தமிழக உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்போடு அரசியல் கட்சிகளின் ஆலோசனைகள், தேர்தல் வியூகங்கள் என தமிழக அரசியல் களம் சுறுசுறுப்பாகியிருக்கிறது. இந்த விஷயத்தில் முதலில் முந்திக்கொண்டது பா.ஜ.க.வும் அ.தி.மு.க.வும். பா.ஜ.க.வின் தலைவரான நயினார் நாகேந்திரன், "அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுக்கு ஆண்மையில்லை'’ என பேசினார். அதற்குக் காரணம், உள்ளாட்சித் தேர்தல் வியூகம்தான்.
கன்னியாகுமரியிலும், நெல்லையிலும் அ.தி.மு.க., தி.மு.க., பா.ஜ.க. என மும்முனைப் போட்டி ஏற்பட்டால், அது பா.ஜ.க.விற்கு சாதகம் என்ப தால், பா.ஜ.க. தனியாக போட்டியிட வேண்டும் என பொன்.ராதா கிருஷ்ணன் விரும்புகிறார். கன்னியாகுமரியில் உள்ளாட்சித் தேர்தல் கதாநாயகனாக பொன். ராதாகிருஷ்ணன் வெளிப்படுவார். நெல்லையில், நயினார் நாகேந்திரனின் ஆதரவாளர்கள் வெற்றிபெறுவர். அதேநேரத் தில், தமிழகத்தின் மற்ற பகுதிகளில் பா.ஜ.க. ஆட்கள் தோற்றுப்போவார்கள். இது, அண்ணாமலை தலைவர் பதவியில் நீடிப்பதற்கு எதிராக அமையும் என்பதுதான் பொன். ராதாகிருஷ்ணனின் கணக்கு.
அண்ணாமலைக்கும் நயினார் நாகேந்திரனுக்குமான மோதல் சென்ற சட்டமன்றத் தேர்தலின்போதே நடந்தது. நெல்லை மாவட்டத்தில், பா.ஜ.க. கட்டிடத் திறப்பு விழாவில், அண்ணாமலை, நயினார் நாகேந்திரனின் பெயரை போட மறுத்தார். உடனே நயினார் நாகேந்திரன், ‘நான் தி.மு.க.வுக்கு போக போகிறேன்’ என அண்ணாமலையை மிரட்ட, இருவரும் சமாதானம் அடைந்தார்கள். இப்பொழுது, அண்ணாமலை யின் தலைமை பலகீனமான தலைமை என நிரூபிக்க பொன். ராதா கிருஷ்ணன், நயினார் நாகேந்திரன், பா.ஜ.க. அமைப்புச் செயலாளர் கேசவ விநாயகம் ஆகியோர் முயற்சி செய்கிறார்கள். அதை எதிர்த்து அண்ணாமலை, போராடுகிறார். அதற்காக நயினார் நாகேந்திரனையே காட்டிக் கொடுத்து, அ.தி.மு.க.வுடன் சமரசம் என அறிவித்துள்ளார்.
இதற்கிடையே மத்தியில் உள்ள பா.ஜ.க. தலைமை, ‘தமிழகத்தில் தனியாக போட்டி யிட்டால் என்ன’ என கேள்வி எழுப்பி யுள்ளது. அதற்கு காரணம், தமிழக ஆர்.எஸ்.எஸ். பிரிவிலிருந்து சென்ற ஆலோசனைகள்தான். ‘ஒரே நாடு’ என்கிற ஆர். எஸ்.எஸ். பத்திரிகையின் ஆசிரியராக இருப்பவர் நம்பி நாராயணன். சமீபத்தில், அண்ணா மலை ஒரு பெண் நிர்வாகி வீட்டிற்கு உணவருந்தப் போனார். அண்ணாமலை யோடு சென்ற ஆர்.எஸ்.எஸ். அமைப்புச் செயலாளர் கேசவ விநாயகத்தை ஒரு ஆர்.எஸ்.எஸ். விழாவில், நம்பி நாராயணன், "நீங்கள் அண்ணாமலையுடன் சேர்ந்து செல்வது தவறு''’ என பிரச்சினை செய்துள் ளார். இந்த பிரச்சனையைத் தொடர்ந்து நம்பி நாராயணனை ஒருமையில் அண்ணாமலை திட்டி அவரை பா.ஜ.க. அலுவலகத்தில் இருந்து துரத்தி உள்ளார். மத்திய ஆர்.எஸ்.எஸ். நிர்வாகிகள் தலை யிட்டு நம்பி நாராயணனை காப்பாற்றி யுள்ளனர். அந்த நம்பி நாராயணன், அண்ணாமலைக்கு எதிராக தமிழகத்தில் பா.ஜ.க.வை எப்படி எல்லாம் அழிக்கிறார் கள் என ஒரு ரிப்போர்ட் அனுப்பியுள்ளார். அந்த ரிப்போர்ட்டில் பெரிதாக இடம் பிடித் திருப்பது அ.தி.மு.க.வுடன் அண்ணாமலை வைத்திருக்கக்கூடிய கூட்டணி, பா.ஜ.க.வை அழிக்கிறது என்பதுதான். எனவே, இந்த முறை உள்ளாட்சித் தேர்தலில் பா.ஜ.க. தனித்து போட்டியிட வேண்டும் என ஆர். எஸ்.எஸ். மேலிடம் அட்வைஸ் செய்துள்ளது.
