நாங்கள்தான் ஒரிஜினல் தேச பக்தர்கள் என்று ஒரு பக்கம் பா.ஜ.க. அரற்றிக் கொண்டிருக்க, அக்கட்சியைச் சேர்ந்த நிர்வாகி ஒருவரோ, தேசத்திற்கு உழைத்த முன்னாள் படைவீரர் உள் ளிட்ட பலரிடம் கோடிக் கணக்கில் வசூலித்துக் கொண்டு கம்பி நீட்டிய விவகாரம் சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

salem bjp

சேலம் மாவட்டம் மேட்டூர் அருகேயுள்ள மேச்சேரி சாம்ராஜ்பேட்டையைச் சேர்ந்தவர் ராஜு. இந்திய ராணுவத்தில் நாயக்காக பணியாற்றி ஓய்வுபெற்றவர். இவருடைய மகன் சந்திரமோகன், எம்.எஸ்சி. பட்டதாரி. கடந்த அக்டோபர் 21ஆம் தேதி, ராஜு, சேலம் மாவட்ட எஸ்.பி., அலுவ லகத்தில் ஒரு புகார் அளித்தார். அதில், 'பா.ஜ.க. ஓ.பி.சி. பிரிவு மாவட்ட பொதுச்செயலாளராக உள்ள, மேச்சேரி கோல்காரனூரைச் சேர்ந்த கமலக் கண்ணன், என் மகனுக்கு வருமான வரித்துறையில் வேலை வாங்கித் தருவதாகக்கூறி 35 லட்சம் ரூபாயைப் பெற்றுக்கொண்டு ஏமாற்றிவிட்டார்' என்று தெரிவித்திருந்தார்.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த மாவட்டக் குற்றப்பிரிவு டி.எஸ்.பி. இளமுருகன், எஸ்.ஐ. செந்தில்குமரன், கமலக்கண்ணனை மறுநாளே கைது செய்து சிறையில் அடைத்தனர். இதுதொடர்பாக புகார்தாரரான ராஜுவிடம் கேட்டோம். "மோசடி ஆசாமியான கமலக் கண்ணன், பா.ஜ.க.வில் முக்கிய பொறுப்பில் இருப்பதாகவும், டெல்லி வரை செல்வாக்குள்ள தாகவும் கூறி, என் மகனுக்கு அரசு வேலை வாங்கித் தருவதாகச் சொன்னார். கடந்த 2014ஆம் ஆண்டு, என் மகனுக்கு வி.ஏ.ஓ. வேலை வாங்கித் தருவதாகவும், டி.என்.பி.எஸ்.சி. வினாத்தாளை தேர்வுக்கு முதல் நாளே அவுட் செய்து தருவதாகவும் சொல்லி 5 லட்சம் ரூபாய் கேட்டார். அப்போது நடந்த வி.ஏ.ஓ. தேர்வில் அவர் கொடுத்த வினாத்தாள் அடிப்படையில் கேள்விகள் கேட்கப்படவில்லை.

Advertisment

பின்னர் டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2 பிரிவில் வேலை வாங்கித் தருவதாகச் சொன்னதன் பேரில், மீண்டும் 10 லட்சம் ரூபாய் கொடுத்தோம். அப்போதும் ஏமாற்றிவிட்டார். இதுபற்றி அவரிடம் விசாரித்தால், தான் முக்கியமான அதிகாரிகளிடம் பணம் கொடுத்துவிட்டதாகவும், சில மாதங்களில் பணி நியமன ஆணை வந்துவிடும் என்றும் நம்பும்படியாக 'பெர்ஃபாமன்ஸ்' செய்து ஏமாற்றிவிட்டார். அடுத்ததாக, வருமானவரித் துறையில் 'ஸ்போர்ட்ஸ் கோட்டா' பிரிவில் வேலை வாங்கித் தருவதாகச் சொல்லி 20 லட்சம் ரூபாய் பெற்றுக்கொண்டார்.

