விஞர் வைரமுத்து மீது நான்கு பெண்கள் "மீ டூ'’ஹேஸ்டேக்கில் ‘பாலியல் தொல்லை தர முயற்சித்ததாக’ தெரிவித்த புகார்களை தனது டுவிட்டர் கணக்கில் ரீ-ட்வீட் செய்த பாடகி சின்மயி தனக்கும் வைரமுத்து பாலியல் தொல்லைதர முயன்றதாகத் தெரிவித்தார்.

2004-ஆம் ஆண்டு சுவிட்ஸர்லாந்து நாட்டில் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவான ‘"வீழமாட்டோம்'’ என்கிற இசை ஆல்பம் வெளியிடப்பட்டது. இந்த விழாவில் சின்மயி கலந்துகொண்டார். "விழா முடிந்த பிறகு... ‘வைரமுத்துவை சின்மயி தனியாக சந்திக்க வேண்டும் ஹோட்டல் அறையில்'’என விழா ஏற்பாட்டாளாரால் நிர்பந்திக்கப்பட்டார். இதற்கு சின்மயியும், அவரின் அம்மாவும் எதிர்ப்புத் தெரிவித்து, சுவிஸ்ஸிலிருந்து இந்தியா திரும்பிவிட்டனர்.

metoo

இதுதான் சின்மயியின் குற்றச்சாட்டு.

""பிரபலங்களை அவமானப்படுத்தும் அநாகரிகம் இப்போது நாகரிகமாக இருக்கிறது. இதற்கு காலம் பதில் சொல்லும்''’ என வைரமுத்து தனது டுவிட்டரில் பதில் சொன்னார்.

""வைரமுத்து பொய்யர்''’ என சின்மயி பதிலுக்கு ட்வீட் செய்தார்.

metooசுவிட்ஸர்லாந்தில் "வீழமாட்டோம்'’இசை ஆல்ப வெளியீட்டு விழாவுக்கு ஏற்பாடு செய்திருந்த ஈழத்தமிழரான ‘சுவிஸ்’ சுரேஷ், ""அன்று அப்படி எதுவும் நடக்கவில்லை. சின்மயி பொய் சொல்கிறார்''’என வீடியோ விளக்கம் ஒன்றை வெளியிட்டார்.

ஆனால்... ""குற்றச்சாட்டுக்கு விளக்கம் சொல்லாமல் "காலம் பதில் சொல்லும்' என்று சொல்வதா?''’என வைரமுத்துவை பிரபலங்கள் பலரும் கண்டித்தனர். சின்மயிக்கு ஆதரவு பெருகியது.

"சட்ட நிபுணர்களுடன் கலந்து ஆலோசித்து வைரமுத்து மீது வழக்கு தொடுப்பேன்'’என சின்மயி தெரிவித்திருந்த நிலையில்...

""என் மீது சுமத்தப்பட்டுவரும் குற்றச்சாட்டுகள் எல்லாம் முழுக்க முழுக்க பொய்யானவை. முற்றிலும் உள்நோக்கம் உடையவை. அவை உண்மையாக இருந்தால் சம்பந்தப்பட்டவர்கள் என் மீது வழக்கு தொடுக்கலாம். சந்திக்க காத்திருக்கிறேன். மூத்த வழக்கறிஞர்களோடும், அறிவுலகத்தின் ஆன்றோர்களோடும் கடந்த ஒரு வாரமாக ஆழ்ந்து ஆலோசித்து வந்தேன். அசைக்க முடியாத ஆதாரங்களை தொகுத்து திரட்டி வைத்திருக்கிறேன். நீங்கள் வழக்கு போடலாம். சந்திக்க காத்திருக்கிறேன். நான் நல்லவனா, கெட்டவனா என்று இப்போது யாரும் முடிவு செய்ய வேண்டாம். நீதிமன்றம் சொல்லட்டும். நீதிக்கு தலைவணங்குகிறேன்'' என வீடியோவில் தோன்றி விளக்கமும், வேண்டுகோளும் விடுத்துள்ளார் வைரமுத்து.

இதற்கு பதில்சொல்லியுள்ள சின்மயி, ""வைரமுத்துவுக்கு உண்மை கண்டறியும் சோதனை நடத்தப்பட வேண்டும்''’என்கிறார்.

