பாரிஸைச் சேர்ந்த ரிப்போர்ட்டர்ஸ் சான்ஸ் ஃப்ரான்டியர் அமைப்பு உலக அளவிலான நாடுகளுக் கிடையே பத்திரிகை சுதந்திரம் எப்படி இருக்கிறது என ஒரு மதிப்பீட்டை நிகழ்த்தியது. 180 நாடுகள் கொண்ட அந்தப் பட்டியலில், இந்தியாவுக்கு 142-வது இடம்தான் கிடைத்தது. அதற்குச் சான்றுக் கையொப்பம் இடுவதுபோல், கடந்த குடியரசுத் தினத்தில் நடந்த ட்ராக்டர் பேரணி குறித்த வன்முறைகளைப் பதிவு செய்ததற்காக, பத்திரிகை யாளர்கள் மீது பல்வேறு வழக்குகளைப் பதிவுசெய்துள்ளன மத்திய- மாநில அரசுகள்.
குடியரசு நாளில் விவ சாயிகள் நடத்திய ட்ராக்டர் பேரணிக்கு, ஒதுக்கப்பட்டிருந்த நேரத்துக்கு முன்பே பஞ்சாப் நடிகர் தீப் சித்து தலைமையிலான ஒரு குழு வரையறுக்கப்பட்ட பாதையைக் கடந்து செங்கோட்டையை நோக்கி முன்னேறத் தொடங்கியது. செங்கோட்டையில் சிலர் விவசாய அமைப் பொன்றின் கொடியையும், சீக்கிய ஆன்மிகக் கொடியையும் ஏற்றியது பரபரப்பாக மாறியது.
போராட்டக்காரர்கள் மாற்றுப் பாதையில் சென்றதுமே, டெல்லி போலீஸ் இணையத் தொடர்பை நிறுத்தியது. போராட்டக்காரர்கள் மீது கண்ணீர்ப் புகைக்குண்டுகளும், லத்திமுனைகளும் பாய்ந்தன. எனினும், பத்திரிகையாளர்களின் காமிரா கண்கள் இருதரப்பு அத்துமீறலையும் பதிவுசெய்தன. ட்ராக்டரை ஓட்டிச்சென்ற நவ்னீத் துப்பாக்கிக் குண்டு பாய்ந்து இறந்த செய்தி பரபரப்பை ஏற்படுத்தியது. எனினும் நிலைமை கட்டுக்குள் வந்தபோது, ட்ராக்டரை தாறுமாறாக ஓட்டி ட்ராக்டர் கவிழ்ந்ததிலேயே நவ்னீத் இறந்தார். துப்பாக்கிக் குண்டு பாய்ந்து இறக்கவில்லை என டெல்லி போலீஸ் விளக்கமளித் தது.
அதேசமயம் பெங்களூரில் தனியார் நிறுவனமொன்றில் வேலைபார்க்கும் ஒருவர் அளித்த புகாரின் பேரில் காங் கிரஸ் எம்.பி. சசிதரூர், இந்தியா டுடேயின் ராஜ்தீப் சர்தேசாய், நேஷனல் ஹெரால்ட் ஆலோ சகர் மிருனாள் பாண்டே, தி கேரவன் பத்திரிகையின் பரேஷ் நாத் உள்ளிட்ட ஆறு பத்திரிகையாளர்கள் மீது தேசத் துரோக வழக்கு உள்ளிட்ட பத்து பிரிவுகளின்கீழ் பல்வேறு மாநிலங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. மன்தீப் என்ற ப்ரீலான்ஸ் பத்திரிகையாளர், காவலர்கள் பணிகளைச் செய்யவிடாமல் தடுத்ததாகக் கூறி 14 நாள் நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்டி ருக்கிறார். மன்தீப் கைதுசெய்யப்பட்டதை, அடுத்த பதினாலு மணி நேரத்துக்குப் பின்னும் தனக்குத் தெரிவிக்கவில்லை என அவரது மனைவி தெரிவித்திருக்கிறார். தனது தரப்பை எடுத்துச் சொல்ல மன்தீப்புக்கு வழக்கறிஞரை ஏற்பாடு செய்யாமலே நீதிமன்றத்தின்முன் நிறுத்தி சிறையிலடைத்திருக்கிறது டெல்லி போலீஸ்.
