வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு
"தொண்டர்களின் பங்களிப்பால்தான் பா.ஜ.க. இயங்கவேண்டும்; நன்கொடையால் அல்ல' என்கிறாரே அமித்ஷா?
அரசியல்வாதிகளின் பேச்சுகளில் ஆழ மான ‘பொருளை’ கண்டறிய வேண்டும். தொண்டர்கள் பா.ஜ.க.வுக்குத் தங்களின் பங்களிப்பைச் செய்ய வேண்டும். அதானிகளும் அம்பானிகளும் ஸ்டெர்லைட் ஓனர்களும் பா.ஜ.க.வுக்கான நன்கொடை களைப் பார்த்துக் கொள்வார் கள்.
மேட்டுப்பாளையம் மனோகர், கோவை-14
கொடநாடு மர்மக் கொலை தொடர்பான வழக்கு விசாரணை ஆமை வேகத்தில் நடப்பது பற்றி?
தமிழ்நாடே சந்தேகப்பட்ட ஜெயலலிதா மரண மர்ம விசாரணை ஆணையத்திற்கே கால அவகாசம் நீட்டிக்கப்படும் நிலையில், கொடநாடு விவகாரம் மட்டும் சிறுத்தை வேகத்திலா பாயும்? பெரிய இடத்து மர்மங்கள் தொடர்பான விசாரணைகள் அனைத்துமே வேகத்தில் ஆமைகளுக்கு அக்கா.
எம்.முகம்மது ரஃபீக் ரஷாதி, விழுப்புரம்
எதற்கெடுத்தாலும் குற்றம் சொல்லிக் கொண்டே இருந்தால் என்னதான் செய்யும் ஆளும்கட்சி?
மத்திய ஆளுங்கட்சி 3 தவணையாக ஆண்டுக்கு 6000 ரூபாய் என்று அறிவிக்கும். மாநில ஆளுங்கட்சி ஒரே தவணையில் 2000 என்று அறிவிக்கும். இரண்டும் கூட்டணி போட்டு தேர்தலை சந்திக்கும்.
நெய்வேலி க.தியாகராசன், கொரநாட்டுக்கருப்பூர்
மேற்குவங்க முதல்வர் மம்தாவை ராமாயணத்தில் வரும் தாடகையோடு ஒப்பிட்டு பா.ஜ.க. தலைவர் ஒருவர் விமர்சித்திருப்பது பற்றி?
வனத்தையும் வளத்தையும் அழித்த அரக்கியாக சித்தரிக்கப்படும் தாடகையை தனது குரு விசுவாமித்திரரின் ஆணைக் கிணங்க அம்பு எய்து கொல்கிறார் அவதார புருஷரான ராமர் என்கிறது ராமாயணம். இன்றைய நிலையில், ஜி.எஸ்.டி, பணமதிப் பிழப்பு, கருத்துரிமை பறிப்பு என அனைத்து நிலைகளிலும் வளத்தையும் நலத்தையும் அழித்த பெருமை மோடி அரசையே சாரும். அதை எதிர்த்து ஜனநாயக ரீதியில் அணி திரட்டி அம்பு விட நினைக்கிறார் மம்தா. அந்த அம்பு என்னவாகும் என்பது தேர்தலுக்குப் பின் தெரியும். ஆனால் அதற்கு முன்பே தன்னை எதிர்ப்பவர்களையெல்லாம் தாடகை, நரகாசுரன், இராவணன் போல முத்திரை குத்துவதிலிருந்தே பா.ஜ.க.வின் தேர்தல் பயம் தெரிகிறது.
எஸ்.கதிரேசன், பேரணாம்பட்டு
"வாஜ்பாய் அறிவித்த பட்ஜெட்டை முதல்வர் எடப்பாடி பழனிசாமி வரவேற்றுள்ளார்' என்கிறாரே அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன்?
எடப்பாடி அரசு இன்றைய நடை முறைக்கு இன்னும் பொருந்தவில்லை என அவரது அமைச்சரே சான்றிதழ் தருகிறாரோ!
