திண்டுக்கல்! ஆளுங்கட்சியுடன் மல்லுக்கட்டும் எதிர்க்கட்சி
திண்டுக்கல் நகராட்சியை, மாநகராட்சியாக முன்னாள் முதல்வர் ஜெ. மாற்றியபின்பும்கூட, 60 வார்டுகளில் செயல்படவேண்டிய மாநகராட்சி, 48 வார்டுகளில் மட்டுமே செயல்பட்டு வருகிறது. இம்முறை திண்டுக்கல் மேயர் பதவி பெண்களுக்கு ஒதுக்கப்பட்டிருக்கிறது. அ.தி.மு.க.வைப் பொறுத்தவரை முன்னாள் அமைச்சர் சீனிவாசன் ஆதரவாளர்களும் முன்னாள் மேயர் மருதராஜ் ஆதரவாளர்களும் இரண்டு கோஷ்டிகளாகச் செயல்பட்டு வருகிறார்கள். மருதராஜ் தன் மகள் பொன்முத்துவை மேயராக்க வேண்டுமென்ற நோக்கத்தில் 11-வது வார்டில் களமிறக்கியிருக்கிறார். கூடவே தனது மகன் வீரமார்பன் என்ற பிரேமை துணை மேயராக்க 8-வது வார்டில் நிறுத்தியுள்ளார். தனது ஆதரவாளர்களையும் கணிசமாக நிறுத்தி, மருதராஜ் குடும்பமே கரன்சியோடு களத்தில் வலம்வருகிறது. முன்னாள் அமைச்சர் சீனிவாசனும் தனது ஆதரவாளர் பாரதிமுருகனின் மனைவி உமாதேவியை மேயராக்க வேண்டுமென்ற நோக்கத்தில் 31-வது வார்டில் களமிறக்கி யிருக்கிறார். தனது மகன் ராஜ்மோகனை துணை மேயராக்க 4-வது வார்டில் நிறுத்தியிருக்கிறார். ஆளுங்கட்சியைப் பொறுத்தவரை, 48 வார்டுகளில் கூட்டணிக் கட்சிக்கு 11 வார்டுகள் ஒதுக்கியதுபோக 37 வார்டுகளில் தி.மு.க. களம் காண்கிறது. வேட்பாளர்கள் அனைவருமே கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி மற்றும் மாவட்டச் செயலாளர் ஐ.பி.செந்தில்குமார் பரிந்துரைத்தவர்கள். மேயருக்கு இந்திராணி, சாந்தி, லாவண்யா வரிந்துகட்ட, "மேயர் யார்? துணை மேயர் யார்? என்பதை வெற்றி பெற்றபிறகு பார்த்துக்கொள்ளலாம், வார்டுகளை வெல்வதில் மும்முரம் காட்டுங்கள்'' என ஐ.பி. பகிரங்கமாகவே கூறியிருக்கிறார். 4-வது வார்டில் களமிறங்கியுள்ள நாகராஜ் தனது வேட்புமனு தாக்கலின்போது முன்னாள் முதல்வர் கலைஞர் வேடமணிந்துவந்தார். முதல்வர் ஸ்டாலின், நடிகர் ரஜினிகாந்த் போன்ற தலைவர்களின் வேடமணிந்து வந்து வாக்காளர்களை சந்தித்து பிரச்சாரம் செய்து வருகிறார். கடந்த 8 மாதங்களாக முதல்வர் ஸ்டாலின் செய்த திட்டங்கள், சலுகைகள் மற்றும் நிவாரண உதவிகளை பிட் நோட்டீசாக அடித்து வீடு வீடாக கொடுத்து வாக்கு கேட்டு வருவது ஆளுங்கட்சிக்கு சாதகமாக இருக்கிறது. கடைசி நேரத்தில் வாக்காளர்களைக் கவனிக்கவும் ஆளுங்கட்சி தயாராகி விட்டது. 17-வது வார்டில் பிரபல தொழிலதிபர் ரத்தினம் மகனான வக்கீல் வெங்கடேஷ் பணபலத்துடன் களமிறங்கி அசத்தல் பிரச்சாரம் மேற்கொண்டுவருகிறார். தி.மு.க. வேட்பாளர்களுக்கும் அ.தி.மு.க. வேட் பாளர்களுக்கும் இடையே கடும் போட்டி நிலவ, ஆளும்கட்சியின் வெற்றிக்கு பூட்டுப்போட முடியுமா என மல்லுக்கட்டுகிறது எதிர்க்கட்சி.