இந்நிலையில் இதற்கு எதிராக எடிட்டர்ஸ் கில்ட் அமைப்பு உள்பட பல்வேறு பத்திரிகையாளர் சங்கங்கள் இணைந்து ஒரு பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தின. பத்திரிகையாளர்களைப் பயமுறுத்துவதற்காகவே இத்தகைய வழக்குகள் பதியப்படுவதாக இந்தச் சந்திப்பில் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
குடியரசுத் தின நிகழ்வுகளைப் பதிவுசெய்த தற்காக, தி ஒயர் பத்திரிகையின் ஆசிரியர் சித்தார்த் வரதராஜன் மீதும் உத்தரப்பிரதேச அரசு ஒரு வழக்கைப் பதிவுசெய்துள்ளது. இதற்கு எதிர் வினையாற்றிய சித்தார்த், கருத்துச் சுதந்திரத்தை அடைக்கும் அளவுக்கு எந்தச் சிறையும் பெரிதல்ல என ட்வீட் செய்திருக்கிறார்.
பத்திரிகையாளர்கள், ஊடகத் துறைதான் என்றில்லை காமெடி நடிகர்களான முனாவர் ஃபாருக்கி, குணால் கர்மா போன்றவர்களும் சுதந்திரமாக கருத்துகளை வெளிப்படுத்தியதற்காக வழக்கின் பிடியிலிருந்து தப்பவில்லை. மத உணர்வுகளைப் புண்படுத்தியதாகக் கூறி ஜனவரி 1-ல் கைதுசெய்யப்பட்ட முனாவர் ஃபாருக்கிக்கு பிப்ரவரி 5-ஆம் தேதி மூன்று நீதிபதிகள் கொண்ட உச்சநீதிமன்ற அமர்வு இடைக்கால ஜாமீன் வழங்கியிருக்கிறது. நீதிபதி நாரிமன், ""ஃபாருக்கி மேலான குற்றச்சாட்டுகள் மேலோட்டமாக இருக்கின்றன. கைதின்போதான நடைமுறைகளை காவல்துறை சரிவரப் பின்பற்றவில்லை'' எனவும் குறிப்பிட்டிருக்கிறார்.
ரிபப்ளிக் டி.வி.யின் அர்னாப்புக்கு, ஜாமீன் வழங்குவதற்காக உச்சநீதிமன்றம் காட்டிய துரிதம் குறித்து குணால் கர்மா வெளியிட்ட ட்வீட்டுகள் சர்ச்சையைக் கிளப்பின. நீதித்துறை தொடர்பாக கார்ட்டூன் வெளியிட்டதற்காக அட்டர்னி ஜெனரல் கே.கே. வேணுகோபால் உச்சநீதிமன்றத் தில் வழக்குத் தொடர்ந்தார்.
அதற்குப் பதிலளித்த குணால், ""ஜோக்குகள் யதார்த்தங்கள் அல்ல. அவை காமெடியனின் பார்வையை வெளிப்படுத்துபவை'' என்று பதிலளித்தார். இருந்தும் உச்சநீதிமன்றம் அவர்மீது அவமதிப்பு வழக்குத் தொடர அனுமதியளித்துள்ளது.
விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவாக ஸ்வீடனைச் சேர்ந்த கிரேட்டா தன்பெர்க் ட்வீட் செய்திருந்தார். இந்திய விவசாயிகளின் போராட்டத்துக்கு ஆதரவுதிரட்ட உரு வாக்கப்பட்டிருந்த பொயடிக் ஜஸ்டிஸ் பவுண்டேஷனின் டூல்கிட்டை முதலில் பயன்படுத்திய கிரேட்டா, பின் அதனை நீக்கியிருந்தார். இதைக் காரணம்காட்டி சதி மற்றும் பகைமை வளர்க்கும் முயற்சி ஆகிய பிரிவுகளின்கீழ் கிரேட்டா மீது டெல்லி போலீஸ் வழக்குப் பதிந்துள்ளது.
இம் என்றால் வழக்கு… ஏன் என்றால் கைது என்பது ஜனநாயக அரசுக்கு சரிவருமா?