புதிதாகப் பொறுப்பேற்றுள்ள கர்நாடக காங்கிரஸ் அரசின் துணை முதல்வர் சிவக்குமார், நீர்ப்பாசனத் துறை அதிகாரிகளுடனான முதற்கட்ட சந்திப்பில், "மேகதாது திட்டத்திற்கு ஒதுக்கப் பட்டுள்ள 1000 கோடி ரூபாய் நிதியை நிலம் கையகப்படுத்துவதற்கு பயன்படுத்தியிருக்கலாம், ஏன் செய்யவில்லை'' என கேட்டு காவிரி பிரச்சனையைப் பற்றவைத்தார். இது ஒட்டுமொத்த தமிழக விவசாயிகளையும், அரசியல் தலைவர்களையும் கொந்தளிக்கச் செய்துள்ளது.
தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை உள்ளிட்ட காவிரி டெல்டா மாவட்டங்களின் பாசன ஆதாரமாகவும், நாமக்கல், கரூர், சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களின் குடிநீர் ஆதாரமாகவும் காவிரி இருந்துவருகிறது.
கர்நாடகாவின் கனகபுராவில் காவிரியின் குறுக்கே மேகதாது என்கிற இடத்தில் 9000 கோடி மதிப்பீட்டில் அணை கட்டுவதற்கு கர்நாடக அரசு திட்டமிட்டு, அதற்காக ஆயிரம் கோடி ரூபாய் நிதியையும் ஒதுக்கி, அணையில் 67.16 டி.எம்.சி. தண்ணீரை சேமிக்க திட்டமிட்டிருந்தது. ஏற்கனவே காவிரியின் குறுக்கே ஹேரங்கி, ஹேமாவதி, கே.ஆர்.எஸ். என பல அணைகள் கட்டி தமிழகத்திற்கு வரும் 115 டி.என்.சி. நீரை தடுத்துவிட்டது கர்நாடகா. இந்தச் சூழலில் மேக தாதுவில் அணை கட்டினால் காவிரியில் வரும் மிச்ச நீரோட் டமும் தடைப்பட்டு காவிரிப்படுகை பாலைவனமாக மாறிவிடும்.
இந்நிலையில் ஜூன் 7-ஆம் தேதி டெல்டா மாவட்டத்தில் ஆய்வுசெய்ய வரும் முதல்வர் ஸ்டாலினைச் சந்திக்க விவசாயிகள் ஆயத்தமாகிவருகின்றனர்.
இதுகுறித்து தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்க பொதுச் செயலாளர் பி.ஆர்.பாண்டியன், "கர்நாடக துணை முதல்வரின் அறிவிப்பு உச்சநீதிமன்றத் தீர்ப்பை குழிதோண்டிப் புதைப்பதற்குச் சமமாகும். தமிழக நீர்ப்பாசன துறை அமைச்சர் துரைமுருகன், கர்நாடக துணைமுதல்வர் சிவகுமாரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக ஊடகங்களில் வந்துள்ள செய்தி அதிர்ச்சியளிக்கிறது. ஏற்கனவே உச்ச நீதிமன்றம் இனி பேச்சுவார்த்தைக்கு இடமில்லை என்று கூறியுள்ளது. ஆணையம் அமைக்கப்பட்ட பிறகு இரு மாநிலங்களும் காவிரி குறித்து பேச்சுவார்த்தை நடத்த இடமளிக்கக்கூடாது. கூட்டணி என்கிற பெயரால் பக்கத்து மாநில உறவுகள் என சொல்லி தமிழக அரசு சமரசம் செய்ய முயற்சிக்குமேயானால் அதற்கு எதிர்ப்பு தெரிவிப்போம்'' என்கிறார்.
