அருங்கரைவாசன், மதியாக்கூடலூர்

"கூடுகின்ற பெருங்கூட்டமெல்லாம் ஓட்டுகளாக மாறும்' என கலைஞர் நம்பியதில்லை.. ஸ்டாலின் நம்புகிறாரா?

2014 எம்.பி. தேர்தல், 2016 சட்டமன்றத் தேர்தல் களங்களில் அவர் நம்பவைக்கப்பட்டார். அனுபவம் சரியான படிப்பினையைத் தந்திருந்தால் அவர் இப்போது உண்மையான களநிலவரம் அறிந்தவராக மாறியிருக்க வேண்டும்.

a

Advertisment

எம்.ரம்யாமணி எம்.இ., வெள்ளக்கோவில்

தமிழ்நாட்டில் 3 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலை மட்டும் தேர்தல் ஆணையம் நிறுத்தவேண்டிய அவசியம் என்ன?

Advertisment

திருப்பரங்குன்றத்தில் ஏற்கனவே நடந்த இடைத்தேர்தலின்போது, "அ.தி.மு.க. வேட்பாள ரின் வேட்புமனுவில் ஜெ. வைத்த கைநாட்டு உண் மையானதல்ல' என தி.மு.க. வேட்பாளர் தொடர்ந்த வழக்கும், மற்ற இரு தொகுதிகளில் பிறர் தொடர்ந்த வழக்கையும் காரணமாகக் காட்டு கிறது தேர்தல் ஆணையம். நீதி மன்றமோ, "அந்த வழக்குகளால் தேர்தல் நிறுத்த எந்தத் தடையும் நாங்கள் விதிக்கவில்லையே' என் கிறது. கோவா முதல்வர் மனோகர் பரிக்கர் இறந்ததால் காலியான தொகுதிக்கு, அவரது இறுதி ஊர்வலத்தின்போதே இடைத்தேர்தலை அறிவித்த தேர்தல் ஆணையம், 2016-ல் இறந்த ஜெ. தொடர்பான வழக்கை காரணம் காட்டி தமிழ்நாட்டில் இடைத்தேர்தலை அறிவிக்கத் தயங்குகிறது. இதைத்தான் "தனித்த அதிகாரம் படைத்த ஆணையம்' என 100 கோடி வாக்காளர்கள் கொண்ட இந்தியா நம்புகிறது.

ஏழாயிரம் பண்ணை எம்.செல்லையா, சாத்தூர்

"தேர்தல் கூட்டணி என்பது வேறு, கட்சியின் இலட்சியம் என்பது வேறு' என்ற ஜோதியில் த.மா.கா. வாசனும் கலந்துவிட்டாரே?

தொண்டர்களைத் தக்கவைத்துக்கொள்ள நாலேமுக்கால் வருசம் கொள்கை பேசுவது, ஒன்றிரண்டு சீட்டுக்காக தேர்தல் நேரத்தில் கூட்டணி அமைப்பது என்கிற ஃபார்முலாவுக்கு வாசன் மட்டும் விதிவிலக்கா என்ன?

மேட்டுப்பாளையம் மனோகர், கோவை-14

யார் கொடுக்கும் தைரியத்தில் இந்தியா வுடன் பாகிஸ்தான் மோதப் பார்க்கிறது?

பாகிஸ்தானில் தீனி போட்டு வளர்க்கப்படும் தீவிரவாதி மசூத் அசார் விவகாரத்தில் சீனா கடைப்பிடிக்கும் ஒத்துழையாமையும், பின்லேடனை பாகிஸ்தானில் பிடித்த பிறகும் அந்நாட்டின் மீது தனிப்பட்ட முறையில் கரிசனம் காட்டும் அமெ ரிக்காவும் இருக்கும் தைரியத்தில்தான்.

எம்.முஹம்மது ரபீக் ரஷாதீ, விழுப்புரம்

"அடுத்த பிரதமரை மக்கள்தான் தேர்வு செய்வார்கள்' என்று கூறுகிறாரே ராகுல்?

வார்த்தைகளில் திமிர்த்தனம் இல்லாமல், நிதானம் காட்டுவது என்பது பிரதமரைத் தேர்வு செய்யும் வலிமையுள்ள மக்களின் மனதைக் கவ ரும் என்பதை ராகுல் அறிந்திருக்கிறார்.

