சென்னை எம்.எம்.சி. அரசு மருத்துவக் கல்லூரியின் மாணவ- மாணவி களுக்கான விளையாட்டு ஆலோசகராக டாக்டர் தளபதியை நியமித்துள்ளதால் மாணவிகள் மத்தியில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.
மாணவர்களுக்கு கல்வி, தமிழ் மன்றம், அறிவியல் ஆராய்ச்சி, கலாச்சாரம், விளையாட்டு என அனைத்துப் பிரிவுகளுக்கும் ஆலோசகர்களை நியமித் துள்ளது எம்.எம்.சி. மருத்துவக் கல்லூரி. இப்படி அனைத்துத் துறை ஆலோசகரையும் ஏற்றுக்கொண்ட மாணவ- மாணவிகள் ஏன் விளையாட்டுத் துறை ஆலோசகரை ஏற்க மறுக்கின்றனர்? ஏனென்றால் இவர்மீது பாலியல் புகார்கள் உள்ளன. அந்த பாலியல் புகார்களை விசாரித்தபின்பும் எந்த நடவடிக்கையும் இல்லாமல் இவருக்கு சாதகமாகவே அதிகாரிகள் செயல்பட்டு வருவதாலும் தங்களுக்கு பாலியல் தொல்லை நேர்ந்தால் என்ன செய்வது என்பதுமே மாணவிகளின் அச்சத்திற்குக் காரணம்.
தேனியைச் சேர்ந்த தளபதி, மதுரை இ.எஸ்.ஐ மருத்துவமனையில் மருத்துவராகப் பணிபுரிந்தார். இடையில் 4 வருடங்களுக்கும் மேலாகப் பணி புரியாமல் தலைமறைவானார். அதே காலகட்டத்தில் உ.பி.யில் பணிபுரிந்து, அங்கு ஊதியம்பெற்று அங்குள்ள சஞ்சய்காந்தி மருத்துவக் கல்லூரியில் பி.ஜி. கோர்ஸ் முடித்து, மீண்டும் தமிழகம் திரும்பினார். முன்னறிவிப்பின்றி பணியை விட்டுச்சென்ற இவருக்கு பனிஷ்மெண்ட் கொடுக்காமல், ஓ..பி.எஸ். மகன் ரவீந்திரநாத் பக்கபலத்தால், விதிமுறைக்குப் புறம்பாக இங்கு பணிபுரியாமல் போன நான்கு வருடத்திற்கும் பணிபுரிந்தார்போல் ஊதியத்தை வரன்முறைப்படுத்தி, அப்போதைய ஹெல்த் செகரட்டரியான சுப்புராஜ், சென்னை மருத்துவக்கல்லூரியில் உடற்கூறு மருத்துவராகப் பணிவழங்கினார்.
இந்தப் பணிக்கு வந்த சில நாட்களுக்குள்ளேயே மீண்டும் உதவிப் பேராசிரியராக மாற்றப்பட்டார். தமிழ்நாடு முழுவதும் மருத்துவப் பேராசிரியர்கள் கவுன்சிலிங் மூலமாக தேர்வுசெய்யப்படுவார்கள். விதி முறைக்கு முரணாக உதவிப் பேராசிரியராக தளபதி பணியமர்த்தப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து, அடுத்தடுத்து அமைச்சர், ஹெல்த் செகரட்டரி ஆகியோர் மாற்றப்பட்ட சூழ்நிலையில், தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கத் தலைவரான டாக்டர் செந்தில் மூலம் தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டு, அமைச்சர் விஜயபாஸ்கரின் கைத்தடியானார். இந்தக் காலகட்டத்தில் பாலியல் புகாரில் சிக்கிய தளபதி தனது சில்மிஷத்தை அதிகாரமட்டத்தின் துணைகொண்டு இருமுறை மூடி மறைத்துள்ளார்.