-சக்தி
ஈரோடு! குமுறிய தி.மு.க. மகளிரணியினர்!
ஈரோடு மாநகராட்சியில் மொத்தமுள்ள 60 வார்டுகளில் அ.தி.மு.க. 55 வார்டுகளில் போட்டியிட, தி.மு.க. 45 வார்டுகள் கூட்டணிக் கட்சிகள் 15 வார்டுகளிலும் போட்டியிடுகின்றன. பெண் மேயர் பொது என்பதால் தி.மு.க.வில் மேயர் வேட்பாளராக மாநகர செயலாளர் சுப்பிரமணி, தன் மனைவி நாகரத்தினத்தை வார்டு எண் 50-ல் நிறுத்தி யுள்ளதோடு அவரும் 56-வது வார்டில் தி.மு.க. சார்பில் களமிறங்குகிறார். 36-வது வார்டில் தி.மு.க. மாவட்ட துணைச் செயலாளர் செல்ல பொன்னி களம் காண்கிறார். அவரும் மேயர் ரேசில் உள்ளார். கூட்டணிக் கட்சிகளின் இட ஒதுக்கீடு, தி.மு.க. வேட்பாளர் தேர்வுகளில் அதிக மன உளைச்சலை ஏற்படுத்திவிடும் என்பதால் மாவட்ட நிர்வாகிகளையே பேச்சுவார்த்தையில் ஈடுபட வைத்தார் மா.செ.வும் அமைச்சருமான சு.முத்துச்சாமி. ஒரு கட்டத்தில் மாவட்ட நிர்வாகிகளால் சமாளிக்க முடியாமல் போக, கொரோனா தொற்று முழுமையாக குணமாகாத நிலையிலும் பேச்சுவார்த்தை நடத்தி சமாளித்தார். இருந்தும் தி.மு.க. போட்டி வேட்பாளர்கள் 18 வார்டுகளில் சுயேட்சையாக களமிறங்கியுள்ளனர். பெண் மேயர் என்பதால் மாவட்ட நிர்வாகிகள் எட்டுபேர் தங்களது மனைவிகளைப் போட்டியிட வைத்துள்ளனர். இதனால் கோப மான தி.மு.க. மகளிரணி நிர்வாகி கள், "உள்ளாட்சியில் பெண்கள் அதிக இடங்களில் பொறுப்புக்கு வரவேண்டும் என்பதுதான் அரசின் கொள்கை. குடும்பத்தில் பல பிரச்சனைகளையும் சமாளித்து கட்சிக்காக உழைத்து, போராட் டங்களில் கலந்துகொண்டு சிறை சென்று, கட்சிப் பணியில் ஈடு படும் மகளிர் அணியினருக்கு வாய்ப்பு தராமல், கட்சியிலுள்ள ஆண் நிர்வாகிகளின் மனைவி, மருமகள், மகள்களை வேட்பாள ராக்கியுள்ளது எந்த வகையில் நியாயம்?''’ என கொந்தளிக்க... அமைச்ச ரால் பதில் கூறமுடிய வில்லை. இறுதிவரை போராடி யும் ஈரோடு பா.ஜ.க.வுக்கு 20 வார்டுகளில் போட்டி யிட ஆட்கள் கிடைக்கவில்லை. சுயேட்சையாக போட்டியிட்ட சிலரிடம் பா.ஜ.க. சின்னம் தருவ தாகப் பேசியும் 40 வார்டுகளில்தான் பா.ஜ.க.வுக்கு ஆட்கள் கிடைத்தனர். அதேபோல் தலா 30 வார்டுகள் உள்ள கோபி, பவானி, சத்தியமங்க லம் நகராட்சிகளிலும் ஆட்கள் கிடைக்காததால் ஒவ்வொன்றிலும் ஐந்து, ஆறு, ஏழு பேர் மட்டுமே போட்டியிடுகிறார்கள். சத்தியமங்கலம் நகராட்சியில் தே.மு.தி.