காவிரி விவகாரத்தில் தமிழக அரசை மீண்டும் சீண்டத் துவங்கியிருக்கிறது கர்நாடகா. காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் தடுப்பணை கட்ட கர்நாடக அரசு தொடர் முயற்சியில் இருக்கிறது. கொரோனா பொது முடக்கம் காரணமாக கடந்த ஒன்றரை வருடம் அமைதியாக இருந்த கர்நாடக முதல்வர் எடியூரப்பா, "மேகதாது தடுப்பணையைக் கட்டியே தீருவோம்' என தற்போது கொக்கரித்திருக்கிறார்.

இதற்கு கடும் எதிர்ப்பைக் காட்டிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், "ஒன்றிய அமைச்சரை சந்தித்து எதிர்ப்பைக் காட்டுங்கள்'' என தமிழக நீர்வள ஆதாரத்துறையின் அமைச்சர் துரைமுருகனை டெல்லிக்கு அனுப்பிவைத்தார்.

durai

ஒன்றிய அரசின் ஜல்சக்தித் துறை அமைச்சர் ஷெகாவத்தை சந்தித்து, "காவிரியில் அத்துமீறும் கர்நாடகாவை அடக்கி வையுங்கள்; இல்லையெனில் எங்களின் அரசியல் வேறு மாதிரி இருக்கும்'' என தனக்கே உரிய பாணியில் எச்சரித்திருக்கிறார் துரைமுருகன். நீர்வள ஆதாரத்துறையின் செயலாளர் சந்திப் சக்சேனா மற்றும் காவிரி தொழில் நுட்பக்குழு தலைவர் சுப்பிரமணியன் ஆகியரோடு டெல்லி சென்ற அமைச்சர் துரைமுருகன், ஒன்றிய அரசின் ஜல்சக்தி துறை அமைச்சர் ஷெகாவத்தை அவரது அலுவலகத்தில் சந்தித்தார். அந்த சந்திப்பில் ஒன்றிய அரசின் அமைச்சரிடம் மிகவும் கடுமை காட்டியிருக்கிறார் துரைமுருகன்.

Advertisment

அந்த சந்திப்பு குறித்து நாம் விசாரித்தபோது, ‘’துரைமுருகனை எளிதாக கையாண்டு விடலாம் என நினைத்துத்தான் பேச்சைத் துவக்கினார் ஷெகாவத். "காவிரி விவகாரத்தில் கர்நாடக பா.ஜ.க. அரசு செய்யும் தந்திரங்கள் உங்களுக்கு தெரியுமா?' என்று ஆரம்பித்தார் துரைமுருகன். இப்படிக் கேட்ட தொனியே ஷெகாவத்தை சற்று மிரள வைத்துவிட்டது. அதைக் காட்டிக் கொள்ளாமல், சொல்லுங்கள் என சொன்னார் ஷெகாவத்.

அப்போது பேசிய துரைமுருகன், காவிரி பிரச்சனையில் உச்சநீதிமன்றமும் நடுவர் மன்றமும் தெளிவாக ஒரு விசயத்தை பதிவு செய்திருகிறது. குறிப்பாக, காவிரி ஆற்றில் எந்த ஒரு நடவடிக்கை எடுத்தாலும் தமிழக அரசுடன் கலந்து பேசவேண்டும் என சொல்லியிருக்கிறது. இந்த உத்தரவின்படி ஒருமுறையாவது தமிழக அரசிடம் கர்நாடகா பேசியதா? தமிழக அரசிடம் கலந்தாலோசிக்காமல் மேகதாது அணையை கட்ட முயற்சிக்கிறது. இதற்காக தயாரிக்கப்பட்ட விரிவான திட்ட அறிக்கைக்கு ஒன்றிய அரசிடம் அனுமதி பெறுகிறது கர்நாடகா.

நீதிமன்றம் மற்றும் நடுவர் மன்றத்தை அவர்கள்தான் மதிக்கமாட்டார்கள் என தெரி யும். ஆனா, விசாரணை அமைப்புகளின் உத்தர வை மதிக்க வேண்டுமென ஒன்றிய அரசுக்கு தெரியும்தானே. அப்படியானால், விரிவான திட்ட அறிக்கைக்கு அனுமதி கேட்டு கர்நாடக அரசு முயற்சிக்கும் போது, தமிழக அரசிடம் ஆலோ சித்தீர்களா, இதற்கு தமிழக அரசு ஒப்புக் கொண்டதா என கேட்டீர்களா? உடனே அனு மதி தந்துவிட்டீர்கள். இதுதான் உத்தரவுகளை மதிக்கும் முறையா? காவிரி விசயத்தில் ஒன்றிய அரசின் அணுகுமுறை ஆரோக்கியமாக இல்லை'' என ஒரு பிடிபிடித்தார் துரைமுருகன்.

