நடுக்கடலில் நள்ளிரவு கடத்தல்!

"கலவரம்,…துப்பாக்கிச் சூடு,… தினசரி கைது' என்ற அசாதாரண நடவடிக்கைகளில் தூத்துக்குடி பொதுமக்கள் பாதிக்கப்பட்டிருக்க... மறுபக்கமோ, ""நம்ம வேலையை நாம பார்த்தாதானே நமக்கு கெத்து'' என்று துறைமுக நகருக்கே உண்டான கடத்தல்களும், திரைமறைவு ரகசியங்களும் அரங்கேறிக்கொண்டிருக்கின்றன.

வியாழக்கிழமை பின்னிரவுதான் நம்முடைய ராத்திரி ரவுண்ட் அப்-பிற்கு சரியான நாள் என நமது சோர்ஸ் "நாள்' பார்த்துக் குறித்துக் கொடுக்க, மட்டக்கடை எஸ்.கே.மட்டன் ஸ்டாலில் பொரித்த புரோட்டாவை பிய்த்து போட்டு, கறியுடன் குழம்பு வைத்து கட்டிக்கொடுத்த இரண்டு பார்சல்களுடன் பயணப்பட்டோம். போகும் வழியில் இரு இடங்களில் பெயருக்குப் போலீஸாரின் வாகன சோதனை.. இரண்டு கான்ஸ்டபிள்கள், ஒரு ஏட்டு கொண்ட டீம்… கருப்பட்டி ஆபீஸ் வாசலில் காத்திருந்தது. அதில் அந்த ஏட்டு ஜம்போ டிஃபன் சாப்பிட்டுவிட்டு வந்திருப்பார் போலும். உட்கார்ந்த இடத்தை விட்டு எழுந்திரிக்கவில்லை. பாவம்... எழுந்திரிக்க முடியவில்லை.

midnightmasala

Advertisment

டூவீலரை வீதியின் குறுக்குத் தெருவிலேயே நிறுத்திவிட்டு, ஏறக்குறைய 1 கிலோமீட்டர் தூரம் நடந்து கடற்கரை மணலிலேயே செல்ல வேண்டியதாயிற்று. நமக்காக எதிர்ப்பார்த்தது போல் அலங்காரத்தட்டு பின்புறமுள்ள கடற்கரையில் படகின் அருகில் காத்திருந்தார் நம்மை வரவழைத்த அந்த சோர்ஸ். சரியாக 12 மணியை நெருங்கிக்கொண்டிருந்தது. தூத்துக்குடி டூ சாயல்குடி கிழக்குக்கடற்கரை சாலை வழியே செல்ல வழி காட்டியவருக்கு வெள்ளப்பட்டி கடற்கரையில் ரோந்துப் பணியில் இருந்த போலீஸ் அடிச்சதே ஒரு சல்யூட். அப்பப்பா!

""என்ன பிரதர் அப்படிப் பார்க்கிறீங்க..! இது, சைக்கிள் முறை பந்தம். நாங்க ஒருத்தருக்கு ஒருத்தர் உதவிக்கிறோம். எங்களுக்குள்ள அப்படியொரு மியூச்சுவல் அண்டர்ஸ்டாண்டிங். அதனால்தான், இந்த சல்யூட்.! இப்பக்கூட பாருங்க... இலங்கையிலிருந்து சரக்கு வருது... எடுக்க ஒரு டீம் போயிருக்காங்க.. அதனைக் கொண்டு வரச்சொன்ன முதலாளியோ படகு டீசலுக்கு, சாப்பாட்டிற்கு, ரோந்து போலீஸிற்கு, உள்ளூர் போலீஸிற்கு, தூக்குக் கூலி, படகு டிரைவருக்கு இப்படி அத்தனை செலவிற்கும் பணத்தைக் கொடுத்து அனுப்பியிருக்காரு. இன்னும் கொஞ்ச நேரத்துல பாருங்க'' என்று அவர் கூறவும், பட்டினமருதூர் கடற்கரை வந்து சேர்ந்ததற்கும் சரியாக இருந்தது.