க. சார்பில் ஒருவர்கூட போட்டியிடவில்லை. மக்கள் நீதி மையம், நாம் தமிழர் கட்சி இரண்டும் மாநகராட்சி மற்றும் நகராட்சிகளில் ஒற்றை இலக்கில்தான் அவர்கள் கட்சிக்கு வேட்பாளரை நிறுத்தமுடிந்தது. கூடுதல் இடங்களை எதிர் பார்த்த கூட்டணிக் கட்சியினரிடம் உங்கள் வேட்பாளர் யார்? எவ்வளவு செலவு செய்வார்? என தி.மு.க. நிர்வாகிகள் கேட்க, காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகள் வாயடைத்துப் போயிருக்கின்றன. இதனால் ஈரோடு மாநகராட்சியில் 15 சீட் கேட்ட காங்கிரஸ் 5 இடங்களை யும் ஐந்து கேட்ட இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும் ஒன்று, இரண்டு வார்டு களுடன் அமைதியாகியிருக் கிறார்கள்.
-ஜீவாதங்கவேல்
தஞ்சை ஜகா வாங்கும் ஆண்ட கட்சி!
தஞ்சை மாநகராட்சியாக அறிவிக்கப்பட்ட பிறகு அருகிலுள்ள கிராம ஊராட்சிகளை இணைத்து வார்டுகளின் எண்ணிக்கையை உயர்த்த திட்டமிருந்தாலும் வல்லம் பேரூராட்சி உள்பட கிராம ஊராட்சி மக்கள் எதிர்ப்புக் காட்டியதால் வழக்கமான 51 வார்டுகளையே வரையறை செய்து தேர்தல் பணிகள் மும்முரமாக நடந்துவருகிறது. தி.மு.க.வில் தொடர்ந்து வேட்பாளர் தேர்வில் குழப்பம் ஏற்பட்டு வாய்ப்பு கிடைக்காத உ.பி.க்கள் சுயேட்சையாக களமிறங்கி உள்ளனர். மாஜி தி.மு.க. கவுன்சிலர் செல்வக்குமார் 32-வது வார்டை கேட்டு கட்சியில் விண்ணப்பித்திருந்த நிலையில்... தி.மு.க. வேட்பாளர் பட்டியலில் தனது பெயர் இல்லையென்பதால் 32-வது வார்டில் செல்வகுமாரும், 33-வது வார்டில் அவரது மனைவி வனிதாவும், 34-வது வார்டில் அவரது மகன் சக்கரவர்த்தியும் வேட்பு மனு தாக்கல் செய்து ஆளும் தி.மு.க.வுக்கு அழுத்தம் கொடுத்துள்ளனர். மேயர் வேட்பாளர்களாக அறியப்படும் சிலரை வார்டிலேயே தோற்கடிக்க வேண்டும் என்ற உள்ளடி வேலைகளும் தொடங்கியுள்ளது. அ.தி.மு.க. தரப்பில் மொத்த பொறுப்பும் ஒரத்தநாடு வைத்திலிங்கம் என்றாலும் ரொம்பவே அமைதியாக இருப்பதால் ர.ர.க்களிடம் சுணக்கம் தெரிகிறது. மேயர் வேட்பாளராவார் என்று எதிர்பார்க்கப்பட்ட ரமேஷ், புண்ணியமூர்த்தி ஆகியோரின் வேட்பு மனுக்கள் மாநகராட்சியில் கடை எடுத்து வாடகை பாக்கி வைத்திருந்ததால் தள்ளுபடியானது. மாஜி கவுன்சிலர் தங்கம்மாள் வேட்பு மனுவும் தள்ளுபடியானது தொண்டர்களுக்கு அதிர்ச்சியாக இருந்தாலும் வேட்பாளர் தரப்பில் எந்த ரியாக்சனும் இல்லை. நாம போட்டியிட்டால் எல்லா வேட்பாளர்களுக்கும் நாமதானே செலவு செய்யனும் என்று சத்தமில்லாமல் ஒதுங்கிவிட்டார் என்கிறார்கள் ர.