Advertisment

அவரது கோபத்தை எதிர்கொண்ட ஷெகாவத், "திட்ட அறிக்கைகளுக்கு யார் வேண்டுமானாலும் அனுமதி வாங்கிக்கொள்ள லாம். தவறில்லை. அப்படித்தான் கர்நாடகா அணுகியிருக்கும். அவர்கள் விரிவான திட்ட அறிக்கைக்கு அனுமதி பெற்றுவிட்டாலே அணை கட்டிவிடுவார்கள் என அர்த்தம் அல்ல. அணை கட்டுவதற்கு மத்திய அரசு ஒத்துக்கொண்ட தாகவும் அதை எடுத்துக்கொள்ளக்கூடாது என்று அவர் சுட்டிக்காட்ட, பிரச்சசினைகள் இல்லாத விசயங்களுக்கு நீங்கள் சொல்வதை ஏற்கலாம். ஆனால், காவிரி நதி நீரை பங்கிடுவதும் அதில் தமிழகத்துக்கு கர்நாடகா துரோகம் செய்து வருவதும் நீண்ட கால பிரச்சனை. அதில் சில உத்தரவுகள் இருக்கும்போது அதை மீறும் வகையிலான கர்நாடகாவின் நடவடிக்கைகளுக்கு அனுமதியளிக்கக்கூடாது. நீங்கள் இப்படி அனுமதி யளிப்பதால்தான், மேகதாது அணையைக் கட்டியே தீருவோம் என இப்போதும் ஆவேசப்படுகிறார் எடியூரப்பா. இது, தேவையற்ற சட்ட ஒழுங்குப் பிரச்சனையை ஏற்படுத்தும். அதனால், காவிரியில் அத்துமீறும் கர்நாடகாவை அடக்கி வையுங்கள். இல்லையெனில் எங்களின் அரசியல் வேறு மாதிரி இருக்கும்'' என எச்சரிக்கும் தொனியிலும், தமிழகத்தின் உரிமையை நிலைநிறுத்தும் வகையிலும் பேசினார் துரைமுருகன்.

இதனையடுத்து துரைமுருகனை கூல் பண்ணும் வகையில் பேசிய ஷெகாவத், "தமிழகத்தை கலந்து பேசாமல் கர்நாடகாவுக்கு எந்த அனுமதியும் தரமாட்டோம். சட்டச்சிக்கல் வந்தாலும் தமிழக அரசிடம் விவாதிப்போம். மேகாதாது அணையை கர்நாடக அரசு கட்டமாட்டார்கள். அவர்களிடம் நாங்கள் பேசுகிறோம்'' என உறுதியளித்தார்.

அதற்கு நன்றி தெரிவித்த துரைமுருகன், தமிழகத்தின் பங்கீடாக தர வேண்டிய நீரில் மாதம் 8 டி.எம்.சி. தண்ணீரை தராமல் கர்நாடக அரசு ஏமாற்றி வருவதையும், காவிரி நதி ஆணையத்துக்கு முழுநேர தலைவரை நியமனம் செய்ய வலியுறுத்தியும் பேசினார். இதில் கவனம் செலுத்துவதாக உறுதி தந்தார் ஷெகாவத். துவக்கத்தில் இறுக்கமாக இருந்த சூழல், மெல்ல மெல்ல குறைந்து இயல்பான சந்திப்பாக மாறியது. இதனையடுத்து, தாமிரபரணி-கருமேனி ஆறு மற்றும் காவிரி-குண்டலாறு திட்டங்களை நிறைவேற்றவும், அதற்கான நிதி ஒதுக்கீடு செய்யவும் வலியுறுத்தினார் துரைமுருகன் என்று சுட்டிக்காட்டினார்கள் தமிழக அதிகாரிகள்.

