அரசியல் களத்தில் சளைக்காத போராளியான கலைஞர் காவேரி ஆஸ்பத்திரியிலும் போராட்டத்தைக் குறைத்துக் கொள்ளவில்லை. ஜூலை 29-ஆம் தேதி இரவு, கலைஞரின் உடல்நிலையில் பெரும் பின்னடைவு ஏற்பட்டு, மருத்துவர்களின் இடைவிடாத போராட்டத்தால் போராளி கலைஞர் புத்துயிர்ப்பு பெற்றார். பல்ஸ் ரேட் இறங்குவதும் ஏறுவதுமாக இருந்தாலும் காவேரி மருத்துவமனையின் எக்ஸ்கியூட்டிவ் டைரக்டர் டாக்டர் அரவிந்தன் செல்வராஜ் தலைமையிலான டாக்டர்கள் டீம் 24 மணி நேரமும் கலைஞரைக் கவனித்தது. 95 வயதுக்கே உரிய முதுமையும் கலைஞருக்கு அளிக்கப்படும் சிகிச்சையில் சிறுசிறு தடங்கல்களை ஏற்படுத்தியது.
ஆக.01-ஆம் தேதி காலை கலைஞரின் கல்லீரல் இயக்கத்தில் சிறிது சுணக்கம் ஏற்பட்டதும் குளோபல் மருத்துவமனையிலிருந்து அதற்கான ஸ்பெஷலிஸ்ட் வரவழைக்கப்பட்டு சீர்செய்யப்பட்டது. 31-ஆம் தேதி ராகுல் விசிட்டின்போது 45 டிகிரி கோணத்தில் இருந்த கலைஞரின் படுக்கை, 01-ஆம் தேதி 90 டிகிரியாக உயர்த்தப்பட்டது. இந்த டிகிரி மாற்றத்திற்காகவும் படுக்கையை சுத்தம் செய்வதற்காகவும் சிறிது நேரம் இடமாற்றம் செய்யப்பட்டார் கலைஞர். அது வழக்கம்போல் வீல்சேரில் கலைஞர் உட்கார்வது போல இருந்தது. அன்று பகலில் தி.மு.க.வின் முன்னணி நிர்வாகி ஜெகத்ரட்சகன் ஏற்பாட்டின் பேரில் லண்டனில் பயிற்சி பெற்ற தொற்று நோய் மருத்துவ சிகிச்சை நிபுணர் வந்து கலைஞருக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்து திருப்தி தெரிவித்தார். அதே நாள் இரவு கலைஞரின் பல்ஸ் ரேட் இறங்குவதும் ஏறுவதுமாக இருந்தது.
ஜூலை.31-ஆம் தேதி மாலை கலைஞரை ராகுல்காந்தி பார்த்த போட்டோ ரிலீசானவுடனேயே மருத்துவமனை முன்பு வாழ்த்தொலி, தேங்காய் உடைப்பு, பேண்ட் வாத்திய முழக்கம் என தொண்டர்களிடையே மகிழ்ச்சி அலை ஆர்ப்பரித்தது. "சிகிச்சைக்கு கலைஞர் நல்ல முறையில் ஒத்துழைப்புத் தருவதால், அவரது உடல்நிலை சீராகி வருகிறது. இன்னும் சில நாட்கள் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெறுவார்'’ என டாக்டர் அரவிந்தன் செல்வராஜின் கையெழுத்திட்ட மருத்துவமனை அறிக்கை வெளியானதும் நிம்மதிப் பெருமூச்சுவிட்டனர் தொண்டர்கள். வெளிமாவட்டங்களில் இருந்து வந்திருந்த தொண்டர்கள் கொஞ்சம் கொஞ்சமாக புறப்படத் தொடங்கினர்.
