இளசுகளை ஈர்க்கும் கிளுகிளு உலகம்!
நேரம்… மிட்நைட் 1:15. கரூர் பைபாஸ் சாலை வழியே தில்லைநகர் பகுதியில் நாம் சென்றுகொண்டிருந்தபோது திடீரென்று பணக்கார இளசுகள் டூவீலர்களை ரேஸ்வீலராக மாற்றி ட்ரிபிள்ஸில் பறந்துகொண்டிருந்தார்கள். ஓரிடத்தை இலக்காக வைத்து வாகனங்கள் சீறிப்பாய்ந்துகொண்டிருந்தன. அந்த இடத்தை நோக்கி நமது பார்வை சீறிப்பாய்ந்து பின் தொடர்ந்தது. அண்ணாநகர், கரூர் பைபாஸ் சாலையில் நிறைய கிளுகிளு க்ளப்கள் செயல்பட்டுக்கொண்டிருக்கின்றன. வெளியிலிருந்து பார்ப்பதற்கு ஆச்சாரமான வீடுகள் போல் இருக்கும். உள்ளே நுழைந்தால் ஆச்சர்யப்படும் அளவுக்கு கிளு கிளு க்ளப்கள் ஜொள்ளிளிக்கும் என்கிறார்கள். மசாஜ் க்ளப் என்று சொல்வதற்குப் பதிலாக "ஸ்பா' என்கிற பெயரைச்சூட்டி நடத்திக்கொண்டிருக்கிறார்கள். இதைநோக்கித்தான் பணக்கார இளசுகளின் டூவீலர்கள் மின்னல் வேகத்தில் பறந்து வந்தன என்பதை கன்ஃபார்ம் பண்ணிக்கொள்ள முடிந்தது.
சாதாரணமா "ஸ்பா'க்களை நடத்திட முடியாது. ஆளுங்கட்சி பெண் பிரமுகர் ஒருவரும் அவருடைய கணவரும்தான் நடத்துகிறார்கள். ரயில்வே டிப்பார்ட்மெண்ட்டை சேர்ந்த ஒருவரின் பெயரைச் சொன்னால்தான் உள்ளே செல்ல க்ரீன் சிக்னல் கிடைக்கும். இல்லைன்னா… ரெட் ஏரியாக்குள்ள போக ரெட்லைட்தான் என்று சிரிப்பை உதிர்க்கிறார் நமது சோர்ஸ்.
விபச்சார தடுப்புப்பிரிவு என்ன செய்யுதாம்?’என்கிற நமது மைண்ட் வாய்ஸை கேட்ச் பண்ணிய நமது சோர்ஸ், ""ரோட்டோரத்துல… பஸ் ஸ்டாண்டுல நூறு இருநூறுன்னு நிற்குற பெண்களை கூட்டிக்கிட்டுப்போயி கேஸ் போட்டு.. விபச்சாரத்தை தடுத்துட்டோம்னு பெருமை பீத்திக்கிறதுதான். அப்புறம்… கைது செய்யப்பட்ட பெண்களை விபச்சார புரோக்கர்களிடமே ஒப்படைச்சுடுவாங்க. அவுங்களும் வழக்கம்போல தங்களோட தொழிலை செய்ய ஆரம்பிச்சுடுவாங்க. சார்… லஞ்சம் வாங்குவதும் குற்றம், லஞ்சம் கொடுப்பதும் குற்றம். அதுமாதிரி, விபச்சாரத்துக்கு அழைக்கிற பெண்களை கைது செய்தால் மட்டுமே விபச்சாரத்தை ஒழிக்கமுடியாது. விபச்சாரத்துக்குப் போற ஆண்களையும் கைதுபண்ணி உள்ளே போட்டாதான் சார் விபச்சாரத்தை ஒழிக்கமுடியும்'' என்று தனது நியாயமான ஆதங்கங்களை கொட்டிக்கொண்டிருந்த நமது சோர்ஸிடமிருந்து விடைபெற்று, வண்டியை தில்லைநகர் பக்கம் திருப்பி உறையூர் அரசு மருத்துவமனைக்குள் நுழைந்தோம். டூவீலரில் சென்றுகொண்டிருந்த தம்பதியை இடித்துத்தள்ளிவிட்டு நிற்காமல் போன கே.ஆர்.எஸ். ஆம்னி பேருந்தை ட்ரேஸ் செய்த போலீஸ் ஆக்ஷனில் இறங்கியதை கவனித்தோம்.
