தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை ஜனவரி மாதத்திற்குள் நடத்திடவேண்டுமென உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதை அடுத்து ஆளும்கட்சி தரப்பில் தேர்தலை எதிர்கொள்ள சுறுசுறுப்பாக ஆயத்தமாகி வருகின்றனர்.
போன சட்டமன்றத் தேர்தலில் எம்.எல்.ஏ. வாய்ப்பு கேட்டவர்களை அடுத்து மேயர் தேர்தல் வருகிறது. கட்டாயம் அதில் வாய்ப்பளிக்கப்படும் என்று. விசயத்தை நகர்த்தியவர்கள், இப்போது அதற்கு போட்டி அதிகமானதால் பரபரப்பாகவும் சுறுசுறுப்பாகவும் காய் நகர்த்தத் தொடங்கியுள்ளார்கள்.
தி.மு.க.வில் பொன்முத்துராம லிங்கம் மகன் பொன்சேதுவும், துணை மாவட்டச் செயலாளர் எஸ்.ஆர்.கோபி, நகர் மாவட்டச் செயலாளர் தளபதி மகன் அன்பு, தளபதியின் ஆதரவாளரும் ஏற்கனவே செல்லூர் ராஜுவை எதிர்த்து குறைந்த ஓட்டு வித்தியாசத்தில் வெற்றியைத் தவறவிட்ட சின்னம்மாவும் களத்தில் நிற்க, இளைஞரணி ஜெயராமன், அமைச்சர் மூர்த்தி ஆதரவாளர் சசிகுமார், ஆகியோரும் மேயர் கனவோடு இருக்கின்றனர்.
அ.தி.மு.க.விலோ ராஜன் செல்லப்பா மகன் சத்தியன், செல்லூர் ராஜுவின் மகள் அல்லது ஆதரவாளர் எம்.எஸ். பாண்டியன், போன முறை சட்டமன்ற சீட்டு மறுக்கப்பட்ட ஓ.பி.எஸ் ஆதரவாளரும் முன்னாள் எம்.பி.யுமான கோபாலகிருஷ்ணன், முன்னாள் அமைச்சர் உதயகுமார் ஆதரவாளர் எஸ்.எஸ்.சரவணன் என முண்டியடிக்கின்றனர். அ.ம.மு.க.வில் முன்னாள் சபாநாயகர் காளிமுத்து மகன் டேவிட் அண்ணாதுரை, மாவட்ட செயலாளர் ராஜலிங்கம், ஜெயபால் என்று வரிசை நீள்கிறது.
பா.ஜ.க.வோ நேரடி மேயர் தேர்தல் என்றால் டாக்டர் சரவணன் அல்லது சௌராஷ்ட்ரா ஓட்டைக் குறிவைத்து மஹாலெட்சுமியை களத்திலிறக்க தயாராக இருக்கிறது. மறைமுக தேர்தல் என்றால் அ.தி.மு.க. கூட்டணியில் மதுரைக்கு 20 கவுன்சிலர் சீட்டை எதிர்பார்க்கிறது.
இந்த தேர்தலில் தே.மு.தி.க. தனியாக களம் காண்கிறது. தே.மு.தி.க.வில் பழைய விறுவிறுப்பு இல்லாவிட்டாலும், கொரோனா காலத்தில் மக்கள் நலத்திட்டங்கள் செய்து தே.மு.தி.க. தொண்டர்களை சுறுசுறுப்பாக வைத்திருக்கும் மாவட்டச் செயலாளர் செல்வகுமார் மிகவும் ஆர்வமாக களத்தில் நிற்கிறார்.
நேரடியாக ஆண் மேயர் தேர்வென்றால் தாங்கள் நிற்பது, இல்லையென்றால் தங்கள் மகள் அல்லது மருமகள்களை நிற்கவைப்பது என்று களத்தில் இறங்கியிருக்கிறார்கள். முதலில் பெண் மேயர் வேட்பாளர் என்பதை மாற்றச்சொல்லி அழுத்தம்கொடுக்க ஆரம்பித்துள்ளனர்.
இப்படி ஒவ்வொரு பெரிய கட்சியின் முக்கிய நிர்வாகிகள், அமைச்சர், எம்.எல்.ஏ.க்கள் தரப்பிலேயே தங்கள் ஆதரவாளர்களுக்கு மேயர் சீட் பெற கடும் போட்டி ஏற்பட்டாலும், இரண்டாம் கட்ட நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள், நேரடி மேயர் தேர்தல் இல்லாமல் தேர்ந்தெடுக்கப்பட்ட கவுன்சிலர்கள் மூலம் மறைமுக தேர்தல்தான் என்ற நம்பிக்கை அவர்களை மகிழ்வித்துள்ளது.
தற்போது ஆளும் தரப்பில் மட்டும்தான் கவுன்சிலர் வேட்பாளருக்கான படிவம் வாங்க பெரும் ஆர்வமும் போட்டியும் இருக்கிறது. மற்ற கட்சிகளில் அவ்வளவாக ஆர்வம்காட்டாத நிலையே நீடிக்கிறது. ஆளும்தரப்பில் இப்போதே அடுத்த துணை மேயர் பதவியைப் பிடிப்பது யார்? என்ற விவாதம் தொடங்கிவிட்டது.
இதில் தி.மு.க.வின் கூட்டணிக் கட்சிகளான ம.தி.மு.க., கம்யூனிஸ்ட், வி.சி.க., காங்கிரஸ் போன்றவை, "மேயரை நீங்கள் எடுத்துக் கொள்ளுங்கள், துணை மேயர் பதவியை கூட்டணிக் கட்சிகளுக்கு விட்டுக்கொடுங்கள்' என்று சொல்ல ஆரம்பித்துள்ளன. எதிர்க்கட்சிகள் தரப்பிலோ இப்போது சுணக்கம் தெரிகிறது. ஒருவேளை தேர்தல் நாள் நெருங்க, நெருங்க சூடு பிடிக்க ஆரம்பிக்குமோ…என்னவோ!…