02-ஆம் தேதி காலை, காவேரி மருத்துவமனை இருக்கும் சாலை முற்றிலும் இயல்பு நிலைக்குத் திரும்பியது. எல்லாமே சகஜ நிலைக்குத் திரும்பிவிட்டாலும் மருத்துவமனைக்குள் இருக்கும் கலைஞரின் குடும்ப உறவுகளுக்குள் சங்கோஜமும் சஞ்சலமும் நீடித்தபடியே தான் இருக்கிறது. கலைஞர் அனுமதிக்கப்பட்டிருக்கும் ஐ.சி.யூ.வார்டு இருக்கும் நான்காவது மாடியில் ஸ்டாலின், அழகிரி, கனிமொழி, தமிழரசு, செல்வி ஆகியோருக்கு தனித்தனியாக அறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
கலைஞரின் உடல்நலம் விசாரிக்க வரும் அரசியல் மற்றும் சினிமா வி.ஐ.பி.க்கள் பெரும்பாலும் ஸ்டாலின் அறைக்குச் சென்று விசாரிக்கிறார்கள். அப்போது கனிமொழியும் உடன் இருக்கிறார். ஒருசிலர் கனிமொழி அறைக்குச் சென்றாலும் அவர்களை ஸ்டாலின் இருக்கும் அறைக்கு அழைத்து வந்துவிடுகிறார் கனிமொழி. ஒருசிலர் மட்டும் தான் அழகிரி அறைக்கும் சென்று அட்டெண்டன்ஸ் போடுகிறார்கள். அதேபோல் தரைத்தளத்தில் இருக்கும் ஒரு அறையில் கட்சியின் தலைமைநிலையச் செயலாளர்கள் துறைமுகம் காஜா, கு.க.செல்வம், பூச்சி முருகன் ஆகியோர் இருந்து கொண்டு பார்வையாளர்களின் வருகை குறித்து ஸ்டாலினிடம் தெரியப்படுத்திவிட்டு மேலே அனுமதிக்கிறார்கள்.
சில நாட்களுக்கு முன்பு ராஜ்யசபா எம்.பி. ஆர்.எஸ்.பாரதியை நேருக்கு நேராகப் பார்த்த அழகிரி, பாரதியின் பழைய பேட்டியை மனதில் வைத்துக் கொண்டு சற்றே உஷ்ண வார்த்தைகளை வீசியிருக்கிறார். எதுக்கு வம்பு என நினைத்த பாரதி, பதில் எதுவும் பேசாமல் அங்கிருந்து நகர்ந்துவிட்டார். இதன் எஃபெக்டோ என்னவோ கட்சியின் சீனியர்கள், மாஜி மந்திரிகள், இப்போதைய எம்.எல்.ஏ.க்கள், மா.செ.க்கள் அனைவரும் அழகிரி என்றால் கவனமாகி விடுகிறார்கள்.
ஆகஸ்ட் 1 அன்று, தரைத்தளத்தில் வழக்கமாக ஸ்டாலினின் கார் நிற்கும் இடத்தில் தனது காரை நிறுத்திவிட்டு நான்காவது மாடிக்குப் போய்விட்டார் அழகிரி. அதற்குப் பின் வந்த ஸ்டாலின் இதைப் பார்த்ததும் எதுவும் பேசாமல், அழகிரியின் காருக்குப் பின்னால் தனது காரையும் செக்யூரிட்டிகள் காரையும் நிறுத்திவிட்டு மேலே சென்றார். அதற்கடுத்து ஒன்றன் பின் ஒன்றாக கனிமொழி, ராஜாத்தி அம்மாளின் கார்கள் நிறுத்தப்பட்டன.
அதற்கு முதல்நாள் (31-ஆம் தேதி) டேராடூனிலிருந்து சென்னை வந்த ரஜினி, ஏர்போர்ட்டிலிருந்து நேராக காவேரி மருத்துவமனை சென்றார். முதல் வாசலிலேயே காத்திருந்த காங்கிரஸ் வி.ஐ.பி. கராத்தே தியாகராஜன், ரஜினியின் வருகை குறித்து முன்கூட்டியே ஸ்டாலின் உள்ளிட்ட கலைஞர் குடும்பத்தினர் தரப்பில் தெரிவித்திருந்ததால், ரஜினி வந்தவுடன் நான்காவது மாடிக்கு அழைத்துச் சென்றார். நேராக ஸ்டாலின் அறைக்குச் சென்ற ரஜினி, கலைஞரின் உடல்நலம் குறித்து விசாரித்த போது, கனிமொழியும் அருகில் இருந்தார். அதன் பின் அழகிரி அறைக்குச் சென்று அவரிடமும் சில நிமிடங்கள் பேசிவிட்டுக் கிளம்பினார். ரஜினி- அழகிரி சந்திப்பு கட்சி நிர்வாகிகளின் புருவத்தை உயரச் செய்தது. கீழே மீடியாக்கள் முன்பு பேசிய ரஜினி, ""இந்தியாவின் மூத்த அரசியல் தலைவர் டாக்டர் கலைஞரின் உடல்நிலை குறித்து அழகிரி, ஸ்டாலின், கனிமொழி, தமிழரசு, செல்வி ஆகியோரிடம் விசாரித்தேன். கலைஞர் விரைவில் நலம் பெற இறைவனை பிரார்த்திக்கிறேன்'' எனச் சொல்லிவிட்டுக் கிளம்பினார். அவர் கிளம்பிய சில நிமிடங்களிலேயே அழகிரியுடன் ரஜினி இருக்கும் போட்டோவை அழகிரி தரப்பே ரிலீஸ் பண்ணியது. அதேபோல் அழகிரி பேரைத்தான் ரஜினி முதலில் சொன்னார் என்பதும் முக்கியத்துவமாகப் பார்க்கப்பட்டது. "அழகிரிதானே மூத்தவர்' என சமாதான வார்த்தைகளும் கட்சி மற்றும் குடும்பத்தினரிடையே வெளிப்பட்டது.
