வந்த செய்தி: தமிழக காங்கிரசுக்கு புதிய மேலிட பொறுப்பாளர்.
விசாரித்த உண்மை: தமிழக காங்கிரசின் மேலிட பொறுப்பாளராக இப்போது இருக்கும் முகுல்வாஸ்னிக்கை மாற்றும் முடிவுக்கு வந்துள்ளார் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி. புதிய மேலிட பொறுப்பாளர்களாக கேரளாவைச் சேர்ந்த முள்ளம்பள்ளி ராமச்சந்திரன், கர்நாடகாவைச் சேர்ந்த முனியப்பா ஆகிய இருவரில் ஒருவர் நியமிக்கப்படலாம். புதியவர் நியமனத்திற்குப் பின் தமிழக காங்கிரசில் பல அதிரடி மாற்றங்கள் நடக்கலாம் என்கிறது சத்தியமூர்த்தி பவன் ஏரியா.
-இளையர்
வந்த செய்தி: சென்னையில் அமித்ஷா நடத்திய ரகசிய சந்திப்பு.
விசாரித்த உண்மை: தமிழக பா.ஜ.க.வினரை சந்திக்க கடந்த வாரம் சென்னை வந்த கட்சியின் தேசியத் தலைவர் அமித்ஷா, கிருஷ்ணமூர்த்தி என்பவரை, அவரின் வீடு தேடிச் சென்று சந்தித்தார். சுப்ரீம் கோர்ட் வக்கீலான இந்த கிருஷ்ணமூர்த்தி சொராபுதீன் என்கவுன்ட்டர் வழக்கிலிருந்து அமித்ஷா விடுதலை பெறக் காரணமானவராம். அந்த நட்பின் அடிப்படையில் தான் இந்த சந்திப்பு நடந்துள்ளது. அதே நேரத்தில் கிருஷ்ணமூர்த்திக்கு நெருக்கமான நண்பரான என்.நடராஜன் என்பவர் கும்பகோணத்தில் பி.என்.எல்.என்ற பெயரில் நிதி நிறுவனம் நடத்தி பொதுமக்களின் பணம் 100 கோடி ரூபாயை மோசடி செய்ததை உறுதி செய்து உச்சநீதிமன்றமே 2017-ஆம் ஆண்டு தீர்ப்பளித்துள்ளது. அந்த நிதி நிறுவனத்தில் பணம் கட்டி ஏமாந்த ஏகப்பட்ட பேர், அமித்ஷாவிற்கு புகார் அனுப்பி வருகிறார்களாம்.
-பிரகாஷ்
வந்த செய்தி: டாக்டர் ராமதாசின் பாராமுகத்தை சம்பந்தி மூலம் சரிக்கட்டிய எடப்பாடி.
விசாரித்த உண்மை: வன்னியர் பொதுச்சொத்து நல வாரியம் அமைப்பது குறித்து சட்டமன்றத்தில் சட்டமசோதாவை நிறைவேற்றினார் முதல்வர் எடப்பாடி. இதற்கு பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாசிடமிருந்து எந்தவித பாராட்டும் வரவில்லை. இது குறித்து அமைச்சர் சி.வி.சண்முகத்திடம் எடப்பாடி பேசினார். அமைச்சரின் ஏற்பாட்டின்படி, ராமதாசின் சம்பந்தியான காங்கிரஸ் முன்னாள் தலைவர் கிருஷ்ணசாமியின் மகனும் அன்புமணி ராமதாசின் மைத்துனருமான மாஜி எம்.எல்.ஏ. விஷ்ணுபிரசாத் மற்றும் வன்னிய சமூக பிரமுகர் சி.என்.ராஜன் உள்ளிட்ட பத்து பேர் கோட்டையில் எடப்பாடியைச் சந்தித்து பாராட்டும் வாழ்த்தும் தெரிவித்தனர்.
-சஞ்சய்
வந்த செய்தி: கடனில் தத்தளிக்கும் தயாரிப்பாளரிடம் சிக்கித்தவிக்கும் ஹீரோயின். கை கொடுப்பாரா சிம்பு?
