பி.மணி, வெள்ளக்கோவில், திருப்பூர்

ஏழைகளின் வறுமை எனும் இருளை எந்த அரசாலும் ஒழிக்கவே முடியாதா?

ஒழித்துவிட்டால் அப்புறம் எப்படி அரசியல் செய்து அரசாட்சி பெறுவது?

மா.சந்திரசேகர், மேட்டுமகாதானபுரம்

Advertisment

"மீண்டும் வருவேன்' என்று மிரட்டுகிறாரே பிரதமர் மோடி?

மக்கள் மிரண்டிருந்தால், மோடி மிரட்டுவது போலிருக்கும். தேர்தல் களத்தில் மக்கள் நம்மை மிரட்டுவார்கள் என்பது புரிந்துவிட்டால் மோடியும் அவரது ஆட்களும் மிரண்டு போய்விடுவார்கள். 5 ஆண்டுகாலம் கழிந்த நிலையில் மீண்டும் வருவேன் என மோடி சொல்வதே மக்களுக்கான மிரட்டலாகப் பார்க்கப்படுவதுதான், ஆட்சிக்கான சான்றிதழ்.

பி.சாந்தா, மதுரை-14

Advertisment

seha

"சாதி-மதம் அற்றவர்' என சான்றிதழ் பெற்றிருக்கும் வழக்கறிஞர் சினேகா பற்றி?

இடதுசாரி தத்துவத்தின் மீது பிடிப்புகொண்டு -சமூக நீதியில் அக்கறை காட்டிய பெற்றோரின் வளர்ப்பும், அதே உணர்வுகொண்ட அவரது வாழ்விணையரான பார்த்திபராஜாவின் ஒத்துழைப்பும் வழக்கறிஞர் சினேகாவின் இலட்சியத்தை அடையச் செய்திருக்கிறது. சாதி-மதம் அற்றவர்களாக வாழ்வது என்பது இந்திய சமூகத்தில் மிகப்பெரிய போராட்டமாகும். அந்தப் போராட்டத்திற்கான சான்றிதழை சினேகா பெற்றிருப்பது புரட்சிகரமானதாகும். எனினும், இந்தச் சான்றிதழுக்கு சட்டரீதியான அங்கீகாரம் நீடிக்குமா என்ற கேள்வியும் முன்வைக்கப்படுகிறது. சினேகா குடும்பத்தினர் விரும்பிப் பெற்ற சாதி-மத மறுப்புச் சான்றிதழை மற்றவர்களும் பெற்றாகவேண்டும் என்பது கட்டாயமில்லை. சமூகநீதி அடிப்படையில் ஏற்றத்தாழ்வு களையப்பட வேண்டிய சமுதாயத்தில், சாதி-மத மறுப்பாளர்களுக்கும் இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டியது கட்டாயமாகிறது.

பிரதீபா ஈஸ்வரன், தேவூர் மேட்டுக்கடை

ஜெயலலிதா இல்லாமல் இரண்டு ஆண்டுகாலம் ஆட்சி நடத்தியதே எடப்பாடிக்கு மிகப்பெரிய சாதனைதானே?

அந்த "சாதனை'யை முதலீடாக வைத்துதானே கூட்டணி பேரங்களை கச்சிதமாக நடத்தி வருகிறார்.

அயன்புரம் சத்தியநாராயணன்

பா.ம.க.வைவிட பா.ஜ.க.வுக்கு குறைவான இடங்களை ஒதுக்கியிருக்கிறதே அ.தி.மு.க.?

இலை எத்தனை இடங்களில் துளிர்க்கிறது, பழம் எத்தனை இடங்களில் கனிகிறது என்பதைவிட தமிழ்நாட்டில் இந்தமுறை எப்படியாவது தாமரையை மலர வைத்துவிடவேண்டும் என்பதுதான் பா.ஜ.க.வின் கணக்கு. இலைக்கும் பழத்துக்கும் விட்டுக்கொடுப்பதன் மூலம், தன் இலக்கை அடைய நினைக்கிறது டெல்லி தலைமை.

penguine

ஏழாயிரம்பண்ணை எம்.செல்லையா, சாத்தூர்

பென்னிகுவிக் பிறந்த தினத்தை அரசு விழாவாக அறிவித்திருப்பது பற்றி?

