வந்த செய்தி: ஊர்க்காவல் படையினரின் போராட்டத்திற்கு மறைமுக ஆதரவு தெரிவித்த காவல்துறை.
விசாரித்த உண்மை: தமிழக ஊர்க்காவல் படையில் 13 ஆயிரம் பேர் பணிபுரிகிறார்கள். காவல்துறைக்கு மாற்றாகவும் உதவியாகவும் இவர்களைப் பயன்படுத்தி வருகிறார்கள். கடந்த வாரம் தெலுங்கானா தேர்தல் பாதுகாப்பு பணிக்காக, தமிழகத்திலிருந்து 2,500 ஊர்க்காவல் படையினர் சென்றனர். அங்கே அவர்களுக்குரிய ஊதியம் தரப்படாததோடு, தங்குவதற்கும், உணவிற்கும் சரியாக ஏற்பாடு செய்யாமல் ரொம்பவே திண்டாடவிட்டிருக்கிறார்கள். இதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், சென்னை ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் மாபெரும் போராட்டத்தை நடத்தினார்கள். சங்கம் அமைக்க முடியாமலும் உரிமைகளைக் கேட்டுப் போராட முடியாமலும் மனம் வெதும்பியிருக்கும் காவல்துறையினரே, ஊர்க்காவல் படையின் போராட்டத்திற்கு மறைமுகமாக தங்களது ஆதரவை தெரிவித்து மகிழ்ந்திருக்கிறார்களாம்.
-பிரகாஷ்
வந்த செய்தி: அ.தி.மு.க.வில் இணைகிறாரா கஸ்தூரி?
விசாரித்த உண்மை: ஏகப்பட்ட கடன் நெருக்கடியால், வீடு ஏலத்திற்கு போகும் நிலை வந்ததால், எடப்பாடி கொடுத்த வாக்குறுதியால், நடிகர் கஞ்சா கருப்பு சமீபத்தில் அ.தி.மு.க.வில் இணைந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு, முதல்வர் எடப்பாடியின் அழைப்பின் பேரில் தலைமைச் செயலகத்தில் அவரைச் சந்தித்தார் நடிகை கஸ்தூரி. வரப்போகும் தேர்தலை எதிர்கொள்ள, சினிமா பிரபலங்களை வளைக்கும் முயற்சியில் எடப்பாடியே நேரடியாக களம் இறங்கியிருப்பதால், அ.தி.மு.க.வில் இணைந்துவிடும்படி கஸ்தூரியிடமும் வேண்டுகோள் வைக்க, "எனக்கு அரசியல், கட்சி பத்தியெல்லாம் தெரியாது' என கஸ்தூரி மறுத்திருக்கிறார். “""பெண்களுக்கு பாதுகாப்பு உள்ள கட்சி அ.தி.மு.க. இந்தக் கட்சியில் யார் வேண்டுமானாலும் உயர்ந்த இடத்திற்கு வரலாம், யோசித்து பதில் சொல்லுங்கள்''’எனச் சொல்லி அனுப்பினாராம் எடப்பாடி. கஸ்தூரி எந்தப் பதிலும் சொல்லவில்லையாம்.
-அரவிந்த்
வந்த செய்தி: அமைச்சருக்கு அட்வைஸ் செய்த அமைச்சர்.
விசாரித்த உண்மை: கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 27 பொருட்கள் அடங்கிய நிவாரண உதவி வழங்கும் பணி, புதுக்கோட்டை மாவட்டம் திருக்கோகர்ணம் கோவில்பட்டியில் நடந்தது. நிவாரணப் பொருட்களை வழங்கிய பின் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பேசும் போது, “""பொதுமக்கள் தங்களின் குறைகளை கூறும் போது, காது கொடுத்துக் கேட்க வேண்டியது அரசின் கடமை. அவர்களின் கோரிக்கையை முடிந்த அளவுக்கு அரசாங்கம் செய்து கொடுக்க வேண்டும். இல்லையென்றால் அமைச்சர்கள் தங்களது சொந்த முயற்சியால் நிறைவேற்றித் தரவேண்டும். முடியவில்லையென்றால் மக்களிடம் தெளிவுபடுத்திவிட வேண்டும். இப்படியெல்லாம் நான் செய்ததால்தான் புயல் நிவாரணப் பணிகளின்போது, மக்கள் எனது காரை மறிக்கவில்லை''’என்றார். “""சொந்த மண்ணிலேயே மக்களால் ஓட ஓட விரட்டப்பட்ட அமைச்சர் ஓ.எஸ்.மணியனுக்கு இது மிகச் சரியான அட்வைஸ்''’என்கிறார்கள் அ.தி.மு.க.வினர்.
