"ஹலோ தலைவரே, அமைச்சர்கள் ஹிட் லிஸ்ட் ரெடியாகியிருக்கு.''”
"ஆமாம்பா, முதல்வர் நாளுக்கு நாள் அடக்கத்தைக் கடைப்பிடிக்கிறார். ஆனா, தலை அமைதியாயிருக்க வால் ஆடற மாதிரி, அவருக்குக் கீழ இருக்கும் அமைச்சர்கள்ல சிலர், ஆரம்பத்தில் இருந்த அடக்கத்தைத் தொலைச்சிட்டு, ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டதை முதல்வர் தனக்கு வரும் ரிப்போர்ட்டுகள் மூலம் சீரியஸா கவனிப்பதை ஏற்கனவே நாம பேசியிருக்கோமே...''”
"உண்மைதாங்க தலைவரே, அமைச்சர்களின் நடவடிக்கையைக் கூர்ந்து கவனிக்கும் முதல்வர் ஸ்டாலின், சிலருக்கு மறைமுகமாகவும் நேரடியாகவும் எச்சரிக்கை கொடுத்தாராம். அதன்பிறகும், சிலரிடம் மாற்றம் இல்லாததால், ஒரு ஹிட் லிஸ்ட்டை அவர் தயாரிச்சிருக்காராம். ஹிட் லிஸ்ட்டில் உள்ள பெயர்கள் பற்றி கோட்டையில் பலவித யூகங்கள் வெளியாகுது.''
"ஓ...''”
"கோட்டை அதிகாரிகள் தரப்பிலும் மாற்றம் இருக்கும்னு டாக் அடிபடுதேப்பா.''”
"ஆமாங்க தலைவரே, கலைஞர் ஆட்சியில் உள்ளாட்சித்துறை அமைச்சராகவும் துணை முதல்வராகவும் ஸ்டாலின் இருந்தப்ப அவரோட நிர்வாகத்துக்கு துணையா இருந்த ஐ.ஏ.எஸ். அதிகாரியான அசோக்வரதன் ஷெட்டி, இப்ப கனடாவில் இருக்கார். அவரை சென்னைக்கு அழைத்து வந்து சிறப்புப் பதவி ஒன்றில் உட்கார வைக்கும் முயற்சிகள் நடக்குதாம். அதேபோல் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளில், மின்வாரியத்தில் இருக்கும் ராஜேஷ் லக்கானியையும், சென்னை கார்ப்பரேஷனில் இருக்கும் ககன்தீப்சிங் பேடியை யும் தலைமைச் செயலகத்துக்குள் கொண்டுவரவும் திட்டம் இருக்கு தாம். அதுபோலவே, டெல்லி பிரதமர் அலுவலகத்தில் இருந்த அமுதா ஐ.ஏ.எஸ்.சை முதல்வரின் செயலாளராகக் கொண்டு வரும் திட்டத்தைப் பற்றியும் மூன்று மாதங் களுக்கு முன்பே நாம் சொல்லியிருந்தோம்.''“
"அமுதா இப்ப தமிழக அரசுப் பணிக்கு வந்துவிட்டாரே!''”
"மத்திய அரசின் அனுமதியோடு அமுதா இப்ப, மாநில அரசுப் பணிக்கு திரும்பியிருக்கிறார். மத்திய அரசில் பிரதமரின் நேரடிக்
கண்காணிப்பு மிக்க பொறுப்பில் தனக்கு இருந்த சுதந்திரம், மாநில அரசுப் பொறுப்பிலும் இருக்க வேண்டும்ங்கிறதுதான் அமுதாவின் எதிர்பார்ப்பு. அதற்கு முதல்வர் தரப்பிலும் ஒப்புதல் தரப்பட்டதால், மாநில அரசுப் பணிக்குத் திரும்பியிருக்கிறார். அவருக்கு முதல்வரின் செயலாளர், அல்லது உள் துறை, நிதித்துறை, சுகாதாரத்துறை, தொழில்துறை, உயர்கல்வித்துறை இந்த ஆறில் ஒரு பொறுப்பு விரைவில் கிடைக்கும்னு கோட்டை வட்டாரத்தில் சொல்றாங்க.''”
"மின்வாரியத்தில் ஷாக் அடிக்கிற ஒரு அதிகாரி இருக்கிறாரேப்பா?''”