மயிலாடுதுறையைச் சேர்ந்த விவசாய சங்க பிரமுகர் மேகநாதன், "மேகதாது அணை அரசியல் லாபத்துக்காக பயன்படுத்தப்படும் ஒரு திட்டமாகவே தெரிகிறது. இதனை மக்கள்சார்ந்த பிரச்சனையாக கர்நாடக அரசு அணுகவில்லை, குடிநீர்த் தேவைக்காகவும், மின் தேவைக்காகவும் மேகதாதுவில் அணை கட்டுவதாக கர்நாடகா அரசு கூறினால், நதிநீர் உற்பத்தியாகும் மாநிலம் நதிநீர்ப் பங்கீடு உரிமையுள்ள மாநிலங்களில் அனுமதி பெறாமல் கட்டமுடியாது. கர்நாடக துணைமுதல்வராக இருக்கும் சிவக்குமார் கடந்த ஆட்சிக்காலத்தில் மேகதாது அணை விவகாரத்தை கையிலெடுத்து நடைபயணம் செய்து மக்களிடையே கிளர்ச்சியை உண்டாக்கியவர். அவர்கள் ஆட்சிக்கு வந்ததும் கொடுத்த வாக்குறுதிகளை மறைக்க மேகதாது விவகாரத்தை கையிலெடுத்துள்ளார், இதனை ஒட்டுமொத்த தமிழகமும் ஒன்றிணைந்து முறியடிக்கவேண்டும்'' என்கிறார்.
தமிழ்நாடு விவசாயிகள் சங்க பொதுச் செயலாளர் திருவாரூர் மாசிலாமணி, "இரு மாநில அரசுகளும் ஒருமித்துச் செயல்படவேண்டிய அவசியம் உணராது, இப்படி உணர்ச்சிகரமான விஷயங்களை ஊதிப் பெரிதாக்குவதை கர்நாடக அரசு தவிர்க்கவேண்டும்'' என்கிறார்.
தமிழ்நாடு காவிரி உழவர் பாதுகாப்பு சங்க மாநிலச் செயலாளர் சுந்தரவிமல்நாதன் கூறுகையில், "மேகதாது அணை கட்டவேண்டிய அவசியமே கர்நாடகாவுக்கு கிடையாது. மேற்குத்தொடர்ச்சி மலையில் ஒவ்வொரு ஆண்டும் பெய்யும் சராசரி 2200 டி.எம்.சி. மழைநீர் மேற்கு நோக்கி பாயும் நதிகளின் வழியாக அரபிக்கடலில் கலக்கிறது. அந்த நீரில் 300 டி.எம்.சி. தண்ணீரை மட்டும் நீர் மேலேற்று திட்டம், மலைக்குடைவு நீர் திட்டம் போன்றவற்றை செயல் படுத்தி ஹேமாவதி, நேத்ராவதி இணைப்புத் திட்டம் மூலம் நிரந்தரத் தீர்வு காணமுடியும். இதற்கு சுமார் 4000 கோடி நிதி ஒதுக்கினால் போதும் என்று தெளிவான தொழில்நுட்பத் திட்ட அறிக்கையை டாக்டர் பவானிசங்கர் அளித்திருக் கிறார். இந்தத் திட்டத்தால் பிற மாநிலங்களுக்கு எந்த காலத்திலும் தொல்லை இருக்காது. மேகதாது அணை நீர்த் திட்டத்தை கைவிட்டு பொறியாளர் பவானி சங்கர் கூறிய திட்டத்தைச் செயல்படுத்த தமிழக முதல்வர் காவிரி சமவெளி மாவட்ட உழவர் பிரதிநிதிகளை அழைத்துச் சென்று வலியுறுத்தவேண்டும்'' என்கிறார்.
"மேகதாது அணை கட்டு வதற்காக கர்நாடகா அரசின் புதிய முயற்சிகளை தமிழக அரசு விழிப் புடன் இருந்து முறியடிக்கவேண்டும். அதற்கு சட்ட, அரசியல் சார்ந்த நடவடிக்கைகள் அனைத்தையும் தமிழக அரசு மேற்கொள்ளவேண்டும்'' என்கிறார் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ்.
அமைச்சர் துரைமுருகனோ, "ஒருபோதும் தமிழக உரிமையை விட்டுக் கொடுக்கமாட்டோம், சமரசப் பேச்சுக்கு இடம் கிடையாது'' என்கிறார்.