அ.தி.மு.க.வில் சில மாவட்டங்களில் அமைச்சர்களுக்கும் மா.செ.க்களுக்குமிடையே நல்ல அண்டர் ஸ்டேண்டிங் இருக்கும். "பார்டரைத் தாண்டி நீயும் வரக்கூடாது, நானும் வரமாட்டேன், ஆனா காரியம் கச்சிதமா நடக்கணும்' என்ற ஒப்பந்தத்தை ஒழுங்காக கடைப்பிடித்து கல்லா கட்டுவார்கள். ஆனால் திருவண்ணாமலையிலோ அமைச்சர் சேவூர் ராமச்சந்திரனும் தெற்கு மா.செ. ராஜனும் முன்ஜென்ம பகைபோல் முட்டி மோதியபடியே இருக்கிறார்கள். இவர்களின் பவர் பாலிடிக்ஸை நக்கீரனில் பல முறை எழுதியுள்ளோம். இனி வருவது லேட்டஸ்ட் மல்லுக்கட்டும் காலை வாருதலும்.
""பத்து நாட்களுக்கு முன்பாக கீழ்பெண்ணாத்தூரில் நடந்த அரசு விழா ஒன்றில், அமைச்சர் சேவூர் ராமச்சந்திரனை மேடையில் வைத்துக் கொண்டே, கடுமையான வார்த்தைகளால் அவரை அர்ச்சனை செய்தார் மா.செ. ராஜன். ஒரு கட்டத்துக்கு மேல் இருவருக்குமிடையே கைகலப்பு நடக்கப் போகும் அபாயத்தை உணர்ந்து, மா.செ. ராஜனை தடுக்க முயன்றார் அமைச்சரின் பி.எஸ்.ஓ. ஆனால் அவரின் சட்டையைப் பிடித்து தள்ளிவிட்டார் ராஜன்.
இந்த விவகாரம் முழுவதையும் முதல்வர் எடப்பாடியின் கவனத்திற்கு உளவுத்துறையினர் கொண்டு சென்றனர். இனிமேலும் ராஜனை மா.செ. பதவியில் நீடிக்கவிட்டால் சிக்கலாகிவிடும் என்ற முடிவுக்கு வந்தார் எடப்பாடி. சேவூரார் எப்படியும் ராஜனுக்கு ஆப்பு வச்சிருவார், அந்த இடத்தில் நாம உட்கார்ந்துவிட வேண்டும் என்ற முடிவோடு, மாஜி அமைச்சர்களான ராமச்சந்திரன், அக்ரி கிருஷ்ணமூர்த்தி, கலசப்பாக்கம் எம்.எல்.ஏ. பன்னீர்செல்வம், ந.செ. செல்வம் ஆகியோர் சென்னையில் டேரா போட்டனர்.
இந்த சீன்லதான் ட்விஸ்ட் வச்சாரு அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன். நேரா எடப்பாடியிடம் போனார். "பெரும்பாலான மாவட்டங்கள்ல மா.செ.க்களுக்கும் அமைச்சர்களுக்கும் ஒத்துவரதில்ல. எந்த வேலை நடந்தாலும் மா.செ.க்களுக்கு 3% கமிஷன் கொடுக்க வேண்டியிருக்கு. அது போக அவர்கள் சொல்லும் ஆட்களுக்குத்தான் வேலையும் கொடுக்கணும். இதனால் எங்க பொழப்புக்கு சிக்கல் வருது. அதனால் திருவண்ணாமலை தெற்கு மா.செ.வா என்னை நியமிங்க, எல்லா பிரச்சனையும் சரியாயிரும்'’என கொக்கியைப் போட்டார் அமைச்சர்.
"அப்படியே ஆகட்டும்' எனச் சொன்ன எடப்பாடி டிச.24-ஆம் தேதி, தெற்கு மா.செ. ராஜனை தூக்கிவிட்டு, அமைச்சர் சேவூராரை அந்த இடத்தில் உட்காரவைத்துவிட்டார். "அய்யோ போச்சே அத்தனையும் போச்சே...' என நொந்துவிட்டார்கள் மா.செ. பதவியை குறி வைத்தவர்கள்.
அமைச்சரின் வேண்டுகோளுக்காக வடக்கு மாவட்டத்தில் இருந்த ஆரணியை தெற்கு மாவட்டத்திலும் தெற்கில் இருந்த கீழ்பெண்ணாத்தூரை வடக்கிலும் சேர்த்து புதுக்குழப்பத்திற்கு பிள்ளையார் சுழி போட்டுள்ளார் எடப்பாடி''’என்கிறார்கள் மாவட்ட ர.ர.க்கள்.
-து. ராஜா