தேர்தல் நேரத்தில் ஆட்சியாளர்களுக்கு பென்னிகுவிக், இரட்டைமலை சீனிவாசன், பெரும்பிடுகு முத்தரையர், சி.பா.ஆதித்தனார் உள்ளிட்ட பலரும் நினைவுக்கு வருவார்கள். அப்படியாவது நல்லவை நடக்கிறதே என்று நிம்மதி அடையலாம். பென்னிகுவிக் போன்றவர்கள் மக்கள் எப்போதும் நிம்மதியாக இருக்க வேண்டும் என்று நினைத்தவர்கள். அதன் அடையாளம்தான் அந்த வெள்ளைக்காரர் தமிழ் நிலத்தின் வளம்காக்க கட்டிய முல்லைப் பெரியாறு அணை.

வீ.ஹரிகிருஷ்ணன், திருச்சி

"மடி நிறைய பொருள் இருக்கும்! மனம் நிறைய இருள் இருக்கும்'!! இந்தப் பாடல் வரிகள் எந்தக் கட்சிக்கு, யாருக்கு பொருந்தும்?

எந்தெந்தக் கட்சிகளெல்லாம் தேவையான அளவு நிதி வைத்துக்கொண்டு, தேர்தல் நேரத்தில் தொண்டர்களைக் கவனிக்காமல் இருக்கின்றனவோ அவற்றுக்கெல்லாம் பொருந்தும்.

______________

காந்திதேசம்

மேட்டுப்பாளையம் மனோகர், கோவை-14

மகாத்மா காந்தி எழுதிய சுயசரிதை உலகளவில் சிறப்பானதாக கருதப்படுவதேன்?

உலகளவில் புகழ்பெற்ற சுயசரிதை நூல்கள் பல உண்டு. காந்தியின் சுயசரிதையான "சத்தியசோதனை' போலவே ஹிட்லரின் "மெயின் கெம்ப்' புத்தகமும் புகழ் பெற்றதுதான். அகிம்சையை வலியுறுத்திய காந்தியின் வரலாறும், யுத்த வெறியை ஊட்டிய ஹிட்லரின் வரலாறும் தமிழ் உள்ளிட்ட பல மொழிகளிலும் வெளியாகி, இன்றளவும் விற்பனையாகி வருகின்றன. மனிதஉரிமைச் செயற்பாட்டாளர் மால்கம் எக்ஸ், புத்தமதத் தலைவர் தலாய் லாமா, நாவலாசிரியை அகதா கிறிஸ்டி, அறிவியலாளர் (அரசியல் சிந்தனையாளர்) பெஞ்சமின் பிராங்க்ளின், அணு விஞ்ஞானி அப்துல்கலாம் உள்ளிட்ட பலரின் சுயசரிதை நூல்கள் இளந்தலைமுறையைக் கவர்கின்றன.

காந்தியின் சத்தியசோதனை என்பது அவரது சொந்த வாழ்க்கையின் அனுபவங்களாக விரிந்தாலும் அதில் இந்திய விடுதலைக்கான புதிய அணுகுமுறை குறித்த பரிசோதனை முயற்சிகளும் நிறைந்திருக்கின்றன. பன்முகத்தன்மை வாய்ந்த இந்தியாவில், அதன் ஒற்றுமையை சீர்குலைக்காமல், அனைத்துத் தரப்பு மக்களையும் ஒருங்கிணைத்து வலிமைமிகுந்த வல்லாதிக்கத்தை எதிர்த்துப் போராட்டம் நடத்துவது என்பது அத்தனை எளிதானதல்ல. அதற்கு காந்தி, தன்னை எப்படி சுயபரிசோதனைக்குட்படுத்திக் கொண்டார். அதன்பிறகு அதனை எப்படி பொதுமக்களின் கொள்கையாக மாற்றினார் என்பது அவரது இளமைப் பருவம் முதல், சுதந்திரப் போராட்டக் காலம் வரையிலான பதிவுகள் மூலம் விவரிக்கப்பட்டுள்ளன. இதுதான் சத்தியசோதனையின் சிறப்பம்சம். வேற்றுமையில் ஒற்றுமை காண முனைந்த அவரது சத்தியசோதனை முயற்சிகள் அவரது உயிருக்கே உலை வைத்த போதும், இன்றும் இந்தியாவில் வல்லாதிக்கத்தை எதிர்த்துப் போரிடுவதற்கான பாதையாக உள்ளது. ஙஹ் ப்ண்ச்ங் ண்ள் ம்ஹ் ம்ங்ள்ள்ஹஞ்ங் ("என் வாழ்க்கையே நான் சொல்லும் தகவல்') என்றார் காந்தி. அந்த வார்த்தைகள் இன்றும் உயிர்ப்புடன் உள்ளன.