பா.சத்ரியன், பாகாநத்தம்

ஜெயலலிதா, ஓ.பி.எஸ்., ஈ.பி.எஸ் ஆகிய மூன்று முதல்வர்களைப் பார்த்த அ.தி.மு.க. மந்திரிகளும் எம்.எல்.ஏ.க்களும் தங்களை வாழவைத்த தெய்வம் என்று யாரை நினைப்பார்கள்?

2016-ல் ஆட்சி அமைக்க வாய்ப்பிருந்தும் தேர்தல் வியூக அலட்சியத்தால் வெறும் 1.1% வாக்கு வித்தியாசத்தில் கோட்டை'யை விட்ட தி.மு.க.வையும், 500 ரூபாய் தாளுக்கு நன்றி காட்டிய வாக்காளர்களையும்தான்.

மா.சந்திரசேகர், மேட்டுமகாதானபுரம்

Advertisment

"அடுத்த ஆண்டு முதல் தமிழ்நாட்டில் ஒரே கல்விமுறை' என்கிறாரே செங்கோட்டையன்?

சி.பி.எஸ்.இ. பள்ளிகளுக்கு மாநில அரசு தாராளமாக அனுமதி வழங்கிவரும் நிலையில், ஒரே மாதிரியான கல்விமுறை என்பது வெற்றுப் பேச்சுதான். போராட்டம் நடத்தும் ஆசிரியர்கள், தங்களுக்கு ஒரேமாதிரியான ஊதியத்தை முறைப்படுத்தும்படி கேட்கிறார்கள். அது அரசாங்கத்தின் காதிலேயே விழமாட்டேன் என்கிறது.

தாராலட்சுமி, வேலூர் (நாமக்கல்)

Advertisment

dhanush

தனுஷின் "ரவுடி பேபி' பாடல் தாறுமாறாக ஹிட் ஆகியிருக்கிறதே?

தனுஷுக்கு இது புது அனுபவம் அல்ல. ஏற்கனவே "3' படத்தில் அவர் பாடிய "ஒய் திஸ் கொலவெறி' பாட்டு ஆடியோவாக வெளியானபோதே வைரலாக ஹிட் ஆனது. "கொலவெறி' என்கிற ஒரு தமிழ் வார்த்தையைத் தவிர மற்றதெல்லாம் ஆங்கில வார்த்தைகளாக இருந்த அந்தப் பாடல் தமிழர்களிடம் மட்டுமின்றி மற்ற மொழிக்காரர்களின் உதட்டிலும் ஏறியது. அதுபோல, "மாரி 2' படத்தில் இடம்பெற்ற "ரவுடி பேபி' பாட்டும் சக்கைப் போடு போட்டு ஹிட்டாகியிருக்கிறது. தனுஷின் தோற்றம் நம் பக்கத்து வீட்டுப் பையன்போல இருக்கும். அவர் பாடுவதும் ரொம்ப எளிமையான முறையில் இருக்கும். அதற்கான டியூன், வார்த்தைகள் எல்லாமும் அப்படியே! அதனால்தான் தனுஷ் பாடிய இந்த இரண்டு பாடல்களும் எல்லாராலும் எளிதாகப் பாடமுடிந்து ஹிட்டடித்துள்ளன. அதுவும் மியூசிக்கலி-டிக்டோக் யுகத்தில் "ரவுடி பேபி' பாட்டில் வரும் "மை டியர் மச்சான்.. மனச வச்சான்' வரிகளை வயது பேதமின்றி பலரும் ரசித்துப்பாடி "ஆக்ட்' கொடுக்கிறார்கள். பாட்டு ஹிட் ஆன அளவுக்கு "கொலவெறி' பாடல் இடம் பெற்ற படமும், "ரவுடி பேபி' பாட்டு இடம் பெற்ற படமும் ஓடவில்லை என்பதையும் கவனிக்க வேண்டும்.

ஆர்.கார்த்திகேயன், ஜோலார்பேட்டை

இந்திய கிரிக்கெட் வீரர்கள் ராகுல், பாண்டியா இருவரும் பெண்களைத் தரக்குறைவாகப் பேசி, நடவடிக்கைக்குள்ளாகி இருக்கிறார்களே?

mavalianswers

காபி குடிப்பதற்காக கரண் ஜோஹரின் டி.வி. நிகழ்ச்சிக்கு சென்றவர்கள், காக்டெயில் பார்ட்டிக்குப் பின் கமெண்ட் அடிப்பதுபோல பெண்களைப் பற்றிப் பேச, அதுவே வினையாகிவிட்டது. வீரர்கள், விளையாட்டில் சீரியஸா இருக்கணும். சீரியஸா இருக்க வேண்டிய இடத்தில் விளையாட்டா நடந்துக்கக்கூடாது.

