பி.ஓம்பிரகாஷ், கொடுங்கையூர், சென்னை-118

அரசு துறைகளில் ஆன்லைன் சிஸ்டம் அதிகரிப்பதால் பலருக்கு நேரடி கனெக்ஷன், கலெக்ஷன் கட் ஆகிவிடுமல்லவா?

கனெக்ஷன் கிடைக்காவிட்டாலும் கலெக்ஷன் தடைபடாமல் இருப்பதற்கேற்ற வியூகங்களுடன் செயல்படுவதற்குப் பெயர்தான் அரசு இயந்திரம்.

ஜி.மகாலிங்கம், காவல்காரபாளையம்

Advertisment

ஜாக்டோ-ஜியோ போராட்டத்தின் தோல்விக்கு என்ன காரணம்?

சங்கம் என்பதற்கு அர்த்தம் ஒருங்கிணைந்து செயல்படுவது. ஜாக்டோ-ஜியோ போராட்டத்தின்போது அனைத்து அரசு ஊழியர் சங்கங்கள் -அங்கீகரிக்கப்பட்ட சங்கங்களை ஒருங்கிணைப்பதில் தவறிவிட்டனர். ஒருங்கிணைப்பின்றி, தேர்வு நேரத்தில் நடத்தப்பட்ட போராட்டம் பொதுமக்கள் உள்பட பல தரப்பிலும் எதிர்ப்பை சம்பாதித்தது. தற்காலிக ஆசிரியர்கள் நியமனம் என்ற அரசின் அறிவிப்பும், வேலை இல்லாமல் தவிப்போர் அதில் காட்டிய ஆர்வமும் போராட்டக்காரர்களை அதிர வைத்தது. அரசின் நடவடிக்கைக்குப் பயந்து பலர் பணிக்குத் திரும்பினர். தங்கள் ஊதியத்தில் பிடித்தம் செய்த தொகை என்ன ஆயிற்று என்ற அரசின் மோசடியை அம்பலப்படுத்தவேண்டிய போராட்டம், எடப்பாடியை நிர்வாகத் திறமை கொண்டவர்போலக் காட்டும் வகையில் தோல்வியில் முடிந்துவிட்டது.

வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு

Advertisment

"பா.ஜ.க. மத்திய அரசால் கடந்த 5 ஆண்டுகளில் தமிழகத்துக்கு எந்த நன்மையும் கிடைக்கவில்லை' என்ற தம்பிதுரையின் குற்றச்சாட்டு?

மக்களவை துணை சபாநாயகரின் மனசாட்சி அவ்வப்போது, தான் திராவிட இயக்கத்துக்காரர் என்பதை உணர்ந்து உண்மையைப் பேசிவிடும்.

mavalianswersமல்லிகா அன்பழகன், சென்னை-78

பேராசிரியர் ஆனந்த் டெல்டும்டே கைது பற்றி?

அம்பேத்கர் கொள்கைகளை முன்னிறுத்தி செயல்படும் சிந்தனையாளரும் செயல்பாட்டாளருமான ஆனந்த் டெல்டும்டே மீது பீமாகோரேகான் என்ற இடத்தில் கலவரத்தை தூண்டியதாக குற்றம்சாட்டப்பட்டு, "அர்பன் நக்சல்' முத்திரை குத்தப்பட்டது. இந்த வழக்கில் ஏற்கனவே பல "அர்பன் நக்சல்கள்' சிக்கியிருக்கிறார்கள். அத்தனை பேரும் எழுத்தாளர்கள் -சிந்தனையாளர்கள் -செயல்பாட்டாளர்கள். அவர்களுக்கு நேர்ந்தது போலவே ஆனந்த் டெல்டும்டேவையும் நள்ளிரவுக்குப்பின் கைது செய்தது போலீஸ். நீதிமன்ற உத்தரவால் அவர் வெளியில் இருக்கிறார். எனினும், எந்நேரமும் பழிவாங்கத் துடிக்கிறது மோடி அரசு.

வீ.ஹரிகிருஷ்ணன், புத்தூர், திருச்சி-17

நேற்று வரை எலியும் பூனையுமாக இருந்த கட்சிகள் இன்று ஒன்றோடு ஒன்று, கூட்டணி அமைத்தால் வாக்காளர்கள் நம்பிவிடுவார்களா?

