(4) வாட்ஸ் அப்... வடைகள்... வரலாறு!


"தமிழரென்றால் இதை கண்டிப்பாகப் பகிருங்கள்' என்ற அறிவிப்புடன் ஒரு வாட்ஸ்-அப் மெசேஜ் வரும். "நாசாவே மிரண்டு போன சம்பவம்... விண்ணில் சுழன்று வரும் நாசாவின் செயற்கைக்கோள், ஒவ்வொரு முறையும் ஒரு இடத்தை கடக்கும்போது மட்டும் மூன்று வினாடிகள் செயலிழக்கிறது. பின்னர் அந்த இடத்தை கடந்ததும் தானே செயல்பட தொடங்குகிறது. அந்த இடம் எது தெரியுமா? சனீஸ்வர பகவான் இருக்கும் திருநள்ளாறு. இதற்குக் காரணம் சனி கோளிலிருந்து கண்களுக்குப் புலப்படாத கருநீலக்கதிர்கள் அந்தக் கோயிலின் மீது ஒவ்வொரு நொடியும் விழுந்துகொண்டே இருக்கிறது. சனிப் பெயர்ச்சியின் போது அது இன்னும் பலமாக இருக்கும். இது நாசா வியந்த செய்தி. இஸ்ரோ உறுதிப்படுத்திய செய்தி. தமிழனின் இந்தப் பெருமையை உடனே பகிருங்கள்' என்ற அந்த செய்தியை நம் மக்கள் படித்து மிரண்டு, வாட்ஸ் அப் குரூப்புகளில் உடனே ஃபார்வார்ட் பண்ணித் தள்ளியது ஒரு காலம். 

Advertisment

"இதனாலதாண்டா தமிழனை பார்த்து உலகமே மிரளுது' என்று விவேக் ஒரு படத்தில் சொல்வார். தமிழர்கள் மட்டுமல்ல, இந்தியா மட்டுமல்ல, உலகமே ஒரு காலத்தில் இத்தகைய வாட்ஸ் அப் வடைகளை உண்மை என நம்பி சாப்பிட தயாரானவர்கள்தான். அரசுகளின் அழுத்தத்தால் வாட்ஸ் அப் நிறுவனம் பீதியாகி பார்வர்ட் செய்வதில் கட்டுப்பாடுகளை கொண்டு வந்தது.  

Advertisment

இன்னும் கூட வாட்ஸ் அப்பில் ஒரு செய்தி வந்தால் அது உண்மை என நம்பி ஆக்சனில் இறங்குபவர்கள்தான் நம் மக்கள். தினமும் வாட்ஸ் அப்பில் பூங்கொத்துகளோடு, இயற்கை காட்சி களோடு, ஊக்கம் கொடுக்கும் தத்துவங்களோடு காலை வணக்கம் அனுப்புவோரை எண்ணி சலித்துக்கொள்கிறோம். அத்தகையோரை பாராட்டலாம். வாட்ஸ் அப் பார்வார்டுகளால் பெரும் கொடுமைகள் நடந்திருக்கின்றன. முன்பு திருவண்ணாமலை மாவட்டத்தில் ஒரு கொடுமை நடந்தது. குழந்தை கடத்துபவர்கள் ஊருக்குள் வந்திருக்கிறார்கள் என்ற வாட்ஸ் அப் செய்தியை நம்பி சுற்றுலா வந்த ஒரு குடும்பத்தையே தாக்கி, அதில் ஒரு பெண் கொல்லப்பட்டார். 

இதே வகை வாட்ஸ் அப் பார்வர்டால் இந்தியா முழுக்க பத்துக்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டார்கள். சமீப வருடங்களாக திருவண்ணாமலை குறித்த ஒரு ஆந்திர ஆன்மீக சொற்பொழிவாளர் பேசியது வாட்ஸ் அப் உள்ளிட்ட அனைத்து சமூக ஊடகங்களிலும் "தெலுங்கரென்றால் பகிருங்கள்' என்ற உணர்வுடன் பரப்பப்பட்டு இப்போது திருவண்ணாமலை, "அருணாச்சலமாக' உருவெடுத்து ஒவ்வொரு பௌர்ணமியிலும் நிற்க இடமில்லாமல் மூச்சுத் திணறுகிறது. எல்லாம் வாட்ஸ் அப்பின் மகிமை. இப்பேர்ப்பட்ட பலம் வாய்ந்த வாட்ஸ்அப்பின் திறனை முதன்முதலில் கண்டுகொண்டு தேர்தலுக் காக பயன்படுத்தியது நம்ம பிரதமர் மோடி டீம் தான். இந்தியாவின் 2019 நாடாளுமன்ற தேர்தல், "வாட்ஸ் அப் தேர்தல்' என்று சர்வதேச ஊடகங்க ளாலும் அழைக்கப்பட்டது. ஆனால், 2014லேயே வாட்ஸ் அப்பை பயன்படுத்தியது மோடி - பிரசாந்த் கிஷோர் மற்றும் சிலர் கூட்டணி. 

