"இரண்டு லட்சம் முதல் ஐந்து லட்ச ரூபாய் வரை கட்டணம் செலுத்திய பணக்கார மாணவர்கள் மட்டுமே நீட் தேர்வில் தேறி டாக்டராக முடிகிறது. பணம் கட்ட முடியாத ஏழை-எளிய மாணவர்கள் டாக்டர் ஆக முடியாததை ஆதாரத்துடன் சுட்டிக்காட்டிய நீதியரசர்கள் கிருபாகரன், வேல்முருகன் ஆகியோர் "நீட் தேர்வை ஏன் திரும் பப் பெறக்கூடாது?'’ என்று எழுப்பிய கேள்விதான் மீண்டும் "நீட்' விலக்கு குறித்த மாபெரும் விவாதத்தை உண்டாக்கியிருக்கிறது.

cc

"2019-ஆம் வருடத்தில் அரசு மருத்துவக் கல்லூரிகளின் மருத்துவ சீட்டுகளை பிடித்த 3081 மாணவர்களில் 48 மாணவர்கள் மட்டுமே கோச்சிங் சென்டரில் படிக்காத மாணவர்கள். மீதமுள்ள 3033 மாணவர்கள் ப்ளஸ்டூ முடித்து இரண்டு மூன்று வருடங்கள் தனியார் நீட் பயிற்சி மையங்களில் 2 லட்சத்திலிருந்து 5 லட்சம்வரை பணம் ‘கொட்டி’ படித்த மாணவர்கள்தான் "நீட்' தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள்' என்ற அதிர்ச்சிகரமான புள்ளிவிவரத்தை சுட்டிக் காட்டியுள் ளார் நீதிபதி கிருபாகரன்.

Advertisment

அப்படியென் றால், 98.5 சதவீத மாணவர்கள் தனியார் "நீட்' பயிற்சி மையங்களில் படித்தவர்கள். 1.5 சதவீத மாணவர்கள் மட்டுமே பயிற்சி மையங்களில் படிக்காமல் டாக்டர் படிப்பில் சேர்ந்திருக்கிறார்கள். இதைவிடக் கொடுமை, எம்.எம்.சி. எனப்படும் மெட்ராஸ் அரசு மருத்துவக் கல்லூரி உட்பட பல அரசு கல்லூரிகளில் 100 சதவீதம் கோச்சிங் சென்டர்களில் படித்த மாணவர்கள் மட்டுமே நிரப்பப்பட்டிருக்கிறார்கள். மேலும், ப்ளஸ்டூ முடித்து இரண்டு மூன்று வருடங்கள் பயிற்சி மையங்களில் படித்த 70 சதவீத மாணவர்கள் சேர்ந்திருக்கிறார்கள். தொடர்ந்து நீட் தேர்வு குறித்து சமூக அக்கறையுடன் cccகருத்து தெரிவித்துவந்த நீதிபதி கிருபாகரன், "நீட்' தேர்வு குறித்து புள்ளிவிவரங்களுடன் தெரிவித்த கருத்துகள்தான் தமிழகத்தில் "நீட்' தேர்வு தேவையா? என்ற விவாதத்தை மீண்டும் எழுப்பியிருக்கிறது.

இதுகுறித்து, இளைஞர் இயக்கம் தலைவர் டாக்டர் எழிலனிடம் நாம் பேசியபோது, ""நீட் தேர்வு வருவதற்கு முன்பு பெரும்பாலான ஏழை-எளிய அரசுப் பள்ளி மாணவர்கள் அரசு மருத்துவக் கல்லூரி இடங்களைப் பிடித்து டாக்டர்கள் ஆனார்கள். இந்த வருடம் ஒருவர்கூட மருத்துவ சீட்டை பிடிக்கவில்லை. காரணம், தனியார் மருத்துவக் கல்லூரிகளில் சேரவேண்டும் என்றால் "நீட்' தேர்வில் 720 மதிப்பெண்ணுக்கு 90 டூ 120 மதிப்பெண்கள் எடுத்தால் போதும். ஆனால், அரசு மருத்துவக் கல்லூரிகளில் சீட்டை பிடிக்கவேண்டும் என்றால் 720 மதிப்பெண்ணுக்கு 550 மதிப்பெண் ணுக்கு மேல் எடுக்க வேண்டும்.

அடுத்த வருடம், 650 மதிப்பெண்கள் எடுக்கவேண்டும் என்று வந்தாலும் ஆச்சர்யப் படுவதற்கில்லை. காரணம், "நீட்' வந்தபோது 2017-18-ஆம் ஆண்டில் அரசு சீட்டுகளை பிடிக்க 350 மதிப்பெண்கள்தான் இருந்தன. 2018-19-ஆம் ஆண்டில் 450 மதிப்பெண் ஆனது. தற்போது, 550 மதிப்பெண் பெறவேண்டும் என்று ஆகிவிட்டது. அதேபோல், நீட் தேர்வில் வேதியியலிலிருந்து 60 கேள்விகள், உயிரியலிலிருந்து 60 கேள்விகள், இயற்பியலிலிருந்து 60 கேள்விகள் என 180 கேள்விகள் கேட்கப்படுகின்றன.