"உண்மைதாங்க தலைவரே, மின்சார வாரியத்தில் டெபுடி டைரக்டராக இருப்பவர் சிவலிங்கராஜா. இவருக்கு, வாரியத்தில் நடக்கும் அனைத்து இட மாறுதல்களையும் கவனிக்கும் பொறுப்பு கொடுக்கப்பட்டிருக்கு. இதை சாதகமாக்கிக்கிட்ட அந்த அதிகாரி, துறை அமைச்சரான செந்தில் பாலாஜியின் பெயரைப் பயன்படுத்திக்கிட்டு புகுந்து விளையாடறாராம். பேரங்களிலும் கறார்தானாம். இவர் பெயரைக் கேட்டாலே துறையில் பலருக்கும் ஷாக் அடிக்கிதாம். அமைச்சருக்குத் தெரியாமலேயே, அவர் கல்லா கட்டுவதை, மத்திய உளவுத்துறையும் தமிழக பா.ஜ.க.வும் கண்காணித்து வருகிறது. எனவே விவகாரம் பெரிதாக வெடிக்க இருக்கிறதாம்.''”
"காவல்துறையில் இருக்கும் சில அதிகாரிகள் பற்றியும் சர்ச்சைகள் கிளம்புதே?''”
"அதுவும் உண்மைதாங்க தலைவரே. தஞ்சை மாவட்டத்தில் நியமிக்கப்படும் காவல்துறை அதிகாரிகளில் பலரும் ஏதாவது ஒரு சர்ச்சையில் சிக்கிக்கொண்டே தான் இருக்கிறார்கள். அதிலும் கடந்த முறை தேஷ்முக்சேகர் சஞ்சய், தஞ்சை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக இருந்தபோது, கும்பகோணம் ஹெலிகாப்டர் சகோதரர்களை கைது செய்யாமல் இருந்தது தொடர்பா புகார் எழ, அவர் அதிரடியாகப் பணியிடமாற்றம் செய்யப்பட்டார். அதேபோல் இப்போது, மத்திய மண்டல காவல்துறை துணைத்தலைவர் ப்ரவேஷ் குமார் சர்ச்சையில் சிக்கியிருக்கிறார். கடந்த வாரம் 18 ஆய்வாளர்கள் பணியிட மாற்றம் செய்யப் பட்டனர். அதில் பெரிய அளவில் பணம் கைமாறி யிருக்கிறதாம். மேலும் 42 ஆய்வாளர்களிடம் இப்போது டீலிங் நடக்கிறதாம். விருப்பமான இடத்தில் பணிபுரிய விரும்புகிறவர்கள், அவரது கிச்சன் லேடி பாஸிடம் 2 லட்சம் மொய் எழுதவேண்டுமாம்.''”
"உள்ளாட்சித் தேர்தலில் பா.ம.க. போட்ட கணக்கு, அந்தக் கட்சியைக் கவிழ்த்துவிட்டதே?''”
"ஆமாங்க தலைவரே, ஊரக உள்ளாட்சி தேர்தலில் ஏற்பட்ட தோல்வியைத் தொடர்ந்து பா.ம.க.வின் சிறப்பு பொதுக்குழு கூட்டத்தை இணைய வழியில் 16-ந் தேதி நடத்தினார் டாக்டர் ராமதாஸ். அப்போது, பா.ம.க.வுக்கு ஏற்பட்ட தோல்வியைச் சுட்டிக்காட்டி நிர்வாகிகளிடம் கடுமையாக கோபத்தை அவர் காட்டினாராம். கடைசியாக, "பா.ம.க. இனி, தனித்துதான் போட்டியிடும். இதை ஏற்பவர்கள் மட்டும் கட்சியில் இருங்கள். மாற்றுக் கருத்துள்ள வர்கள் வெளியேற லாம்'னு அவர் வெடித்திருக்கிறார். கட்சியினரோ, "ஆளும் கட்சியும் எதிர்க் கட்சியும் பணத்தை தண்ணீராகச் செலவழித்தார்கள்' என்று சொன்னதை, அவர் ஏற்கவில்லையாம். இந்த பொதுக்குழுவின் ஆலோ சனைகளைத் தொடர்ந்து, தமிழகத்தில் ஆட்சி யமைக்கும் தனிப்பெரும் கட்சியாக பா.ம.க.வை வளர்த்தெடுக்க உறுதியேற்கும் தீர்மானம் உட்பட 2 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டிருக்கு.''”