Advertisment

பிரசாந்த் கிஷோரின் தேர்தல் அறிவியலில் ஒரு அடிப்படை வியூகமாக இருப்பது இலக்கை நோக்கிய பரப்புரை. உண்மையில் இது டார்கெட் மார்க்கெட்டிங் எனப்படும் மார்க்கெட்டிங் - வியாபார யுக்திதான். நம் பொருளின் வாடிக்கையாளராக யாரை குறிவைக்கிறோமோ அவர்களை நோக்கி விளம்பரம் செய்ய வேண்டும். 'ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு ரோட்டில் விளம்பரம் இருக்காது' என்ற உதாரணத்தை நாம் படித்திருப் போம். உண்மைதான், ரோல்ஸ் ராய்ஸ் வாங்கக்கூடியவரை சென்றடைய வேறு வழிகள் இருக்கின்றன. அதுபோல இன்னொரு முக்கியமான மார்க்கெட்டிங் வியூகம் என்பது நம் சந்தையின் சென்டிமென்டை மதிப்பது. உலகமெங்கும் புகழ் பெற்றிருக்கும் மெக்டொனால்ட்ஸ் துரித உணவு நிறுவனம் இந்தியாவில் இப்போது வரை பீஃப் (மாட்டுக்கறி) உணவுகளை தனது மெனுவில் சேர்க்கவில்லை. பல மாநிலங்களில் மக்கள் பீஃப் உண்டாலும், இந்தியாவின் பொது சென்டிமெண் டாக மெக்டொனால்ட்ஸ் நம்புவதை செயல்படுத்து கிறது. ஒரு வகையில் உண்மைதான். இல்லையென் றால் வட மாநிலங்களில் மெக்டொனால்ட்ஸ் அரசியல் நடந்திருக்க வாய்ப்பு அதிகம். இந்த இரண்டு அடிப்படை மார்க்கெட்டிங் விதிகளையும் இணைத்து மோடிக்கான வாட்ஸ் அப் வியூகத்தை கட்டமைத்தது பிரசாந்த் கிஷோர் டீம். 

மேடையில் பேசுவது, டிவியில் விளம்பரம் செய்வது, போஸ்டர்கள் அடிப்பது உள்பட பல பிரச்சார நடவடிக்கைகள் பொதுவான மக்கள் திரளுக்கானது. மக்களை நேரடியாக, நெருக்கமாக சென்று சேர வேண்டும். 2010க்குப் பிறகு இந்தியாவில் செல்போன் இணைய பயன்பாடு அதிகரித்திருந்தது. 2011-12 சமயங்களில் வாட்ஸ் அப் நன்றாகப் பரவத் தொடங்கியது. நகரங்களில் இந்த நிலை இருந்தாலும் கிராமங்களில் அந்த காலகட்டத்தில் இணையம் அரிதுதான். ஆனாலும் "டெக்' விரும்பியான மோடி, வாட்ஸ் அப் வியூக திட்டத்துக்கும் உற்சாகத்தோடு ஓகே சொன்னார். பிரசாந்த் கிஷோர் டீமின் முக்கிய பலமே 'தகவல் மேலாண்மை'தான். 

சூப்பர் மார்க்கெட்டிலிருந்து திரையரங்கு வரை நாம் எங்கு சென்றாலும் நம் மொபைல் நம்பர் வாங்குகிறார்கள் இல்லையா? அப்போ தெல்லாம் ரொம்ப பெருமையாகவேறு நம்பர் கொடுத்திருப்போம். நாம் கொடுக்கும் நம்மை பற்றிய எல்லா தகவல்களும் பல பெரும் வியாபாரங்களுக்குப் பயன்படுகின்றன. அப்படி இவர்கள் பல விதங்களில் சேகரித்த, வாங்கிய, ஆய்வு செய்து பெற்ற தகவல்களை சரியாகப் பிரித்து மக்களின் எண்ணம், தேவை, கோபம், சென்டிமெண்ட் உள்ளிட்டவற்றை ஓரளவு

 சரியாகப் புரிந்துகொண்டு அதற்கேற்ப பிரச்சார ஆயுதங்களை அவர்களை நோக்கி அனுப்புவார்கள். 2013இல் மோடி பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டவுடன் வேலைகள் வேகமாக நடந்தாலும் அதற்கு முன்பே தொடங்கப்பட்டு விட்டன. 

ஒவ்வொரு 'பூத்' அல்லது பகுதிக்கும் ஒரு வாட்ஸ் அப் குரூப் உருவாக்கப்பட்டது. அட்மினாக சைலண்டான பா.ஜ.க./ஆர்.எஸ்.எஸ். ஆதரவாளர் கள் இருப்பார்கள். தோராயமாக நூறு பேர் அளவில் அந்த வாட்ஸ் அப் குரூப்புகளில் சேர்க்கப் படுவார்கள். முதலில் 'குட் மார்னிங்', நமது ஊரின் பெருமை, நம் நாட்டின் கலாச்சாரம் போன்ற செய்திகளுடன் செயல்படும் அந்த குரூப்புகளில் மெல்ல 'இவ்வளவு பெருமை வாய்ந்த நம் நாட்டின் இப்போதைய நிலையை பாருங்கள்' என்று குறை கள், வன்முறை சம்பவங்கள் பகிரத் தொடங்கும். அறுபது ஆண்டுகள் ஆட்சி நடந்துவிட்டது, ஆனாலும் இந்த ரோட்டை பாருங்கள் என்று திடீரென கோபம் கொள்வார்கள்.

