தி.மு.க. எம்.எல்.ஏ. ராதாமணி மரணம் அடைந்ததைத் தொடர்ந்து இடைத்தேர்தலை சந்திக்கப் போகும் விக்கிரவாண்டியில் போட்டி யிட தி.மு.க.விலும் அ.தி.மு.க.விலும் போட்டி கடுமையாகி இருக்கிறது.

2011-ஆம் ஆண்டு தொகுதி மறுசீரமைப்பில் உருவான விக்கிரவாண்டித் தொகுதியில் 2011-ல் சி.பி.எம். வேட்பாளர் ராமமூர்த்தியும், 2016-ல் தி.மு.க. சார்பில் போட்டியிட்ட ராதாமணியும் வெற்றி பெற்றனர். இடைத்தேர்தல் நடக்கப் போகும் இந்த தொகுதியில் தி.மு.க. சார்பில் மாவட்டதுணை செயலாளர் ஜெயச்சந்திரன், விவசாய அணியைச் சேர்ந்த பாபுஜீவானந்தம், மேற்கு ஒன்றிய செயலாளர் வேம்பி ரவி, கிழக்கு ஒன்றிய செயலாளர் ரவிதுரை, மாவட்ட பொருளாளர் புகழேந்தி, செஞ்சி சிவா என்று பலரும் சீட் கேட்கும் முனைப்பில் இருக்கிறார் கள். ஆனால், மாவட்ட செயலாளர் பொன்முடி யின் ஆதரவு புகழேந்திக்கே இருப்பதாக கூறுகிறார்கள்.

vv

அ.தி.மு.க. சார்பில் கடந்த தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்த ஒன்றிய செயலாளர் சிந்தாமணிவேலு, பொதுக்குழு உறுப்பினர் எசாலம் பன்னீர்செல்வம், தொழிலதிபர் து.ரவிசுப்பிரமணியன், காணை ஒன்றிய செயலாளர் முத்தமிழ்செல்வன் என்று பலர் விருப்பத்துடன் இருக்கிறார் கள். இவர்களைத் தாண்டி, அமைச்சர் சி.வி.சண்முகத்தின் சகோதரரும் "நியூஸ் ஜெ.' நிர்வாக இயக்குநருமான ராதாகிருஷ்ணனும் ஆசைப்படுகிறார். எம்.பி. தேர்தலில் வாய்ப்புக்கேட்டு முடியாமல் போனது. இப்போது இடைத்தேர்தலில் போட்டியிட்டு அரசியலில் வெளிப்படையாக குதிக்க விரும்புகிறார்.

Advertisment

நான்குவழிச் சாலைக்கு இருபுறமும் 116 கிராமங்களையும் 2 லட்சம் வாக்காளர்களை யும் கொண்டது இந்தத் தொகுதி. பெரும்பகுதி வன்னியர்களைக் கொண்டது இந்தத் தொகுதி. 2016 தேர்தலில் பா.ம.க. தனித்துப் போட்டி யிட்டு 42 ஆயிரம் வாக்குகளைப் பெற்றது. இப்போது அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க. இருப்பதாலும், அ.தி.மு.க. சார்பில் பணம் தண்ணீராய் இறங்கும் என்பதாலும் சீட் கேட்பதில் போட்டி உருவாகும் என்கிறார்கள். அதேசமயம், இன்னும் ஒன்றரை ஆண்டுகளே அவகாசம் இருக்கிற நிலையில் தி.மு.க. சார்பில் சொந்த பணத்தை செலவழித்து போட்டியிட விருப்பமின்றி இருப்பதாக கூறப்படுகிறது.

மக்கள் என்ன சொல்கிறார்கள் என்று பார்த்தால், விக்கிரவாண்டி வணிகர் சங்கத் தலைவர் ராஜபாண்டியன் பல குறைகளை அடுக்குகிறார். குறிப்பாக, ""தேசிய நெடுஞ்சாலை யைக் கடந்துதான் 50-க்கு மேற்பட்ட கிராமத்தினர் விக்கிர வாண்டிக்கு வரவேண்டும். ரயில்நிலையம், சார்பதிவாளர் அலுவலகம் ஆகியவற்றுக்கும், பேரூராட்சி அலுவலகத்திற் கும் வரவேண்டும். மாதந்தோறும் சாலையைக் கடக்கும் போது 4 முதல் 5 பேர் உயிரிழக்கிறார்கள். ஒரு மேம்பாலம் வேண்டும் என்ற கோரிக்கையை யாரும் கண்டுகொள்ள வில்லை''’என்று வேதனையை வெளிப்படுத்தினார்.

vv

Advertisment

vv

""2014-ல் தனி தாலுகாவாக அறிவிக்கப்பட்ட விக்கிர வாண்டியில் அதற்கான அடிப்படை வசதிகள் எதுவுமே நிறைவேற்றப்படவில்லை. ஒரு கல்லூரிகூட கிடையாது'' என்கிறார் காங்கிரஸ் பிரமுகர் குமார்.

""இப்போதுதான் சாலைப் பணிகள் சில தொடங்கப் பட்டுள்ளன. குடிநீர் பிரச்சனையைத் தீர்க்கவும் புதிய போர்வெல்கள் போடப்பட்டுள்ளன. இடைத்தேர்தல் என்றால் பணம்தான் பாதாளம்வரை பாயும்'' என்கிறார் நந்திவரம் கிராமத்தைச் சேர்ந்த ராசேந்திரன்.

தொகுதியை நாம் சுற்றிவந்தபோது, தேர்தல் அறிவிப்பு வந்தவுடன், வேட்பாளரின் வருகையையும் வாக்குறுதியையும் விட அவர்கள் என்ன கொடுக்கப்போகிறார்கள் என்பதையே மக்கள் எதிர்பார்த்திருப்பது தெரியவந்தது.

-எஸ்.பி.சேகர்