ஜி.மகாலிங்கம், காவல்காரப்பாளையம்
இந்திராகாந்தியின் இடத்தை நிரப்பு வாரா பிரியங்கா காந்தி?
எந்த இந்திராகாந்தி? தனது அரசுக்குப் பெரும்பான்மை இல்லாத நிலையிலும் வங்கிகள் தேசியமயம், மன்னர் மானியம் ஒழிப்பு, உணவு உற்பத்தியில் தன்னிறைவு, நாட்டின் பாதுகாப்பு வலிமை ஆகியவற்றில் கவனம் செலுத்திய இந்திராகாந்தியா? தனது தேர்தல் வெற்றி மோசடியானது என நீதிமன்றம் தீர்ப்பளித்ததும் ஜனநாயகத்தின் மீது கொடுவாள் பாய்ச்சும் எமர்ஜென்சியைக் கொண்டு வந்த இந்திராகாந்தியா?
லட்சுமி செங்குட்டுவன், வேலூர்
மகா மகா கேவலம் என்று எதைச் சொல்லலாம்?
கூட்டணிக்காக நடத்தப்படும் அரசியல் பேரங்களை!
____________
காந்தி தேசம்
மல்லிகா அன்பழகன், சென்னை-78
இன்று பா.ஜ.க. கனவு காணும் இந்து ராஜ்ஜியத்துக்கும், அன்று காந்தி கண்ட கனவான ராம ராஜ்ஜியத்துக்கும் என்ன வித்தியாசம்?
இந்து மதத்தினர் வழிபடும் கடவுள்தான் ராமர். அந்த ராமருக்கு கோவில் கட்டி, அதன் தொடர்ச்சியாக இந்து ராஜ்ஜியத்தை நிறுவவேண்டும் என்பது பா.ஜ.க.வின் கனவு மட்டுமல்ல, ஆட்சி செய்யக் கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்தி அடைய நினைக்கும் இலக்கு. அதுவும், ராமர் பிறந்ததாக நம்பிக்கை கொண்ட அயோத்தியில், பா.ஜ.க. மற்றும் அதன் பரிவாரங்களால் இடிக்கப்பட்ட பாபர் மசூதி இருந்த இடத்திலேயே ராமர் கோவில் கட்டுவதற்குத் தேர்தல் நேரத்தில் கூடுதல் வேகம் காட்டுகிறது பா.ஜ.க.
காந்தியும் இந்து மதத்தின் மீது மிகுந்த பற்றுக் கொண்டவர். ராமரைத் துதித்தவர். எனினும் அவரது ராமராஜ்ஜியம் என்பது வெறும் மதரீதியான மக்கள் தொகையைக் கொண்ட சொல் அல்ல. இந்துக் கடவுளின் பெயரில் ராமராஜ்ஜியம் என்ற காந்திதான், "இஸ்லாமி யர்கள் அதிகம் வசிக்கும் எல்லைப்புற பகுதிகளுக்கு பேச சென்றால், அங்கு "குதாயீ ராஜ்' என்றும் கிறித்தவர்களின் கூட்டத்தை நோக்கி பேசினால் "கர்த்தரின் ராஜ்ஜியம்' என்றும் பேசுவேன் என்றார்.
அவரே மேலும், "ராமராஜ்ஜியம் என்பதை அரசியல்ரீதியாகப் பார்த்தால் நிறம், இனம், குலம், பாலினம் பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் ஒழிந்துபோன ஜனநாயகம் என்றாகிறது. வழிபாட்டுச் சுதந்திரம், பேச்சு சுதந்திரம், பத்திரிகை சுதந்திரம் ஆகியவை இருக்கும். இவையனைத்தும் சுயமாக விதித்துக் கொண்ட அறக் கட்டுப்பாடுமிக்க சட்டத்தின் அடிப்படையில் அனைவருக்கு மான நீதியை வழங்கும். வாய்மைமிக்க ராமராஜ்ஜியம் தன்னிறைவு கொண்ட கிராமங்களையும் கிராமப்புற சமூகங்களையும் கொண்டிருக்க வேண்டும்' என்று கூறியிருக்கிறார்.