Skip to main content

மாவலி பதில்கள்

மு.செ.மு.புகாரி, சித்தார்கோட்டை

புதுவை முதல்வரின் பிறந்தநாளில் கருத்துமாச்சரியங்களை மறந்து, சைக்கிளில் சென்று அவரை நேரில் சந்தித்து வாழ்த்தியிருக்கிறாரே துணை ஆளுநர் கிரண்பேடி?

புதுவை கிரண்பேடி சைக்கிளில் செல்வார். தமிழ்நாட்டு புரோகித், கவர்னர் மாளிகை உணவுக்கு பில் கொடுப்பார். அதிகார மீறல்கள் தெரியக்கூடாது என்றால் எளிமை என்னும் ஒப்பனை அவசியமாகிறது.

லட்சுமிகாந்தம், வேலூர்(நாமக்கல்)

இனி எதிர்காலத்தில் தமிழ்நாட்டில் எந்த நிறுவனத்தினரும் தொழில் தொடங்கமாட்டார்கள்தானே?

தொழில் தொடங்குவதற்கான சட்டங்களையும் விதிமுறைகளையும் கடைப்பிடிப்பதில் ஆட்சியாளர்கள் சரியாக இருந்தால், உண்மையாகவே தமிழ்நாட்டில் தொழில் வளர்ச்சிக்காகவும் வேலைவாய்ப்பு அளிக்கவும் தேவையான ஆலைகள் அமையும். புரிந்துணர்வு ஒப்பந்தம் போடும்போது ஆள்வோருக்கும் முதலாளிகளுக்கும் மட்டுமே புரியும்படியான சில ரகசிய ஒப்பந்தங்கள் இருந்தால், அது வெளிப்படும்போது சிக்கல்தான்.

பி.மணி, குப்பம், சித்தூர்

பாக்யராஜ் திரைப்படங்கள் -டி.ராஜேந்தர் திரைப்படங்கள்: ஒப்பிடுக.

காலம் கடந்த ஒப்பீடு என்றாலும், இருவருமே தனித்துவமான பன்முகத் திறமைகளைக் கொண்டவர்கள். பாக்யராஜ் படங்களின் பலம் திரைக்கதை. அதனால் இப்போதும் பார்க்கலாம். ராஜேந்தர் படத்தின் பலம், பாடல்கள். அதனை எப்போதும் கேட்கலாம்.

கே.முரளி, புதுப்பெருங்களத்தூர், சென்னை-63

முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி ஆர்.எஸ்.எஸ். நடத்தும் விழாவில் கலந்துகொள்வது சர்ச்சையாகியுள்ளதே?

பா.ஜ.க. வளர்வதற்கு முன்பு இந்தியா முழுவதும் செல்வாக்காக இருந்த கட்சி, காங்கிரஸ்தான். அப்போது இந்துத்வா -பழமைவாத மனநிலை கொண்ட உயர்சாதிக்காரர்கள் பலர் காங்கிரசில் முக்கியத்துவம் பெற்றிருந்தார்கள். நேரு, இந்திரா போன்ற ஆளுமைமிக்க தலைவர்கள் இருந்த காரணத்தால், எல்லோரும் மதச்சார்பின்மை ஆடையை உடுத்திக்கொண்டார்கள். கால மாற்றத்தில் நேரடி இந்துத்வா கட்சியான பா.ஜ.க. செல்வாக்கு பெற்றுவிட்டது. இருந்தாலும் பழமைவாதப் பிடிப்பு கொண்ட காங்கிரசார் அவ்வப்போது வெளிப்படுகிறார்கள். மதச்சார்பின்மை கொள்கை கொண்ட நாட்டின் குடியரசுத் தலைவர் பதவியையே வகித்தாலும் அவர்களின் உள்ளம் வெளிப்பட்டுவிடுகிறது. கொலை வழக்கில் ஜெயேந்திரர் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து பா.ஜ.க. நடத்திய தர்ணாவில் பங்கேற்றவர் முன்னாள் ஜனாதிபதி ஆர்.வெங்கட்ராமன். அவரும் காங்கிரஸ்காரர்தான். அவரைப் போலவே முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, ஆர்.எஸ்.எஸ். அழைப்பை ஏற்றிருக்கிறார்.

மா.சந்திரசேகர், மேட்டுமகாதானபுரம்

பாகிஸ்தானில் இந்து வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறதாமே?

