மயிலாடுதுறை மாவட்ட தி.மு.க.வில் தொடர்ந்துவரும் கோஷ்டி பூசல் வீதிக்குவந்து அடித்துக்கொள்ளும் அளவிற்கு சென்றிருப்பது உடன்பிறப்புகளை மட்டுமின்றி பொதுமக்களையும் முகம்சுளிக்கச் செய்துள்ளது.
மயிலாடுதுறை தி.மு.க. மாவட்டச் செயலாளராக இருப்பவர் நிவேதாமுருகன். பூம்புகார் சட்டமன்ற உறுப்பினராகவும் இருக்கிறார். இவரது ஆதரவாளர்களாகவும், நெருக்கமாகவும் இருந்த தஞ்சை மண்டல தொழில்நுட்ப அணி செயலாளர் ஸ்ரீதர், மாவட்ட துணைச்செயலாளர் ஞானவேலன், மயிலாடுதுறை வடக்கு மற்றும் கிழக்கு ஒன்றியச் செயலாளர்களான இளையபெருமாள், முருகுமணி, அரசு வழக்கறிஞர் சேயோன் உள்ளிட்ட சிலர் முன்னாள் மாவட்டச் செயலாளர் கல்யாணத்தின் மகனும் முன்னாள் குத்தாலம் எம்.எல் .ஏ.வுமான அன்பழகனை இணைத்துக்கொண்டு சென்னையில் முகாமிட்டு தலைமையிடம் தொடர்ந்து புகார் வாசித்துவருகின்றனர். அதற்குப் பதிலடி கொடுப்பதாக நினைத்துக்கொண்டு நிவேதாமுருகன் தனது ஆதரவாளர்களைத் திரட்டிக்கொண்டு அவ்வப்போது தலைமையிடம் பதில் புகாரளித்து தலைமையின் எரிச்சலுக்கு ஆளாகிவருகிறார்.
விஷயம் தெரியவந்த தி.மு.க. தலைமை இரு தரப்பையும் அழைத்து சமாதானம் செய்துவைத்து, தேர்தல் பணிகளை கவனிக்கச் சொல்லி கண்டித்து அனுப்பியது. இந்தச் சூழலில் தி.மு.க. தலைவர் ஸ்டாலின் தலைமையில் சென்னையில் நடந்த மாவட்டச் செயலாளர் கூட்டத்திற்கு பிறகு மாவட்ட அலுவலகத்தில் நடந்த செயற்குழுக் கூட்டத்தில் இரு தரப்பும் மீண்டும் மோதிக்கொண்டு சாலைக்கேவந்து அடித்துக்கொண்டது, ஒட்டுமொத்த மாவட்டத்தையும் திரும்பிப்பார்க்க செய்துவிட்டது. இந்த விவகாரம் தி.மு.க. தலைமையை ரொம்பவே டென்ஷனாக்கியிருக்கிறது.
மயிலாடுதுறை நீதிமன்ற சாலையிலுள்ள தி.மு.க. மாவட்ட அலுவலகத்தில் மாவட்டக் குழுக் கூட்டம் மாவட்டச் செயலாளர் நிவேதா முருகன் தலைமையில் நடந்தது. சீர்காழி எம்.எல்.ஏ. பன்னீர்செல்வம், முன்னாள் மாவட்டச் செயலாளர் குத்தாலம் கல்யாணம், மாநில கொள்கைபரப்பு துணைச்செயலாளர் அன்பழகன், மாவட்ட துணைச்செயலாளர் ஞானவேலன், ஸ்ரீதர் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர். ஒவ்வொருவரும் அவரவர் கருத்தைக் கூறிக்கொண்டிருந்தனர். நிவேதாமுருகன் ஒப்பந்தப் பணிகளை தி.மு.க. நிர்வாகிகளுக்குக் கொடுப்பதில்லை, அ.தி.மு.க.வினருக்கும், உங்க சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கும் மட்டுமே கொடுக்கிறீங்க, கட்சிக்காரர்களை மதிப்பதில்லை, சாதி பார்த்துப் பழகுறீங்க, உங்க மனைவி ஒருபடி மேலேசென்று அவர் என்ன சாதி, நம்ம ஆளா என்று கேட்கிறார் என நிர்வாகிகள் பலரும் அடுத்தடுத்த குற்றச்சாட்டுகளைக் கூறினர்.
