தாராலட்சுமி, வேலூர்(நாமக்கல்)

உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் புதிதாக 3 லட்சம் கோடிக்கு முதலீடு நடந்திருக்கிறதே?

2015-ல் 2 லட்சத்து 42 ஆயிரத்து 160 கோடி முதலீடு செய்யப்பட்டதாகச் சொன்னார்கள், அது எங்கே என்று தேடிக் கண்டுபிடிக்க முடியவில்லை. இப்ப இந்த 3 லட்சம் கோடியை வேறு எத்தனை ஆண்டுகளுக்குத் தேடப்போகிறோமோ!

சோ.பூவேந்த அரசு, சின்னதாராபுரம்-639 202

Advertisment

திரும்பவும் மோடியே ஆட்சியமைக்கும் சூழ்நிலை அமைந்தால், அரசியல் எதிரிகள் பழிவாங்கப்படுவது திண்ணம்தானே?

திண்ணமாக... அரசியல் எதிரிகள் நேரடியாகவும், வாக்களித்த மக்கள் மறைமுகமாகவும்.

வி.கார்மேகம், தேவகோட்டை

Advertisment

இந்திய அரசியலில் ஜார்ஜ் பெர்னாண்டஸின் பங்கு என்ன?

காங்கிரசுக்கு மாற்றாக உருவான தலைவர்களில் ஜார்ஜ் பெர்னாண்டஸ் முக்கியமானவர். கர்நாடகாவின் மங்களூரில் பிறந்த அவரை கிறிஸ்தவ பாதிரியாக்குவதற்காக மும்பைக்கு அனுப்பி வைத்தனர் குடும்பத்தினர். அவரோ சோசலிச சிந்தனை கொண்ட தொழிற்சங்கவாதியாக மாறினார். 1974-ல் அவர் முன்னின்று நடத்திய ரயில்வே தொழிலாளர்கள் போராட்டம் இந்தியாவையே கிடுகிடுக்க வைத்தது. எமர்ஜென்சி காலத்தில் அவரது ஜனநாயகக் குரல் பலமாக ஒலித்தது. அன்றைய தமிழக முதல்வர் கலைஞரின் ஆதரவால், அவர் தமிழ்நாட்டில் பாதுகாப்பாக இருந்தார். 1976-ல் தி.மு.க. ஆட்சி கலைக்கப்பட்ட பின்னர், பரோடா வெடிகுண்டு வழக்கில் கைது செய்யப்பட்டார் பெர்னாண்டஸ். 1977-ல் காங்கிரஸ் வீழ்த்தப்பட்டு, ஜனதா ஆட்சி அமைந்தபோது அதில் அமைச்சரானதுடன் கோகோகோலா போன்ற வெளிநாட்டு குளிர்பானங்களுக்கு தடை விதித்தார். வி.பி.சிங், வாஜ்பாய் ஆட்சிக்காலங்களிலும் செல்வாக்குமிக்க அமைச்சராக இருந்து எளிய மக்களைப் பற்றி சிந்தித்தார். தமிழீழக் கோரிக்கைக்கு ஆதரவளித்த வடஇந்தியத் தலைவர்களில் பெர்னாண்டஸ் குறிப்பிடத்தக்கவர். காங்கிரஸ் எதிர்ப்பு என்கிற ஒரே கோணத்தில் நகர்ந்த அவர் அரசியலும், சொந்தக் கட்சியினரிடையே ஏற்பட்ட முரண்பாடுகளும் அவரது வளர்ச்சியை முடக்கின. பெர்னாண்டஸின் கடைசிக் காலம் அரசியல்களத்திலும் உடல்நிலையிலும் முடங்கியே இருந்தது. எனினும், ஜனநாயக ரீதியான போர்க்குணத்திற்கு அவர் சிறந்த எடுத்துக்காட்டு.

எம்.முஹம்மது ரபீக் ரஷாதீ, விழுப்புரம்

"ஜெயலலிதா, தண்டிக்கப்பட்ட குற்றவாளியல்ல என்பதால் மெரினாவில் அரசு செலவில் அவருக்கு நினைவு மண்டபம் கட்டலாம்' என உயர்நீதிமன்றம் சொல்லியிருக்கிறதே?

