச்சர் இருந்தது, பதவியிலிருந்து விலகியபின்பும் இருக்கிறது. இதுகுறித்து நான் முதலமைச்சர் அவர்களிடம் தெரிவித்திருந்தேன், அவரும் அழைத்து விசாரித்தார். முதல்வர் முன்பு அப்படியெல்லாம் இல்லை எனச்சொல்லிவிட்டு வெளியேவந்து மீண்டும்                  எனக்கு டார்ச்சர் தரத்தொடங்கியுள்ளார்கள். அவர்கள் குறித்து முதலமைச்சருக்கு நன்றாகத் தெரியும். எவ்வளவு நாள்தான் பொறுத்துக்கொள்வது, இந்த வீடியோவுக்குப் பின்பும் சம்பந்தப்பட்ட அமைச்சரின் ஆதரவாளர்கள், என் பழைய விவகாரங்களை பேசி நாங்கள் மாறமாட்டோம் என வெளிப்படுத்துகிறார்கள்''’என்றார்.

புதுச்சேரியில் என்.ஆர்.சி.யைச் சேர்ந்த 3 அமைச்சர்கள், பா.ஜ.க.வை சேர்ந்த 2 அமைச்சர்கள் என ஐவர் உள்ளனர். இதில் எம்.எல்.ஏவுக்கு டார்ச்சர் செய்யும் இரண்டு அமைச்சர்கள் யார் என தலைமைச்செயலக வட்டாரத்தில் விசாரித்தபோது, "பா.ஜ.க.வைச் சேர்ந்த அமைச்சர் (நமச்சிவாயமும்), என்.ஆர்.சி கட்சியின் அமைச்சரும் (திருமுருகன்) என்கிறார்கள். பா.ஜ.க. அமைச்சரின் நோக்கம், அந்த தொகுதியில் சந்திரபிரியங்காவை டம்மியாக்கவேண்டும், அங்கே பா.ஜ.க. வளரவேண்டும், தன் ஆள் ஒருவருக்கு சீட் கிடைக்கவேண்டும் என நினைக்கிறார். என்.ஆர்.சி கட்சி அமைச்சரோ, ஒரு உறையில் இரண்டு கத்தி இருக்கக்கூடாது என அரசியல் செய்கிறார். 

Advertisment

சந்திரபிரியங்கா அமைச்சராக இருந்தபோது, ரங்கசாமிக்கு மிக நெருக்கமான பிரபல மருத்துவக்கல்லூரி உரிமையாளரிடம் அதிக நெருக்கம் பாராட்டியது இருவர் குடும்பத்திலும் புயல் வீசியது. அதனாலயே அவரை அமைச்சர் பதவியிலிருந்து நீக்கினார். சந்திரபிரியங்காவும் தனது கணவரிடமிருந்து டைவர்ஸ் வேண்டும் என நீதிமன்றம் சென்றார். அவரை வீழ்த்த இப்படிப்பட்ட வில்லங்கங்களை அவரது அரசியல் எதிரிகள் பயன்படுத்துகிறார்கள். சந்திர பிரியங்காவும் ஏதோ திட்டத்தோடுதான் இப்போது பேசுகிறார்'' என்கிறார்கள். 

"ஆளும்கட்சி அமைச்சர்கள் பெண் எம்.எல்.ஏ.வுக்கு பாதுகாப்பில்லாத நிலையை உருவாக்கியுள்ளார்கள் என்றால், சாமான்ய பெண்களுக்கு பாதுகாப்பு ஏது?' என காங்கிரஸ், தி.மு.க., பெண்கள் அமைப்புகள் அனைத்தும் என்.ஆர்.காங்கிரஸ் -பா.ஜ.க. ஆட்சிக்கு எதிராக கேள்வியெழுப்பியுள்ளன. பதில் சொல்லமுடியாமல் தவிக்கிறது ஆளும்கட்சி.

-தமிழ்குரு