2004-ல் வைரமுத்து தனக்கு பாலியல் ரீதியாக நெருக்கடி தந்ததாகச் சொல்லும் சின்மயி 2014-ல் நடந்த தனது திருமணத்திற்கு வைரமுத்துவை அழைத்து, அவரிடம் ஆசியும் வாங்கியிருக்கிறாரே?

2017-ஆம் ஆண்டு தொடக்கத்தில் பிரபல பாடகி சுசித்ரா பெயரில் டுவிட்டரில் வெளியான "சுசி லீக்ஸ்' சங்கதிகளில் "சின்மயி ஒரு இசையமைப்பாளருக்கு அட்ஜஸ்ட்மெண்ட் செய்து வாய்ப்புகளைப் பெறுகிறார், நான்கு முறை அபார்ஷன் செய்துள்ளார் சின்மயி'’என்கிற தகவல்கள் வந்தன. அப்போது "அது பொய்யான தகவல்கள்’ என்றும்... ‘சுசித்ரா மனநலம் பாதிக்கப்பட்டிருக்கிறார்'’ என்றும் சொன்னார் சின்மயி. தன் மீதான குற்றச்சாட்டை ’பொய்’ என மறுத்த சின்மயி, இப்போது வைரமுத்து மீதான தனது குற்றச்சாட்டை ‘உண்மை’ என்கிறாரே?

-இப்படியான கேள்விகளை சின்மயியை நோக்கி வீசிக்கொண்டிருக்கிறார்கள்.

.ஆர்.முருகதாஸ், லாரன்ஸ் ராகவேந்திரா, நானி உட்பட பலர் மீதும் ""எனக்கு வாய்ப்புத் தருவதாகச் சொல்லி என்னை உடல் ரீதியாக பயன்படுத்திக்கொண்டவர்கள், வாய்ப்புத் தராமல் ஏமாற்றிவிட்டார்கள்''’என ஸ்ரீரெட்டி ‘"ஸ்ரீ லீக்ஸ்' தமிழ் சினிமா நேரம்’ மூலம் குற்றம்சாட்டியபோது... “""ஆதாரமில்லாமல் இஷ்டத்துக்கு பேசக்கூடாது. நானி என் நண்பர். அவர் பெண்களை மதிக்கக்கூடியவர்''’’ எனச் சொன்ன விஷால்... இப்போது வைரமுத்து மீது புகார் சொல்லியிருக்கும் சின்மயியையும், நானா படேகர் மீது புகார் சொல்லியிருக்கும் தனுஸ்ரீ தத்தாவையும் ஆதரித்திருக்கிறார்.

""“மீ டூ புகார்களை விசாரிக்க மூன்று நபர் கமிட்டி ஒன்று அமைக்கப்படும். பாலியல் பாதிப்பை புகாராகத் தரும் பெண்கள் பாதுகாக்கப்படுவார்கள்''’என விஷால் சொன்னதுடன்... ""தங்களுக்கு பாதிப்பு ஏற்பட்டால், தாமதிக்காமல் உடனே தெரியப்படுத்த வேண்டும். அமலாபால் தனக்கு தரப்பட்ட பாலியல் தொல்லையை உடனடியாக புகாராகச் சொன்னதால், உடனடியாக நடவடிக்கை எடுத்தோம். வைரமுத்து மீதான சின்மயியின் புகார் நிரூபிக்கப்படும் பட்சத்தில் மேல் நடவடிக்கை குறித்து ஆலோசிக்கப்படும்'' எனவும் தெரிவித்துள்ளார்.

சித்தார்த், ஆண்ட்ரியா, கஸ்தூரி, சமந்தா உட்பட பல பிரபலங்கள் சின்மயிக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

metooமத்திய அமைச்சர் எம்.ஜே.அக்பர், இருபது ஆண்டுகளுக்கு முன், பத்திரிகை ஆசிரியராக இருந்தபோது தனக்கு பாலியல் தொல்லை தந்ததாக, ஓரிரு பெண் பத்திரிகையாளர்கள் இப்போது ‘மீ டூ’வில் தெரிவிக்க... இதனால் ‘"அக்பர் பதவி விலகவேண்டும்'’என்கிற கோரிக்கை அரசியல் அரங்கில் எழ... அக்பரோ... “""அது பொய்க் குற்றச்சாட்டு. என் மதிப்பில் இந்தக் குற்றச்சாட்டுகள் பெரும் சரிவை ஏற்படுத்திவிட்டது. அதனால் இதற்கு காரணமானவர்கள் மீது வழக்கு தொடரப்போகிறேன்''’என அறிவித்து வழக்குத் தொடர்ந்துள்ளார்.