""மருத்துவமனைக்குள் என்ன நடக்குதுன்னு தெரியல, ஆனா என்னமோ நடக்குதுன்னு மட்டும் தெரியுது'' என்ற ரேஞ்சுக்கு நிலவரம் இருந்த ஆக.31-ஆம் தேதி இரவு, அதாவது ரஜினி வந்துவிட்டுப் போன பிறகு உதயநிதி ஸ்டாலினைத் தொடர்பு கொண்டார் விஜய். ஸ்டாலினிடம் கேட்டுவிட்டு உதயநிதி சொன்னபடி 01-ஆம் தேதி காலை 10 மணிக்கு காவேரி மருத்துவமனைக்கு வந்து ஸ்டாலினிடம் விசாரித்துவிட்டு, மீடியாக்களிடம் எதுவும் பேசாமல் கிளம்பிவிட்டார். அதற்கு முதல் நாள் நடிகர் சிவக்குமார் தனது மகன் நடிகர் சூர்யாவுடன் வந்தார். ஆர்.கே.செல்வமணி, பாரதிராஜா, வெற்றிமாறன், நடிகர் பிரபு ஆகியோரும் வந்து விசாரித்தார்கள்.
முதல்வராக இருந்த கலைஞருக்கு சினிமா உலகம் சார்பில் நடந்த பாராட்டு விழா மேடையிலேயே “""அய்யா என்னை மிரட்டுறாங்கய்யா'' என கலைஞரிடமே கண்ணீர்விட்டவர் நடிகர் அஜித்குமார். அந்த அஜித்தும் விஜய் வந்த அதே நாள் காவேரி மருத்துவமனை வந்து ஸ்டாலினிடம் கலைஞரின் உடல்நலன் குறித்து விசாரித்துவிட்டுச் சென்றார்.
கிருத்திகா உதயநிதி மூலமாக நடிகர் விஜய் ஆண்டனி வந்தார். பொதுவாக வெளி இடங்களுக்கோ, நிகழ்ச்சிகளுக்கோ அவ்வளவாக செல்லாத நடிகர் கவுண்டமணி, அதன் பின் செந்தில், விவேக், பாடகிகள் மாலதி, சின்னப் பொண்ணு, நடிகை அம்பிகா, காமெடி நடிகர்கள் முத்துக்காளை, போண்டா மணி, கிங்காங் ஆகியோரும் ஆஜர் பட்டியலில் இருந்தனர். 02-ஆம் தேதி காலை நடிகர் சிவகார்த்திகேயன் வந்து ஸ்டாலினிடம் விசாரித்தார்.
ஆகஸ்ட் 2-ந்தேதியும் கலைஞரின் பல்ஸ் ஏற்ற-இறக்கம் காட்டினாலும் நிலைமை கட்டுக்குள்ளேயே இருந்தது. அன்றைய வி.ஐ.பி., கேரள முதல்வர் பினராயி விஜயன். கலைஞரைப் "பிறவிப் போராளி' என மீடியாக்களிடம் தெரிவித்தார் கேரள முதல்வர்.
பெரிய அரசியல் கட்சித் தலைவர்கள் முதல் சிறிய தலைவர்கள் வரை, சினிமா உலகில் ரஜினி முதல் கிங்காங் வரை காவேரி மருத்துவமனைக்கு வந்து சென்றுள்ளனர். எல்லோருடைய விருப்பப்படியும் தொண்டர்களின் ஆசைப்படியும் வேண்டுதல்படியும் விரைவில் கோபாலபுரம் திரும்புவார் போராளி கலைஞர் என்பதே உடன்பிறப்புக்களின் நம்பிக்கை.
-ஈ.பா.பரமேஷ்வரன் & ஜீவாபாரதி
________________________
பெயரைக் கெடுத்த பிரியாணி பாக்ஸிங்!