ss

எங்களை நம்ப வைப்பதற்காக, என் மகனை தன் நண்பர் ஒருவருடன் டெல்லிக்கு அனுப்பி வைத்தார். அங்கு வருமானவரித்துறை அலுவலக வளாகத்திலுள்ள ஒரு டீக்கடைக்கு அழைத்துச் சென்று, இதுதான் வருமானவரித்துறை அலுவலகம் என்று காண்பித்து ஏமாற்றினார். அதன்பிறகு சில மாதங்கள் கழித்து, என் மகன் வருமானவரி அலுவலர் பணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளதாக பணியாணை வந்ததுபோல் போலியாக கமலக் கண்ணன் ஏற்பாடு செய்தது தெரியவந்தது. என் மாமனாரின் நிலத்தை அடமானம் வைத்து கமலக்கண்ணனிடம் 35 லட்சம் ரூபாய் கொடுத்துவிட்டு இப்போதுவரை வட்டி கட்டி வருகிறேன்'' எனக் கண்ணீர் விட்டார் முன்னாள் நாயக் ராஜு.

Advertisment

இவர், கடந்த நான்கு மாதத்திற்கு முன்பே கமலக்கண்ணன் மீது புகாரளித்தபோதும், திடீரென்று நெஞ்சு வலிப்பதாகக் கூறி தப்பிவிட்டார். இந்த முறையும் அவர் 'டேக்கா' கொடுத்துவிடக் கூடாது என்பதற்காக, குற்றப்பிரிவு காவல்துறையினர் அவரை, சொந்த ஊரில் வைத்தே சுற்றி வளைத்துப் பிடித்து கைது செய்திருக்கிறார்கள். சேலம் மட்டுமின்றி வேலூர், ஆம்பூர், திருப்பத்தூர், வாணியம்பாடி பகுதிகளில் பல இளைஞர்களிடம் அரசு வேலை ஆசை காட்டி, பல கோடி ரூபாயைச் சுருட்டிவிட்டு ஏமாற்றியிருப்பதாகச் சொன்னார் ராஜு.

இது ஒருபுறமிருக்க, மேச்சேரியைச் சேர்ந்தவரும், தற்போது சேலம் நகர காவல்நிலையத்தில் பணியாற்றிவரும் காவலருமான சக்திவேல் என்பவரிடம் 52 லட்சம் ரூபாய் வாங்கிக் கொண்டு அல்வா கொடுத்துள்ளதும் தெரியவந்தது. காவலர் சக்திவேலிடம் விசாரித் தோம். ''பா.ஜ.க. பிரமுகர் கமலக் கண்ணன், அவருடைய அக்கா ஜெயந்திக்குச் சொந்தமான 1.63 ஏக்கர் நிலத்தை அடமானத்தில் இலிருந்து மீட்பதற்காக பண உதவி கேட்டார். 2 ரூபாய் வட்டிக்கு 52 லட்சம் ரூபாய் கடன் வாங்கிக் கொடுத்தேன். அந்த நிலத்தை விற்று, ஒரே வாரத்தில் செட்டில்மெண்ட் செய்து விடுவதாகச் சொன்னவர், ஒரு வருடம் கடந்த பின்பும் திருப்பித் தராமல், என்னையே மிரட்டுகிறார்'' என்றார் காவலர் சக்திவேல்.

ராஜு அளித்த புகாரின் பேரில் கமலக்கண்ணன் மீது மோசடி, போலி ஆவணம் தயா ரித்தல் உள்ளிட்ட 5 பிரிவு களின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட் டுள்ளது.

இதுதொடர்பாக சேலம் மேற்கு மாவட்ட பா.ஜ.க. தலைவர் சுதிர் முருகனிடம் கேட்ட போது, "கமலக்கண் ணன், ரியல் எஸ்டேட் தொழில் செய்வதாகத் தான் தெரியும். அவர் மீது மோசடி புகார் வந்ததாக தகவல் கிடைத்ததுமே அவரை ஓ.பி.சி. பிரிவு மாவட்ட பொதுச்செயலாளர் பதவியிலிருந்து நீக்கிவிட்டோம்'' என்றார்.

பா.ஜ.க. பிரமுகர் ராணுவ வீரரையே ஏமாற்றியிருப்பது பரபரப்பாகப் பேசப்படுகிறது!