"தன்னை அவமானப்படுத்தியதாக நினைக்கும் வைரமுத்துவும், இதற்கு சட்டரீதியாக நியாயம் பெற... சின்மயி மீது உடனடியாக வழக்குத் தொடரவேண்டும். சின்மயி வழக்குத் தொடுக்கும் வரை வைரமுத்து ஏன் காத்திருக்க வேண்டும்?' என்கிற பேச்சும் எழுந்துள்ளது.

-இப்படி ஒரு யோசனை எழுந்ததற்கு காரணம்... கோலிவுட்டின் பிரபல டான்ஸ் மாஸ்டரும், நடிகருமான கல்யாண் மீது இலங்கைப் பெண் ஒருவர் பாலியல் குற்றம் சுமத்தியதாக தனது டுவிட்டரில் ரீ-ட்வீட் செய்திருந்தார் சின்மயி.

metooஇப்போது "அந்த இலங்கைப் பெண்... ‘நான் விளையாட்டுக்குச் சொன்னேன்'’ என சொல்லியிருப்பதால்... சின்மயி ரீ-ட்வீட் செய்யும் பாலியல் புகார்கள் மீதான நம்பகத்தன்மையில் கேள்வி எழுந்துள்ளதுதான் காரணம்.

பாலியல் இம்சைக்கு ஆளாகிற பெண்கள் தங்களை குற்றவாளிகளாகவும், வெளியே சொன்னால் தங்களை குற்றவாளிகளாகப் பார்ப்பார்கள் என்கிற மனநிலையிலும் தவித்து வந்த நிலையில்... அவர்களின் மனக்காயத்திற்கு மருந்தாக அமைந்திருக்கிறது "மீ டூ'’இயக்கம். அதை கவனமாக கையாள வேண்டிய பொறுப்பும் புகார் செய்கிற பெண்களுக்கு இருக்கவேண்டும்.

‘பிரபலங்கள் மீது குற்றம் சாட்டுபவர்களும் பிரபலங்கள்தானே. அதனால் அதில் உண்மை இருக்கும்’ என்கிற கருத்துக்கு கொஞ்சமும் குறைந்ததில்லை... ‘பிரபலம் மீது ஒரு பிரபலம் சொல்லும் குற்றச்சாட்டு உண்மையாகத்தான் இருக்குமா என்கிற கருத்தும்.

-ஆர்.டி.எ(க்)ஸ்

ரியாக்ஷன்!

நானா படேகர் மீது தனுஸ்ரீ தத்தா பாலியல் புகார் தெரிவித்ததும் பிரியங்கா சோப்ரா, கங்கனா ரணவத், சோனம் கபூர் உள்ளிட்ட பல பிரபலங்கள் தனுஸ்ரீக்கு ஆதரவு தெரிவித்தனர். மாஜி நாயகியும், ரஜினியின் ‘2.ஓ’ பட வில்லனுமான அக்ஷய்குமாரின் மனைவியுமான ட்விங்கிள் கன்னாவும் ஆதரவு தெரிவித்தார். ‘""நானா மீது நான் குற்றம்சாட்டியும், நானாவுடன் ஒரு படத்தில் உங்கள் கணவர் நடிக்கிறார். அதனால் உங்களின் ஆதரவு எனக்குத் தேவையில்லை''’என தனுஸ்ரீ சொல்லியிருந்தார்.

இந்நிலையில் அக்ஷய்யும், நானாவும் சேர்ந்து நடிக்கும் "ஹவுஸ்ஃபுல்-4'’படத்தை இயக்கிவரும் பிரபல டைரக்டர் சஜீத்கான் மீது சில நடிகைகளும், பெண் பத்திரிகையாளர் ஒருவரும் கடுமையான பாலியல் குற்றச்சாட்டுகளை தெரிவிக்கவே... "ஹவுஸ்ஃபுல்-4'’படத்தில் நடிப்பதை நிறுத்தி வைத்திருக்கிறார் அக்ஷய். சஜீத்தும் அந்தப் படத்தை இயக்கும் பொறுப்பிலிருந்து விலகியுள்ளார்.

"மீ டூ'’ புகார்களில் தனுஸ்ரீயின் புகார் சட்டரீதியான நடவடிக்கைகளில் வேகம் பிடித்துள்ளது. நானா படேகர் மீது வழக்குப்பதிவும் செய்யப்பட்டுள்ளது.