அ.தி.மு.க.வில் புதிதாக நியமனம் செய்யப்பட்ட மா.செ. ஒருவர் முன்னாள் அமைச்சர் ஒருவரிடம் ஆசி வாங்கச் செல்ல, அப்போது அவரது மிரட்டலால் புதிய மா.செ. நொந்துபோயுள்ள தகவல் பரபரப்பாகியுள்ளது.
வேலூர் மாவட்டத்தை அ.தி.மு.க.வில் மாநகரம், புறநகர் என இரண்டாகப் பிரித்து வேலூர் மாநகரம், காட்பாடி தொகுதியை உள்ளடக்கிய மாநகர மா.செ.வாக அப்பு (எ) ராதாகிருஷ்ணனும், வேலூர் புறநகர் மா.செ.வாக மதியழகனையும் நியமனம் செய்துள்ளது தலைமை. இருவரும் கட்சியின் முக்கிய நிர்வாகிகளை நேரில் சந்தித்து சால்வை அணிவித்து வாழ்த்தும், ஆசியும் பெற்றுவருகின்றனர்.
முன்னாள் அமைச்சரும், மாநில மருத்துவரணி இணைச்செயலாளருமான டாக்டர் விஜயைச் சந்தித்து ஆசிபெற ஆகஸ்ட் 1-ஆம் தேதி அவரது வீட்டுக்கு கட்சி நிர்வாகிகள் சிலரோடு சென்றுள்ளார் மாநகர மா.செ அப்பு. வீட்டுக்குள் வந்தவரிடம், ""நீ என்ன பெரிய இவனா? நீ எப்படி பதவி வாங்கிக்கிட்டு வரலாம். உன் வேலையெல்லாம் காட்பாடியோடு வச்சிக்கனும், வேலூர் மாநகரத்தில் எது செய்யறதா இருந்தாலும் என்னைக் கேட்டுதான் செய்யனும், புதுசா பதவி போடறேன். பதவியை எடுக்கறேன்னு ஏதாவது செஞ்சேன்னா அவ்ளோ தான். இங்க எல்லாமே நான்தான், வர்ற சட்டமன்றத் தேர்தல்ல வேலூர்ல நிக்கனும்னு ஆசைப்படறியாமே, அப்படி ஒரு எண்ணம் இருந்தால் விட்டுடு. நீ இங்க நின்னால் நான் சுயேட்சையா மனுப்போடுவன், ஜாக்கிரதை'' என எச்சரித்ததாக கட்சியினர் மத்தியில் பரபரப்பாக பேச்சு அடிபடுகிறது.
இதுபற்றி நாம் முன்னாள் அமைச்சர் விஜயிடம் கேட்டபோது, ""நான் அப்படியெதுவும் தவறா பேசல, எதுவாயிருந்தாலும் கேட்டு செய்ப்பா அப்படின்னு தான் சொன்னேன்'' என்றார்.
அப்பு என்கிற ராதாகிருஷ்ணனிடம் கருத்து கேட்க தொடர்பு கொண்டபோது, நமது லைனை அவர் எடுக்கவில்லை.
இதுபற்றி நம்மிடம் பேசிய கட்சி நிர்வாகிகள் சிலர், ""தற்போது வேலூர், இராணிப்பேட்டை, திருப்பத்தூர் என மாவட்டங்கள் பிரிக்கப்பட்ட பின்பு, காலியாக இருந்த வேலூர் மா.செ. பதவி முதலியார் சமுதாயத்தை சேர்ந்தவருக்கு வழங்க முதல்வர், துணை முதல்வர் முடிவுசெய்தனர். இதனையறிந்து முதலியார் சமுதாயத்தை சேர்ந்த முன்னாள் அமைச்சர் விஜய், முன்னால் மா.செ வாசு, தகவல் தொழில்நுட்ப அணி மா.செ ஜனனி சதிஷ், முன்னால் மா.செ சிவசங்கரன் என பலரும் காய்நகர்த்தினார்கள். இதில் ஓ.பி.எஸ் ஆதரவில், அப்பு மா.செ.வாகிவிட்டார்.
இதில் பலருக்கும் அதிருப்தியிருந்தாலும், அமைச்சர் விஜய்தான் வெளிப்படையாக காட்டியுள்ளார். ஜெ. இறந்த பிறகு அ.ம.மு.க. போய், மீண்டும் அ.தி.மு.க. வந்தவர், சிட்டிங் மா.செ.வை மிரட்டுகிறார். ஜெ மட்டும் உயிருடன் இருந்திருந்தால் அவரால் இப்படி பேசமுடிந்திருக் குமா என கேள்வியெழுப்புகின்றனர்.
-து.ராஜா