ஆஹா ஓஹோவென்று தொடங்கப்பட்ட பாதுகாப்பு கண்காட்சியால் தமிழகத்தில் ராணுவ தளவாட உற்பத்திக்கான வாய்ப்புகள் அதிகரிக்கும் என்று அரசுத் தரப்பு கூறுகிறது. கல்பாக்கம், கூடங்குளம், நியூட்ரினோ, சாகர்மாலா, ஹைட்ரோ கார்பன் என்று மக்களுக்கு ஆபத்தான திட்டங்களைக் கொண்டுவந்து தமிழ்நாட்டின் பல பகுதிகளை மக்கள் வாழ்வதற்கு தகுதியற்றவையாக மாற்ற வேண்டும் என்ற மத்திய அரசின் திட்டத்தில் இது ஒரு பகுதி என்கிறார்கள் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள்.
தமிழகத்திலும் உத்தரப்பிரதேசத்திலும் மிகப்பெரிய ராணுவத் தளவாட தொழிற்சாலைகள் அமைக்கப்படும் என்று கடந்த பட்ஜெட்டில் அருண்ஜெட்லி அறிவித்தார். அதைத்தொடர்ந்து, தமிழகத்தில் ஓசூரில் தொடங்கி கோவை, சேலம், திருச்சி, ஆவடி, கல்பாக்கம் ஆகிய ஊர்களை இணைத்து காட்டுப்பள்ளி துறைமுகத்தில் முடியும் வகையில் "பாதுகாப்பு பெருவழித்தடம்' அமையும் என்று அறிவிப்பு வெளியானது. அதன் தொடர்ச்சியாகவே, இந்த ராணுவ தளவாட கண்காட்சி தொடங்கப்பட்டதாக ராணுவ அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார். வெளிநாட்டு முதலீட்டாளர்கள் திட்டத்துடனும், முதலீட்டுடனும் இங்கே வந்து தொழில் தொடங்கலாம். ஏற்கெனவே இங்கே இருக்கிற உள்நாட்டு தொழில் நிறுவனங்கள் தங்களை விரிவுபடுத்திக் கொள்ளலாம்.
பாதுகாப்பு அமைச்சகத்தின் சார்பில் நடத்தப்படும் பத்தாவது கண்காட்சி இது. 2016 ஆம் ஆண்டு கோவாவில் நடந்தது. தமிழகத்தில் நடத்தப்படும் கண்காட்சியில் மொத்தமாக 677 நிறுவனங்கள் பங்கேற்கின்றன. இதில் 523 நிறுவனங்கள் இந்திய நிறுவனங்கள். கடந்த முறையைக் காட்டிலும் 10 சதவீத வெளிநாட்டு நிறுவனங்கள் குறைவுதான். இந்தக் கண்காட்சிக்கே 800 கோடி ரூபாய் செலவாகி இருக்கிறது. முதல் முறையாக இந்தியாவின் முப்படைகள் சார்பிலும் இந்தக் கண்காட்சி நடைபெறுகிறது.
""பாதுகாப்பு பெருவழித்தடத்தில் உள்ள சிறு, குறு, பெரிய தொழில் செய்பவர்கள், பாதுகாப்புத் துறைக்குத் தேவையான கருவிகளைத் தயாரித்து வழங்க விருப்பம் இருக்கலாம். அப்படி இருப்பவர்களுக்கு தேவைக்கு தகுந்த மாறுதல்கள் செய்து தரப்படும். அடுத்த ஐந்தாண்டுகளில், அவர்களிடம் இருந்து, கருவிகளை வாங்குவதற்கான முன்னேற்பாடுதான் இந்த பாதுகாப்பு பெருவழித்தடம். அன்னியச் செலாவணியை வீணடித்து வெளிநாடுகளில் இருந்து இந்தியா ஆயுதங்களை வாங்குகிறது. இந்தத் திட்டத்தின்படி வெளிநாட்டவரே இங்கே வந்து, உற்பத்தி செய்யமுடியும். அதற்குத் தேவைப்படும் வசதிகள் இங்கு ஏற்படுத்தித் தரப்படும். தொழில் நுட்பத்தையும், முதலீட்டையும் மட்டும் அவர்கள் கொண்டு வந்தால் போதும்'' என்று நிர்மலா சீதாராமன் கூறியிருக்கிறார்.