மத்தியபேருந்து நிலையத்தின் வெளிப்புற பேருந்துநிறுத்தம் 10 மணியிலிருந்து அதிகாலை 3 மணிவரை ஆம்னி பேருந்துநிலையமாக மாறுவதை அறியமுடிந்தது. அதுவும், கடந்த 4 மாதமாக தமிழகத்தில் நூற்றுக்கணக்கான ஆம்னி பேருந்துகளை வைத்திருக்கும் இந்த நிறுவனம் "ஆர்.கே.டி.' என்கிற பெயரில் வரும் ஆம்னி பேருந்து எல்லைமீறிய ஆதிக்கம் செலுத்துவதாக குற்றம்சாட்டுகிறார்கள் சக ஆம்னி டிரைவர்களே. அப்போது, திடீரென்று கையில் பை, வாயில் பான்பராக் என்று வந்திறங்கிய பெண்ணை, தோசைக்கடைக்காரர், "வாம்மா பாக்கியம் நல்லாயிருக்கியா?' என்று வாஞ்சையோடு விசாரிக்க... பக்கத்துக் கடை மாஸ்டர் திடீரென்று அந்தப் பெண்ணை தட்டக்கூடாத இடத்தில் தட்டி சங்கடப்படுத்தினார். அந்தப் பெண் செய்வது தவறு என்று தோன்றினாலும் பார்ப்பதற்கே பாவமாக இருந்தது. அவளைச்சுற்றி முதல் கல்லை எறிய முடியாதவர்கள்’ஏளனம் செய்துகொண்டிருந்தார்கள்.
அங்கிருந்து, ரயில்வே ஜங்ஷன் சென்றோம்.… மூன்று சிறுவர்களை அழைத்து விசாரித்துக்கொண்டிருந்தனர் குழந்தைகள் நல குழுமத்தினரும் போலீஸும். என்ன விசாரணை என்று சைலண்டாக வாட்ச் பண்ணினோம். ""நாங்களும் ரயில்வே சில்ட்ரன் இண்டியா அமைப்பும் சேவை என்கிற தொண்டுநிறுவனமும் இணைந்து குழந்தைகள் பாதுகாப்பு மையம் நடத்துறோம். வெளிமாநிலங்களிலிருந்து பெற்றோர்கள் அடித்தாலோ…பெற்றோர்களிடம் கோபித்துக் கொண்டோ… பெற்றோர்கள் இல்லாமல் பாதுகாவலர்களால் பாலியல் ரீதியாக துன்புறுத்தப்பட்ட நிலையிலோ, சட்டத்துக்குப்புறம்பான செயல்களில் ஈடுபட்டு தப்பித்துக்கொள்ளவோ பல சிறுவர்கள் ரயில் மூலம் தப்பி வருவார்கள். அவர்களை, இனம் கண்டு... உணவு, உடை எல்லாம் கொடுத்து என்ன பிரச்சனை என்று கேட்டு பெற்றோரிடமோ பாதுகாவலரிடமோ ஒப்படைப்போம் சார்'' என்கிறார்கள். ""நாங்க, மீட்கலைன்னா இந்த சிறுவர்களை யாராவது கடத்திக்கிட்டுப்போயி பணத்துக்கு விற்றுவிடுவார்கள். சிறுவர்களா இருந்தா குழந்தைத் தொழிலாளர்களா மாற்றிடுவாங்க. சிறுமிகளா இருந்தா பாலியல் தொழிலுக்கு அனுப்பிடுவாங்க. அந்த கொடூரம் நடக்கக்கூடாதுன்னுதான் பல குழந்தைகளை மீட்டுக்கிட்டிருக்கோம்'' என்கிறார்கள்.
வாழ்த்துகள் சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பியபோது அதிகாலை மணி 5. தினசரி செய்தித்தாள்கள் வாங்குவதற்கு தலைமை தபால் நிலையம் அருகேயுள்ள டீக்கடைக்கு சென்றோம். டீக்கடை மாஸ்டர் வடையைச் சுட சுட தயாரித்துக்கொண்டிருந்தார். நாம், ஆச்சர்யமாக பார்க்க, ""என்ன சார் இப்படி பார்க்குறீங்க? ஐ.டி. கம்பெனிகள் திருச்சிக்கு வந்ததால எங்களுக்கு நல்ல வியாபாரம். போண்டாவும் வடையும் டீயும் நல்லா போகுது'' என்று உற்சாகத்துடன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
தமிழகத்தின் "ஹார்ட்' அண்ட் ஹாட் ஸ்பாட்டான திருச்சியில் மிட்நைட் ரவுண்ட்-அப் நமக்கு கொஞ்சம் பயத்தையும் அதிர்ச்சியையும் சந்தோஷத்தையும் மாறி மாறி கொடுத்திருக்கிறது என்பதை அசைபோட்டுக்கொண்டே தினசரி நாளிதழ்களை வாங்கிக்கொண்டு டூவீலரில் வீடு திரும்பினோம்.…
ரவுண்ட்-அப்: ஜெ.டி.ஆர்.
தொகுப்பு: மனோ