Skip to main content

மாவலி பதில்கள்...

mavali

 


அயன்புரம் த.சத்தியநாராயணன், சென்னை -72
காந்திஜியின் நவகாளி யாத்திரை பற்றி?

அவரது அகிம்சை தத்துவத்தின் வலிமைக்கு மிகப்பெரிய சோதனைக்களமாக அமைந்ததில் நவகாளிக்கு முக்கிய பங்கு உண்டு. பாகிஸ்தான் பிரிவினைக்கான கோரிக்கை வலுப்பெற்று வந்த வேளையில் 1946#ஆம் ஆண்டு வங்காளத்தில் மிகப்பெரிய அளவில் மதக்கலவரம் இருந்தது. அங்கு பெரும்பான்மையாக இருந்த முஸ்லிம்கள், தங்கள் பகுதிகளில் இருந்த இந்துக்கள் மீது கடுமையான தாக்குதலை நடத்தினர். மதவெறிக்கு மனித உயிர்கள் பறிபோயின. இதன் எதிர்வினையாக, பீகார் மாநிலத்தில் பெரும்பான்மையாக இருந்த இந்துக்கள், தங்கள் பகுதியிலிருந்த முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடத்தினர். உயிர்ப்பலிகள் அதிகரித்தன. இந்தப் பதற்றமான நிலையில்தான், நவகாளிக்கு நடைப்பயணம் மேற்கொண்டார் காந்தி. வன்முறை  நெருப்பு பரவிய கிராமங்களில் தனது அன்பு#அகிம்சை#அமைதி ஆகிய தண்ணீரைத் தெளித்தார். எதிர்ப்புகளும் விமர்சனங்களும் வெளிப்பட்டபோதும் அவர் கவலைப்படவில்லை. ஒவ்வொரு கிராமத்திற்கும் சென்று அங்குள்ள மக்களிடம் உரையாடினார். கலவரத்தைக் கைவிட வலியுறுத்தினார். மதவெறியால் தூண்டிவிடப்பட்ட கலவரம் முழுமையாக நிற்காவிட்டாலும் அதன் வேகத்தைத் தணித்து உயிர்ப்பலிகளைக் கட்டுப்படுத்தியதில் காந்தியின் நவகாளி யாத்திரைக்கு முக்கிய பங்கு உண்டு. அதுபோலவே, பீகாரில் கலவரம் நடந்த பகுதிகளிலும் நடைப்பயணம் மேற்கொண்டு அமைதியை நிலைநாட்ட முயன்றார் காந்தி. அவரது நவகாளி யாத்திரையின்போது உடன் சென்று, அந்த நிகழ்வுகளைத் தமிழகப் பத்திரிகையாளர் சாவி விரிவாகப் பதிவு செய்துள்ளார். பாகிஸ்தான் கோரிக்கைக்கு ஆதரவாக எந்த வங்காளத்தில் மதமோதல் வெடித்ததோ, அதே வங்காளத்தில் அதன்பின் 25 ஆண்டுகள் கழித்து, பாகிஸ்தானிலிருந்து பிரிவதற்கானக் கோரிக்கையும் போராட்டமும் வன்முறையும் பரவி, யுத்தமாக மாறியது. அதன் விளைவு, பங்களாதேஷ் என்ற நாடு பிறந்தது. 

 

திராதி, துடியலூர்

பள்ளி ஆசிரியர்கள் எங்களைவிட அதிகம் சம்பாதிக்கிறார்கள் என உத்திரப்பிரதேச எம்.பி. ஹரீஸ் திவேதி புலம்புகிறாரே?

ஆசிரியர் தனது பள்ளிக்குப் போகிற நாட்களில் பாதியளவு கூட எம்.பி.க்கள் நாடாளுமன்றத்துக்குப் போவதில்லை என்பதையும் அவர் சேர்த்துக்கொள்ளட்டும்.
 

மு.ரா.பாலாஜி கோலார் தங்கவயல்

ஜெ.வுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டபோது காவிரி பிரச்சினை தொடர்பாக மருத்துவமனையில் நடந்த ஆலோசனைக் கூட்டம், திருப்பரங்குன்றம் வேட்புமனு படிவத்தில் கைரேகை வைத்தது பற்றியெல்லாம் நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை கமிஷன் கேள்வி எழுப்பியுள்ளதா?