அவருடைய கூற்றுப்படி பார்த்தாலே, ராணுவ தளவாட உற்பத்தியில் அன்னிய மூலதனத்தை அனுமதிக்கும் மோடி அரசின் திட்டத்திற்கு வழி அமைக்கவே இந்த பாதுகாப்பு பெருவழித்தடம் என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன. உள்நாட்டு நிறுவனங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்போம் என்று சொன்னாலும், இந்தக் கண்காட்சியில் பங்கேற்ற பல நிறுவனங்கள் காவி சார்புடையவை என்பதையும் கணக்கில் கொள்ள வேண்டியுள்ளது என்கிறார்கள்.
இந்தக் கண்காட்சி தொடங்கப்பட்ட பல ஆயிரம் ஏக்கர் நிலம் ஆளவந்தான் அறக்கட்டளைக்கு சொந்தமானது. இந்த இடத்தை ராணுவத்திடமே ஒப்படைத்தாலும் ஆச்சரியமில்லை என்கிறார்கள். கண்காட்சியை ஒட்டி சுற்றுப்புற கிராமங்களை ராணுவத்தினர் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல அனுமதியில்லை. நாள் ஒன்றுக்கு 150 ரூபாய் கொடுப்பதாக கூறப்பட்டது. ரூபாய் கொடுக்கிறார்களோ இல்லையோ, இந்தப் பகுதி மீனவர்களின் வாழ்க்கைக்கும் வெடி வைத்துவிடுவார்களோ என்று கவலைப்படுகிறார்கள்.
மீனவர்களின் கவலை இப்படியென்றால், பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் கருத்து வேறுவிதமாக இருக்கிறது. தமிழகத்தை வாழ்வதற்கு தகுதியற்ற பகுதியாக மாற்றுவதே மத்திய அரசின் திட்டமோ என்று அது சந்தேகம் தெரிவித்துள்ளது. பூமிக்கடியில் உள்ள வளத்தை மத்திய அரசு குறிவைத்திருக்கிறது. அத்துடன் நாட்டின் பாதுகாப்புக்கு உகந்த பகுதியாக தமிழகத்தை பயன்படுத்த திட்டமிடுகிறது என்றும் அது தெரிவித்துள்ளது.
பாதுகாப்பு மண்டலம் என்ற பேரில் முக்கியமான பகுதிகளில் இருந்து மக்களை வெளியேற்றிவிட்டு, நிலக்கரியையும், எரிவாயுக்களையும் குறிவைக்கத் தொடங்குவார்கள் என்று சந்தேகிப்பதாக அந்த அமைப்பைச் சேர்ந்த சுந்தரராஜன் கூறியிருக்கிறார்.
இந்தியாவின் எதிரிகளாக கட்டமைக்கப்படும் சீனா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து தமிழகம் அதிக தூரத்தில் இருக்கிறது. அதனால்தான் பாதுகாப்பு தொடர்பான கட்டமைப்புகளை இங்கே உருவாக்குவது பாதுகாப்பானது என்று மத்திய அரசு நினைப்பதாகவும் அவர் கூறியிருக்கிறார்.
மீனவர்கள் எதிர்க்கும் சாகர்மாலா திட்டத்தை நிறைவேற்ற வசதியாக ராணுவத்தை இங்கே நிலைப்படுத்தவே இந்த கண்காட்சி என்ற குற்றச்சாட்டும் உள்ளது. பாதுகாப்பா, அச்சுறுத்தலா என்பதற்கு ராணுவ அமைச்சகம்தான் விடை தரவேண்டும்.
-அரவிந்த்