Skip to main content

மிட்நைட் மசாலா! கமிஷன் ஒரு பக்கம்... ஆக்ஷன் மறுபக்கம்!

"எப்போதும் சந்திக்கக்கூடிய சிக்னலில் நைட்டு சந்திப்போம் வாங்க சார்...' என்று நமக்கு தெரிந்த காக்கி அதிகாரியிடமிருந்து அழைப்பு வந்தது. இரவு 11 மணி அளவில் சிக்னல் அருகே வந்த அவரின் ரோந்து வாகனத்தில் ஏறி அமர்ந்ததும், அவரது குரலில் வருத்தம் வெளிப்பட்டது.

midnightmasala

""சென்னை வேப்பேரியில் சிட்டி கமிஷனர் அலுவலகம் இருக்கே, அதில் 7-வது மாடியில் கண்ட்ரோல்ரூம் செயல்பட்டு வருது. சென்னை மாநகரில் நடக்கக்கூடிய சம்பவங்கள் குறித்து இந்தக் கட்டுப்பாட்டு அறையிலிருந்து மாநகரத்தில் இருக்கக்கூடிய உயரதிகாரிகள் தொடங்கி கீழ்மட்ட அதிகாரிகள் வரை தகவல் கொடுக்கப்பட்டு வருகிறது. கட்டுப்பாட்டு அறையில் இருக்கக்கூடியவர்கள் வாய்ப்புகளை பயன்படுத்தி கடும் வசூல் வேட்டையில் இறங்கியிருப்பதால் கமிஷன் கலாச்சாரம்,’கமிஷனர் ஆபீசிலேயே கொடிகட்டிப் பறக்குது.

இதனால் நேர்மையாக வேலை செய்யக்கூடிய அதிகாரிகள் அதிக மனஉளைச்சலுக்கு ஆளாகுறாங்க. சட்டம்-ஒழுங்கு கட்டுப்பாட்டு அறை என்பது மேற்கு, வடக்கு, கிழக்கு, தெற்கு என நான்கு பிரிவுகளாகச் செயல்படுது. போக்குவரத்து காவல்துறை இரண்டு பிரிவுகளாக செயல்பட்டு வருது. மொத்தம் 6 கட்டுப்பாட்டு அறை. ஒவ்வொரு கட்டுப்பாட்டு அறையிலும் 6 பேர் இருப்பாங்க. செம வசூல்''’என்றார்.

ரோந்து வாகனம் என்பதால் மெதுவாகத்தான் பயணம் இருந்தது. இரவு நேரத்திலும் பளபளக்கும் சென்னை கவர்ந்தது. குடிமகன் ஒருவர், போலீஸ் வாகனத்தைப் பார்த்து விறைப்பாக சல்யூட் அடித்தபோது, நம்முடன் சேர்த்து அதிகாரிக்கும் சிரிப்பு வந்தது.

அடுத்த சிக்னலில் வண்டி நின்றபோது, மறுபடியும் பேச்சு தொடர்ந்தது. "கண்ட்ரோல் ரூமில் சி.சி.டி.வி. கேமரா இருக்குமே? கமிஷன் வாங்கினால் மாட்டிக்க மாட்டாங்களா?' என்றதும், ""வசூல் எல்லாம் வெளியில்தான்'' என்றவர் அதையும் விளக்கினார்.

""சென்னை முழுவதும் காவல் மாவட்டங்களில், இரவு நேர ரோந்துப் பணியில் தனித்தனியாக பீட் ஒதுக்கப்பட்டிருக்கும். ஒவ்வொரு காவல் மாவட்டத்திற்கும் ராத்திரி நேரத்தில், சிலருக்கு மட்டுமே டூட்டி இருக்கும். அவங்களே எல்லா பகுதிக்கும் போக முடியாதுங்கிறதால, அதைக் கண்டுக்கக்கூடாதுன்னுதான் இந்த கமிஷன். கட்டுப்பாட்டு அறையில் ஏ.சி.களாக தொல்காப்பியன், ரமேஷ்பாபு, முருகன், ஹிட்லர், டி.சி.யாக டாக்டர் பிரபாகரன் இவங்களெல்லாம் இருக்காங்க. நடக்கிற விஷயம் இவங்களுக்கு முழுசா தெரியுமான்னு தெரியலை''’என்று பட்டும் படாமலும் சொன்னவர், வண்டியை ஓரங்கட்டச் செய்தார்.

