(8) செட்டப்பை மாத்தி... கெட்டப்பை மாத்தி...! 


2012 டிசம்பர் மாதம் குஜராத் தேர்தல் முடிந்தது. பா.ஜ.க. 115 இடங்களில் வென்று மீண்டும் ஆட்சிக்கு வந்தது. எதிர்க்கட்சியாக காங்கிரசும் 61 இடங்களை பெற்று வலுவாக இருந்தது. மூன்றா வது முறையாக முதல்வராகத் தயாராகிக்கொண்டி ருந்தார் மோடி. வெற்றிக் களிப்பில் பொங்கிக் கொண்டிருந்த பா.ஜ.க. தொண்டர்கள், மோடியின் ஆதரவாளர்கள், அமித்ஷாவின் படை மத்தியில் மோடி உரையாற்றத் தயாராகிறார். மோடியின் வார் ரூம் டீமும் குதூகலமாக இருக்கிறது. மூன்றாம் முறை ஆட்சி தொடருமா என்ற கேள்விக்குறி இருந்தது. மத்தியில் ஆட்சியிலிருந்த காங்கிரஸ் மீதான அதிருப்தியை, அயர்ச்சியை மிகைப்படுத்தி குஜராத் மக்களை நோக்கித் திருப்பி, புதிதாக பிரசாந்த் கிஷோர் டீமெல்லாம் அமைத்து பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டு ஒரு வழியாக ஜெயித்து விட்டார் மோடி. களத்துக்கு அமித்ஷா, விளம்பரத் துக்கு பிரசாந்த் என்பதுதான் மோடியின் இரட் டைக் குழல் திட்டம். அது குஜராத்தையும் தாண்டிய ப்ளான். இப்படி வெற்றிபெற்ற மகிழ்ச்சியோடு மேடையேறினார் மோடி. உற்சாகம் பொங்கக் காத்திருந்த கூட்டத்துக்கு ஒரு ஆச்சரியம். மோடி இந்தியில் பேசினார். பொதுவாக குஜராத் மேடைகளில் குஜராத்தியில் பேசும் மோடி, இந்திக்கு மாறியிருந்தார். கூட்டத்துக்குப் புரிந்துவிட்டது... மோடி பேசிய பேச்சும் குஜராத் மக்களை தாண்டி இந்தியாவுக்கே சொல்லும் செய்திகளாக இருந்தது. கூட்டம் அதிருப்தியடைய வில்லை, ஆர்ப்பரித்தது. அதென்ன தமிழ்நாடா? மொழியை விட்டுக்கொடுக்காமல் இருக்க? டங... டங... என கூட்டம் கோஷம் போட... மோடி புன்னகைத்தார். 

Advertisment

அப்படியே கட் செய்து 2016 -சென்னை வண்டலூருக்கு வருவோம். அந்த மேடையே தமிழ்நாட்டுக்கு வித்தியாசமாக இருந்தது. மிகப்பெரிய மேடை... பின்னணியில் எல்.இ.டி திரை. பொதுவாக அரசியல் கட்சி மாநாட்டு மேடை களில் எவ்வளவு இடம் இருக்கிறதோ அவ்வளவு நாற்காலிகளை போட்டு எத்தனை பேர் முடியுமோ அத்தனை பேர் உட்கார்ந்து இருப்பார்கள். இங்கே காட்சியே வித்தியாசமாக இருந் தது. மேடையில் பாதி காலியாக இருந்தது. பாதி இடத்தில் ராமதாஸ் உள்பட முக்கிய தலைவர்கள் உட்கார நாற்காலிகள் இருந்தன. "என்னடா நடக்குது இங்க?' என்று காடு வெட்டி குரு உள் ளிட்டோர் கவனித்தனர். மீதி இடம் எதுக்கு? எதும் கலைநிகழ்ச்சி நடக்குமோ என்று தொண்டர்கள் ஆர்வமாக, குழப்பமாகக் காத்திருந்தனர். திரையில் அன்புமணி குறித்த அறிமுக வீடியோ ஒளிபரப்பானது. "திரா விடக் கட்சிகளின் ஆட்சியில் தமிழ்நாடு சீரழிந்து விட்டது' என்று சொல்லி அதற்கு ஒரே தீர்வு என்ன என்ற கேள்வியுடன் வீடியோ முடிந்தது.  மேடை யின் காலி இடத்தின் மையத்தில் அன்புமணி வந்து நின்றார். திடீரென மேடையை திறந்துகொண்டு கீழே இருந்து ஒரு மைக், மைக் ஸ்டாண்டோடு மேலே வந்தது. கருப்பு மேடையில், வெள்ளை ஒளியில் ஒரு தேவதூதன் போல் அன்புமணி நின்றிருந்தார். மைக் வந்தது... பின்னணி திரையில் மாம்பழம் பெரிய அளவில்... அன்புமணி மட்டுமே இருந்தார். வேறெந்த தலைவர்களின் படமும் இல்லை, பெயர்களும் இல்லை. ஆஹா... இது புதுசா இருக்கே என்று வியந்து பார்த்த தொண்டர்களுக்கு அடுத்த சர்ப்ரைஸ், 'அன்புமணி ஆகிய நான்...' என்று பேச்சை ஆரம்பித்தார் அன்புமணி ராமதாஸ். கூடியிருந்த பா.ம.க. தொண்டர்கள் உணர்ச்சிகரமாக ஆர்ப்பரித்தனர். 

