நடேஷ்கன்னா, கல்லிடைக்குறிச்சி
மோடியின் பாடல் கிராமி விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டிருப்பது குறித்து?
சர்வதேச பாடகர்கள் இப்படியொரு பலத்த போட்டியை எதிர்பார்த்திருக்கமாட்டார்கள். ஒருவேளை மோடி கிராமி விருது வெல்லும்பட்சத்தில், இசையுலக வரலாற்றில் கிராமி விருது வென்ற முதல் பிரதமர் என்ற பெருமையையும் தட்டிக்கொண்டு போவார். என் சந்தேகமெல்லாம், வரும் நாடாளுமன்றத் தேர்தலில் ஒவ்வொரு மேடையிலும் மோடி பிரச்சாரம் செய்வாரா, பாட்டுப் பாடி ஓட்டுக் கேட்பாரா என்பதுதான்.
எஸ். அர்ஷத் ஃபயாஸ், குடியாத்தம்
அரசியல் நாகரிகம் என்றால் என்ன?
நாகரிகம் என்பதற்கு திருந்திய வாழ்க்கை முறை அல்லது நகரங்களில் பின்பற்றப்படும் வாழ்க்கை முறை எனப் பொருள். அப்படிப் பார்த்தால் அரசியலில் பின்பற்றப்படும் பண்பட்ட நடத்தை முறையே அரசியல் நாகரிகம். கட்சித் தலைமையைக் குளிர்விப்பதற்காக பிற கட்சிக்காரர்களை வசைபாடுவதில் இரண்டாம்கட்டத் தலைவர்களும் தொண்டர்களும் இறங்கிவிடுவதால், அரசியல் நாகரிகம் அடிக்கடி கை, கா-ல் கட்டுடன் இன்னும் கற்காலத்திலேயே பின்தங்கியிருக்கிறது. அது கார்ப்பரேட் உலகுக்குச் சமமாக வளர ரொம்ப நாளாகும்போல் தெரிகிறது.
அண்ணா அன்பழகன், அந்தணப்பேட்டை.
பிற மாநிலங்களில் ஆயிரம் ரூபாய்க்கு மேல் கேஸ் சிலிண்டர்கள் விற்கும் பா.ஜ.க. அரசு, மத்தியப்பிரதேச தேர்தலில் ரூ.400/-க்கு தரு வோம் என்று வாக்குறுதி தருவது பாரபட்சமாக இருக்கிறதே?
வாக்குறுதிதானே? ஜெயித்த பிறகு கொடுத்தால் தானே... சந்தேகமேயிருந்தால் மாநில வாரியாக ஒவ்வொரு கட்சியும் கொடுத்த வாக்குறுதிகளையும் நிறைவேற்றிய எண்ணிக்கையையும் எடுத்து வைத்து சரி பாருங்கள். வாக்காளர்கள் ஒவ்வொருவர் காதிலும் சுற்றப்பட்ட பூச்சரத்தின் நீளம் மைல்கணக்குக்கு நீள்வதைப் பார்ப்பீர்கள்.
அன்னூரார் பொன்விழி, அன்னூர்
சுதந்திர இந்தியாவில் விமான நிலையத்தில் பிடிபட்ட தங்கத்தின் மதிப்பு இதுவரை எவ்வளவு இருக்கும், அந்த தங்கத்தை என்ன செய்கிறது அரசு, இதை விற்று மக்களுக்கு நலத் திட்டங்களை செய்யுமா?
இந்தியா சுதந்திரமடைந்த பிறகு விமான நிலையங் களில் பிடிபட்ட தங்கத்தின் மொத்த மதிப்பு குறித்த கணக்கு ஒன்றிய அரசிடம் இருக்குமா என்பது தெரியவில்லை. வழக்க மாக, பிடிபடும் தங்கம் குறைந்த மதிப்பில் இருக்குமெனில், அந்த தங்கத்துக்கு வரி, கடத்தியதற்கு அபராதம் விதித்து கொண்டு வந்தவர்களிடம் வசூலித்துவிட்டு அவர்களிடமே கொடுத்துவிடும் சுங்கத் துறை. மாறாக, சட்டவிரோதமாகக் கடத்தப்பட்ட தங்கம் கிலோகணக்கில் போகும்போது, அந்தத் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டு, பொதுத்துறை வங்கிக்கு அனுப்பப்படும். பின், அந்தத் தங்கம் நாளிதழில் அறிவிப்பு கொடுக்கப்பட்டு ஏலம் விடப்படும். தங்கத்துக்கான விலை மத்திய அரசின் கஜானாவுக்குச் செல்லும். கஜானாவுக்கு போனபின் அது மக்கள் பணம். அது மக்கள் நலத்திட்டங்களுக்காகவும் நிர்வாகத்துக்காக வும்தான் செலவிடப்படுகிறது. ஆனால் இடையில் பேராசைக்கார அதிகாரிகளும், கடத்தல் பேர்வழிகளும் எழுதாத ஒப்பந்தத்துக்குள் போனால், அதிகாரிகளுக்கு கமி ஷன் போய், தங்கம் கடத்தல்காரர் களைச் சென்றடைந்துவிடும். அப்படிப் நடக்கும்போதே அரசுக்கும் மக்களுக்கும் நட்டம்
தே.மாதவராஜ், கோயம்புத்தூர்
விஜய், அஜித், கலைஞர் நூற்றாண்டு விழாவில் கலந்துகொள்வார்களா?
அது சம்பந்தப்பட்ட நடிகர்களிடம் கேட்கவேண்டிய கேள்வி. தமிழக முதலமைச்சராக ஐந்து முறை தேர் வானவர், நீண்ட காலம் தி.மு.க. தலைவராக இருந்தவர். எழுத்தாளர். வான்புகழ் கொண்ட வள்ளுவருக்கு கோட்டம் அமைத்தவர். பெரியாரைப் போலவே தன் இறுதிமூச்சு வரை தமிழர் நலனுக்காகப் பாடுபட்டவர். கலைஞரின் நூற்றாண்டு விழாவில் கலந்துகொள்வது இருவருக் கும் பெருமையே தவிர, இருவரும் கலந்துகொள் வதால் கலைஞருக்கு எந்தப் பெருமையும் இல்லை.
வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு
அ.தி.மு.க. ஆட்சி மீண்டும் அமைந்திருந்தால் வைகையை தேம்ஸ் நதியாக மாற்றியிருப்போம் என செல்லூர் ராஜு பேசியிருக்கிறாரே?
2011 முதல் 2021 வரை அ.தி.மு.க. ஆட்சிதானே. அதே மதுரையில்தான் இந்த பத்தாண்டு காலமும் வைகை நதி ஓடியது. அப்போது என்ன செய்துகொண்டிருந்தார் கள்? இந்தியா முழுவதும் கழிவுநீரை நதிகளில் கலப்பதுதான் வழக்கமாயிருக் கிறது. இதற்கு ஒரு மாற்று கண்டுபிடிக்கும் வரை கங்கையானாலும், வைகையானாலும் சாக்கடையாக மாறுவதுதான் நடக்கும்.
வாசுதேவன், பெங்களூரு
டைட்டானிக் கப்பல் மெனு கார்டு ரூ.84 லட்சத்திற்கு ஏலம் போனதாமே?
இதிலென்ன ஆச்சரியமிருக் கிறது. "தேவதாஸ்' படத்தில் நடித்த மாதுரிதீட்சித்தின் லெஹங்கா 3 கோடிக்கு ஏலம் போகும்போது, டைட்டானிக் கப்பலின் மெனு கார்டு 84 லட்சத்துக்கு ஏலம் போகக் கூடாதா?