முதலில் உண்மையான தகவல்கள், புகைப்படங் களோடு ஆரம்பித்தாலும் போகப்போக உண்மையை விட உணர்ச்சிக்கு முக்கியம் தரப்பட்டது. அடுத்த ஸ்டெப்புக்குப் போவார்கள்... 'குஜராத் முதல்வர் மோடி அந்த மாநிலத்தை எப்படி வைத்திருக்கிறார் பாருங்கள்' என்று படங்கள் வரும். 'மோடி ஒரு நாளில் நாலு மணிநேரம் மட்டும்தான் தூங்குகிறாராம். மற்ற நேரம் எல்லாம் உழைப்புதான்', என்று அந்த வாட்ஸ் அப் குரூப் வியக்கும். 'பரவா யில்லையேப்பா நம்ம நாட்ல இப்படி ஒரு முதல்வர் இருக் காரே' என்று அகமதாபாத்தி லிருந்து ஆயிரம் கிலோமீட் டர் தள்ளி இருக்கும் ஒருவர் யோசிக்கத் தொடங்குவார். உண்மையும் பொய்யும் கலந்து ஒரு இயக்கம் நடந்து கொண்டே இருந்தது. நம்மில் பலருக்கு இதெல்லாம் நினை விருக்கும் என்று நம்புகிறேன். சரி... இந்த காலகட்டத்தில் ராகுல் தலைமையிலான காங் கிரஸ் என்னதான் செய்தது?

(தொடரும்)


____________________


ன்புள்ள தம்பி

வசந்த் பாலகிருஷ்ணன், வணக்கம்!

warroom1

"நக்கீரன்' இதழில் தாங்கள் எழுதத் தொடங்கியிருக்கும் "வார் ரூம்' தொடர் மிக மிக முக்கியமானது. தேர்தலில் வாக்களிக்கக் காத் திருக்கும் நம் தமிழ்நாட்டு வாக்காளர்களுக்கு மிகவும் அவசியமானது. கட்டமைக்கப்படும் அரசியல் பிம்பங்களை உண்மையென நம்புகிற மக்கள், அதே மனநிலையுடன் அவர்களை ஆதரிக்கவும் செய்கிறார்கள். இது மிக ஆபத்தானது; அபத்தமானது.

"வார் ரூம்’ என்கிற தலைப்பு தொடங்கி, நீங்கள் விவரிக்கும் விஷயங்கள்வரை அனைத்துமே அவசியமானவை. நம்மைச் சுற்றிக் கட்டமைக்கப்படும் விஷயங்களை நாம்தான் மக்களுக்குத் தெளிவுபடுத்த வேண்டும். படித்தவர்களும், பத்திரிகையாளர்களாகக் கோலோச்சியவர் களும் ஒவ்வொரு அரசியல் தலைவர்களின் அட்வைஸர்களாக மாறி, அவர்களை ஆகச் சிறந்தவர்களாகக் கட்டமைப்பு செய்கிறார்கள். எவ் விதத் தகுதியும் இல்லாதவர்களைக்கூட அறிவில் சிறந்த ஆளுமைகளாக மாற்றி விடுகிறார்கள். "மோடி பிம்பம்' கட்டமைக்கப்பட்டதைப் போலவே இப்போது வார்டு கவுன்சிலர்கள் வரை வடிவமைக்கப்படுகிறார்கள்.

கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் வாக்காளர் விழிப்புணர்வு சம்பந்தப் பட்ட விழா ஒன்று சென்னையில் நடந்தது. அதில் கலந்து கொண்ட அப்போதைய தலைமைச் செயலாளர் சண்முகம், "கார்ப்பரேட் நிறுவனங்கள் வாக்காளர்களின் மனங்களைத் தீர்மானிக்கத் தொடங்கி விட்டன. இந்தப் போக்கு மிகவும் அபாயகரமானது'' என்றார். எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலை "வார் ரூம்' அரங்கேற்றங்களை நிகழ்த்துகிற கார்ப்பரேட் நிறுவனங்கள்தான் தீர்மானிக்கக் காத்திருக்கின்றன.

இப்பேர்ப்பட்ட அபாயச்சூழலில் அவற்றைத் தவிடுபொடியாக்கி மக்களைத் தெளிவடைய வைக்க "வார் ரூம்' மூலமாக நீங்கள் முன்னெடுக்கும் முயற்சிக்கும், அதற்குக் களம் கொடுக்கும் அன்னை நிகர் அண்ணன் கோபால் அவர்களுக்கும், தட்டிக் கொடுத்து ஊக்கமளிக்கும் தங்கை பிரபாவதி அவர்களுக் கும் என் மனமார்ந்த அன்பும் நன்றியும்.

-இரா.சரவணன் (திரைப்பட இயக்குனர்)