ப்ரல் 29, இரவு நேரம். தூத்துக்குடி நகரின் போல்பேட்டை பகுதியிலுள்ள பார் ஒன்றில், தாங்கள் கேட்டதைத் தருவதில் தாமதமாக, சினமேறிப் போனவர்கள் பார் ஊழியரிடம் கடுமையான தகராறில் ஈடுபட்டிருக்கிறார்கள். வாக்குவாதம் முற்றி தாக்குதல்வரை போன சம்பவம் தடுக்கப்பட, போதை ஏறிய அந்த ஆறு வாலிபர்களும், தாங்கள் வைத்திருந்த அரிவாள்களோடு மூன்று பைக்குகளில் வெளியேறியிருக்கின்றனர். அந்த ஆறு வாலிபர்களும் இந்த ஏரியாவைச் சேர்ந்தவர்களல்ல. வெளியூரைச் சேர்ந்தவர்கள் போல தெரிகிறது. பாரில் தகராறு செய்தவர்கள், போதை ஏற்றிக்கொண்டு பேசியபடியே பைக்கில் பறந்திருக்கிறார்கள்.

bb

அவர்கள் கிளம்பிய தோரணை, ஏதேனும் 'சம்பவத்திற்காக' இருக்கலாம் என்பதாகப் பட்டது. உடனே அந்த ஆறு பேர் பற்றிய தகவல், தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி.க்கு உடனே பறக்க, அலர்ட்டான எஸ்.பி., தூத்துக்குடியின் வட பாகக் காவல் நிலையத்தை உஷார்ப்படுத்தியிருக்கிறார். அந்த இரவிலும் தாமதிக்காத வட பாக இன்ஸ்பெக்டர் பிரேம் ஆனந்த், எஸ்.ஐ. ராஜபிரபு, மாரிமுத்து தலைமையிலான போலீசார், தூத்துக்குடி கீழூர் பகுதியின் மட்டக்கடை பகுதியைச் சலித்திருக்கிறார்கள். அது சமயம், சந்தேகப்படுகிற வகையில் மூன்று பைக்குகளில் வந்த ஆறு வாலிபர்களையும் மடக்கிய போலீஸ் டீம், வட பாகம் காவல் நிலையத்திற்கு அவர்களைக் கொண்டுவந்து அவர்களை சோதனையிட்டதில், கத்தி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்கள் சிக்கி யிருக்கின்றன.

ஆயுதம் தாங்கி வந்தவர்களை தங்கள் லெவலில் விசாரித்தபோது, விருதுநகரைச் சேர்ந்த கருப்பசாமி, அருண், சந்தனபாண்டி, சக்திவேல், வல்லரசு, தூத்துக்குடி தாளமுத்து நகரைச் சேர்ந்த ராஜா ஆகியோர் தான் அவர்கள் என்பது தெரியவந்தது. அதையடுத்து, எந்த நோக்கத்துக் காக இப்படி ஆயுதங்களோடு சுற்றுகிறார்கள் என்பதை மேலும் கடுமையான முறையில் விசாரிக்க, உண்மை அனைத்தையும் கக்கி யிருக்கிறார்கள்.

"நாங்கள் விருதுநகர் பகுதியைச் சேர்ந்தவர்கள். கூலிப்படையினர். இந்த ராஜா மூலம் (பிடிபட்டவர்களில் ஒருவர்) நாங்கள் கூலிக்கு ஏற்பாடு செய்யப்பட்டோம்'' என்று தங்கள் கேங்கிலிருக்கும் ராஜாவைக் கை காட்டியிருக்கிறார்கள். இவர்கள் மீது விருதுநகர், தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டக் காவல் நிலையங்களில் கொலை, கொலை முயற்சி உள்ளிட்ட வழக்குகள் நிலுவையிலிருக்கின்றன. இந்த வழக்குகளில் மூன்று பேர் தற்போது ஜாமீனில் உள்ளனர்.

இவர்கள் அனைவரும் இந்தப் பகுதியில் உள்ள பா.ஜ.க. புள்ளியான... உண்மையே சொல்பவரின் பெயரைக் கொண்டவரின் குடும்பப் பிரச்சினையில் தொடர்புடைய ஒருவரைக் கொலை செய்வதற்காக அமர்த்தப்பட்டவர்கள் என்றும், அதற்காக அவரின் மட்டக்கடை வீடு ஒன்றில் தங்க வைக்கப்பட்டிருந்ததையும், அன்றைய தினம் இரவில் அந்த அசைன்மெண்ட்டை முடிப்பதற்காக பாரில் சரக்கடித்துவிட்டுக் கிளம்பி வந்தபோது சிக்கிக் கொண்டதையும் வாக்கு மூலமாகவே கொடுத்திருக்கிறார்கள்.

இதையடுத்து பா.ஜ.க.வின் மாவட்ட அளவிலான அந்த நிர்வாகியை இரவோடு இரவாக தங்கள் கஸ்டடிக்கு கொண்டு வந்த காக்கிகள், அவரை கூலிப்படையினரின் முன்னிலையி லேயே விசாரித்திருக்கிறார்கள். தந்தை சேர்த்து வைத்த திரண்ட சொத்துக்களை அனுபவித்து வருகிற அந்தப் புள்ளி, பல அரசியல் கட்சிகள் வரை சென்று வந்தவராம். அவரது உடன் பிறந்த சகோதரன், முன்னாள் எம்.எல்.ஏ.. பண வறட்சியே கண்டிராத அந்தப் புள்ளி, பைனான்ஸ் தொழில் செய்துவருபவர். அவருக்கு இரண்டு மனைவிகளாம். இரண்டாவது மனைவிக்கு ஒரு குழந்தையிருக்கிறது. ஆனால் அடுத்தவருடன் தொடர்பிலிருக்கும் இரண்டாவது மனைவி அவரை விட்டுப் பிரிந்து சென்றதை ஈகோவாக எடுத்துக்கொண்டவர், அவரைத் தீர்த்துக் கட்டுவதற்காக உள்ளூர் கூலிப்படையினரை ஏற்பாடு செய்யப்போன நேரத்தில், அந்த உள்ளூர் கூலிப்படை ஏஜண்டோ, உள்ளூர் சண்டியர்களை வாடகைக்கு அமர்த்தினால் மாட்டிக் கொள்வோம். அதனால் வெளியூர் கூலி கேங்க் தான் சரி என்று விபூதியடிக்க, யோசித்தவருக்கு அது சரி என்று பட்டிருக்கிறது. அதனையடுத்தே உள்ளூர் கூலிப்படை ஏஜெண்ட், விருதுநகர் கூலிப்படையினரை பிக்ஸ் செய்து வரவழைத்திருக்கிறார்'' என்றார் அந்த விசாரணை அதிகாரி.

அரசியல் கெத்து, வைட்டமின் "ப'“இவைகளால் பண்ணிய அலப்பறையினால் கூலிப் படையினர் வசமாக மாட்டியிருக்கிறார்கள். ஒரு மேஜர் அண்டர் கிரவுண்ட் ஆபரேஷன் மடக்கப்பட்டிருக்கிறது.

-பி.சிவன்

படங்கள்: ப.இராம்குமார்