மருத்துவமனைக்கு என்ன நிலையில் ஜெயலலிதா கொண்டு செல்லப்பட்டார், அந்த நிலை ஏற்பட என்ன காரணம், போயஸ் கார்டன் வீட்டில் ஆண்டுக்கணக்கில் அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை என்ன, 75 நாட்கள் அப்பல்லோவில் அளிக்கப்பட்ட சிகிச்சை விவரங்கள் என்ன என்பது பற்றிய கேள்விகளுக்கே முன்னுக்குப் பின் முரணான தகவல்கள் வெளியாகி ஆணையத்தையும் மக்களையும்  அதிரவைத்துள்ள நிலையில், ஆலோசனை-கைரேகை என்பதெல்லாம் வேற லெவல். 
 

அ.யாழினி பர்வதம், சென்னை-72

கவர்னர் உரையின்போது சட்டப்பேரவையில் சபாநாயகருக்கு இணையாக கவர்னரின் செயலாளருக்கு இருக்கை அமைக்கப்பட்டிருந்ததை சுட்டிக்காட்டி குற்றம்சாட்டியுள்ளாரே துரைமுருகன்?


 

பேரவையின் மரபுப்படியும் சட்டவிதிகளின்படியும் முதல்வரைவிட பேரவைmavaliத் தலைவரான சபாநாயகரே அதிகாரம் மிக்கவர். அவருக்கு இணையாக யாரும் இருக்க முடியாது. ஆளுநர் உரை படிக்கப்படும்போது சபாநாயகர் இருக்கையில் ஆளுநர் இருப்பார். அருகில் சபாநாயகர் இருப்பார்.

அவரது இருக்கைக்கு இணையாக ஆளுநரின் செயலாளருக்கு இருக்கை அமைக்கப்பட்டதும், அதற்கு சபாநாயகர், முதல்வர் உள்ளிட்டோர் எதிர்ப்பின்றி அமர்ந்திருந்ததும் ஜனநாயகத்தைக் கேலிக்கூத்தாக்கிவிட்டது. ஏற்கனவே ஜெ. ஆட்சியின்போது துணை சபாநாயகர் இருக்கையில் சசிகலா உட்கார வைக்கப்பட்டார். அப்போதிருந்தே அ.தி.மு.க. அரசு சபை மரபுகளைக் காற்றில் பறக்க விடத் தொடங்கிவிட்டது. 

 

மா.சந்திரசேகர், மேட்டுமகாதானபுரம்

"இந்தியக் கல்வியில் இலக்கியம் தனது இடத்தை இழந்துகொண்டிருக்கிறது' என்கிறாரே கவிப்பேரரசு வைரமுத்து?


கல்வி நிலையம் சார்ந்த  பாடப்புத்தகங்களில்#பயிற்சிகளில்#ஆய்வுகளில் முழுமையான இலக்கியத்தையும் வரலாற்றையும் அறிய முடியாது என்பது பச்சையப்பன் கல்லூரியின் முன்னாள் மாணவரான கவிஞருக்குத் தெரியும். கல்வி நிலையங்களில் கற்றுத் தரப்படுவதற்கு அப்பால் என்ன இருக்கிறது என்பதை அறிய முற்படுபவர்களே வைரமுத்து போன்ற சாதனையாளர்களாகிறார்கள். 
 

எம்.முஹம்மது ரபீக் ரஷாதீ, விழுப்புரம்
பொங்கல் பரிசுத் தொகுப்பையும் ஆயிரம் ரூபாயையும் மாவலியார் பெற்றுவிட்டாரா?
பாரம்பரிய விளையாட்டுகள்#பயன்தரும் செயல்பாடுகள்#புதிய தொழில்நுட்பத்திற்கேற்ற அணுகுமுறைகள் எனத் தமிழர் திருவிழா கிராமங்கள் தொடங்கி வெளிநாடுகள் வரை கொண்டாடப்பட்டதைக் காணும்போது ஆயிரம் ரூபாய் என்பது பிச்சாத்து காசு. உலகெங்கும் வாழும் தமிழர்களின் உணர்வே சிறந்த பொங்கல் பரிசுத் தொகுப்பு.

 

ச.புகழேந்தி, சென்னை

மேகதாதுவில் அணை கட்டக்கூடாது என்ற ராகுலையும் சோனியாவையும் சந்தித்து மு.க.ஸ்டாலின் அழுத்தம் கொடுப்பாரா?


கொடுத்தார்... கொடுப்பார்... ஆனாலும் அதற்கான விளைவு என்பது குமாரசாமியிடமிருந்து வரவேண்டும். குமாரசாமிகள் என்றாலே வில்லங்கம்தான். 

 

 

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

இவ்விதழின் கட்டுரைகள்

Loading...