மதுரை மாநகராட்சியில் 150 கோடி ரூபாய் சொத்து வரி முறைகேடு வழக்கில் இதுவரை 12 பேர் கைதுசெய்யப்பட்டதைத் தொடர்ந்து, 5 மண்டலத் தலைவர்களும் ராஜினாமா செய்திருந்த நிலையில், சொத்துவரி முறைகேட்டைக் கண்டித்து எதிர்க்கட்சியான அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம் நடத்தியதோடு, உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில், மேயர் இந்திராணி யும், அவரது கணவர் பொன்வசந்தும் விசாரிக்கப் பட வேண்டுமென்று முறையிட்டிருந்தனர்.
இந்நிலையில், கடந்த வாரம் கைது செய்யப்பட்ட சொத்து வரிவிதிப்புக் குழுத் தலைவர் விஜயலெட்சுமியின் கணவர் கண்ணனின் வாக்குமூலத்தில், மேயரின் கணவர் பொன்வசந்த், மேயர் கணவரின் பி.ஏ.வாக இருந்த பொன்மணி யின் கணவர் ரவி மூலம், சொத்து வரி முறைகேடு செய்தது தெரியவர, கட்சித்தலைமையிடமும், சில அமைச்சர்களிடமும் முறையிட்டுப் பார்த்தும் கைவிட்ட நிலையில், கடந்த 13ஆம் தேதி மத்திய குற்றப்பிரிவு போலீஸார் அவரை கைதுசெய்தனர். நெஞ்சு வலிப்பதாகச் சொன்னதால் அரசு மருத்துவமனையில் பரிசோதித்தபின், மாலையில் மதுரை மாவட்ட குற்றவியல் நீதிபதி ஆனந்த் முன்பாக ஆஜர்படுத்தியதில், பொன் வசந்தை ஆகஸ்ட் 26ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் அடைக்க உத்தரவிட்டார்.
இதனைத் தொடர்ந்து, மாநகராட்சி மேயர் இந்திராணியின் பதவியும் பறிக்கப்படுமென எதிர்பார்த்த சூழலில், மதுரை மாநகராட்சி ஆணை யர் சித்ராவை சந்தித்து தனது இராஜினாமா கடிதத்தை அளித்துள்ளார். இவ்விவகாரத்தில், மேயரின் பி.ஏ. அர்ச்சனாவையும் விசாரிக்க வேண்டுமென்ற கோரிக்கையும் எழுந்துள்ளது. அதேபோல், மதுரை மாநகராட்சியும் கலைக்கப் படுமென்ற பரபரப்பும் ஏற்பட்டுள்ளது.
அமைச்சர் பழனிவேல் தியாகராஜனின் தீவிர ஆதரவாளரான பொன்வசந்தின் மனைவி இந்திராணியை மேயராக்கினார் பி.டி.ஆர். மேயரான இந்திராணி தனது முதல் அறிக்கையி லேயே, எனது பணிகள் முழுவதும் நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாராஜன் வழிகாட்டுதலின் படியும், மேற்பார்வையிலும் மட்டுமே நடைபெறுமென்று குறிப்பிட்டிருந்தார். மேலும், பி.டி.ஆரின் ஐ.டி.விங்கிலிருந்த அர்ச்சனா என்பவர், மேயர் இந்திராணியின் பி.ஏ.வாக அவரது செயல்பாடுகளைக் கவனித்துவந்தார். பொன் வசந்தோ, மாநகராட்சி அதிகாரிகள், பொறி யாளர்கள் உள்ளிட்டோரை தனது பங்களாவுக்கு அழைத்து கட்டளைகளைப் பிறப்பித்து வந்தார். இதனால் அர்ச்சனாவுக்கும், பொன் வசந்துக்கும் கருத்துவேறுபாடு ஏற்பட்டு, விவகாரம் பி.டி.ஆர். பழனிவேல்தியாகராஜன் காதுக்கு செல்ல, அனைத்து விஷயத்திலும் தலையிடக்கூடாதென பொன்வசந்தை பி.டி.ஆர். கண்டித்திருக்கிறார்.
