சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஜூன் 7, 8 தேதிகளில் இந்து சமய அறநிலையத் துறையினர் கோவில் சொத்து விவரங்கள் உள்ளிட்டவை களை ஆய்வுசெய்யப்போவதாக கடிதமளித்துள்ளனர். இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து தீட்சிதர்கள் ஜனாதிபதி , பிரதமர், இந்து சமய அறநிலைத்துறையினர் உள்ளிட்டவர் களுக்கு கடிதம் அனுப்பியுள்ளனர்.

இந்நிலையில் இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, ஜூன் 6-ஆம் தேதி சென்னையிலிருந்து வடலூர் வள்ளலார் சபைக்கு செல்லும் வழியில் காலை 6 மணிக்கு கடலூரைத் தாண்டியபோது உடனிருந்தவர்கள் இதுதான் சிதம்பரம் செல்லும் சாலை என்று கூறியுள்ளனர். உடனே அமைச்சர் சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு வண்டியை விடுங்கள் என்று கூற, உடன் வந்த அதிகாரி களுக்கு ஒன்றும் புரியவில்லை.

cc

Advertisment

நடராஜர் கோவிலுக்கு வந்த அமைச்சர், கனகசபையில் ஏறி தரிசனம் செய்தார். பின்னர் கோவில் வளாகத்திலுள்ள கோவிந்தராஜா சன்னதிக்குச் சென்று தரிசித்தார். தரிசனம் முடிந்து வெளியேவந்த அமைச்சரை தீட்சிதர்கள் அவர்களது அலுவலகத்திற்கு அழைத்தனர். அதற்கு அமைச்சர், "கோவில் வளாகமே நல்லாதானே இருக்கு. இங்கேயே தரையில் அமரலாம் என்று தரையில் அமர்ந்தார். தீட்சிதர்களுடன் அமர்ந்து கோவில் செயல்பாடுகள் குறித்துப் பேசினார் அமைச்சர்.

"இந்த கோவில் மன்னர்கள் கட்டியதுதானே'' என்று அமைச்சர் கூறினார். அதற்கு தீட்சிதர்கள், "வீடுகள்கூடகொத்தனார்தான் கட்டுகிறார்கள்'' என்று பதில் கூறினர். அதற்கு அமைச்சர், "அதற்கு வீட்டு உரிமையாளர்கள் கூலி கொடுக்கிறார்கள். நீங்கள் கோவிலைக் கட்ட கூலி கொடுத்தீர்களா? பூஜை செய்யவே வந்தீர்கள். எனவே கோர்ட்டு நடைமுறை வேற, அரசாங்க நடைமுறை வேற'' என பேசினார்.

தீட்சிதர்களுடன் வந்திருந்த பள்ளிசெல்லும் தீட்சிதர்களின் குழந்தை களை அழைத்து, "என்ன படிக்கிறீர்கள்'' என அமைச்சர் கேட்க, அவர்கள் வேதம் படிப்பதாகக் கூறினார்கள். உடனே, “"வேதத்துடன், பாடக் கல்வியும் சேர்த்துப் படியுங்கள்''’என அறிவுரை கூறினார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், “"கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக வந்ததாகவும், இந்து அறநிலையத்துறை சட்ட திட்டங்கள் அனைத்தையும் ஒருங்கிணைத்து யாருக்கும் எந்த அளவிலும் சிறு மனக்கஷ்டம் இல்லாமல் அனைவரும் இன்புற்று வாழவேண்டும் என்பதுதான் தமிழக முதல்வரின் விருப்பம். சிதம்பரம் நடராஜர் கோவில் சம்பந்தமாக ஒரு சுமுக தீர்வு ஏற்படும். கோவிலிலுள்ள கோவிந்தராஜ பெருமாள் கோவிலுக்கு கும்பாபிஷேகம் நடத்துவது குறித்து முதல்வரின் கவனத்திற்கு எடுத்துச்சென்று தீட்சிதர்களிடம் கலந்து பேசி நடவடிக்கை எடுக்கப்படும். தமிழகத்திலுள்ள அனைத்து ஆதீனங்களும் முதல்வரின் பக்கம்தான் உள்ளனர். மதுரை ஆதீனம் அவரை முன்னிலைப் படுத்துவதற்காக பேசிவருகிறார். அதனை ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ளக் கூடாது''’என்றார்.

-காளிதாஸ்