ர.க்களே. தி.மு.க.விலிருந்து பா.ஜ.க. வந்த முரளிதரன் வெற்றிபெற்று மாநகரில் பிள்ளையார் சுழி போடுவார் என்று எதிர்பார்த்திருந்த நிலையில் பா.ஜ.க பொறுப்பாளர் சார்பில் சுயேட்சை யாக களமிறக்கப்பட்டவரே, "முரளிதரனுக்கு கிராமத்திலும் ஓட்டு இருக்கு, நகரிலும் இருக்கு'' என்று சொல்லி மனுவை தள்ளுபடி செய்ய வைத்துவிட்டார்..
-இரா.பகத்சிங்
சிவகாசி காங்கிரஸ் மேயர் கனவைக் கலைத்த தி.மு.க.!
நூற்றாண்டு விழா கண்ட சிவகாசி நகராட்சி மாநகராட்சியான பிறகு முதல் தேர்தலைச் சந்திக்கிறது. 100 வருடங்களில் 95 வருடங்கள் காங்கிரஸ் வசம் இருந்ததாகச் சொல்லப்படும் இந்நகராட்சியை, 2011-2016ல் மட்டும் அ.தி.மு.க. கைப்பற்றியிருந்தது. இந்நிலையில், "இம் மாநகராட்சி எங்களுக்கே சொந்தம்' என்ற பாரம்பரியச் சிந்தனை கதர்ச் சட்டைகள் மனதில் நிறைந்திருந்தது. தி.மு.க.வோ, அதுதான் காங்கிரஸுக்கென்று சிவகாசி தொகுதி எம்.எல்.ஏ. இருக்கிறாரே! மாநகராட்சியும் உங்களுக்கேவா? தமிழ்நாட்டு வாக்கு வங்கில நாங்க 37.7 சதவீதம், நீங்க 4.28 சதவீதம்’ என்று கணக்கு பார்த்து, 48 வார்டுகளில் 32-ஐ எடுத்துக்கொண்டு, 12 வார்டுகளை மட்டுமே காங்கிரஸுக்கு ஒதுக்கியிருக்கிறது. அதனால், காங்கிரஸ் மேயர் கனவு கச்சிதமாக கலைக்கப்பட்டது. ஆனாலும் கதர்ச் சட்டைகள், சிவகாசி மாநகராட்சி நிலவரமே வேறு. நாடார் மற்றும் நாயக்கர் வாக்கு வங்கி கணிசமாக உள்ளது. தி.மு.க.வைக் காட்டிலும் பலமாக உள்ள காங்கிரஸ் பெல்ட் இது. முன்னாள் நகர்மன்றத்தலைவர் ‘சபையர்’ ஞானசேகரன், காங்கிரஸிலிருந்து தி.மு.க. பக்கம் சென்ற பிறகு, அவர்மூலம் மா.செ. தங்கம் தென்னரசு வழிகாட்டலில், காங்கிரஸை கபளீகரம் செய்யும் வேலையைத் தொடங்கிவிட்டனர். மாணிக்கம் தாகூர் எம்.பி. பாராளுமன்றப் பணியில் பிசியாக இருக்கிறார். விருதுநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் ராஜா சொக்கரின் செயல்பாடு பெயரளவிலேயே இருக்கிறது. சட்டமன்றத் தேர்தலில் சிவகாசியிலும் திருத்தங்கல்லிலும் பல்லாயிரம் வாக்குகள் லீடிங் பெற்ற அசோகன் எம்.எல்.ஏ.வும், தி.மு.க.