தீபங்கள் பேசும் திருவண்ணாமலை நகரத்திற்கே புகழ் சேர்ப்பது அண்ணாமலையார் கோயில்தான். தினம் தினம் ஆயிரத்துக்கும் அதிகமான பக்தர்களும் பௌர்ணமியன்று லட்சக்கணக்கானவர்களும் திருவண்ணாமலைக்கு வந்து அண்ணாமலையாரை வணங்கி 14 கிலோமீட்டர் கிரிவலம் வருவது ஆல்ஓவர் இண்டியா ஃபேமஸ். ஆன்மிக நகரில் பவுர்ணமிக்குப் பதிலாக அமாவாசை இருட்டில் நமது நகர்வலத்தை தொடங்கினோம்.
மேல்மலையனூர் அங்காளம்மன் ஊஞ்சல் உற்சவத்தை காண கர்நாடக மாநிலம் உட்பட பல பகுதிகளிலிருந்தும் வந்த பக்தர்கள் மேல்மலையனூருக்குப் பேருந்து பிடித்து செல்லும் மும்முரத்தில் இருந்ததால் திருவண்ணாமலை பேருந்துநிலையம் பரபரப்பாக காணப்பட்டது. அங்கிருந்த கடைக்காரரிடம் நாம் பேச்சுக் கொடுத்தபோது, ""இரவு 11 மணிக்குமேல இந்த ஆன்மிகத் தலம் "பெண்'மிக தலமா மாற ஆரம்பிச்சுடும்'' என்று சொல்ல... "கடவுளே' என கன்னத்தில் போட்டுக்கொண்டோம்.
பேருந்துநிலையத்திற்கு வந்தபோது சேம் ப்ளட். கடமை தவறாத காக்கி அதிகாரி ஒருவர் ஓடிவந்து அங்கு ஒதுங்கியிருந்த ஜோடியை விரட்டினார். ஆனாலும் கடமை தவறாத அந்த ஜோடி டி.எஸ்.பி. அலுவலகம் தாண்டி இரயில்வே ஸ்டேஷன் ஓரம் இருளில் மறைந்தது.
பௌர்ணமி, திருவிழா நாட்கள், முகூர்த்தநாட்களில் மட்டுமே ரூம்கள் புக் ஆகின்றன. மற்ற நேரங்களில் லாட்ஜ்கள் காற்று வாங்கிக்கொண்டிருக்கும். ஆனால், அங்கு போக பணமில்லாத மனமில்லாதவர்கள்தான் இப்படி இருட்டையே அறையாக மாற்றிக்கொள்கிறார்கள். அப்படியே… பழைய பை-பாஸ் சாலையில் காந்திநகர் வழியாக பயணித்தபோது கூட்டுறவு வங்கிக்கு சொந்தமான பரந்த மைதானம் முழுவதும் செல்போன் வெளிச்சத்தில் கும்பல் கும்பலாக இளவட்டங்கள் உட்கார்ந்திருந்ததை உற்றுநோக்கினோம். சரக்கு சைடுடிஷ்ஷுடன் இளசுகள் கூட்டம் கும்மியடித்துக்கொண்டிருக்கிறது. தலையில் அடித்துக்கொண்டு… அங்கிருந்து 1 கிலோமீட்டர் பயணித்தால் மணலூர் இணைப்புச் சாலையில் திருக்கோவிலூர் தென்பெண்ணை ஆற்றில் திருட்டுத்தனமாக மணல் அள்ளிவந்த லாரிகள் வரிசைகட்டி நின்றுகொண்டிருந்தன.
புரோக்கர்களோ "லோடு முப்பதாயிரம்... இஷ்டம் இருந்தா எறக்கிக்கோ'’என்று பார்ட்டியிடம் ரேட் பேசிக்கொண்டிருந்தது நமது காதில் விழுந்தது. அங்கிருந்து புதிய பை-பாஸ் அரசு மருத்துவக்கல்லூரி, கலெக்டர் அலுவலகம் தாண்டி ஓம்சக்தி நகர், வானவில் நகர் வழியாக வந்தபோது நமது சோர்ஸ் நம்மை எதேச்சையாக பார்த்துவிட்டு கையசைத்தார். ""இங்க ஒரு லேடி இருக்காங்க. வெளியில பியூட்டிஷியன்னு சொல்லிக்கிட்டு திரிஞ்சாலும் உண்மையான பிஸினஸ் வேற. வெளிமாநில பெண்களை சப்ளை பண்ற புரோக்கர் வேலையை செய்யுது இந்த லேடி. இவங்களால ஒரு மெட்ரிகுலேஷன் ஓனர் ஓட்டாண்டியாகிட்டாரு'' என்றார். (ஹும்...…கல்விக் கட்டணம்ங்குற பேர்ல அப்பாவி நடுத்தர குடும்பத்து பெற்றோர்களிடம் கொள்ளையடித்த கல்விக் கட்டணத்தையெல்லாம் கலவிக் கட்டணமா வீணடிச்சிருக்காரு போல) "இன்னும் எத்தனை பேரு ஓட்டாண்டி ஆகப்போறாங்களோ?'’என்று "உச்' கொட்டியவரிடம் விடைபெற்று அண்ணா நுழைவாயில் அருகே சென்றோம்.