மு.செ.மு.புகாரி, சித்தார்கோட்டை

இப்போதுள்ள தேர்தல் சின்னங்களில் உதயசூரியன் தானே நீண்டகாலமாகத் தொடர்கிறது?

ஒரு மாநிலக் கட்சி 1957-ஆம் ஆண்டு முதல் தனது சின்னத்தை சிக்கலின்றி தக்க வைத்த வகையில், உதயசூரியன் சீனியர்தான். ஆனால், அதனுடன் கூட்டணியில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கதிர்அரிவாள் 1952-ல் நடந்த முதல் பொதுத்தேர்தலிலிருந்து மாறாமல் இருப்பதால் அதுவே சூப்பர் சீனியர்.

__________

காந்தி தேசம்

a

அ.யாழினி பர்வதம், சென்னை-78

காந்திஜி, வட்டமேசை மாநாட்டில் கலந்துகொண்டது ஏன்? அங்கு அவருக்கு வரவேற்பு எப்படி?

இந்தியாவில் சுதந்திரப் போராட்டம் காந்தி தலைமையில் வேகம் எடுப்பதை கவனித்த பிரிட்டிஷ் அரசு, பல்வேறு வகைகளில் அதனை எதிர்கொள்ள வியூகம் வகுத்தது. இந்தியர்களுக்கு குறைந்தபட்ச அதிகாரம் என்பதில் தொடங்கி பலவற்றையும் விவாதிக்க 1930 முதல் 1932 வரையிலான காலகட்டத்தில் 3 முறை இந்தியா மற்றும் பிரிட்டிஷ் பிரதிநிதிகள் பங்கேற்கும் வட்டமேசை மாநாடுகளை நடத்தியது. முதல் வட்டமேசை மாநாடு நடந்தபோது, இந்தியாவில் ஒத்துழையாமை இயக்கத்தை காந்தி தீவிரப்படுத்தியிருந்தார். அதனால் அவர் அதில் கலந்துகொள்ளவில்லை. வட்டமேசை மாநாடு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. அதனால் இரண்டாவது வட்டமேசை மாநாட்டில் அவர் பங்கேற்க பிரிட்டிஷ் அரசு விரும்பியது.

போராட்டத்தைக் கைவிட்டு, பிரிட்டிஷாருடன் பேசுவதற்காக 1931-ல் "எஸ்.எஸ். ராஜ்புதானா' என்ற கப்பலில் இங்கிலாந்துக்கு காந்தி பயணித்தார். இடுப்பில் வேட்டி, தோளில் துண்டு என்கிற தனது வழக்கமான உடையிலேயே அவர் சென்றார். லண்டனிலிருந்து வெளியான பத்திரிகைகள் அனைத்திலும் காந்தியின் வருகையே முக்கியத்துவம் பெற்றது. வட்டமேசை மாநாட்டில் இந்தியர்களுக்கான அதிகாரம், இந்து-முஸ்லிம் பிரச்சினை உள்ளிட்டவை தொடர்பாக பிரிட்டிஷார் முன்வைத்த தீர்வுகளில் காந்திக்கு உடன்பாடு ஏற்படவில்லை. "இந்தியர்களை பிரிட்டிஷார் சம அந்தஸ்துடன் நடத்தவேண்டும்' என அவர் வலியுறுத்தினார். வட்டமேசை மாநாடு முடிந்தபிறகு, இங்கிலாந்து அரண்மனையில் அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போதும் அவர் தனது விருப்பத்துக்குரிய உடையிலேயே கலந்துகொண்டது அரச குடும்பத்தினருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியதுடன், பிரிட்டனில் காந்தியின் உறுதி சிலாகிக்கப்பட்டது. எனினும், வட்டமேசை மாநாடு காந்திக்கு மனநிறைவைத் தரவில்லை. மூன்றாவது வட்டமேசை மாநாட்டில் அவர் பங்கேற்கவில்லை. 3 வட்டமேசை மாநாடுகளிலும் பங்கேற்று, இந்தியாவில் உள்ள ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காக குரல் எழுப்பியவர் அம்பேத்கர்.