Advertisment

2016, வண்டலூரில் நடந்த பா.ம.க. மாநாடுதான் அது. வழக்கமாக இல்லாமல் இந்த முறை வித்தியாசமாக இருந்தது எல்லாமே. அன்புமணி மொழியில் சொன்னால் இந்த சீனின் டைரக்டர் ஜான் ஆரோக்கியசாமி. 2016 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் பா.ம.க. தனித்துப் போட்டியிடும் தைரியமான முடிவை எடுத்தது. பா.ம.க.வின் முதல்வர் வேட்பாளராக அன்புமணி ராமதாஸ் முன்னிறுத்தப்பட்டார். பா.ம.க. வலுவாக இருக்கும் வடதமிழ்நாடு தாண்டி தமிழ்நாடு முழுவதும் அவரை கொண்டு சேர்க்கவேண்டும், அதுவும் இளை ஞர்களை சென்றடைய வேண்டும் என்பதுதான் நோக்கம். தி.மு.க. பலவீனமாக இருப்பதாக நம்பிய அன்புமணி இரண்டாம் இடத்தை குறிவைத் தார். அதற்கான திட்டம் -வியூகம் தான் "மாற்றம் -முன்னேற்றம் -அன்புமணி'. சரி... ஆசைப்பட்டால் நடந்துவிடுமா? பல காரணிகள் இருக் கின்றனவே? பழைய வரலாறு இருக்கிறதே? என்ன செய்வது? ஜான் ஆரோக்கியசாமி அனைத்தையும் ஆராய்ந்தார். அன்புமணியை வளர்ச்சியின் நாயகனாக, தமிழ்நாட்டின் எதிர்கால நம்பிக்கையாக மக்களிடம் கொண்டு சேர்க்கவேண்டுமென்று இறங்கினார். அப்போது பா.ம.க. இருந்த நிலை என்ன? 2011 தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் முப்பது தொகுதிகளில் போட்டியிட்ட பா.ம.க. மூன்று தொகுதிகளில்தான் வென்றிருந்தது. 2014 நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வின் தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைந்தது. 37 தொகுதிகளில் அ.தி.மு.க. வென்றபோதும் அன்புமணி தர்மபுரியில் வென்றார். இன்னொன்று பொன்.ராதாகிருஷ்ணன் ஜெயித்த கன்னியாகுமரி. இந்த தன்னம்பிக்கைதான் அன்புமணியை அடுத்து முதல்வர் சீட்டை நோக்கிய முயற்சிக்குத் தள்ளியது.   