Advertisment

ஒரு கேள்விக்கு 4 மதிப்பெண்கள். பணக்கார மாணவன் இந்த மூன்று பாடங்களில் ஏதாவது ஒரு பாடத்தை படித்து 30 கேள்விகளுக்கு சரியாக பதிலளித்துவிட்டாலே 120 மதிப்பெண்ணை எடுத்து ஈஸியாக தனியார் மருத்துவக் கல்லூரியில் சேர்ந்துவிடமுடியும். ஆனால், இதே மதிப் பெண்ணை எடுத்தாலும் ஏழை மாணவன் பணம் கட்ட முடியாமல் டாக்டர் படிப்புக்கு சேர முடியாத நிலை ஏற்படும். இதுவே, பழைய முறைப்படி மதிப்பெண் அடிப்படையில் இருந்தால் ஏழை-எளிய அரசுப் பள்ளி மாணவர்கள் அரசு சீட்டுகளை பிடிக்க முடியும். ஆனால், 2 லட்சத்தி லிருந்து 5 லட்சம்வரை கோச்சிங் சென்டர்களில் சேர்ந்த மாணவர்கள் மட்டுமே 550-க்கு மேல் அதிக மதிப்பெண்கள் பெற்று அரசு இடங்களை பிடித்துவிடுகிறார்கள்.

cc

ஆகமொத்தம், அரசு மருத்துவக் கல்லூரி களாக இருந்தாலும் தனியார் மருத்துவக் கல்லூரிகளாக இருந்தாலும் பணம் இருப்பவர் களால் மட்டுமே சேரமுடியும் என்ற நிலையை உருவாக்கிவிட்டது "நீட்'. இதைத்தான், நீதிபதி கிருபாகரனும் சுட்டிக்காட்டியுள்ளார். சி.பி.எஸ்.இ. பாடத் திட்டத்திற்கு இணையாக தமிழக பாடத் திட்டம் இல்லை என்றார்கள். ஆனால், நீதிபதி சுட்டிக் காட்டியபடி இந்தவருடம் கோச்சிங் சென்டர்களில் படித்து மருத்துவப் படிப்பில் சேர்ந்த 3081 மாணவர்களில் சி.பி.எஸ்.இ. பாடத் திட்டத்தில் படித்த மாணவர்களும் உண்டு.

அப்படியென்றால், சி.பி.எஸ்.இ. பாடத் திட்டம்தான் சிறந்தது என்பதும் நீட் உள்ளிட்ட போட்டித்தேர்வுகளுக்கு தகுந்தாற்போல் வடிவமைக்கப்பட்டிருக்கிறது என்பதும் பொய்யாகி விட் டது. சி.பி.எஸ்.இ.யில் படித் தாலும் கோச்சிங் சென்ட ருக்கு கொட்டிக் கொடுக்கா மல் பாஸாக முடியாது என்பதையே இது நிரூபிக் கிறது. இப்படி, தனியார் கோச்சிங் சென்டர்களில் பணம்கட்டி படித்து டாக்டர் ஆகிறவர்கள் அரசு மருத்துவ மனைகளில் மக்களுக்கு சேவை செய்வார்களா? என்பதுதான் மிகப்பெரிய கேள்வி. இதனால், அரசு மருத்துவமனைகளை நம்பியிருக்கும் ஏழை-எளிய மக்கள்தான் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். பணமில்லாத ஏழை மாண வர்களுக்கு அரசாங்கம் கோச்சிங் சென்டர்களை நடத்துவதாக கூறுகிறார்கள்.

ஆனால், இந்த வருடம் அரசாங்கம் நடத்தும் கோச்சிங் சென்டரிலிருந்து தனியார் மருத்துவக் கல்லூரியிலுள்ள அரசு ஒதுக்கீடு சீட்டை ஒரே ஒருவர்தான் பிடித்திருக்கிறார். அரசுக் கல்லூரி இடங்களை ஒருவர்கூட பிடிக்கவில்லை. நீட்டிலிருந்து விலக்கு பெறுவதாக சட்ட மசோதாக்களை அனுப்புவதாகக் கூறி ஜனாதிபதி ஒப்புதலுக்கு அனுப்பாமலேயே அ.தி.மு.க.வும் பா.ஜ.க.வும் சேர்ந்து மக்களை ஏமாற்றிவிட்டார்கள். இதன் வெளிப்பாடுதான் நீதிபதியின் கருத்து'' என்று சுட்டிக்காட்டுகிறார்.

சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் டாக்டர் ரவீந்திரநாத்தின் கருத்தோ வேறுபடுகிறது. ""அரசு மருத்துவக் கல்லூரிகளிலுள்ள சீட்டுகளை நிரப்பவும், தனியார் மருத்துவக் கல்லூரி களிலுள்ள அரசு ஒதுக்கீடு சீட்டுகளுக்கும் வேண்டுமானால் மத்திய அரசின் "நீட்' நுழைவுத்தேர்வு நடத்தப்படுவதிலிருந்து விலக்கு கேட்கலாமே தவிர, "நீட்'’நுழைவுத் தேர்வே கூடாது என்ற வாதம் சரியானது அல்ல. காரணம், ஆல் இண்டியா சீட்டுகளுக்காக தனித்தனியாக தேர்வு நடத்தி இஷ்டத்துக்கு சீட்டுகளை நிரப்பி வந்தார்கள்.

cc

மாணவர்களும் இதற்காக, பல நுழைவுத் தேர்வுகளுக்கு தயாராக வேண்டிய சூழல் ஏற்பட்டது. "நீட்' எனப்படும் ஒரே நுழைவுத்தேர்வு வைக்கப்பட்டதால் அத்தேர்வில் தேர்ச்சி பெற்று ஆல் இண்டியா சீட்டுகளை மாணவர்கள் எளிதாகப் பிடிக்க முடிகிறது. அதனால், தனியார் மற்றும் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களுக்கு மத்திய அரசு நடத்தும் "நீட்' நுழைவுத்தேர்வு மூலம் நிரப்புவது தான் சரியானது.

மாநில அரசின் சீட்களுக்கு +2 மதிப்பெண் அடிப்படையில் நிரப்பும்போது நாமக்கல் போன்ற தனியார் பள்ளி மாணவர்களும் டியூஷன் செல்லும் மாணவர்களும்தான் அரசு இடங்களை பிடித்தார்கள். "நீட்' வந்தபிறகு, அது இன்னும் மோசமாகிவிட்டது. அதனால், "நீட்'டிலிருந்து விலக்கு பெற்றாலும் தமிழக அரசு நுழைவுத்தேர்வு நடத்தி மாணவர்களை நிரப்பவேண்டும். போட்டித் தேர்வு பயிற்சி மையங்களை அரசாங்கம் உருவாக்கி தரமான பயிற்சிகளை கொடுக்கவேண்டும்'' என்கிறார் கோரிக்கையாக.

பிரபல கல்வியாளரும், பொதுப்பள்ளிக்கான மாநில மேடை அமைப்பின் பொதுச் செயலாளருமான பிரின்ஸ் கஜேந்திரபாபு நம்மிடம், ""2016 நாடாளுமன்ற நிலைக்குழு அறிக்கையில் தனியார் கல்லூரிகள் மற்றும் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களை வரைமுறைப்படுத்துவதற் காகத்தான் "நீட்' கொண்டுவரப்படுகிறது என்று முடிவு செய்ததே தவிர, அரசுக் கல்லூரி இடங் களை நிரப்புவது குறித்தல்ல. மேலும், "எந்தெந்த மாநிலங்கள் "நீட்'டிலிருந்து விலக்கு பெறவேண்டும் என்றாலும் விலக்கு பெற்றுக் கொள்ளலாம்' என்று தெளிவாக சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

அதேபோல், உச்சநீதிமன்றமும் 2016 மே 2-ந் தேதி மாடர்ன் டெண்டல் காலேஜ் தீர்ப்பில் "மருத்துவக் கல்லூரிகளை ஒழுங்குபடுத்தும் அதிகாரம் மாநில அரசுக்கு உள்ளது' என்று உத்தரவிட்டுள்ளது. தமிழக அரசு நினைத்திருந்தால் "நீட்'டிலிருந்து விலக்கு பெற்றிருக்கலாம். "நீட்' மசோதாக்களை ஜனாதிபதிக்கு அனுப்பியது... திரும்ப வந்தது குறித்து வெளிப்படையாக அறிவிக்காமல் இரண்டு மசோதாக்களையும் கொலை செய்து ஏழை-எளிய மாணவர்களின் மருத்துவக் கனவை புதைத்துவிட்டது. புதிதாக தேசிய மருத்துவ ஆணை சட்டம் நிறைவேற்றப் பட்டதால் மீண்டும் "நீட்' தேர்வுக்கு விலக்குப்பெற ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றினால்தான் ஏழை-எளிய மாணவர்கள் மருத்துவர்கள் ஆகமுடியும்'' என்கிறார் அவர்.

ஆகமொத்தம், "நீட்'டிலிருந்து விலக்கு பெறுவதாக அ.தி.மு.க. அரசு தொடர்ந்து ஏழை- எளிய கிராமப்புற மாணவர்களை ஏமாற்றி ஏழை-எளிய மக்களுக்கு கிடைக்க வேண்டிய மருத்துவத்தையும் சீர்குலைத்து பல உயிர்களுடன் விளையாடிக்கொண்டிருக்கிறது.

-மனோசௌந்தர்