-பகத்சிங்
வந்த செய்தி: "பதவி கொடுங்கள்'’எடப்பாடிக்கு நெருக்கடி கொடுக்கும் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.
விசாரித்த உண்மை: கட்சியில் பதவி கேட்டு சலித்துப்போன ஸ்ரீவைகுண்டம் எம்.எல்.ஏ. சண்முகநாதன், கடந்தவாரம் தீர்க்கமான ஒரு முடிவோடு இ.பி.எஸ்.சையும் ஓ.பி.எஸ்.சையும் சந்தித்திருக்கிறார். அப்போது “""எனக்கு மா.செ. பதவி தாருங்கள். கடம்பூர் ராஜு அமைச்சராக இருக்கட்டும். அல்லது என்னை அமைச்சராக்குங்கள், அவர் மா.செ.வாக இருக்கட்டும்'' எனச் சொல்லிவிட்டு வந்துள்ளாராம் சண்முகநாதன். எந்த நேரத்திலும் ஏதாவது ஒரு அறிவிப்பு வரலாம் என்ற நம்பிக்கையில் உள்ளனர் சண்முகநாதன் ஆதரவாளர்கள்.
-பரமசிவன்
வந்த செய்தி: அமலாபால் விவகாரத்தில் சிக்கும் பிரபல டான்ஸ் மாஸ்டர்.
விசாரித்த உண்மை: மலேசியா கலை நிகழ்ச்சிக்காக, சென்னை தி.நகரில் இருக்கும் டான்ஸ் ஸ்கூலில் ரிகர்சலில் இருந்தார் நடிகை அமலாபால். அப்போது அவரிடம், மலேசிய தொழில் அதிபர் ஒருவருடன் தனிமைச் சந்திப்புக்காக அழகேசன் என்பவர் அணுகி, அது பெரும் பிரச்சனையாகி, போலீஸில் அமலாபால் கம்ப்ளெய்ண்ட் கொடுக்கும் அளவுக்குப் போனது. இதன் பின்னணியை விசாரித்த தி.நகர் போலீஸ், அழகேசனுடன் பாட்ஷா என்பவரையும் வழக்கில் சேர்த்தது. இப்போது பிரபல டான்ஸ் மாஸ்டர் ஸ்ரீதரையும் வழக்கில் சேர்த்து விசாரணை வளையத்திற்குள் கொண்டு வந்துள்ளனர். தி.நகர் காவல் நிலையத்தில் இருக்கும் சிலருக்கே தெரியாதபடி ரகசியம் காக்கிறார்களாம்.
-சூரியன்
வந்த செய்தி: தனிப்பட்ட நலனுக்காக தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 2 கோடி ஒதுக்கிய அ.தி.மு.க. எம்.பி.
விசாரித்த உண்மை: நெல்லை அ.தி.மு.க. எம்.பி. பிரபாகரனின் சொந்த ஊர் கீழப்பாவூர் அருகே உள்ள நாகர்குளம். இந்த ஊரின் கூட் ரோட்டின் அருகிலேயே பிரபாகரனின் உறவினர்களுக்குச் சொந்தமான 10 ஏக்கர் வயலுடன் கூடிய தென்னந்தோப்பு உள்ளது. மழைக் காலங்களில் தோப்பின் முன்பாக இருக்கும் சிறிய குளம் நிரம்பிவிட்டால், 2 கி.மீ. தூரம் சுற்றித் தான் தோப்பிற்கு போகமுடியும். இதனால் "மக்களுக்கு சிரமமாக இருப்பதாகவும் அந்த இடத்தில் பாலம் கட்டினால் உதவியாக இருக்கும்' எனவும் தனது சொந்தபந்தங்கள் மூலம் கலெக்டரிடம் மனு கொடுக்க வைத்தார் பிரபாகரன். இடத்தை ஆய்வு செய்த அதிகாரிகளோ, "மக்கள் அதிகம் பயன்படுத்தாத அந்த சாலையில் கோடி ரூபாய் எஸ்டிமேட்டில் பாலம் அமைக்கத் தேவையில்லை' எனக் கூறிவிட்டார்கள். பார்த்தார் எம்.பி., தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 2 கோடி ரூபாயை ஒதுக்கி, வேலை விரைவாக நடக்க வேண்டும் என்பதற்காக, பேரூராட்சி நிர்வாக அதிகாரி கண்மணி சகிதம் அந்த இடத்தைப் பார்வையிட்டும் வந்திருக்கிறார் எம்.பி.பிரபாகரன்.
-சிவன்