என்னவெல்லாம் செய்தார்கள்? அதுவரை சில தேர்தல்களில் தி.மு.க. -அ.தி.மு.க. -பா.ஜ.க. என மாறி, மாறி கூட்டணி வைத்தது பா.ம.க.வுக்கு ஒரு கெட்ட பெயரை ஏற்படுத்தியிருந்தது. எனவே இந்த முறை யாருடனும் கூட்டணியில்லை என்று அறிவித்தார் மருத்துவர். எப்போதும் இப்படி சொல்வதுதான், ஆனா கடைசி நேரத்தில் சேந்துருவாங்க என்ற எண்ணத்தை உடைத்து உண்மையாகவே தனித்து நின்று ட்விஸ்ட் கொடுத்தது பா.ம.க. அடுத்து, அவர்களுக்கு எதிர்மறையாக இருந்தது... இளவரசன் -திவ்யா காதல் விவகாரத்தில் பா.ம.க.வினரின் பங்கு. இன்னொரு கறை, மரக்காணம் கலவரம். முன்பு மருத்துவர் ராமதாஸும், திருமாவளவனும் 'ஈஸ்வரா... வானும் மண்ணும் ஃப்ரெண்ட்ஷிப் பண்ணுது' என்று ஒன்றாகச் செயல்பட்டனர். ராமதாஸை, "தமிழ்க் குடிதாங்கி' என்றழைத்தார். "திருமா என் தம்பி' அவர் என்று நெகிழ்ந்தார் ராமதாஸ். அதெல்லாம் ஒரு காலம். மீண்டும் பா.ம.க. தனது பழைய ரூட்டை எடுத்திருந்தது வடதமிழ்நாட்டில் வொர்க்அவுட் ஆனாலும் முதல்வராக வேண்டுமென்றால் அந்த இமேஜ் ஒத்துவராது என்பதை புரிந்துகொண்டு புது இமேஜ் உருவாக்கும் வேலை நடந்தது. வெள்ளைச் சட்டை, நல்ல மென் வண்ணத்தில் பேண்ட் -டக் இன் செய்து ஷூ அணிந்து கார்ப்பரேட் நிறுவன ஈஊஞபோல் தோற்றம்தந்தார் அன்புமணி. "அன்புமணியாகிய நான்' என்று பேச்சை தொடங்கினார். மது ஒழிப்பு, ஊழல் ஒழிப்பு, வளர்ச்சி... இவைதான் தனது நோக்கம், திட்டம் என பிரகடனப்படுத்தினார். "மாற்றம் முன்னேற்றம் அன்புமணி' என்று தமிழ்நாடு முழுவதும் வடிவமைக்கப்பட்ட போஸ்டர்கள் ஒட்டப்பட்டன. ஒரே கலர் தீம் பயன்படுத்தப்பட்டது. அன்புமணி ஒருவர் மட்டும்தான் முன்னிலைப்படுத்தப்பட்டார். "ஒரு பக்கம் ஸ்டாலின், இன்னொரு பக்கம் அன்புமணி... இதற்குப் பதில் கொடுத்த ஜெயலலிதா!' என தமிழ்நாட்டு மக்களுக்குப் பொழுது நன்றாகப் போனது. 

Advertisment

அன்புமணியின் பிரச்சார முறையில் சில அம்சங்களை கவனிப்போம். வன்முறை வரலாற்றை மாற்ற வளர்ச்சி பிம்பம். அடுத்து, தமிழ்நாட்டின் மேன்மையை சீர்குலைத்த திராவிட ஆட்சி, கலந்துரையாடல்கள். மீட்பர் போல காட்சிப்படுத்தப் பட்ட தலைவர்... என எல்லாம் இன்னொருவரை நினைவுபடுத்து கிறது அல்லவா? வேற டெயிலர், வேற வாடகை என்றாலும் சட்டை அதேபோல இருந்தது. சரி... தேர்தல் முடிவு என்ன ஆனது? தமிழ்நாடு முழுவதும் 232 தொகுதிகளுக்கு தேர்தல் நடந்தது. அரவக்குறிச்சி, தஞ்சாவூர் தொகுதிகளில் வாக்குக்கு பணம் கொடுக்கப்பட்டதாக தேர்தல் ரத்தானது. ஒரு தொகுதியில் கூட பா.ம.க. வெற்றி பெறவில்லை. ஏன்... முதல்வர் வேட்பாளராக வியூகம் வகுத்துப் பிரச்சாரம் செய்த அன்புமணி யும் பென்னாகரம் தொகுதியில் பெரிய வித்தியாசத்தில் தோற்றார். அதுவும் ஆட்சிக்கு வந்த அ.தி.மு.க.விடம் இல்லை, தி.மு.க. வேட்பாளரிடம். நாடாளுமன்ற தேர்தலில் தர்மபுரியில் வென்றதால் மிகுந்த நம்பிக்கையோடு தமிழ்நாடு முழுவதும் சுற்றிவந்த அன்புமணி, தனது தொகுதியை கோட்டைவிட்டார். பா.ம.க. ஐந்து சதவிகித வாக்குகளைப் பெற்றிருந்தது. பெரிய டாக்டரும் சின்ன டாக்டரும் பெரும்அதிர்ச்சியில் இருந்தனர். உண்மையில் அது மிகநன்றாக வடிவமைக்கப்பட்ட, அழகாக செயல்படுத்தப்பட்ட ஒரு பிரச்சார செயல்திட்டம்தான். ஆனால் ரிசல்ட்? எல்லாம் நல்லாத்தானே செஞ்சோம், என்ன ஆச்சு என்று ஜான் ஆரோக்கியசாமி டீம் குழப்பமடைந்தது. செட்டப் -கெட்டப் மட்டும் போதாது என்று தெரிந்தது.     

(தொடரும்)