பிரதமர் மோடி தலைமையிலான மத்திய பா.ஜ.க. அரசு, உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்கச் செய்ய "மேக் இன் இந்தியா' என்கிற கொள்கையை கடந்த 5 ஆண்டுகாலமாக நடைமுறைப்படுத்தி வருகிறது. பாதுகாப்புத் துறை உற்பத்திக்கான உரிமங்களை தனியார் நிறுவனங்களுக்கு கொடுப்பது, உற்பத்தியில் 100 சதவீதம் அந்நிய நேரடி முதலீட்டை அனு மதிப்பது உள்ளிட்ட சர்ச்சைக்குரிய விசயங் களை கொண்டது "மேக் இன் இந்தியா' கொள்கை. இதன் ஒரு கட்டமாக, தற்போது அரசாங்கத்தின் சொத்தாக அதன் கட்டுப்பாட்டில் இருக்கும் 41 ஆயுத தொழிற்சாலைகளை அரசாங்கத்திலிருந்து விடுவித்து அதனை தனி கார்ப்ப ரேசன்களாக மாற்றும் திட்டத்தை கையிலெடுத்துள்ளது மத்திய அரசு.
மோடி அரசின் இந்த திட்டத்திற்கு பல்வேறு மாநிலங்களிலுமுள்ள தொழிற்சங்கத்தினரிடம் எதிர்ப்புகள் வலுத்து வருகின்றன. இந்த நிலையில், திருச்சி துப்பாக்கித் தொழிற்சாலையில் உள்ள அனைத்து தொழிற்சங்கங்களையும் இணைத்து கூட்டு நடவடிக்கை போராட்டக் குழுவினை உருவாக்கியிருக்கிறார்கள் தொழிற்சங்கத்தினர்.
கூட்டு நடவடிக்கைக் குழுவின் செயலாளர் சந்திரசேகரனிடம் நாம் பேசியபோது, ""நாடு முழுவதும் 41 ஆயுத (படைக்கலன்) தொழிற்சாலைகள் உள்ளன. தமிழகத்தில் சென்னை ஆவடியிலுள்ள பீரங்கி தொழிற்சாலை, ராணுவத் தினருக்கான சீருடைகள், புல்லட் ஃப்ரூப் ஜாக்கெட்கள், பாராசூட் உள்ளிட்ட கவச ஆடைகள் தயாரிப்பு தொழிற்சாலை, இன்ஜின் உற்பத்தி தொழிற்சாலை, ஊட்டியிலுள்ள அரவன்காடு வெடி மருந்து தொழிற்சாலை, திருச்சியில் துப்பாக்கித் தொழிற்சாலை, கன உலோக ஊடுருவி தொழிற்சாலை, ஆந்திராவில் மேடக்கில் இருக்கும் குண்டு துளைக்காத வாகனங்கள் தயாரிப்பு தொழிற் சாலை என தென்னிந்தியாவில் மட்டும் 7 ஆயுத தொழிற்சாலைகள் உள்ளன. இதேபோன்று மீதமுள்ள 34 தொழிற்சாலைகளும் மகா ராஷ்டிரா, மத்தியப் பிரதேசம், மேற்கு வங்கம், உத்திரப்பிரதேசம், உத்திரகாண்ட் உள்ளிட்ட வட மாநிலங்களில் இருக்கின்றன.
இவை மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் படைக்கல வாரியத்தின் கட்டுப்பாட்டில் செயல்படுகின்றன. கார்கில் யுத்தம் உள்பட கடந்த காலங்களில் நடந்த போர்களின் போது ராணுவத்திற்கு தேவையான ஆயுதங்களையும் உடைகளையும் இருமடங்காக பெருக்கி காலதாமதமின்றி வழங்கி வந்திருக்கிறோம். ஆயுத தொழிற்சாலைகளின் பங்களிப்பை அன்றைய ஜனாதிபதி கே.என்.நாராயணன் நாடாளுமன்றத்தில் பாராட்டினார். அதேசமயம், கார்கில் போரின் போது வெளிநாடுகளில் கொடுக்கப்பட்ட ஆயுத ஆர்டர்களை உரிய நேரத்தில் அவர்கள் வழங்கவில்லை என நமது ராணுவ அதிகாரிகளே அன்றைக்கு ஒப்புக்கொண்டனர்.