பி.மணி -குப்பம், ஆந்திரா

"அடுத்த ஆண்டு இறுதிக்குள் கங்கை நதி தூய்மையாக்கப்படும்' என்கிறாரே மத்திய அமைச்சர் நிதின் கட்கரி?

கடந்த எம்.பி. தேர்தலுக்குமுன் பிரதமர் வேட்பாளராக்கப்பட்ட மோடி என்ன சொன்னாரோ, அதையே மோடி ஆட்சி முடியும் நிலையில், பா.ஜ.க.வின் அடுத்த பிரதமர் வேட்பாளர் லிஸ்ட்டில் உள்ள கட்கரி சொல்கிறார். பா.ஜ.க.வுக்கு எப்போதும் "ஒரே பேச்சு'தான்!

_____________

காந்தி தேசம்

அயன்புரம் த.சத்தியநாராயணன், சென்னை-72

காந்திஜி முதன்முதலில் சிறை சென்றது எந்தப் போராட்டத்திற்காக?

இந்தியாவின் சிறைக்கு முன்பாகவே தென்னாப்பிரிக்காவின் சிறையைப் பார்த்தவர் காந்தி. அங்குதான் அவரது சத்தியாக்கிரகப் போராட்டம் தொடங்கியது. தென்னாப்பிரிக்காவின் டிரான்ஸ்வால் பகுதியில் இந்தியர்களின் உரிமைகளைப் பறிக்கும்வகையில் 1885-ல் தொடங்கி 1906-ஆம் ஆண்டுவரை சிறப்பு சட்டங்களும் சட்டத்திருத்தங்களும் நிறைவேற்றப்பட்டன. இந்தியர்கள் ஒவ்வொருவரும் "தலை வரி' என்ற பெயரில் மூன்று பவுண்டுகள் செலுத்தவேண்டும். அவர்களுக்கென்று ஒதுக்கப்பட்ட நிலங்களில்தான் அவர்கள் இருக்க முடியும். அதுவும்கூட அவர்களுக்கு உரிமையாகாது. வாக்குரிமையும் கிடையாது. அதுமட்டுமல்ல, தென்னாப்பிரிக்காவின் பூர்வீக குடிகளையும், நீண்டகாலமாகப் பணியாற்றும் இந்தியர்களையும் கறுப்பர்கள் என்ற வரையறையின்கீழ் கொண்டுவந்து, அவர்களின் உரிமைகளைப் பறிக்கும் பல சட்டங்களை தென்னாப்பிரிக்காவை அடிமைப்படுத்தியிருந்த பிரிட்டிஷ் வெள்ளைக்கார அரசு இயற்றியிருந்தது. இவற்றுக்கெல்லாம் இந்தியர்கள் கட்டுப்பட்டே ஆகவேண்டும் என்பதை தனது சத்தியாக்கிரகப் போராட்டத்தின்மூலம் காந்தி எதிர்த்தார்.

இந்தியர்கள் எல்லோரும் "பாஸ்'’வைத்திருக்க வேண்டும். இரவு 9 மணிக்குமேல் யாரும் அனுமதியின்றி நடமாடக்கூடாது என்பதிலும் காந்திக்கு உடன்பாடில்லை. வழக்கறிஞரான அவர் இந்த சட்டங்களின் கீழ் தன்னைப் பதிவு செய்துகொள்ளவோ பாஸ் வாங்கவோ மறுத்துவிட்டார். இந்தியர்கள் வைத்திருக்க வேண்டிய சிறப்பு ஆவணங்களை எரிக்கவேண்டும் என வலியுறுத்தி அவரே அதனைச் செய்தார். அவரது சத்தியாக்கிரகப் போராட்டத்தில் ஈடுபடுத்திக்கொண்ட இந்தியர்களும் அதனையே செய்தனர். இந்த சட்டமீறலின் காரணமாக, 1908-ஆம் ஆண்டு ஜனவரி 10-ஆம் நாள் காந்தி கைது செய்யப்பட்டு இரண்டுமாத தண்டனை வழங்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதுவே அவரது முதல் சிறைவாசமாகும். அதன்பின் அரசுடன் ஏற்பட்ட பேச்சுவார்த்தையால் ஜனவரி 30-ந் தேதி காந்தி விடுதலை செய்யப்பட்டார்.