வந்த செய்தி: காசு கொடுத்தா கட்சிப் பதவி. அமைச்சர் கூட்டத்தில் அடிதடி.

minister-raju

விசாரித்த உண்மை: தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி ஒன்றியத்திற்குட்பட்ட 17 பஞ்சாயத்து அ.தி.மு.க. செயலாளர்களில் 14 பேர் இல்லாமலேயே நடந்த கூட்டத்தில் அமைச்சர் கடம்பூர் ராஜுவும் மா.செ. சி.த.செல்லபாண்டியனும் கலந்துகொண்டனர். கூட்டத்தில் பேசிய தலைமைக் கழக பேச்சாளர் பொன்.ஸ்ரீராம், ""அமைச்சர் வீட்டுக் கல்யாணத்திற்கு தாம்பூலப் பைக்கு 350 கிலோ கல்கண்டு வாங்கிக் கொடுத்தவன், லட்சக்கணக்குல மொய் பணம் செஞ்சவனுக்கு பதவி கிடைக்கிறதா பேச்சு அடிபடுது'' என போட்டுத் தாக்கினார். அவரின் பேச்சை பாதியிலேயே நிறுத்தச் சொன்ன கடம்பூர் ராஜு, லட்சுமிபுரம் ஊ.செ. அம்ரிதா மகேந்திரனைப் பார்க்க, மேடையேறிய அம்ரிதா விளக்கம் சொல்லிக்கொண்டிருக்கும்போதே, உடன்குடி ஒ.செ. ஜெயக்கண்ணனும் அவரின் ஆளான முருகனும் அம்ரிதாவை அலேக்காக தூக்கி வெளியில் வீசியுள்ளனர். கைகலப்பு, அடிதடி ஆரம்பமானதும் எஸ்கேப்பானார் அமைச்சர் கடம்பூர் ராஜு.

-நாகேந்திரன்

Advertisment

வந்த செய்தி: கரூரில் பிரம்மாண்ட தி.மு.க. பொதுக்கூட்டம். செந்தில் பாலாஜி சுறுசுறுப்பு.

senthilbalaji

விசாரித்த உண்மை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தார் அ.ம.மு.க.வின் மாஜி எம்.எல்.ஏ.செந்தில் பாலாஜி. இணைந்த கையோடு கரூர் திரும்பியவர், தனது ஏரியாவில் இருக்கும் தி.மு.க. நிர்வாகிகளை வீடு வீடாகச் சென்று சந்தித்து கட்சிப் பணியை மேற்கொண்டு வருகிறார். ஏற்கனவே ஸ்டாலினிடம் தேதி வாங்கியதன் அடிப்படையில் வருகிற 27-ஆம் தேதி கரூரில் பிரம்மாண்ட இணைப்பு விழா பொதுக்கூட்டத்திற்கான ஏற்பாடுகளில் சுறுசுறுப்பாகியுள்ளார். இதற்காக கரூர் ராயனூரில் 10 ஏக்கர் பரப்பளவில் மைதானம் தயாராகி வருகிறது. திருச்சி மா.செ. நேரு, கரூர் மா.செ. நன்னியூர் ராஜேந்திரன் மற்றும் கே.சி.பழனிச்சாமி, சின்னசாமி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் முன்னிலையில், பொதுக்கூட்ட மைதானத்தில் கால்கோள் விழா அமர்க்களமாக நடந்துள்ளது.

Advertisment

-ஜெ.டி.ஆர்.

வந்த செய்தி: தமிழக அரசின் செய்தித்துறையை ஆட்டிப் படைக்கும் மூவர் அணி.

விசாரித்த உண்மை: தமிழக அரசின் செய்தித்துறையில் இணை இயக்குநராக இருக்கும் முத்துசாமி, 2019 மார்ச் மாதம் ஓய்வு பெறுகிறார். ஆனால் இவருக்கு பணி நீட்டிப்பு வழங்க இப்போதே முயற்சியில் இறங்கிவிட்டார் துறையின் கூடுதல் இயக்குநர் எழில். இந்த எழிலும் பணி நீட்டிப்பில் இருப்பவர்தான். எழில், முத்துசாமி, சுப்பிரமணி இந்த மூவர் அணிதான் செய்தித்துறையை ஆட்டிப் படைத்து வருகிறது. மூவருமே முதல்வர் எடப்பாடியின் சமூகத்தைச் சேர்ந்தவர்கள்.

-இளையர்

ravindranath

வந்த செய்தி: வேலை வாங்கித் தருவதாக 3 கோடி மோசடி. மகனைக் காப்பாற்றும் ஓ.பி.எஸ்.

