எம்.தமிழரசி, வெள்ளக்கோவில்

"கறைபடாத வகையில்தான் கூட்டணி' என்கிறாரே கமல்ஹாசன். தமிழ்நாட்டில் கறைபடாத கட்சி இருக்கிறதா?

Advertisment

இருக்கின்றன... அமைச்சரவையில் இடம் பெறாத கட்சிகளும், இன்னமும் ஆரம்பிக்கப்படாத கட்சிகளும்.

லட்சுமி செங்குட்டுவன், வேலூர் (நாமக்கல்).

"அரசியலுக்கு கடைசிப் பக்கம் இல்லை' என வெளிப்படையாகக் கருத்துக் கூறி அழகிரியாருக்கு ரஜினி பிறந்தநாள் வாழ்த்துக் கூறியிருப்பது பற்றி…?

மண்டல் கமிஷன் அறிக்கையை அமல்படுத்த முனைந்து, காங்கிரஸ் -பா.ஜ.க. போன்ற கட்சிகளின் எதிர்ப்பினால் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல் பிரதமர் பதவியிலிருந்து விலகிய சமூகநீதிக் காவலர் வி.பி.சிங், "அரசியல் காலண்டரின் கடைசிப் பக்கம் என்று எதுவுமில்லை' என கம்பீரத்துடன் சொன்னதை, மத்திய அமைச்சராக இருந்தும் நாடாளுமன்றத்தில் வாயே திறக்காத அழகிரிக்குப் பொருத்தியிருக்கிறார் அரசியலில் இன்னமும் முதல் பக்கத்தையே புரட்டாத ரஜினி.

திராதி, துடியலூர், கோவை

லேடியின் சாரதா சிட்பண்ட் ஊழல், மோடியின் மேற்கு வங்க வெற்றிக்கு உதவுமா?

Advertisment

மோடியின் ரஃபேல் விமான ஊழல் லேடியின் மேற்கு வங்கம் உள்பட இந்தியாவின் பல பகுதிகளிலும் எதிர்க்கட்சியினரின் வெற்றிக்கு உதவக்கூடும் என்கிறார்கள் கள நிலவரம் உணர்ந்தவர்கள்.

அயன்புரம் த.சத்தியநாராயணன், சென்னை-72

தமிழக அரசின் பட்ஜெட் - மத்திய அரசின் பட்ஜெட். என்ன ஒற்றுமை?

மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட்டில் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6000 ரூபாய் என்றும் அது 3 தவணையாக தலா 2000 ரூபாய் என்ற வகையில் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. தமிழக அரசின் பட்ஜெட்டில் அப்படிப்பட்ட அறிவிப்பு இல்லையென்றாலும் பட்ஜெட் கூட்டத் தொடரிலேயே 110 விதியின்கீழ் புதிய அறிவிப்பை வெளிட்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அமைப்புசாரா தொழிலாளர்கள் போன்ற வறுமைக்கோட்டுக்கு கீழே உள்ள குடும்பங்களுக்கு தலா 2000 ரூபாய் வழங்கப்படும் என அறிவித்தார். விவசாயிகளும், தொழிலாளர்களும் பல ஆண்டுகளாகப் பரிதவிக்கும் நிலையில், தேர்தல் ஆண்டில் அவர்கள் மீது பொங்கிவழிந்த கருணைதான் மத்திய-மாநில அரசுகளின் பட்ஜெட்டில் உள்ள ஒற்றுமை.

ஆர்.துரைசாமி, கணபதிபுதூர், கோவை-6

மத்திய பிரதேசத்தில் பா.ஜ.க.வுக்கு மாற்றாக ஆட்சிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட காங்கிரஸ், "பசு பாதுகாப்பு' என்ற பெயரில் தேசிய பாதுகாப்பு சட்டத்தை பொதுமக்கள் மீது ஏவியுள்ளதே?

Advertisment

பா.ஜ.க.வை மிஞ்சும் இந்துமத ஆதரவாளர்களாகக் காட்டிக் கொள்ள முயற்சித்திருக்கிறது மத்தியபிரதேசத்தில் ஆட்சி செய்யும் காங்கிரஸ். அதற்கு அக்கட்சியைச் சேர்ந்த துணை முதல்வர் தொடங்கி ப.சிதம்பரம் வரை பலரும் கண்டனம் தெரிவித்திருக்கிறார்கள். ம.பி.யில் இப்போதைய தேவை அமைதியும் வளர்ச்சியும்.