குன்ஹா கோர்ட் போலவே சுப்ரீம்கோர்ட்டும் குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளது என்றே தீர்ப்பளித்துள்ளது. எனவே ஜெ. உள்ளிட்ட நால்வரும் குற்றவாளிகள்தான். சுப்ரீம்கோர்ட்டின் தீர்ப்பு வருவதற்கு முன்பு ஜெயலலிதா மரணமடைந்துவிட்டார் என்பதால் அவருக்குத் தண்டனை வழங்க முடியவில்லை. அவர் தண்டிக்கப்படவில்லை என்றாலும், குற்றம் நிரூபிக்கப்பட்டிருப்பதால் குற்றவாளிதானே! ஏ-1 ஆன ஜெ.வே குற்றவாளி இல்லை என்றால் மற்ற மூவரும் ஏன் சிறையில் இருக்கவேண்டும்? நீதிமன்றம் பல விசித்திரமான வழக்குகளை சந்திக்கும். அதில், ஜெ. சம்பந்தப்பட்ட வழக்குகள் எல்லாமே விசித்திரங்கள்தான்.

மா.சந்திரசேகர், மேட்டுமகாதானபுரம்

60 வயதுக்கு மேற்பட்ட துறவிகளுக்கு ஓய்வூதியத் திட்டத்தை அறிவித்துள்ளாரே உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத்?

துறவிகள் என்றாலும் அவர்களாலும் வயிற்றைத் துறக்க முடியாது என்ற உண்மையை உணர்த்தியிருக்கிறார் யோகி.

______________

காந்தி தேசம்

மேட்டுப்பாளையம் மனோகர், கோவை-14

உலகமே போற்றும் மகாத்மா காந்திக்கு தரும் முக்கியத்துவத்தைவிட அவரை சுட்டுக் கொன்ற கோட்சேவுக்கு மரியாதை தருபவர்கள் பா.ஜ.க.வில் இருக்கிறார்களே?

mavalianswers

கோட்சேவைக் கொண்டாடுவது என்பது நேரடியான பா.ஜ.க.வினரைவிட அதன் பல்வேறு பரிவாரங்களில் இடம்பெற்றிருப்பவர்களின் திட்டமிட்ட அணுகுமுறை. ஆட்சிக்கு வருவதற்கு முன்பாக பா.ஜ.க. தலைவர்கள் சிலரும் இதில் ஆர்வம் காட்டிவந்தனர். இந்து சனாதன தர்மத்தை நிலைநாட்டுவதற்காகவே காந்தியை கோட்சே சுட்டுக்கொன்றான் என்பது இந்துத்வா அமைப்பினரின் வாதம். இத்தனைக்கும், காந்தியும் சனாதனத்திற்கும் வருணாசிரமத்திற்கும் எதிரானவர் இல்லை. இந்துமதத்தின் இந்தப் பிரிவினைக் கோட்பாட்டைக் கடைப்பிடித்தபடியே, மற்ற மதங்களுடனான இணக்கத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் என விரும்பியவர் காந்தி. இந்து-முஸ்லிம் பாய்... பாய்... (சகோதரர்கள்) என்று காந்தியும் காங்கிரஸ்காரர்களும் முன்வைத்த முழக்கத்தை இந்துத்வா சக்திகள் ஏற்கவில்லை.

"இந்து மகாசபை' என்ற அமைப்பில் பயிற்சி பெற்றவரான கோட்சே, பின்னர் அதிலிருந்து விலகுகிறார். ஆனாலும், இந்துத்வா அமைப்பைச் சேர்ந்தவர்களின் ஒத்துழைப்புடன் காந்தியைக் கொலைசெய்யத் திட்டமிடுகிறார். இறுதியில், 1948-ஆம் ஆண்டு ஜனவரி 30-ந் தேதி வெள்ளிக்கிழமை மாலை 5:17 மணிக்கு பிரார்த்தனைக்காக வந்த காந்தியை, கோட்சே நேருக்கு நேர் நின்று சுட்டுக்கொன்றான். அப்போது அங்கிருந்தவர்கள் கோட்சேவை சுற்றி வளைத்து தாக்கிப் பிடித்தனர். அப்போது தனது கையில் "இஸ்மாயில்' என்று கோட்சே பச்சை குத்தியிருந்தது தெரிந்தது. அதாவது, காந்தியை சுட்டுக்கொல்லும்போது, தன்னை அங்கிருப்பவர்கள் கொல்ல நேர்ந்தால், தன்னை ஒரு முஸ்லிமாக அடையாளம் காட்டி, அதன் மூலம் காந்தியைக் கொன்ற பழியை முஸ்லிம்கள் மீது போடுவதுதான் இந்து மகாசபையில் பயிற்சி பெற்ற கோட்சேவின் நோக்கம். அவரைக் கொண்டாடுபவர்களின் நோக்கம் என்னவோ!