புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை -தஞ்சை சாலையில் உள்ள பிசானத்தூர் கிராமத்தில்  1.55 ஏக்கர் பரப்பளவில் உயிரி மருத்துவக்கழிவு சுத்திகரிப்பு ஆலை அமைக்க ஒரு தனியார் நிறுவனம் அனுமதிபெற்று ஆலையமைக்கும் பணிகளில் ஈடுபட்டுவருகிறது. புதுக்கோட்டை, திருச்சி, பெரம்பலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகபட்டினம், சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் சேகரிக்கப்படும் மருத்துவக் கழிவுகளைக் கொண்டுவந்து பிசானத் தூரில் வைத்து பிரித்து சுத்திகரிப்பு செய்யப்படும்.

Advertisment

இந்தத் தகவல் பிசானத்தூர் சுற்றுவட்டார கிராமங்களில் பரவிய நிலையில், "இங்கு அந்த ஆலை அமைக்கக் கூடாது. இதனால் சுற்றுச்சூழல் பாதிப்பு, நிலத்தடி நீர், குடிநீர் பாதிப்பு, காற்று மாசு போன்றவை ஏற்பட்டு பொதுமக்களும், கால்நடைகளும் பாதிக்கப்படுவர். விவசாயத்துக்கும் பாதிப்பு. நோய்த் தொற்று பரவல் அதிகரிக்கும்' என்று எதிர்ப்புத் தெரிவித்துவருகின்றனர். 

Advertisment

"விருதுநகர் மாவட்டம், காரியாப்பட்டி அருகேயுள்ள அ.முக்குளம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள தனியார் உயிரி மருத்துவக்கழிவு ஆலையிலிருந்து வெளியேறும் புகை, கரித்தூள் போன்ற மாசால் குடிதண்ணீர் கெட்டுப் போய் ஏராளமானவர்கள் சிறுநீரகப் பாதிப்பில் உயிரிழந்துள்ளனர். எங்கள் ஊருக்கும் அப்படி ஒரு நிலை வரக்கூடாது. இந்த மருத்துவக்கழிவு ஆலையால் எங்கள் கிராமங்கள் பாதிக்கப்படும். அதனால்தான் தொடக்கத்திலேயே எதிர்க்கிறோம். வந்தபிறகு குழு அமைத்து சரிசெய்வோம் என்று அவர்களின் திட்ட அறிக்கையிலேயே சொல்லி யிருக்காங்க. வரும்முன் காப்போம் என்கிறோம் நாங்கள்'' என்கின்றனர்.

ஆலையை அமைக்கக்கூடாது என்று கோரிக்கை வைத்து கடந்த 8-ஆம் தேதி கந்தர்வக் கோட்டையில் பல கிராம மக்கள் திரண்டு ஆர்ப் பாட்டம் செய்தனர். இதற்கென தனி விழிப்புணர்வுக் குழுக்களும் செயல்பட்டு மக்களைத் திரட்டிவரு கின்றனர். 

Advertisment

இந்த நிலையில்தான் 9-ஆம் தேதி வியாழக்கிழமை பிசானத்தூரில் உயிரி மருத்துவக்கழிவு சுத்திகரிப்பு ஆலையமைப்பது தொடர்பாக மக்கள் கருத்துக் கேட்புக் கூட்டம் கந்தர்வக்கோட்டையிலுள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் புதுக்கோட்டை கோட்டாட்சியர் ஐஸ்வர்யா தலைமையில், மாசுக்கட்டுப்பாட்டு வாரிய பொறியாளர் செல்வக்குமார், கந்தர்வக்கோட்டை வட்டாட்சியர் ரமேஷ் ஆகியோர் முன்னிலையில் நடந்தது. கூட்டத்தில் பிசானத்தூரைச் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்களும், சமூக செயற்பாட்டாளர்களும் கலந்துகொண்டனர்.