இரவு 11 மணி.…அப்துல்கலாம் பேனர் கட்டி மூடிவைத்திருந்த மாடிக்கடைகளுக்கு சிலர் போவதும் வருவதுமாக இருந்தனர். சந்தேகம் வர... இரும்புப்படி வழியாக மேலே ஏறிச்சென்றபோது மக்கள் நீதி மய்யம்… மாவட்ட துணைச்செயலாளர் சென்ட்ரிங் குமார் என்கிற ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருந்தது. கமல்ஹாசனின் கட்சி ஆபீஸாக இருக்குமோ என்று எண்ணிய நமக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இரண்டு மதுக்கடைகள் கள்ளத்தனமாக செயல்பட்டுக்கொண்டிருப்பது தெரியவந்தது.
இதுக்குத்தான் புதுசா ஆரம்பிக்கிற கட்சிகளில் கொட்டிக் கொடுத்து போஸ்டிங் வாங்குறாங்களோ என்று யோசித்தபடி கீழே வந்தபோது போலீஸ் விசில் சத்தம் பறந்தது. அடடா… போலீஸ் வந்து திருட்டுத்தனமான விற்கும் மதுக்கடை குறித்து விசாரிக்கப்போகுது போலிருக்கு. பரவாயில்லையே… நம்பளவிட எவனோ ஒருத்தன் தகவல் கொடுக்கிறதுல ஃபாஸ்ட்டா இருந்திருக்கான் என்று யோசித்தபடி பார்த்துக்கொண்டிருக்க...… மறுபடியும் ஏமாற்றம். அந்த இடத்தை கடந்த காக்கி ஒருவர் கண், காது, வாய் பொத்தப்பட்ட நிலையில் கடந்து சென்றார். "இங்க விற்குறது டாஸ்மாக் சரக்கில்ல. இவுங்களே தயாரிக்கிற சரக்கு; (அப்படின்னா கள்ளச்சாராயம்னு சொல்லுங்க) அதனால, எல்லாமே எக்ஸ்ட்ரா விலை விற்குது' என்று புலம்பியபடி செல்கிறார் குடிமகன்.
ஆதி அண்ணாமலை கோயிலை தாண்டியபோது ஒரு சாது நம்மிடம் லிஃப்ட் கேட்டபடியே, டைம்பாஸாக பேச ஆரம்பித்த தகவல் ஆச்சரியப்படுத்தியது, ""சாதுக்களா இருக்கிறவங்க பண விஷயத்துல சேதுக்களா மாறிடுறாங்க. பெரும்பாலான சாதுக்கள் பணத்தை சேமித்து சேமித்து தங்களோட ஜோல்னா பைகளிலேயே வெச்சிக்குறாங்க. என் பையைப் பார்க்காதீங்க... இது காசில்லாத பை. அதனால எவனும் திருடமாட்டேங்குறான். ஆனா, பணம் இருக்குற பையா பார்த்து திருடுறானுங்க. எப்படிங்கிறீங்களா? பணம் சேமிச்சு வைக்கிறதை… வேற சில சாதுக்களே உள்ளூர் திருட்டுப் பசங்களுக்கு இன்ஃபர்மேஷன் கொடுத்து திருட வெச்சி கமிஷன் வாங்குற கொடுமையெல்லாம் நடக்குதுப்பா. சாதுக்களுக்கு கஞ்சா, சரக்குன்னு சப்ளை பண்றதும் நடக்குது... ஹும்''’என்று பெருமூச்சு விட்டவர் தனக்கான இடம் வந்ததும் இறங்கிச் செல்கிறார்.
அமாவாசை இருளில் எத்தனை எத்தனை ரகசியங்கள் புதைந்திருக்கின்றன என்ற கவலையுடன் நமது நகர்வலத்தை முடித்துவிட்டு வீடு திரும்பினோம்.
-ரவுண்ட் அப்: ராஜா
தொகுப்பு: -மனோ