விசாரித்த உண்மை: "வந்தா மலை'’மூலம் தமிழ் சினிமாவில் தமிழ்பேசத் தெரிந்த ஹீரோயினாக அறிமுகமானவர் தமிழச்சி ஸ்ரீபிரியங்கா. விக்ரம் நடித்த "ஸ்கெட்ச்'சில் தமன்னாவுக்கு தோழியாக, டைரக்டரின் ஆசியால், நிறைய சீன்களில் தலை காட்டினார். இந்த ஸ்ரீபிரியங்கா, "கங்காரு'’என்ற படத்திலும் நடித்தார். அந்தப் படத்தைத் தயாரித்த சுரேஷ் காமாட்சி, டைரக்டராகவும் புரமோஷன் ஆகி, ‘"மிகமிக அவசரம்'’ படத்தில் ஸ்ரீபிரியங்காவை போலீஸ் கான்ஸ்டபிள் வேடத்தில் நடிக்க வைத்தார். ஏற்கனவே மணிவண்னன்-சத்யராஜ் காம்பினேஷனில் ‘"நாகராஜ சோழன்'’ படத்தை தயாரித்த வகையில் பெருத்த நட்டத்தில் இருந்த சுரேஷ் காமாட்சியால் மிகமிக அவசரத்தில் ரிலீஸ் பண்ண முடியவில்லை. அவரிடமிருந்து ஸ்ரீபிரியங்காவாலும் விலக முடியவில்லையாம். இப்படிப்பட்ட நெருக்கடியிலும் டைரக்டர் வெங்கட்பிரபு-சிம்பு காம்பினேஷனில் ‘"மாநாடு'’ படத்தை ஆரம்பிக்கப்போவதாக அறிவித்துள்ள சுரேஷ் காமாட்சி, "சிம்புவுக்கு ஜோடி நீதான்' என பிரியங்காவிடம் வாக்குறுதி கொடுத்துள்ளாராம். ஆனாலும் சிம்பு கை கொடுப்பாரா என்பது உறுதியில்லை.
-பரமேஷ்
வந்த செய்தி: மாவட்ட காங்கிரஸ் தலைவருக்கு கண்டன போஸ்டர், திருநாவுக்கரசரிடம் பஞ்சாயத்து.
விசாரித்த உண்மை: ஆத்தூர், நத்தம், நிலக்கோட்டை ஆகிய மூன்று சட்டமன்றத் தொகுதிகள் அடங்கிய திண்டுக்கல் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவராக இருப்பவர் அப்துல்கனி ராஜா. இவரை தூக்க வேண்டும் என திண்டுக்கல் மாநகர இளைஞர் காங்கிரஸ் தலைவர் மணிகண்டன் கொடி பிடித்துள்ளார். மாவட்டம் முழுவதும் கண்டன போஸ்டர்களும் ஒட்டப்பட்டுள்ளன. “பழனி தொகுதிக்குட்பட்ட கொடைக்கானலைச் சேர்ந்தவர் அப்துல்கனி ராஜா. மேற்கு மாவட்டத்துக்காரரான அவரை கிழக்கு மாவட்டத் தலைவரா போட்டா எப்படிங்க? இந்த மூணு வருஷத்துல கட்சிப் பொதுக்கூட்டமோ, நிகழ்ச்சியோ நடத்துனதில்லை. அதான் மாநிலத் தலைவர் திருநாவுக்கரசரிடம் நேரடியாகவும் அகில இந்திய தலைவர் ராகுல் காந்திக்கு மெயில் மூலமும் புகார் கொடுத்துள்ளோம்’’ என்றார் மணிகண்டன். அப்துல்கனி ராஜோவோ, எனக்கு எதிராக போராடுபவர்கள் கட்சிக் கட்டுப்பாட்டை மீறியவர்கள்’’ என்கிறார் அதிரடியாக.
-சக்தி