கோயம்புத்தூரில் இந்து முன்னணி பிரமுகர் கொலையை அடுத்து நடந்த கலவரத்தில் பா.ஜ.க.வினர் பிரியாணி அண்டாவைத் தூக்கிக் கொண்டு ஓடினார்கள். அது சமூக வலைத்தளங்களில் வைரலானது. அதற்கடுத்த பிரியாணி திருப்பணி தி.மு.க. தரப்பில் மேற்கொள்ளப்பட்டு ட்விட்டரில் தேசிய அளவில் டிரெண்டிங் ஆனது. கோடம்பாக்கம் ஸ்ரீ என்பவரின் இந்து மகாசபையிலிருந்து தி.மு.க.வுக்கு வந்தவர்களால் சென்னையில் பிரியாணிக் கடை ஓனரின் மண்டை உடைக்கப்பட்ட கொடுமை நடந்தது. விருகம்பாக்கம், மதுரவாயல், முகப்பேர் மேற்கு உட்பட சென்னையில் 20-க்கும் மேற்பட்ட இடங்களில் சேலம் ஆர்.ஆர்.பிரியாணிக் கடையை நடத்தி வருபவர் தமிழ்ச்செல்வன். கடந்த 29-ஆம் தேதி இரவு, கலைஞரின் உடல்நிலை குறித்த வதந்தி காட்டுத் தீயாக பரவிய போது, விருகம்பாக்கம் பிரியாணிக் கடைக்குள் காட்டுத்தனமாக புகுந்து தாக்கியது கே.கே.நகர் பகுதி தி.மு.க.வைச் சேர்ந்த யுவராஜ் தலையிலான கும்பல். தமிழ்ச்செல்வனின் தம்பி பிரகாஷ், கடை ஊழியர்கள் கருணாநிதி, நாகராஜ் ஆகியோரை சரமாரியாக வெளுத்துக் கட்டியது அந்தக் கும்பல். ""கட்சிப் பொதுக்கூட்ட நிதி கேட்டு கொடுக்காத பழைய கடுப்புலதான் யுவராஜ் கும்பல் இப்படி பண்ணிருச்சு'' என்கிறார்கள் ஏரியாவாசிகள். யுவராஜ் ஒரு பாக்ஸர் என்பதால் குத்துச்சண்டை பாணியில் தாக்குதல் இருந்தது.
சம்பவ ஸ்பாட்டில் இருந்த சி.சி.டி.வி.கேமரா மூலம் பதிவான காட்சிகள் டி.வி.யிலும் சோஷியல் மீடியாவிலும் வைரலாகப் பரவ ஆரம்பித்ததும் யுவராஜ் உள்ளிட்ட இருவரையும் கட்சியிலிருந்து கட்டம் கட்டினார் பேராசிரியர் அன்பழகன். "தி.மு.க.வின் நற்பெயருக்கு ஊறுவிளைவிக்கும் இத்தகைய செயல்களை அனுமதிக்க முடியாது' என அறிக்கைவிட்ட ஸ்டாலின், 02-ஆம் தேதி பகல்பொழுதில், கே.என்.நேரு, ஆ.ராசா, மா.சுப்பிரமணியன் ஆகியோருடன் பாதிப்புக்குள்ளான பிரியாணிக் கடைக்கே சென்று பிரகாஷ் மற்றும் ஊழியர்களிடம் நலம் விசாரித்தார். சாப்பாட்டு மேசையில் ஸ்டாலினும் பிரியாணி கடை ஓனரும் எதிரெதிரே உட்கார்ந்து பேசினர். கட்சியின் செயல்தலைவரான ஸ்டாலின் இந்தளவுக்கு செயல்பட்டதில் ஆறுதலடைந்த ஓனர் தமிழ்ச்செல்வன், ""தாயுள்ளத்தோடு ஸ்டாலின் விசாரித்தார்'' என மீடியாக்களுக்குத் தெரிவித்தார். இந்தப் பிரச்சனையில் கே.கே.நகர் தனசேகரன் பெயர் அடிபடுவதால், அவரைத் தொடர்பு கொண்டோம். ""பிரியாணிக் கடை நடத்தும் தம்பியும் தி.மு.க.வின் அனுதாபிங்கிறதால, அந்தக் கடையை நான்தான் திறந்து வச்சேன். இந்த யுவராஜும் அவன் கூட்டாளிகளும் ஏன் இப்படி பண்ணுனாய்ங்கன்னு தெரியல'' என்கிறார். யுவராஜ் தனது முகநூலில் தன்னை "ஆர்.எஸ்.எஸ். ஒர்க்கர்' என்றே இன்னமும் பதிவிட்டுள்ளார். த.மா.கா. உள்பட பல கட்சிகளுடனும் தொடர்புடைய அவருக்கு தி.மு.க.வில் எப்படி இடம் கொடுத்தார்கள் என்ற கேள்வியுடன், இன்னும் எத்தனை யுவராஜ்கள் தி.மு.க.வில் சேர்க்கப்பட்டுள்ளனர் என்ற பீதியையும் கிளப்புகிறது.
-அரவிந்த்