பா.ஜ.க. கூட்டணி பற்றி அ.தி.மு.க. பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை. கன்னியாகுமரியிலும், நெல்லையிலும், கோவையிலும் கொங்கு மண்டல பகுதிகளி லும், பா.ஜ.க.விற்கு நிறைய இடம் வேண் டும் என அண்ணாமலை கோரிக்கை விடுத்துள்ளார். நயினார் நாகேந்திரனின் அ.தி.மு.க.வின் ஆண்மை பற்றிய பேச்சுக்கு பிறகு எடப்பாடியும், ஓ.பி.எஸ்.சும் மிகக் கடுமையாக பேசியிருக்கிறார்கள். அத்து டன், பா.ஜ.க.விற்கு நிறைய இடங்கள் கொடுக்க வேண்டும் என்றால், பா.ஜ.க. மத்திய அரசிடமிருந்து தேர்தல் நிதி வாங்க வேண்டும் என வலியுறுத்தி இருக்கிறார்கள். தேர்தல் நிதி விஷயத்தில், ஓ.கே. சொன்ன அண்ணாமலை, அந்த ஒரு கேரட்டைக் காட்டி அ.தி.மு.க.வை வளைக்கலாம் என பா.ஜ.க. வட்டாரங்களில் பேசி வருகிறார். இதற்கிடையே ஒட்டுமொத்த அ.தி.மு.க. விலேயே கோவை மாவட்டத்தில்தான், அ.தி.மு.க. பலமாக உள்ளாட்சித் தேர்தல் வேலைகளில் ஈடு பட்டுவருகிறது. இதற்காக ஒரு ஒன்றியச் செயலாளர் வீட்டில், லஞ்ச ஒழிப்புத் துறை நடத்திய சோதனையை அ.தி.மு.க.வின் சட்டமன்ற கொறடா வேலுமணி, நேரடியாகச் சென்று அரசியல் செய்து, அந்த ரெய்டை உள்ளாட்சித் தேர்தலோடு இணைத்து பரபரப்பாக்கினார்.
இப்படி கோவை, சேலம், ஈரோடு உட்பட கொங்கு மண்டல தொகுதிகளில் அ.தி.மு.க. எப்படி யாவது ஜெயிக்க வேண்டும் என மோதுகிறது. அதே கோவை மண்டல பகுதிகளில் எப்படியாவது வென்றுவிட வேண்டுமென அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் வியூகம் அமைத்து தி.மு.க. போட்டியிடுகிறது. கோவை பகுதியில் காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட்டு கள் தி.மு.க. கூட்டணி யில் இடங்களை கேட்கிறார்கள். தி.மு.க. கூட்டணி யில், கூட்டணி கட்சிகளில் யாருக்கு எவ்வளவு இடம் என் பதை அந்த மாவட்டச் செயலாளர் கள் மற்றும் மந்திரிகள் முடிவு செய்கிறார்கள். போட்டியிட்டு வென்றுவரும் கவுன்சிலர்களில் இருந்து யார் மேயர் ஆவார் என பதை முடிவு செய்யும் பொறுப்பை முதல்வர் மு.க. ஸ்டாலினிடம் தி.மு.க. கூட்டணி கட்சிகள் கொடுத் திருக்கின்றன. இப்படி, தேர்தல் முடிந்த பிறகுதான் யாருக்கு எவ்வளவு சீட், என்ன சீட் என்பது முடி வாகும் சூழ்நிலையில் தி.மு.க. கூட்டணி தனது காயை நகர்த்தியுள்ளது என்கிறார்கள் உடன்பிறப்புகள்.
நெருக்கடி தரும் பா.ஜ.க.வை கழற்றிவிடலாமா என அ.தி.மு.க.வும், தோழமைக் கட்சிகளுக்கு மிகக் குறைந்த பதவி இடங்கள் என ஆளுங்கட்சியான தி.மு.க.வும் வியூகம் வகுப்பதால், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் கூட்டணிகளுக்கு பெப்பேதான் என்கிறார்கள் கழகங்களின் மாவட்ட நிர்வாகிகள்.