வாக்காளர்களை ஏமாற்றிவிட முடியும் என்பதுதான் அரசியல் கட்சிகளின் மிகப்பெரிய நம்பிக்கை. தேர்தல் களத்தைப் பொறுத்தவரை, நேற்று என்ன நடந்தது என்பதைவிட, இன்றைய சூழல் என்ன என்பதுதான் வெற்றியைத் தீர்மானிக்கிறது. கேப்டன் விஜயகாந்த்தை "குடிகாரர்'’என்று விமர்சித்தார் செல்வி.ஜெயலலிதா. "நீங்கதான் ஊத்திக் கொடுத்தீங்களா?'’என பதிலுக்கு கேட்டார் விஜயகாந்த். எலியும் பூனையுமாக மோதிக்கொண்டவர்கள் 2011 தேர்தலில் கூட்டணி அமைத்தபோது, ஜெயலலிதாவை முதல்வராகவும் விஜயகாந்த்தை எதிர்க்கட்சித் தலைவராகவும் ஆக்கியவர்கள் வாக்காளர்கள்தானே!

எம்.முஹம்மது ரபீக் ரஷாதீ, விழுப்புரம்

மோடி அரசின் கடைசி (இடைக்கால) பட்ஜெட்?

வாழ்நாளெல்லாம் பாவம் செய்தோர், கடைசி நேரத்தில் "சங்கரா... சங்கரா...' என கடவுளை அழைத்துப் பரிகாரம் தேட நினைத்ததுபோல!

____________

காந்தி தேசம்

mavalianswers

சி. கார்த்திகேயன், சாத்தூர்

காந்தியின் நினைவு நாள் எந்த விதத்தில் மரியாதை செய்யப்பட்டது?

காந்தி சுட்டுக்கொல்லப்பட்ட ஜனவரி 30-ஆம் தேதியை ஒவ்வொரு ஆண்டும் காந்திக்கான நினைவுநாளாக மட்டுமின்றி, சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரின் நினைவாக தியாகிகள் தினமாகவும் கடைப்பிடிப்பது வழக்கம். அரசு அலுவலகங்களில் வன்முறை-மதவெறி ஆகியவற்றுக்கு எதிரான உறுதிமொழி எடுப்பது வழக்கம். காந்தியவாதிகளும் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சியினரும் காந்தி நினைவைப் போற்றும் வகையில் பல நிகழ்ச்சிகளை நடத்துவார்கள். ஆனால், இந்த ஆண்டு காந்தியின் நினைவுநாளில் இதற்கு நேர்மாறான நிகழ்ச்சியை உத்திரப்பிரதேச மாநிலம் அலிகாரின் அகில இந்திய இந்து மகாசபா என்ற அமைப்பு கையில் எடுத்தது.

அந்த அமைப்பின் தேசிய செயலாளரான பூஜாஷகூன் பாண்டே என்ற பெண், காந்தியின் முழு உருவ படத்திற்கு முன் ஒரு துப்பாக்கியைப் பிடித்தபடி நின்றார். அவரைச் சுற்றியிருந்த ஆட்களிடமிருந்து, “"இது ஒரு ஃபோட்டோ செஷன்'’என்ற குரல் ஒலித்ததுடன், காந்தியை சுட்டுக்கொன்ற கோட்சேவை வாழ்த்தி முழக்கங்கள் ஒலித்தன. அதன்பின் பூஜாஷகூன் பாண்டே தன் கையில் வைத்திருந்த துப்பாக்கியால் காந்தியின் இடுப்புக்குக் கீழே சுட, அந்தப் படத்தின் பின்பக்கத்தில் இணைக்கப்பட்டிருந்த பலூன் வெடித்து அதிலிருந்து ரத்தம் வழிவது போல சிவப்பு நிற திரவம் வழிந்தது. உடனே அவரைச் சுற்றி நின்றவர்கள், "மகாத்மா கோட்சே வாழ்க...', "இந்து மகாசபா வாழ்க' என முழக்கங்களை எழுப்பினர். கோட்சேவின் படத்துக்கும் மாலையிடப்பட்டது. பூஜாவின் கணவர், ""எங்கள் பிள்ளைகளுக்கு கொலை செய்ய பயிற்சி அளிக்கப்படுகிறது'' என்றார். இவையனைத்தும் வீடியோவாக பதிவு செய்யப்பட்டு சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டன.

காந்தியை சுட்டுக் கொன்ற கோட்சே பயிற்சி பெற்றதும் இந்து மகா சபாவில்தான். தற்போதும் அதே பெயரில் கோட்சேவைக் கொண்டாடி காந்தியை சுடுகிறார்கள். பிரதமர் மோடியையோ அவர் கட்சியையோ விமர்சித்தால் "ஆன்ட்டி இந்தியன்' முத்திரை குத்தப்பட்டு, கைது செய்து சிறையில் அடைக்கும் நாட்டில், தேசப்பிதா என்பவரை துப்பாக்கியால் சுட்டு இழிவுபடுத்திய ஆட்கள் மீது நடவடிக்கை எடுக்க ஒரு வார காலமானது.