இந்த சூழலில் மண்டல தொழில்நுட்ப அணிச் செயலாளர் ஸ்ரீதர் எழுந்து, “"என்னை நீங்க எதுக்கு பொறுப்புல இருந்து நீக்கணும்னு அமைச்சர் மெய்யநாத னிடம் சொன்னீங்க, தலைமைக்கு புகார் கொடுத்தீங்க, நான் சும்மாவிடமாட்டேன்'' என ஆத்திரத்தோடு ஆவேசப்பட, "நீ மாவட்டம் முழுக்க என் பெயரைச் சொல்லி வேலை வாங்கித்தருவதா பணம் வாங்கியிருக்க. எல்லாரும் என் வீட்டுக்கு வர்றாங்க... அதைத்தான் அமைச்சரிடம் சொன்னேன்''’என்று நிவேதாமுருகன் பதில்சொல்ல, அப்போது மாவட்டச் செயலாளரின் ஆதரவாளரும் மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளருமான வெடி பாலமுருகன், “"மாவட்டச் செயலாள ரையே மிரட்டுற அளவுக்கு வளர்ந்துட்டிங்களா? இனி நீங்களா நாங்களான்னு பார்த்துடுவோம்''’என்று ஆவேசமாகக் கத்த... அருகிலிருந்த குத்தாலம் அன்பழகன், பாலமுருகனின் சட்டையைப் பிடித்து அறைவிட, பதிலுக்கு... பாலமுருகன் பிளாஸ்டிக் சேரை தூக்கி அன்பழகன் மீது அடித்ததாகக் கூறப்படுகிறது.
. கமிட்டி கூட்டம் நடைபெற்ற கட்டடத்திற்கு அருகில் இருதரப்பும் கட்சிக்கு தொடர்பில்லாத ரவுடி கும்பல்களை வரவழைத்திருந்தது பிறகுதான் தெரிந்தது. கூட்டம் நடைபெற்ற அரங்கின் வாயிற்கதவு இழுத்து மூடப்பட்டதால் சத்தம் வெளியில் கேட்காமலிருந்தது.
இதற்கிடையே மயிலாடுதுறை கிழக்கு ஒன்றியச் செயலாளர் முருகமணி வேட்டியில் ரத்தக்கறையோடு இறங்கி வெளியில் வந்ததைப் பார்த்த அனைவருமே உள்ளே பிரச்சினை பெரிதாகவே நடந்திருக்கிறது எனக் கணித்தனர்.
மாவட்ட தி.மு.க.வின் இன்றைய நிலையைக் கவலையோடு கவனித்துவரும் தி.மு.க. மூத்த முன்னோடி ஒருவர், "எல்லா மாவட்டத்திலயும், எல்லா கட்சியிலயும் கோஷ்டிப்பூசல் இல்லாமல் இல்லை. ஆனா இந்த மாவட்டத்துல இருக்கிறது கோஷ்டிப்பூசலே இல்லை. ஈகோ பிரச்சினைதான், சில்லரை விஷயங்களை ஊதி ஊதிப் பெரிதாக்கி இன்று வீதிக்கு வந்து அடித்துக்கொள்ளும் அளவுக்கு கொண்டுவந்து நிறுத்திட்டாங்க. நிவேதாமுருகன் மீதும் ஏகப்பட்ட குற்றச்சாட்டுகள் இருக்கு. நிவேதாமுருகன், தான் சார்ந்த சமூகத்தவருக்கும், மாற்றுக் கட்சியினர் சிலருக்கும், புதிதாக வந்தவர்களுக்கும் முக்கியத்துவம் தருவதை கூடவே இருந்தவர்களால் ஜீரணிக்க முடியாமல் ஓரணியா சேர்ந்து அவரை மாற்றவேண்டும் என தொடர்ந்து முயற்சிக்கிறாங்க. மயிலாடுதுறையின் பொறுப்பு அமைச்சர் மெய்யநாதனோ, அவருக்கு முக்கியத்துவம் கிடைக்காமல் போய்விடுமோ என்று கோஷ்டிப் பூசலை முடிவுக்கு கொண்டுவரத் தயங்குகிறார்''’ என வேதனையோடு கூறி முடித்தார்.
இதுகுறித்து மாவட்டச் செயலாளர் நிவேதாமுருகனிடம் கேட்டோம்... "நான் என்ன தவறு செஞ்சேன்னு இவங்கள சொல்லச் சொல்லுங்க. கட்சிக்காக இடம் வாங்கிட்டேன். எனக்கு கட்டப்பஞ்சாயத்து தெரியாது, காவல்நிலையத்தில் அடாவடி செய்யத் தெரியாது, எனக்கு எதிரா இருக்கிறவங்களிடமும் சகஜமா பழகியதால் இந்த நிலைமை. தலைமை என்ன முடிவெடுத்தாலும் நான் கட்டுப்படுவேன். மூன்று தொகுதிகளையும் வெல்வதே என் நோக்கம்''’என்கிறார்.
உச்சகட்ட மோதலில் இருக்கும் மயிலாடுதுறை தி.மு.க. பிரச்சினையை... முடிவுக்கு கொண்டுவருமா தலைமை?