சேலம் அரசு மருத்துவக்கல்லூரியில் பூவின் பெயரைக் கொண்ட உதவிப் பேராசிரியர் அறுவைச் சிகிச்சை ஆராய்ச்சி யாளராக சென்னை மருத்துவக் கல்லூரிக்கு மாதம் இருமுறை வந்துசெல்லும்போது பாலியல் தொல்லை கொடுத்த விவகாரத்தில் டீனிடம் புகார் கொடுத்தார். அந்த புகாரை ஒரு விசாரணைக் கமிட்டி மூலமாக முறையாக விசாரிக்காமல், டாக்டர் தளபதியின் நண்பரான ராகவேந்திரா என்ற நரம்பியல் நிபு ணரை வைத்து ஒப்பேற்றியதாக புகார் எழுந்தது. புகார் கொடுத்த பேராசிரியர் அந்த விசாரணை யின் ரிப்போர்ட்டைக் கேட்டுள்ள நிலையில், இதுநாள் வரையிலும் கொடுக்காமல் அலைக் கழித்துவருகின்றனர். அதனால்தான் ஆலோசகராக இவர் நியமிக்கப்பட்டுள்ளதற்கு மாணவர்களின் மத்தியில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.
அதேபோல, ஸ்டான்லி மருத்துவமனையில் உதவிப் பேராசிரியராக பணியாற்றும் அறுவைச் சிகிச்சை நிபுணர் டாக்டர் சந்திரசேகர், அங்கு பயிலும் முதுநிலை மாணவிகளுக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்துவந்துள்ளார். இது தொடர்பாக மாணவிகள் சுகாதாரத்துறை செயலாளருக்கு 21-11-2020-ல் புகார் கடிதம் அனுப்பினர். 18-02-21 அன்று விசாரணைக் குழு அமைக்கப்பட்டு மாணவிகளிடம் விசாரிக்கப்பட்டு பாலியல் புகாருக்கு முகாந்திரம் இருப்பதாக அரசுக்கு அறிக்கை அனுப்பப்பட்டது.
அறிக்கை கிடைத்த பின்பும், இதுநாள் வரையிலும் எந்த நடவடிக்கையும் எடுக்காமல், ஸ்டான்லி மருத்துவமனையிலிருந்து அண்ணாநகரில் அவரது வீட்டின் அருகாமையிலிருக்கும் மருத்துவமனைக்கு மாற்றினர். விசாரணைக் குழு அமைத்து விசாரித்து முகாந்திரம் உள்ளது என அறிக்கை கொடுக்கப்பட்டும் மருத்துவர் சங்கத் தலைவர் செந்தில்மூலமாக தற்போது எம்.எம்.சி மருத்துவக் கல்லூரி பேராசிரியராக பணி நியமனம் பெற்றுள்ளார்.
விஜயபாஸ்கருக்கும் சந்திரசேகருக்கும் எந்த அளவுக்குப் பழக்கமென்றால், வருமானவரித்துறை விஜயபாஸ்கர் வீட்டை ரெய்டு அடிக்கும்போது செந்தில், சந்திரசேகர் வீட்டிலும் சோதனை செய்யுமளவுக்கு நெருக்கம் இருந்துள்ளது.
இதுகுறித்து டாக்டர் சந்திரசேகரிடம் கேட்டபோது, "என்னை ஸ்டான்லி மருத்துவமனையிலிருந்து நீக்கவே, என்மீது வேண்டுமென்றே பழி சுமத்தும் வகையில் இதுபோன்ற பொய்யான தகவலைப் பரப்புகின்றனர்''’என்றார். டாக்டர் தளபதியோ நமது கேள்விக்குப் பதிலளிக்க மறுத்துவிட்டார்.
"இப்படி பாலியல் புகாரில் சிக்கி நடவடிக்கை எடுக்கப்படாதவர்களைத் தொடர்ந்து எம்.எம்.சி. மருத்துவக் கல்லூரிக்குப் பேராசிரியராக நியமித்தால் மாணவிகளின் நிலை என்னாவது'' என்கிறார்கள் மாணவிகள்.
"அ.தி.மு.க. ஆட்சியில் நடந்த அத்துமீறல்களின்மீது தி.மு.க. நடவடிக்கையெடுக்கும் என நம்பினால், அதற்கு எதிர்மறை யாகவே செயல்படுகிறது' என மாணவிகளும், பேராசிரியர்களும் குற்றம்சாட்டுகின்றனர்.