கட்டுப்பாட்டு அறையில் இருக்கக்கூடிய நேர்மையான அதிகாரி ஒருவருக்கு கால்செய்து லவுட் ஸ்பீக்கர் போட்டார். "இந்த வசூல் எத்தனை நாட்கள் நடந்து வருகிறது?' என்று கேட்ட உடனே ""பல வருடங்களாக நடக்குது சார்... மேலதிகாரிகள்கிட்ட இவங்களப் பத்தி புகார் கூட கொடுக்க முடியாத அளவிற்கு செல்வாக்கா இருக்காங்க.

chennai-commissioner-officeபோக்குவரத்து காவல்துறையில் இன்னும் கொடுமைங்க. ஒன்வே, ஓவர் லோடு, ஹை ஸ்பீடுன்னு வாகனங்களை, குறிப்பா லாரிகளை மடக்கி நைட் நேரத்தில் செய்யும் கலெக்ஷனில், கட்டுப்பாட்டு அறைக்கு தினமும் 500 ரூபாய் மொய் எழுதுறாங்க. மொய் சரியா வரலைன்னா, கண்ட்ரோல் ரூமில் இருப்பவங்க தவறான தகவல்களைச் சொல்லி மேலதிகாரிகளிடம் மாட்டிவிட்டு, டம்மியான இடத்துக்கு மாற்றி விட்டுடுறாங்களாம். அதுக்கு பயந்தே யாரும் பகைச்சிக்கிறதில்லை''’என்றார் எதிர்முனையில் பேசியவர்.

""அவர் சொன்னதை நம்பலைன்னா, என் வாகனத்துலேயே வாங்க'' என்றார் அந்த அதிகாரி. கோயம்பேடு, காசிமேடு, ஹார்பர் ஆகிய இடங்களில் வாகனங்களை மடக்கி கலெக்ஷன் செய்வதைப் பார்க்க முடிந்தது. "கலெக்ஷன் எல்லாம் கண்ட்ரோல் ரூம் கண்ட்ரோலில்தானா' என்றோம்.

""கண்ட்ரோல் ரூம்ங்கிறதே ஒரு பனிஷ்மெண்ட் டூட்டிதான். அங்கே உள்ள ஓட்டைகளை பயன்படுத்தி வசூல் வேட்டையில் இறங்கி வெளுத்து வாங்குறாங்க. உயரதிகாரிகளை மிரட்டும் ஆடியோக்கள்கூட இப்ப வேகமாக பரவுது. சிட்டி கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன், மக்களுக்கும் போலீசுக்கும் நல்லது செய்றாரு. இதையும் நிச்சயம் கவனிப்பாரு பாருங்க...'' என்றார் நம்பிக்கையுடன்.

ஈ.சி.ஆர்., ஓ.எம்.ஆர். சாலைகளில் நடக்கும் வீக்எண்ட் பார்ட்டி பற்றிய நக்கீரனின் மிட்நைட் மசாலா செய்தியைத் தொடர்ந்து, ஜூன் 2-ஆம் தேதி விபச்சாரத் தடுப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் மகேஷ்வரி நடத்திய சோதனையில் ஈ.சி.ஆர். சாலை, பனையூரில் சொகுசு பங்களாவில் டி.வி. நடிகை சங்கீதா மற்றும் சதீஸ் என்ற விபச்சார புரோக்கர் ஆகியோரை கைது செய்து அங்கிருந்த மூன்று இளம்பெண்களையும் மீட்டுள்ளனர். அதேபோல உயர் வகை போதை பார்ட்டிகளும் நடப்பதை குறிப்பிட்டிருந்ததால், தென்னிந்திய ராணுவ உளவுப் பிரிவை சேர்ந்த மேஜர் நீலாங்கரை உதவி ஆணையர் சீனுவாசுலுவை தொடர்புகொண்டு விசாரித்துள்ளார். நெம்மேலியில் நள்ளிரவில் சுற்றும் சமூகவிரோத கும்பலை பற்றியும் மாமல்லபுரம் காவல்துறை டி.எஸ்.பி.யிடமும் விசாரித்துள்ளனர். கண்ட்ரோல்ரூம் பற்றி கமிஷனரும் நடவடிக்கை எடுப்பார் என்ற நம்பிக்கை அதிகரிக்க... பொழுது புலர்ந்தது.

-சி.ஜீவா பாரதி, அரவிந்த்

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

இவ்விதழின் கட்டுரைகள்