இந்த நிலையில்தான், அரசு நிறுவனமான இந்த 41 ஆயுத தொழிற்சாலைகளையும் அரசிடமிருந்து விடுவித்து தனி கழகமாக (கார்ப்பரேஷன்) உருவாக்க மத்திய பா.ஜ.க. அரசு முடிவெடுத் துள்ளது. தனிக்கழகமாக உருவாக்கி ஒரு கட்டத்தில் அதனை நலிந்த நிறுவனங்களாக காட்டி கார்ப்பரேட்டுகளிடம் ஒப்படைக்கவே இந்த முடிவை எடுத்துள்ளனர். ஆக, ராணுவத்துக்கு தேவையான அனைத்து ஆயுத உற்பத்தியையும் தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைப்பது நம் தேசத்தின் பாதுகாப்புக்கு ஆபத்தானது. அதனால் தேசத்தின் பாதுகாப்பை கருதி அத்தகைய முடிவினை கைவிட வலியுறுத்தி போராடி வருகிறோம்'' என்கிறார்.
கூட்டு நடவடிக்கைக் குழுவின் பொருளாளர் கண்ணன், ""இந்த 41 ஆயுத தொழிற்சாலைகளிலும் சுமார் 85,000 ஊழியர்கள் பணிபுரிகின்றனர். ஆயுத தொழிற்சாலைகளை உள்ளடக்கிய படைக்கல வாரியம் ஒவ்வொரு வருடமும் செய்து வரும் உற்பத்தியின் மதிப்பு 20,000 கோடி ரூபாய். அந்த வகையில் ஆயுத தொழிற்சாலைகளும், பாதுகாப்புத் துறையிலுள்ள பொதுத்துறை நிறுவனங்களும் கடந்த ஆண்டு மட்டும் 60,000 கோடி மதிப்பிலான ஆயுத உற்பத்தியை செய்துள்ளது. ஆனால், தனியார் துறைகளோ 5,973 கோடி ரூபாய் மதிப்பிலான ஆயுத உற்பத்தியை மட்டுமே செய்துள்ளன. இத்தகைய சூழலில், பொதுத்துறை நிறுவனங்களை நலிவடைந்ததாக காட்டி தனியாரிடம் தாரை வார்ப்பதி னால் மோசமான விளைவுகளையே இந்தியா சந்தித்து வருகிறது.
ரஃபேல் போர் விமானம் தயாரிப்பதற்கான ஒப்பந்தத்தை ஹெச்.ஏ.எல். என்ற பாதுகாப்புத்துறையின் பொதுத்துறை நிறுவனம் இறுதி செய்த நிலையில், அதனை மத்திய பா.ஜ.க. அரசின் முடிவினால் ரிலையன்ஸ் டிஃபன்ஸ் நிறுவனத்திற்கு கைமாற்றப்பட்டதன் விளைவாக ஹெச்.ஏ.எல். நிறுவனத்தின் ஊழியர்களுக்கு சம்பளம் கூட வழங்க முடியாத நிலை ஏற்பட்டது. பி.எஸ்.என்.எல். நிறுவனமும் பல நெருக்கடிகளை சந்திக்கிறது. தனியார் நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோ செழிக்கிறது. இந்த நிலையில், அரசின் ஆயுத தொழிற்சாலைகளை கார்ப்பரேஷனாக மாற்றும் திட்டம்ங்கிறது ரிலையன்சிடம் ஒப்படைப்பதற் காகத்தான் என்கிற சந்தேகம் வலுக்கிறது.
அரசின் ஆயுத தொழிற்சாலைகளை கார்ப்பரேட் நிறுவனங்களாக மாற்றுவதன் நோக்கம் ஆரோக்கியமானதல்ல. சுமார் 15 லட்சம் கோடிகளை சொத்து மதிப்பாக கொண்ட இந்த நிறுவனங்களை மெல்லமெல்ல தனியார் முத லாளிகளின் வசம் ஒப்படைப்பதற்கான சூழ்ச்சிதான் இந்த திட்டம். ஆயுத தொழிற்சாலைகளை வர்த்தக ரீதியிலான நிறுவனங்களாக மாற்றுவதும், ஆயுத உற்பத்தியை தனியாரிடம் ஒப்படைப்பதை பொருளாதாரம் சார்ந்த விசயமாக அணுகுவதும் ஆபத்தான விளைவுகளையே ஏற்படுத்தும்.
