அறுபடை வீடுகளில் மூன்றாம்படை வீடான பழனி முருகனை தரிசிப்பதோடு மிட்நைட் மசாலாவையும் கவனிக்கலாமென நம்முடன் வந்த நண்பருடன் டூவீலரில் பழனிமலை அடிவாரத்திற்கு சென்றோம்.
விஞ்ச் ஸ்டேஷன்முன் டூவீலரை நிறுத்திவிட்டு விஞ்ச்மூலம் மலை ஏறுவதற்காக உள்ளே நுழைந்தபோது, "மலைக்கு போகணுமா? அம்பது ரூபா டிக்கெட்' என்று ஒருவர் சொல்ல...… நாமும் டிக்கெட் வாங்கிக்கொண்டு என்ட்ரி ஆனோம். விஞ்ச்சில் ஏறிய நாம் மலைக்குப்போய் புஷ்ப அலங்காரத்தில் காட்சியளித்த முருகனை தரிசித்துக்கொண்டிருந்த பக்தர்களோடு பக்தராக நின்றுகொண்டிருந்தோம்.
திடீரென்று உள்ளே வந்த செக்யூரிட்டிகள், ""டைம் ஒன்பதரை ஆகிடுச்சு. நடையை சாத்தணும் கிளம்புங்க''’என முருக பக்தர்களை ஹை-டெசிபலில் விரட்ட ஆரம்பித்தார்கள். “""150 ரூபாய்க்கு சிறப்பு தரிசன டிக்கெட் வாங்கிட்டு அரைமணி நேரத்துக்குமேல வரிசையில கால் கடுக்க நின்னுதான் முருகனை தரிசிக்க வந்திருக்கோம். ஒரு நிமிஷம்கூட நின்னு மனசார தரிசிக்க முடியல. கழுத்தைப் புடிச்சி வெளியில தள்ளாத குறையாய் விரட்டுறாங்க''’என்று புலம்பியபடி சென்றார்கள் ஒருசில பக்தர்கள். வேறுசில பக்தர்களோ, “""தட்டுல அம்பது, நூறு போட்டா போதும் கண்டுக்கமாட்டாங்க. தட்சணை போட்டுத்தான் தண்டாயுதபாணியை தரிசிக்கவேண்டியிருக்கு''’என சொல்லிவிட்டு அன்னதான வரிசைக்குச் சென்றனர்.
அங்கும் பக்தர்களுக்கு ஏமாற்றம்தான். “"அன்னதானம் முடிஞ்சுடுச்சு'’’என்று பக்தர்களை மரியாதைக் குறைவாக விரட்ட, நாம் கீழிறங்க விஞ்ச்சுக்கு வந்தோம். டிக்கெட் வாங்கிய பக்தர்களை உட்கார வைக்காமல் ரெக்கமென்டேஷனில் டிக்கெட்டே எடுக்காமல் வந்தவர்களை உட்கார வைத்துக்கொண்டு விஞ்ச் பறந்தது. அதனால், ஏமாற்றமடைந்த பக்தர்கள் சிலர் படிக்கட்டில் நடக்க, நாமும் அவர்களோடு நடந்தோம். அப்போது, கோயில் பணியாளர் ஒருவர் நம் கண்ணில் தென்பட... பேச்சுக் கொடுத்தோம்.
""கோயில்ல 200-க்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்கள் நிரப்பாம கிடக்கு. அதனால்தான், தனியார் ஏஜென்சி மூலமா முந்நூறுக்கு மேற்பட்டவங்கள வேலைக்கு எடுத்து ரெண்டு ஷிப்ட்டா ஒர்க் பண்றாங்க. ஆனா, அந்த வேலையாட்களோ, சூப்பிரெண்டெண்ட்டுக்கு அடியாட்கள் மாதிரி செயல்படுறதால... அவுங்க என்ன அட்டூழியம் பண்ணினாலும் கண்டுக்கிறதில்ல. பக்தர்கள்கிட்ட திருட்டுத்தனமா பணம் வாங்கிக்கிட்டு விஞ்ச்சுலயும் ரோப்பிலும் கூட்டிக்கிட்டுப்போயி சாமி தரிசனம் காண்பிக்கிறாங்க. இதுல, வர்ற வருமானம் இங்குள்ள உயரதிகாரிகளுக்குப்போக… மீதம் ஒருநாளைக்கு 2,000 ரூபாயாவது தேத்திடுறாங்க. இதையெல்லாம் கவனிச்சு எங்க இணைஆணையர் செல்வராஜ் நடவடிக்கை எடுத்தாருன்னா நல்லா இருக்கும்''’என்று கோரிக்கையை நம்மூலம் சொல்லிவிட்டுப் போகிறார் அவர்.