முதலில் அதிகாரிகள் தரப்பிலிருந்து திட்டம் குறித்து விளக்கப்பட்ட பிறகு மக்களின் கருத்துகள் கேட்கப்பட்டபோது அங்கு வந்திருந்த அனைவரும் "இந்த திட்டம் எங்கள் ஊருக்கு வேண்டாம். உங் களை மன்றாடிக் கேட்டுக்கொள்கிறோம்'' என்றனர். கூட்டத்துக்கு வந்திருந்த அத்தனைபேரும், ஒற்றைக் கருத்தோடு நின்றனர். பலர் மனுக்களாக வும் கொடுத்தனர். கந்தர்வக்கோட்டை தி.மு.க. ஒ.செ. தமிழய்யா "மக்கள் கருத்தே என் கருத்து' என்று ஒற்றை வார்த்தையில் முடித்துக்கொண்டார்.  அதிகாரிகள் முன்பு உயிர்க்கொல்லி ஆலை எங்களுக்கு வேண்டாம் என்று முழக்கம் எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்தனர்.  அனைவரின் கருத்துகளையும் பதிவுசெய்துகொண்ட கருத்துக் கேட்புக்குழுவினர் "உரிய நடவடிக்கைக்கு பரிந்துரை செய்கிறோம்' என்று கூறிவிட்டுச் சென்றனர்.

pukottai1

கருத்துக் கேட்புக் கூட் டத்திலிருந்து வெளியேவந்த முன்னாள் வார்டு உறுப்பினர் ஆசைத்தம்பி "2016-17-ல் எங்க ஊருக்கு கொண்டுவருவதாக ஊராட்சி தீர்மானம் கொண்டுவந்தபோது எதிர்த்தோம். எங்க ஊர்ல பசுமை நிறைந்த மரங்கள் நிறைய உள்ளது. கழிவு ஆலை அமைக்கும் இடத்திற்கு இருபக்கமும் கால்வாய்கள் வருது. அந்த கால்வாய்த் தண்ணீர் குளத்திற்கு வருது. குளத்துக்குப் பக்கத்திலேயே குடிநீர்த் தொட்டி உள்ளது. இதனால் குடிநீர், நிலத்தடி நீர் பாதிக்கும். இதைச் சொல்லி தடுத்தபோது எல்லாருக்கும் பணம் கொடுத்து சரி பண்ணிட் டோம். நீங்க மட்டும் எதிர்க் கிறீங்க. உங்களுக்கு ரூ.2.50 லட்சம் பணம் கொடுக்கிறோம், ஒதுங்கிடுங்கனு ஆலை நிர்வாகி ஒருத்தர் என்னிடம் சொன் னார். கோடி ரூபாய் கொடுத் தாலும் அனுமதிக்க மாட்டேன்னு சொல்லிட்டு வந்து அதிகாரிகளிடமும் மனு கொடுத்திருக்கேன்''’என்றார்.

சி.எஸ்.ரஜினி, "கார்ப்ப ரேட் நிறுவனம் மருத்துவ சுத்திகரிப்பு ஆலை திறக்க முயற்சி செய்கிறது. இதற்கு கார்ப்பரேட் கைக்கூலிகள் ஆதரவாக உள்ளனர். இந்த ஆலையிலுள்ள கழிவுநீர் பூமிக்குள் செலுத்தப்படும். இதனால் நிலத்தடி நீர் பாதிக்கும். அதனால்தான் எதிர்க்கிறோம். இந்த திட்டத்தால் பிசானத்தூர் சுற்றியுள்ள 10 கிராமங்கள் பாதிக்கப் படும். எங்களின் நியாயமான கோரிக்கையை ஏற்கவில்லையெனில் பொதுமக்கள் கடுமையாக எதிர்ப்போம். நீதிமன்றமும் செல்வோம்''’என்றார். மேகலா என்பவரோ, “"எங்களுக்கு தொழிற்சாலை வேண்டாம். மீறி வந்தால் பெண்களே ஒன்றுதிரண்டு ஆலையை அடித்து நொறுக்குவோம். மிகப்பெரிய மகளிர் போராட்டம் நடக்கும்''’என்றார். 

இதுகுறித்து கந்தர்வக்கோட்டை தொகுதி யின் சட்டமன்ற உறுப்பினர் சி.பி.எம். சின்னத்து ரையிடம் கேட்டபோது... "கருத்துக் கேட்புக் கூட்டத்தில் நான் கலந்துகொள்ளவில்லை. எங்கள் கட்சியின் ஒன்றியச் செயலாளர் சென்றிருந்தார். பலரும் நீண்ட நேரம் பேசியதால் ஒன்றியச் செயலாளர் கருத்துச் சொல்ல வாய்ப்புக் கிடைக்க வில்லை. வெளியூர் ஆட்களே அதிக நேரம் பேசியுள்ளனர். மக்கள் இந்த திட்டம் வேண்டாம் என்கின்றனர். மக்கள் விரும்பாத எந்த திட்டமும் எங்கள் தொகுதிக்குள் வேண்டாம்''’என்றார்.