ஒன்றிய அமைச்சருடனான சந்திப்பு குறித்து டெல்லி பத்திரிகையாளர்களிடம் பகிர்ந்துகொண்ட துரைமுருகன், "காவிரி பிரச்சினை குறித்து நிறைய விசயங்களை தெரிந்து வைத்திருக்கிறார் அமைச்சர். ஆங்கிலத்தில் அவர் உரையாடி யது அவரிடம் நாங்கள் விவாதிக்க எளிதாக இருந்தது. இதனால் தமிழகத்தின் பிரச்சனையை அவரிடம் விரிவாக விளக்க முடிந்தது. எந்த நிலையிலும் மேகதாது அணை கட்ட விடமாட்டோம் என அமைச்சரே சொன்னது எங்களுக்கு நம்பிக்கையைத் தந்துள்ளது. நிறைவான, மகிழ்ச்சியான சந்திப்புதான்'' என்று சொல்லியுள்ளார்.

தமிழகத்தின் கோரிக்கையை நிறைவேற்ற ஒன்றிய அமைச்சர் நம்பிக்கையளித்திருக்கும் நிலையில், ’"மேகதாது அணை கட்டுவதை எந்த சூழலிலும் கைவிட மாட்டோம். அதனை யாரும் தடுக்க முடியாது. சட்டப்படியே கட்டி முடிப்போம். கர்நாடக மக்கள் சந்தேகப்படவேண்டாம்'' என்று தொடர்ந்து கூறி வருகிறார் கர்நாடக முதல்வர் எடியூரப்பா. மேலும், தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு எதிரான போராட்டத்தை நடத்தியுள்ளனர் கன்னட அமைப்பினர்.

இதன் பின்னணி குறித்து விசாரித்தபோது, "தொட்டிலையும் ஆட்டுவது பிள்ளையையும் கிள்ளுவது என்ற வேலையைத்தான் மோடி அரசு செய்து வருகிறது. ஒன்றிய அரசின் துணையில்லாமல் பா.ஜ.க. முதல்வரான எடியூரப்பா இப்படிப் பேசமாட்டார். தி.மு.க. அரசுக்கு தலைவலியைக் கொடுக்க கர்நாடகாவை தூண்டிவிடுவதே ஒன்றிய அரசுதான். சிக்கலை அதிகப்படுத்துவதன் மூலம் தி.மு.க.விடமிருந்து எதையோ அதிகம் எதிர்பார்க்கிறது பிரதமர் மோடியின் அலுவலகம்'' என்கிறார்கள் காவிரி பிரச்சனையின் நீள அகலங்களை அறிந்த தமிழக நீர்வள ஆதாரத்துறையின் அதிகாரிகள்.

காவிரியின் குறுக்கே மேகதாது அணை, மார்க்கண்டேய அணை உள்ளிட்ட விவகாரங்கள் மூலம், இரு மாநிலங்களுக்கிடையிலான நல்லுறவுக்கு சிக்கலை ஏற்படுத்தும் ஆட்டத்தைத் துவக்கியிருக்கிறது பிரதமர் மோடியின் ஒன்றிய அரசு.

-இரா.இளையசெல்வன்

_________________

முதல்வர் நினைவில் பூத்த குறிஞ்சி மலர்!

ss

இயக்குநர் பொன்வண்ணன்- நடிகை சரண்யா இணையரின் மகள் திருமணத்திற்கு வருகை தந்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின். திருமண விழாவுக்கு வந்திருந்த நக்கீரன் ஆசிரியர் உள்பட பலரிடமும் நலம் விசாரித்த மு.க.ஸ்டாலின், சற்று தள்ளி ஒருவர் நின்று கொண்டிருப்பதைக் கவனித்துவிட்டார். உடனே அவரை தன் அருகில் அழைத்து, நக்கீரன் ஆசிரியரிடம்,“"இவர் என்னோடு குறிஞ்சி மலர் டி.வி. நாடகத்தில் நடிச்சவரு'' என்று தோழமையுடன் குறிப்பிட்டார். முதல்வர் சுட்டிக்காட்டியது, பழம்பெரும் இயக்குநர் கே.எஸ்.கோபாலகிருஷ்ணனின் மகன் வெங்கடேசன். 30 ஆண்டுகளுக்கு முன் டி.வி. தொடரில் உடன் நடித்ததை முதல்வர் இப்போதும் மறக்காமல் நினைவுபடுத்தி, நமது ஆசிரியர் உள்ளிட்ட பிரபலங்களிடம் அறிமுகப்படுத்தியதைக் கண்டு வியந்து போனார் வெங்கடேசன். முதல்வரின் எளிமையான அணுகுமுறையும் நினைவாற்ற லும் எல்லாரையும் ஆச்சரியப்பட வைத்தது.

-கீரன்