"ம்...''”
"பா.ம.க.வின் நிர்வாக அமைப்பில் மாநில துணைப் பொதுச்செயலாளர்கள் என்ற பதவி உண்டு. இவர்களின் அதிகார கட்டுப்பாட்டின் கீழ்தான் கட்சியின் மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் செயல்படுவார்கள். தி.மு.க, அ.தி.மு.க.வைப் போல பா.ம.க.வில் உள்ள மா.செ.க்களுக்கு தனி அதிகாரமில்லை. மாவட்ட அரசியலை கட்டுப்படுத்துதல், செயல்படுத்தல் என அனைத்து அதிகாரங்களும் துணைப் பொதுச் செயலாளர்களுக்குத்தான் உண்டு. மாவட்டங்களில் கட்சியை வளர்க்கும் பொறுப்பு மா.செ.க்களுக்கு தான் இருக்கிறது. ஆனால், அவர்களிடம் அதிகாரமில்லை என்பதால் கட்சியை வளர்ப்பதில் அவர்கள் அக்கறை காட்டுவதில்லை. இதனை ராமதாஸின் பார்வைக்கு கொண்டு சென்றுள்ள கட்சியின் அறிவுஜீவிகள், "மாவட்டத்தை அறிந்தவர்கள் மா.செ.க்கள்தான். அதனால், திராவிட கட்சிகளிடத்தில் இருப்பது போல மா.செ.க்களுக்கு அதிகாரம் வழங்குங்கள்' என வலியுறுத்தியுள்ளனர். அதனை ராமதாசும் ஏற்றுக்கொண்ட நிலையில்தான், பா.ம.க.வின் சட்ட விதிகளில் மாற்றத்தை கொண்டுவந்துள்ளார் ராமதாஸ். அதன்படி, துணைப் பொதுச் செயலாளர் என்ற பதவி ரத்து செய்யப்பட்டு, மா.செ.க்களுக்கு அதிகாரம் வழங்கும் திருத்தத்தை செய்துள்ளார்.''”
"மர்டர் விவகாரத்தில் சிக்கிய கடலூர் தி.மு.க. எம்.பி., கஸ்டடி விசாரணையில் ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்திருக்கிறாராமே?''”
"எம்.பி.யோட முந்திரி தொழிற்சாலையில் வேலை பார்த்த தொழிலாளி கோவிந்தராஜ், மர்மமான முறையில் இறந்துபோன வழக்கில் ரமேஷ் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டி ருக்கிறது. அவரைக் கஸ்டடியில் வைத்து சி.பி.சி.ஐ.டி. போலீஸ் டீம் விசாரித்தது. அப்போது அவரிடம் வாக்குமூலம் கேட்டபோது, "கோவிந்த ராஜை நான் தொடக்கூட இல்லை' என்று ஆரம்பத்தில் மறுத்தாராம். உடனே, இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட மற்ற 4 பேர்களின் வாக்கு மூலத்தையும், சில சி.சி.டி.வி. காட்சிகளையும், போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டையும் காட்டி, அதிகாரிகள் கடுமை காட்டியதும், அவர், "கோவிந்த ராஜைக் கொல்ல வேண்டும் என்கிற எண்ணத்தில் நான் அவரை அடிக்கவில்லை' என்று அழுததோடு, அந்த வழக்கில் இருந்து எப்படியாச்சும் தன்னைக் காப்பாற்றும்படி கெஞ்சினாராம்.''”
"நானும் ஒரு முக்கியமான தகவலைச் சொல்றேன். ஜெ.வின் சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசியோடு கைதான ஜெ.வின் முன்னாள் வளர்ப்பு மகன் சுதாகரன், இப்போது வெளியே வந்திருக்கிறார். அவரைப் பார்த்த அவரது குடும்பத்தினரும் உறவினர்களும் அதிர்ச்சியில் உறைந்து போய்விட்டார்களாம். காரணம், அவர் சிறையில் கஞ்சா பழக்கத்திற்கு அடிமையானவராகத் திரும்பியிருக்கிறாராம். அவரது நிலையைப் பார்த்த அவரது குடும்பத்தினர், அவரை மறுவாழ்வு மையத்தில் சேர்க்கும் முடிவிற்கு வந்திருக்கிறார்களாம்.''”