வினரின் தொடர்ச்சியான தலையீட்டால் திணறவே செய்கிறார். இதில் கொடுமை என்னவென்றால், ராஜேந் திர பாலாஜியுடனான லோக்கல் அட்ஜஸ்ட் மென்ட்டில் திருத்தங்கல்லில் தோற்பதற்கென்றே பலவீனமான திமுக வேட்பாளர்களைச் சில வார்டுகளில் நிறுத்தியிருக்கின்றனர். கணக்கை சரியாகச் சொல்வ தென்றால், மேயர் நாற்காலியில் அ.தி.மு.க. அமர்ந்தாலும்கூட பரவாயில்லை, சிவகாசி தொகுதி காங்கிரஸ் பெல்ட் என்ற நிலையை அடியோடு மாற்றிவிட வேண்டுமென்ற திட்டத்தோடு உள்ளனர். இப்படி நடந்துகொண் டால், வாக்களிக்கும்போது கூட்டணி தர்மம் கேள்விக்குறியாவதை யாரால் தடுக்க முடியும்?’ எனக் கேள்வி எழுப்புகின்றனர். உள்ளாட்சித் தேர்தல் என்றால் உள்ளடி இல்லாமலா?
-ராம்கி
புதுக்கோட்டை சாபம் விட்ட தி.மு.க. தொண்டர்!
புதுக்கோட்டை நகராட்சித் தேர்தலில் கடந்த காலங்களில் அ.தி.மு.க.வின் கையே ஓங்கியிருந்தது. மாஜி விஜயபாஸ்கர் சாதுரியமாக மற்ற வேட்பாளர்களை வேட்பு மனு தாக்கல் செய்ய விடாமல், வெற்றியை நிர்ணயித்து வைத்திருந்தார். ஆனால் தற்போதைய தேர்தலில் அவரது கை கொஞ்சம் அடங்கியே கிடக்கிறது. வாய்ப்புக் கேட்டுப் போனவர்களிடம், "என்னிடம் செலவுக்கு பணம் எதிர்பார்க்கக்கூடாது, ஓட்டு கேட்க வரமாட்டேன்'' என்று சொல்லியே அனுப்பி வைத்திருக்கிறார். ஆனாலும் வேட்பாளர் தேர்வு ஓரளவு சரியாக உள்ளதாகவே ர.ர.க்கள் கூறுகிறார்கள். சட்டமன்றத் தேர்தலின் போது கட்சியிலிருந்து நீக்கப்பட்ட நபர் தற்போது சுயேட்சையாக நின்றாலும் வெற்றி பெறுவார் என்பதையறிந்து அவரை மீண்டும் கட்சியில் சேர்த்து அ.தி.மு.க வேட்பாளர் ஆக்கிவிட்டார். தி.மு.க.வில்தான் பெரிய குழப்பம். கட்சி நிர்வாகிகள் பலர் சுயேட்சையாக களமிறங்கியுள்ள னர். தேர்தல் பணிகள் தொடங்கியதும் ஒவ்வொரு வார்டுக்கும் விருப்ப மனு வாங்கி நேர்காணல் நடத்தி 2 பேர் கொண்ட பட்டியலை நகரக் கழகம் கொடுத்திருந்த நிலையில் தேர்தல் பொறுப்பாளர் அமைச்சர் ரகுபதி தயாரித்து வெளியிட்டுள்ள பட்டியலில் புதிய நபர்களும் குற்றப்பின்னணி கொண்ட சிலரும் உள்ளதாக கூறும் உ.பி.க்கள், இவர்களால் கட்சிக்குதான் பின்னடைவு என்கின்றனர். கூட்டணிகளுக்கான பங்கீடு முடிந்த நிலையில் சி.பி.எம்.முக்கு ஒதுக்கப்பட்ட ஒரே வார்டையும் காங்கிரஸ் கட்சிக்கு வாங்கிக் கொடுத்துவிட்டார் ரகுபதி. இதனால் வேறு வார்டு வேண்டாம் என்று சொல்லிவிட்டுச் சென்றுவிட்டனர். அதேபோல தி.மு.க. வெற்றிபெற்றிருந்த வார்டை காங்கிரஸ் கட்சிக்கு கொடுத்துவிட்டதாக கூறி ரகுபதி வீட்டு வாசலில் தி.மு.