விசாரித்த உண்மை: தமிழக அரசு போக்குவரத்துக் கழகத்தில் 8 ஆயிரம் பணியிடங்கள் காலியாக உள்ளன. இதற்கு ஆட்களை நியமிக்கும் வேலைகளில் புது டெக்னிக்கை கையாண்டிருக்கிறார் துணை முதல்வர் ஓ.பி.எஸ்.சின் மகனான ரவீந்திரநாத். இதற்காக கோபிநாத், சுரேஷ் மோகன் என இரண்டு பேரை களமிறக்கியுள்ளார். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வெவ்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த ஐந்து பேரிடம் தலா 5 லட்சம் வாங்கிக் கொண்டு, போக்குவரத்துக் கழகத்தில் வேலை வாங்கிக் கொடுத்துள்ளனர். அந்த ஐந்து பேர் மூலம் வேலைக்கு முயற்சிப்பவர்களுக்கு மாவட்ட வாரியாக கொக்கி போட்டுள்ளனர். திருவல்லிக்கேணியில் இருக்கும் ஒரு மேன்ஷனில் ரூம் போட்டு, 60 பேரிடம் தலா 5 லட்சம் கலெக்ஷன் செய்து, தங்களுக்குச் சேரவேண்டிய 5% கமிஷன் போக மீதியை ரவீந்திரநாத் ஏஜெண்டுகளான கோபிநாத் மற்றும் சுரேஷ்மோகன் ஆகியோரிடம் கொடுத்திருக்கிறார்கள். அது போகவேண்டிய இடத்துக்குப் போய்ச் சேர்ந்துவிடுமாம். இந்த டெக்னிக்கால் 5 லட்சம் கொடுத்து ஏமாந்தவர்தான் வந்தவாசியைச் சேர்ந்த விஸ்வநாதன். அவர் நம்மிடம், “""கண்டக்டர் வேலைக்காக 5 லட்சம் கொடுத்து ரெண்டு வருஷம் ஆகிருச்சு. ரவீந்திரநாத்தைப் பார்க்க முடியாததால் ஓ.பி.எஸ்.சிடமே நேரில் முறையிட்டேன். "வாங்கித் தர்றேன்'னு சொல்லிச் சொல்லியே இழுத்தடிக்கிறார்'' என்றார் கண்ணீருடன்.

-அருண்பாண்டியன்

saipalavi

வந்த செய்தி: சாய்பல்லவிக்கு ‘"பொம்பள தல'’ பட்டம். தனுஷ் டெக்னிக், அஜீத் ரசிகர்கள் கடுப்பு.

விசாரித்த உண்மை: சமீபத்தில் ரிலீசாகியிருக்கும் தனுஷின் "மாரி 2'’புரொமோ ஃபங்ஷனில் பேசிய காமெடி நடிகர் ரோபோ சங்கர், ""இந்தப் படத்தில் ஹீரோயின் சாய்பல்லவி. நடிப்பில் செம மிரட்டு மிரட்டியிருக்கார். இப்போதிருக்கும் தமிழ் நடிகைகளில் சாய்பல்லவிதான் "பொம்பள தல.' அப்படித்தான் டைட்டில் கார்டிலும் போடப் போகிறார்கள்'' என பொளந்து கட்டினார். இதே "மாரி 2' ரிலீஸ் பிரச்சனையில்தான் விஷாலுடன் மல்லுக்கட்டினார் தனுஷ். இப்போது அஜீத்துக்கு போடும் "தல'’பட்டத்தை சாய்பல்லவிக்கு மிக்ஸ்பண்ணியிருக்கும் தனுஷின் டெக்னிக்கால் கடுப்பில் இருக்கிறார்கள் அஜீத் ரசிகர்கள்.

-பரமேஷ்

வந்த செய்தி: அமைச்சருக்கு எதிராக போர்க்கொடி. வாரியத் தலைவர் ராஜினாமா.

விசாரித்த உண்மை: புதுச்சேரி மாநிலம் நோணாங்குப்பம், ஊசுட்டேரி, காரைக்கால், மாஹே, ஏனாம் பகுதிகளில் அந்த மாநில சுற்றுலா வளர்ச்சிக் கழகம் சார்பில் படகு குழாமும் சீகல்ஸ் உணவகமும் நடத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் மாநில அரசுக்கு நல்ல வருவாயும் கிடைக்கிறது. திடீரென, படகு குழாம்களை தனியார் வசம் ஒப்படைக்கும் வேலைகளில் இறங்கியுள்ளார் அமைச்சர் மல்லாடி கிருஷ்ணராவ். முதல் கட்டமாக நோணாங்குப்பம் அரசு படகு குழாமிற்கு அருகிலேயே இடையார்பாளையம் கழிமுக பகுதியில் படகு குழாம் அமைக்க தனியாருக்கு அனுமதி அளித்துள்ளார் அமைச்சர். இது படகு குழாம் ஊழியர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. ""படகு குழாமில் இயங்கும் உணவகம் நஷ்டத்தில் இயங்குவதாக காரணம் சொல்கிறார்கள். ஆனால் குழாம் வருமானத்தில் உணவக ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கப்படுகிறது. தனியாரை அனுமதித்தால் எங்கள் பிழைப்பும் போகும், சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தையும் இழுத்து மூடவேண்டியதுதான்'' என்கிறார்கள் ஊழியர்கள். ""தனது முடிவை அமைச்சர் கைவிடவில்லை என்றால் எனது பதவியை ராஜினாமா செய்வேன்'' என்கிறார் சுற்றுலா வளர்ச்சிக் கழகத்துறையின் வாரியத் தலைவர் பாலன்.

-சுந்தரபாண்டியன்