நித்திலா, தேவதானப்பட்டி

வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பதைவிட, செயல்படுவதுதானே முக்கியம்?

நிச்சயமாக... கர்நாடக சட்டமன்றத்தில் பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் தங்கள் மொபைலில் ஆபாசப் படம்தான் பார்த்தனர். திரிபுராவில் பிரதமர் பங்கேற்ற விழாமேடையிலேயே ஓர் அமைச்சர் சக பெண் அமைச்சரின் இடுப்பில் கைவைத்துவிட்டாரே!

____________

காந்தி தேசம்

gandhi

வீ.ஹரிகிருஷ்ணன், புத்தூர், திருச்சி-17

காந்திஜியின் நடவடிக்கைகளையும் போராட்ட வழிமுறைகளையும் பிடிக்காத தலைவர்களும் சுதந்திரப் போராட்ட காலத்தில் இருக்கத்தானே செய்தார்கள்?

காந்தியின் அகிம்சை முறையை ஆரம்பத்திலிருந்தே ஏற்காதவர்கள் உண்டு. "புரட்சி மூலம்தான் விடுதலை அடையவேண்டும். பிரிட்டிஷாரிடம் பிச்சை கேட்டு சுதந்திரம் வாங்கக்கூடாது' என பகத்சிங் போன்றவர்கள் செயல்பட்டார்கள். நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் ஆரம்பத்தில் காங்கிரஸில்தான் இருந்தார். காந்தியின் வழியைப் பின்பற்றினார். காங்கிரஸ் தலைவர் தேர்தல் நடந்தபோது சுபாஷ் சந்திரபோஸும் பட்டாபி சீதாராமையாவும் போட்டியிட்டனர். கட்சி உறுப்பினர்கள் அளித்த வாக்கின்படி, போஸ் வெற்றி பெற்றார். ஆனால், "பட்டாபி சீதாராமையாவின் தோல்வி என்னுடைய தோல்வி' என்று காந்தி சொன்னதனால், அவரது மனநிலை என்ன என்பது எல்லோருக்கும் புரிந்தது. போஸ் தன் பதவியை விட்டுக்கொடுத்தார். காந்தியின் இத்தகைய போக்குகளை விரும்பாததால், காங்கிரஸிலிருந்து வெளியேறி இந்திய தேசிய ராணுவத்தை அமைத்து பிரிட்டிஷாருடன் போரிட்டார் நேதாஜி.

ஆங்கிலேயரிடம் ரொம்பவும் சாத்வீகமாக காந்தி நடந்துகொள்கிறார் என்பதுதான் அவரது பாதைக்கு நேரெதிரான பாதையைத் தேர்ந்தெடுத்த தலைவர்களின் கருத்தாக இருந்தது. அதே நேரத்தில், அகிம்சை வழியைப் பின்பற்றிய தலைவர்களும்கூட காந்தியிடம் பல நேரங்களில் மாறுபட்டுள்ளனர். இரட்டையாட்சி முறையில் பிரிட்டிஷ் நடத்திய மாகாணத் தேர்தல்களில் பங்கேற்பதில்லை என்ற காந்தியின் முடிவை ஏற்காமல் சித்தரஞ்சன்தாஸும், நேருவின் அப்பா மோதிலால் நேருவும் சுயராஜ்ஜியக் கட்சியை ஆரம்பித்து தேர்தலில் பங்கெடுக்க முடிவெடுத்தனர். காங்கிரஸ் பிரமுகர்களும்கூட சுயராஜ்ஜியக் கட்சி வேட்பாளர்களாகப் போட்டியிட்டனர். நவீன இந்தியாவை அறிவியல் வழியில் உருவாக்க விரும்பிய நேருவும்கூட காந்தியின் பழமைவாதக் கொள்கைகளில் மாறுபட்டிருக்கிறார்.

காந்தியின் சீடராக இருந்து பின்னர் காங்கிரஸிலிருந்து வெளியேறிய பெரியார், "நீங்கள் வருணாசிரமத்தை ஆதரிக்கிறீர்கள். அதுதான் உங்களுக்கு ஆபத்தாக அமையப்போகிறது'’என காந்தியை சந்தித்தபோது எச்சரிக்கையுடன் சொன்னார். கடைசியில், காந்தியின் உயிரை வருணாசிரம வெறிதான் பறித்தது.