""வா மக்கா...! இது யாரு புது ஆளாக இருக்கு..?'' என நம்மைப்பற்றி நமது சோர்ஸிடம் கேட்டுவிட்டு பார்வையாலேயே அளந்தார் அந்த கடத்தல் கூலி.

2:00 மணியை தொட்டிருந்தது. முன்னரே அங்கிருந்து சிறிய படகில் நம்மைக் கூட்டிச்சென்று கடலில் நிறுத்தி வைத்திருந்து, காத்திருந்தது நமது சோர்ஸ் டீம். நம்முடைய சோர்ஸைக் கேள்விகேட்ட கடத்தல் கூலியின் கையில் தீக்குச்சிகளும், உரசுவதற்கான மருந்துப்பட்டையும் இருந்தது.

நடுக்கடல், அடர்ந்த இரவு. திகிலிலே நாம் காத்துக்கொண்டிருக்க... எதிர்முனையிலிருந்து தீக்குச்சி எரிந்து விழுந்தது. நம் படகிலிருந்த கடத்தல் கூலியின் கையிலிருந்த மருந்துப் பட்டையில் உரசி இருவேறு திசைகளை நோக்கி இரு தீக்குச்சிகள் எரிந்து பயணிக்க, எதிர் தரப்பில் காத்திருந்த படகு நம்மை நோக்கி வரஆரம்பித்தது. இரு படகுகளும் ஒட்டி நிறுத்தப்பட்டன. பழகிய முகங்கள் போல... இந்தப் படகிலிருந்து அந்தப் படகிற்கும், அந்தப் படகிலிருந்து இந்தப் படகிற்கும் பண்டமாற்று ஆரம்பித்தது. வேலைமுடிய, படகு கரையை நோக்கி செலுத்தப்பட்டது. நாமும் சோர்ஸுடன் பத்திரமாகத் திரும்பினோம். பிறகுதான், தெரிந்தது இங்கிருந்து இலங்கைக்கு கஞ்சாவும் அங்கிருந்து தங்கமும் பண்டமாற்று முறையாக கடத்தப்பட்டது என்பது.

விடிவதற்கு இன்னும் மூன்று மணி நேரம் இருந்தது.… சோர்ஸை இறக்கிவிட்டு காமராஜர் கல்லூரி அருகிலுள்ள டீக்கடையில் வண்டியை நிறுத்தினோம். ""நம்மளைத்தான் டார்ச்சர் பண்றாங்க... அக்யூஸ்ட்டை பிடிச்சுக் கொடுத்தா சாதாரண 379 கேஸ் போட்டு தப்பிக்க விட்டுறாங்க. இப்ப என்னடான்னா..? பீச்சிற்கு ரோந்து போ... ரோந்து போ...-ன்னு நச்சரிக்கிறாங்க. பிடிச்சிட்டாலும் காசை வாங்கிட்டு விடத்தானே போறாக? இல்லைன்னா கத்திக்குத்துப் பட்டு நாம சாகணும்... என்ன பொழப்பு இது'' என வண்டி ஓட்டிய காக்கியிடம் புலம்பியது பின் சீட்டிலிருந்த வயதான காக்கி ஒன்று.

வண்டியை துறைமுக பீச்சிற்கு விரட்டினோம். பொதுவாக காலை முதல் இரவு 9 மணிவரை பீச் மற்றும் பூங்காக்கள் திறந்திருக்கும் நேரம். எனினும் துறைமுக ரோடு வியூ பாய்ன்ட் பீச் பூங்காவினுள் இரவு நேரங்களிலும் மீனவர் குடியிருப்பு மற்றும் துறைமுக அட்மின் அலுவலகம் வழியாகவும் உள்ளே செல்லலாம். இதன் வழியாகத்தான் அத்தனை கசமுசாக்களும் அரங்கேறுகின்றன. அங்கிருந்த பத்துக்கும் மேற்பட்ட ஜோடிகளிலும் வட இந்திய பெண்கள். டீக்கடையில் வண்டியின் பின்சீட்டிலிருந்த காக்கி கூறியது ஞாபகத்திற்கு வந்தது.. பார்த்த வேகத்திலேயே திரும்பினோம்.

-ரவுண்ட் அப்: நாகேந்திரன்

தொகுப்பு: -மனோ