க தொண்டரொருவர் வயிறு எரிஞ்சு சொல்றேன், காங்கிரஸ் ஜெயிக்காது என்று சாபமிட்டுச் சென்றுள்ளார். வேட்பாளரைத் தேர்வு செய்து அறிவித்த தில் குழறுபடிகள் உள்ளது. இதற்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று நகர கழக நிர்வாகிகள் தலைமைக்கு கடிதம் எழுதியனுப்பியுள்ளனர். யாரையெல் லாம் நகர கழகம் வேட்பாளராக்க பரிந்துரை செய்திருந்ததோ அவர்கள் சுயேட்சையாகக் களமிறங்கி யுள்ளனர்.
-இரா.பகத்சிங்
சிவகங்கை அமைச்சர் தொகுதியில் அன்னபோஸ்டாக வெற்றி பெற்ற அ.தி.மு.க.!
சட்டமன்ற உறுப்பினரும், ஊரக வளர்ச்சித் துறை அமைச்சருமான பெரியகருப்பனின் திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதியில், மாற்றுக் கட்சி வேட்பாளருக்கு எதிராக கட்சியின் வேட் பாளரை களமிறக்காமல் அ.தி.மு.க.வினை அன்ன போஸ்டாக வெற்றிபெற வைத்துள்ளனர் உள்ளூர் தி.மு.க.வினர். இது அமைச்சர் காதுக்கு செல்ல, கட்சியினர் மேல் கடுங்கொந்தளிப்பில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சிவகங்கை மாவட் டம், திருப்புத்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்டது சாக் கோட்டை ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்த 15 வார்டுகளைக் கொண்ட பள்ளத்தூர் பேரூராட்சி. இதிலுள்ள 8வது வார்டு கவுன்சிலருக்கான வேட்பாளரில் அ.தி.மு.க. சார்பில் களமிறங்கினார் தெய்வானை என்பவர். ஆனால் வேட்பு மனு தாக்கலின் இறுதி நாளது வரை தி.மு.க. சார்பில் யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை. இதே வேளையில், நீங்கள் அங்கு போட்டியிடவில்லை என்றால், இட பங்கீட்டு அடிப்படையிலாவது எங்களுக்கு இந்த வார்டை ஒதுக்குங்கள் என அமைச்சர் பெரியகருப் பனை காங்கிரசார் அணுக, அவர் ஏனோ, இதனை பெரிதாக கண்டுகொள்ளவில்லை. பள்ளத்தூர் பேரூராட்சியின் நகர அ.தி.மு.க. செயலாளர் மாணிக்கம் உள்ளூர் தி.மு.க.வினரிடம் பேசி முடிக்க, போட்டியில்லாமல் அங்கு அ.தி.மு.க. வென்றுவிட் டது. அ.தி.மு.க.வினரின் முதல் வெற்றி என அ.தி. மு.க. ஆடிப் பாடிய வேளையில் இது தகவலாக அமைச்சரிடம் சென்றுள்ளது. "ஏய்...! அங்க நம்ம கட்சி சார்பாக ஆளை நிறுத்தலை யேங்கின்றதை மறைச்சிட்டீங்களே? தேர்தல் முடியட்டும், அத்தனை பேருக்கும் ஆப்பு ரெடி'' என அமைச்சர் கொந்தளிக்க... கட்சித் தலைமை வரை சென்றுள்ளது இந்த விவகாரம்.
-நாகேந்திரன்