நமது டூவீலரை எடுப்பதற்காக மலை அடிவாரத்திலிருந்து நடந்துசெல்லும்போது கார் பார்க்கிங்கில் உட்கார்ந்திருந்த பிச்சைக்காரர்களுக்குள் சின்ன சலசலப்பு. உற்று நோக்கியபோது, “"இன்னைக்கு 150 ரூபாதான் வந்தது. கோட்டா போக 40 ரூபாதான் மிச்சம்'’என்று ஒரு பிச்சைக்காரர் சலித்துக்கொள்ள...…"இன்னைக்கு வந்த 100 ரூபாயில பொட்டணம் (கஞ்சா) போக ஒண்ணும் மீதல'’என்று புலம்பினார் இன்னொருவர். இப்படி, அவர்கள் பிசியாக பேசிக்கொண்டிருந்ததை காதில் வாங்கியபடியே நமது டூவீலரை எடுத்துக்கொண்டு சித்தநாதன் கடை அருகில் வந்தபோது,… அதனருகில் பொட்டணம் வாங்கியதைப் பற்றி பேசிக்கொண்டு வருகிறார்கள் பிச்சைக்காரர்கள். தேவஸ்தான விடுதிக்கு சென்றபோது அருகிலுள்ள குரும்பப்பட்டியில் சில்லிங் விற்கும் செல்வியிடமிருந்து குடிமகன்கள் கட்டிங் வாங்கி தங்களது இடுப்பில் சொருகியபடி செல்கிறார்கள். நாம், அப்படியே அடிவாரம் வழியாக கொடைக்கானல் சாலைப் பகுதிக்குச் சென்றபோதுதான் மருத்துவ நகர் அருகே உள்ளூர், வெளியூர் என பாகுபாடில்லாமல் சூதாட்டப் பிரியர்கள் களைகட்டுகிறார்கள். ஐநூறு, ஆயிரம் என வெட்டுச்சீட்டு சூதாட்டம் பகிரங்கமாக விளையாடிக்கொண்டிருப்பதை பார்க்கமுடிந்தது.
வ.உ.சி. மத்தியபேருந்து நிலையமான பழனி பேருந்து நிலையத்திற்குள் நுழைந்தபோது, ஆங்காங்கே திறந்திருக்கும் கடைகளில் உள்ள லைட்டுகள் எரிந்துகொண்டிருந்தனவே தவிர அங்குள்ள கோபுர விளக்குகள் எரியாமல் இருள் கவ்வியிருந்தது. புது பஸ்-ஸ்டாண்டுக்குள் பயணித்தபோது வழக்கம்போல விலைமாதுகளை ரேட்பேசி அழைத்துச்செல்கிறார்கள் ஆண்கள். அப்போது, "மலையை நோக்கி செல்ல முற்பட்டபோது, “"மலைக்கு போயிடாதீங்ங்ங்ங்க...'’’ என்ற குரல் நம்மை தடுத்து நிறுத்தியது. “"காலையிலதான் மலை திறப்பாங்க. இப்போ, போற ஜோடிகள் எல்லாம் சாமி தரிசனத்துக்கு போகல. வேற தரிசனத்துக்குப் போகுதுங்க. புனிதமான இடத்தை இப்படியெல்லாமா அசிங்கப்படுத்துறது? வெளியில சொல்லவே அசிங்கமா இருக்கு. எப்படி வேணாலும் இருக்கட்டும். பழனி முருகனை தரிசிக்கிறேங்குற பேர்ல வந்து இப்படியா அசிங்கப்படுத்துறது?'’என்று டென்ஷன் ஆகிறார் நம்மை தடுத்து நிறுத்தியவர்.
அங்கிருந்து ஆர்.எஸ். சாலை வழியாக வந்தபோது, அங்கிருந்த டாஸ்மாக் கடை பகலைப்போல குதூகலிக்கிறது; கும்மாளமிடுகிறது. தாராபுரம் சாலைகளில் ஒரு போலீஸ் ரோந்து வாகனத்தைக்கூட நம்மால் பார்க்க முடியவில்லை. அப்படியே, குபேரபட்டணத்திற்கு சென்றபோது அங்கும் குடிமகன்கள் குடித்துவிட்டு குத்தாட்டம் போட...…தலையில் அடித்துக்கொண்டு வீடு திரும்பினோம்.
(பயணிப்போம்)
-ரவுண்ட்-அப்: சக்தி
தொகுப்பு: -மனோ