பாகிஸ்தானில் முஸ்லிம் வாக்காளர்கள்தான் எப்போதும் அதிகம். அங்குள்ள சிறுபான்மையினரில் அதிகமாக இருப்பவர்கள் இந்துக்கள். அந்த வாக்குபலம்தான் புள்ளிவிவரமாகக் காட்டப்பட்டுள்ளது. இந்துக்களின் திருமண முறையையும் பாகிஸ்தான் அரசு அங்கீகரித்துள்ளது. இந்து மதத்தைச் சார்ந்தவர்கள் தேர்தல் களம் காணும் சூழலும் அங்கு உருவாகியுள்ளது. ஆனாலும், பாகிஸ்தானின் அரசியல் ஸ்திரத்தன்மை அடிக்கடி தலைகீழாக மாறக்கூடியது. ஜனநாயகமும் சர்வாதிகாரமும் அந்த மண்ணில் மாறி, மாறி ஆட்சி செய்யும் இரட்டைப் பிறவிகள்.

திருச்சிற்றம்பலம் சுரேஷ், திருக்கண்டேஸ்வரம்

தேர்தல் வந்தால் மக்கள் இனி எப்படி ஓட்டுப் போடணும்?

அவர்கள் எப்போதும் "நாணய'த்துடன் வாக்களிப்பார்கள்.

------------------------

ஆன்மிக அரசியல்

mavalianswers

மேட்டுப்பாளையம் மனோகர், கோவை-14

இறை வழிபாட்டுக்கு யானைகளைப் பயன்படுத்துவது, விலங்கு வதை செயல்பாட்டிற்கு அப்பாற்பட்டதா?

இயற்கையையும் விலங்குகளையும் வணங்கியவர்கள்தான் நம்முடைய முன்னோர்கள். அதற்குச் சிறந்த உதாரணம், தமிழர் திருநாளான பொங்கல் விழா. தங்கள் உழவுத் தொழிலுக்கு துணை நிற்கும் சூரியனை வணங்கி, கால்நடைகளுக்குப் படையலிடுவார்கள். ஒவ்வொரு மண்ணுக்குமான பழக்க வழக்கங்கள், பண்பாடாக நிலைபெற்று, அதுவே பின்னர் மதம் என உருக்கொள்ளத் தொடங்கியது. குலசாமி கோவில்களில் கிடாவெட்டு, சிவன் -பெருமாள் கோவில்களில் பொங்கல் -புளியோதரை, தேவாலயங்களில் அப்பம் -திராட்சை ரசம், பள்ளிவாசல்களில் பிரியாணி என அவரவர் பழக்கத்திற்கேற்பவே அவரவர் கடவுளுக்கான வணக்கம் அமைகிறது. கோவில்களுக்கும் அரண்மனைகளுக்கும் வரக்கூடியவர்கள் பிரமிக்கும் வகையில் யானைகளைப் பயன்படுத்துவது என்பது இந்தியாவில் நீண்டகால வழக்கம்.

யானை எப்போதுமே மனிதர்களுக்கு ஆச்சரியத்தைத் தரக்கூடிய விலங்கு. இந்து மதத்தில் அதனை கஜமுகனான பிள்ளையாரின் வடிவில் பார்க்கும் வழக்கம் உள்ளது. அதனால் கோவில் யானைகளையும் தெய்வமாகப் பார்க்கிறார்கள் மக்கள். ஆனால், யானையின் உடல்நிலையையும் மனநிலையையும் கவனிக்க வேண்டிய கோவில் நிர்வாகத்தினர் அலட்சியமாக இருக்கும்போது யானைகள் துன்பப்படுகின்றன. உடல்நலம் பாதிக்கப்பட்ட திருவண்ணாமலை கோவில் யானை ருக்குவைக் கருணைக் கொலை செய்ய அனுமதி கோரப்பட்டது. பின்னர் அது தானாகவே இறந்தது. அண்மையில் திருச்சி -சமயபுரம் கோவில் யானை மசினி, ஆத்திரம் கொண்டு பாகனை மிதித்துக் கொன்றது. கேரளாவில் கோவில் யானைகளுக்கு அடிக்கடி மதம் பிடிப்பதும் பாகன்கள் மிதிபடுவதும் வழக்கம். "மதம்' பிடிப்பது ஆபத்து என்பதை கொடூரமான முறையில் மனிதர்களுக்கு உணர்த்திக் கொண்டே இருக்கின்றன யானைகள்.

 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

இவ்விதழின் கட்டுரைகள்