ஆயுத வியாபாரத்தில் வாடிக்கை யாளர்களாக, மத்திய-மாநில அரசாங்கங்கள்தான் இருக்க முடியும். அப்படியிருக்க, ஆயுத உற்பத்தியிலுள்ள தனியார் நிறுவனங்கள் கூடுதல் லாபம் பெற வேண்டுமெனில், கூடுதல் ஆயுதங்களை அரசாங்கங்கள் கொள்முதல் செய்ய வேண்டும். அதற்கான சூழல்களும் உருவாக்கப்படும். இந்திய ராணுவ உயரதிகாரிகளை தனியார் நிறுவனங்கள் தங்கள் வசம் வளைத்துக்கொள்வதும் நடக்கும். எனவே இதனை மோடி அரசு கைவிட வேண்டும்'' என்கிறார் மிக அழுத்தமாக.
இந்தியாவின் ஆயுத தேவைகளில் 60 சதவீதம் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. தற் போதைய நிலையில், மத்திய பாதுகாப்புத் துறையின் பொதுத்துறை நிறுவனங் களும் அரசின் ஆயுத தொழிற்சாலை களும் சுமார் 35 சதவீத ஆயுதங்களையே வழங்கி வருகின்றன. ஆயுத உற்பத்திக்கான தொழில்நுட்பம் நம்மிடம் இல்லாததே அதிகளவிலான இறக்குமதிக்கு காரணமாக இருக்கிறது. உலக நாடுகளை ஒப்பிடும் போது ஆயுத தளவாட ஆராய்ச்சி மற்றும் அதன் மேம்பாட்டிற்காக மிகக்குறைந்த அளவே செலவிடுகிறது இந்தியா.
கூட்டு நடவடிக்கைக் குழுவின் கன்வீனரான சரவணன் நம்மிடம், ""அமெரிக்கா மற்றும் ரஷ்யா போன்ற நாடுகள், விண்வெளியில் செயற்கைக் கோள்களை ஏவ பயன்படும் ராக்கெட் தொழில்நுட்பத்தை இந்தியாவுக்கு வழங்க மறுத்து வந்த நிலையில், இந்திய அரசு நிறுவனமான இஸ்ரோ விஞ்ஞானிகள் தங்களின் அறிவாற்ற லாலும் கடின உழைப்பாலும் ராக்கெட் தொழில்நுட்பத்தை கண்டறிந்து, சாதனை படைத்து, உலக வல்லரசு பட்டியலில் இந்தியாவை நகர்த்தியுள்ளனர்.
அண்டைநாடான சீனா, கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு வரை ஆயுத தளவாடங் களை இறக்குமதி செய்வதில் உலகில் முதலிடத்தில் இருந்தது. ஆனால், அது ஆபத்தானது என உணர்ந்து தனது கொள்கையை மாற்றிக்கொண்டது. அந்த வகையில், பொது வர்த்த கத்தில் தனியார் நிறுவனங்களை ஊக்குவிக்கும் சீனா, ஆயுத உற்பத்தியில் அரசு துறை நிறு வனங்களை மட்டுமே ஊக்குவித்தும் வளர்த்தும் வலிமை பெற்றுள்ளது. இதனை உணர மறுக்கும் பா.ஜ.க. அரசோ, அரசின் ஆயுத தொழிற் சாலைகளை தனியார்மயமாக்கத் துடிக்கிறது.
கடந்த 20 ஆண்டுகளாக ஆயுத தளவாட உற்பத்தி லைசென்ஸை தனியார் நிறுவனங் களுக்கு இந்தியா வழங்கியும்,அந்த நிறுவனங்கள் எதையும் சாதிக்கவில்லை என்பதை மோடி அரசு யோசிக்க வேண்டும்.
ஆனால், இதற்கு மாறாக, அரசின் ஆயுத உற்பத்தி தொழிற்சாலைகளுக்கு மூடுவிழா நடத்தி கார்ப்பரேட் நிறுவனங் களை ஊக்குவிக்கத் துடிப்பது எல்லா நிலைகளிலும் ஆபத்தானது. ஆயுத தொழிற்சாலைகளை அரசின் கட்டுப்பாட்டிலேயே வைத்து நவீனமயமாக்குவதுதான் சரியான கொள்கையாக இருக்க முடியும்'' என்கிறார் ஆவேசமாக.
அரசுக்கு சொந்தமான ஆயுத தொழிற் சாலைகளை கார்ப்பரேட் மயமாக்கும் திட்டத்தை மோடி அரசு கைவிட மறுக்கும் நிலையில் போராட்டங்களை தீவிரப்படுத்த திட்டமிட்டுள்ள னர் தொழிற்சங்கத்தினர்.
-இரா.இளையசெல்வன்