இந்த சூழலில் தான் வரிவிதிப்பு முறைகேடு விவகாரம் தலைதூக்கியது. அப்போதைய ஆணையர் தினேஷ்குமார், மதுரை மாநகராட்சி வருவாய் குறைந்திருப்பது குறித்து விசாரணை செய்ய, ஆயிரத்திற்கும் மேற்பட்ட நிறுவனங் களுக்கு சொத்துவரிக் குறைப்பு செய்து, மாநகராட்சிக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டிருப்பது தெரியவந்தது. மாநகராட்சியிலுள்ள பல்வேறு வகையான கட்டடங்களுக்கு, அவற்றின் அளவுக்கேற்ப வரி நிர்ணயம் செய்யப்பட்டு வசூலிக்கப்பட்டிருக்கிறது. இதில் மாற்றம் செய்வதென்றால் நீதிமன்ற உத்தரவுப்படியோ, மாநகராட்சியில் தீர்மானம் நிறைவேற்றியோ தான் செய்தாக வேண்டும். ஆனால் கடந்த மூன்றாண்டுகளாக முறைகேடாக சொத்துவரி குறைக்கப்பட்டதில், மாநகராட்சிக்கு 150 கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டது தெரியவந்தது.
அதில் ஆணையரின் லாகின் பாஸ்வேர்டுகள் திருடப்பட்டது தெரியவந்ததும், ஆணையர் தினேஷ்குமார், சைபர் கிரைம் மத்திய குற்ற பிரிவுக்கு விசாரணையை மாற்றிவிட்டார். அவர்களின் விசாரணையின் முடிவில், ஓய்வுபெற்ற உதவி ஆணையர், உதவி வருவாய் அலுவலர்கள் உட்பட எட்டு பேர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில், முன்னாள் துணை ஆணையர் சுரேஷ்குமாரை 11ஆம்தேதி தூத்துக்குடியில் வைத்து கைது செய்தனர். இதுவரை 12 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், 19 ஊழியர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட பொன்வசந்த், "அதிகாரிகள், பில் கலெக்டர்கள், மண்டலத் தலைவர்கள் செய்த குற்றத்திற்கும், மேயருக்கும், எனக்கும் எள்ளளவு கூட சம்பந்தமில்லை. நான் நிரபராதி என்பதை நிரூபிப்பேன்'' என்றி ருக்கிறார். இதுகுறித்து தி.மு.க. கவுன்சிலர்கள் கூறுகையில், "மதுரை மாநகராட்சியில் இந்திராணி பொன்வசந்த் மேயராக பதவியேற்றது முதல் தனிப்பட்ட உதவியாளராக அர்ச்சனா தேவி உள்ளார். மேயர் கையொப்பமிடுவதற்கு முன் மாநகராட்சி கோப்புகளை ஆய்வு செய்வது, அவருக்கு ஆலோசனை வழங்குவதென்று அப்போதே அர்ச்சனாவின் நடவடிக்கைகள் சர்ச்சைக்குள்ளானது. பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜனின் அலுவலகத்தில் பணிபுரிந்தவர் என்பதால் மாநகராட்சியில் அவருக்கு செல்வாக்கு இருந்தது. அவரது செயல்பாடுகளை எதிர்க்கட்சியினர் குற்றம்சாட்டியதால், மாநகராட்சி கூட்டத்தில் அவரை மேயரின் சிறப்பு ஆலோசகராக நியமிக்க தீர்மானம் கொண்டுவந்து நிறைவேற்றப்பட்டது. இவரின் தலையீடு மாநகராட்சியில் அதிகமென்பதால் அர்ச்சனாவையும் விசாரிக்க வேண்டுமென்ற கோரிக்கை எழுந்துள்ளது'' என்றனர்.
மேயர் இந்திராணி பொன்வசந்த் இராஜினாமாவை தொடர்ந்து, புதிய மேயரை தேர்ந்தெடுப்பது அல்லது மதுரை மாநக ராட்சியை கலைத்துவிட்டு, 2026 பொதுத்தேர்த லுக்கு பிறகு மேயருக்கு நேரடியாக தேர்தல் நடத்துவதென்று முடிவெடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. தற்போதைய விசாரணையில், கண்ணன், ரவி ஆகியோரின் வாக்குமூலத்தின் அடிப்படையில், தி.மு.க.வின் 3 மண்டலத் தலைவர்களான முகேஷ் சர்மா, சரவண புவனேஸ்வரி, பாண்டிச்செல்வி ஆகியோரோடு, அ.தி.மு.க.வின் சோலைராஜாவும் எந்நேரமும் கைதாகலாமென்று தகவல் வருகிறது. மேலும், ராஜன் செல்லப்பா மேயராக இருந்த போதுள்ள அ.தி.மு.க. மண்டலத் தலைவர்களும் இதில் சிக்குவார்களென்றும் தெரியவருகிறது. இவ்விவகாரத்தில் தி.மு.க. தலைமையின் முடிவைத்தான் அனைவரும் எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள்!