லட்சுமி செங்குட்டுவன், வேலூர் (நாமக்கல்)
"முதல்வர் மீதே வழக்கா, இன்னும் தி.மு.க. ஆட்சி வந்தா என்னென்ன நடக்கும்' என எடப்பாடி கேட்கிறாரே?
சேலம் மாவட்டத்துக்காரரான எடப்பாடி பழனிச்சாமி கொஞ்சம் பழைய பக்கங்களைப் புரட்டவேண்டும். சேலத்தில் அங்கம்மாள் காலனி விவகாரத்தில் தி.மு.க.வில் அமைச்சராக இருந்த வீரபாண்டி ஆறுமுகம் மீது நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. அ.தி.மு.க. ஆட்சி வந்ததும் வீரபாண்டி ஆறுமுகத்தை குண்டர் சட்டத்தில் கைதுசெய்து சிறையில் அடைத்தார் ஜெயலலிதா. அதுபோல தி.மு.க. நடக்குமா என்பதில் இருக்கிறது எடப்பாடியின் கேள்விக்கான விடை.
பி.மணி, வெள்ளக்கோவில்
தி.மு.க. தற்போது நடத்தி வரும் கிராமசபை கூட்டம் நாடாளுமன்றத் தேர்தலுக்கு உதவுமா?
ஊராட்சி சபை கூட்டங்களு டன் நடத்தப்படும் பூத் கமிட்டி கூட்டம்தான் மிக முக்கியமானது. இரண்டையும் சரிவர நடத்தினால் தேர்தலில் பயன் தரும். பெரம்பலூர் மாவட்டம் பாடாலூர் என்ற ஊராட்சியில் ஒரு சிறிய வீட்டில் இருந்தபடி ஃபேஸ்புக்கில் தி.மு.க.விற்காகப் பரப்புரை செய்த மாற்றுத்திறனாளி இளைஞர் விஜய் என்பவரை ஏற்கனவே நேரில் சந்தித்து அவரது சிகிச்சைக்கு உதவியவர் மு.க.ஸ்டாலின். அண்மையில் பாடாலூர் விஜய் மரணமடைந்த நிலையில், அவரது வீட்டிற்குச் சென்று படத்தினை திறந்து வைத்து, கட்சியின் தகவல் தொழில்நுட்ப அணி சார்பில் 10 லட்ச ரூபாய் நிதியையும் ஸ்டாலின் வழங்கியிருக்கிறார். இதுபோல ஊராட்சிகள்தோறும் பலன் எதிர் பாராது கட்சிக்காக பாடுபட்ட -சிறை சென்றவர்கள் மீது மாவட்ட -ஒன்றிய நிர்வாகிகளின் கவனம் திரும்பி, எல்லோரையும் ஒருங்கிணைத்து செயல்பட்டால் நாடாளுமன்றத் தேர்தலில் மட்டு மல்ல, சட்டமன்றத் தேர்தலிலும் தி.மு.க.வுக்கு சாதகமான சூழல் அமையும்.
நித்திலா, தேவதானப்பட்டி
லயோலா கல்லூரியில் இடம்பெற்ற முகிலனின் ஓவியங்கள் கருத்துரிமையா -துவேஷமா?
லயோலாவில் நடந்தது நாட்டுப்புறக் கலை மீட்பு விழா. அந்த வளாகத்தில் இருந்த முகிலனின் ஓவியங்களில் சுட்டிக்காட்டப் பட்ட நிகழ்வுகள் அனைத்தும் இந்த நாட்டில் நடந்த கொடூர உண்மைகள். ஓவியங்கள் வரை யப்பட்டிருந்த விதத்தைவிட வைக்கப்பட்டி ருந்த இடம்தான் சர்ச்சைக்கு காரணமானது. திரிசூலத்தை ஏந்தும் அமைப்பினர் செய்த கொடூரங்களை சிலுவை சின்னம் கொண்ட கல்லூரி வளாகத்தில் வைத்தது கருத்துரிமையா -மத துவேஷமா என்ற விவாதத்தை உருவாக்கி விட்டது. முகிலனின் ஓவியங்கள் ஏற்கனவே சென்னைப் பல்கலைக்கழக வளாகம் உள் ளிட்ட மற்ற இடங்களில் வைக்கப்பட்டபோது சர்ச்சையாக்கப்படவில்லை. லயோலா நிர்வாகம் மன்னிப்பு கோரி, கருத்துரிமையா -துவேஷமா என்ற விவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தாலும், கலைவிழா நடத்திய காளீஸ்வரன் உள்ளிட்ட தோழர்களுக்கு மிரட்டல்கள் தொடர்கின்றன.
அயன்புரம் த.சத்தியநாராயணன், சென்னை-72
புத்தக கண்காட்சி -வர்த்தகப் பொருட் காட்சி ஒப்பிடவும்?
முதல் காட்சி, அறிவுக்கு. இரண்டாவது காட்சி, அலங்காரத்திற்கு. இரண்டுமே குழந்தைகளை ஈர்ப்பதில் போட்டி போட்டன. பெரியவர்களின் பர்ஸைப் பொறுத்து வணிகம் நடந்தது. "இரண்டிலும் அதிகளவில் கவனம் ஈர்த்தவை டெல்லி அப்பளமும் -மிளகாய் பஜ்ஜியும்' என்கிறார்கள் வாசகர்களும் பார்வையாளர்களும்.
அண்ணா அன்பழகன், அந்தணப்பேட்டை
தமிழக அமைச்சரவை மாற்றம் அல்லது விரிவாக்கம் எப்போது?
அமைச்சரவை மாற்றத்தைவிட ஆட்சி மாற்றத்தைத்தான் எதிர்பார்க்கிறார்கள் தமிழ்நாட்டு வாக்காளர்கள்.
______________
காந்தி தேசம்
எஸ்.கதிரேசன், பேரணாம்பட்டு
அண்ணல் காந்திக்குப் பிடித்த அரசியல் தலைவர் யார்?
காந்தியின் அகிம்சை வழிக்கு முன்பாகவே, இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சியிடமிருந்து உரிமையைப் பெறுவதில் மிதமான செயல்பாடு உடையோர், தீவிர செயல்பாடு கொண் டோர் என இரு தரப்பினர் இருந்தனர். பாலகங்காதர திலகர் வழியில் செயல் பட்டவர்கள் தீவிரவாதிகள் எனப்பட்டனர். "சுயராச் சியம் எனது பிறப்புரிமை' என திலகர் முழங்கினார். அதற்காக எத்தகைய போராட்டத்தையும் தியாகத்தையும் செய்ய அவர் பின்னால் அணிவகுத்தனர். தமிழ்நாட்டில் வ.உ.சிதம்பரனார், சுப்பிரமணிய சிவா, பாரதியார் உள்ளிட் டோர் திலகர் வழியில் பயணித்தனர். அதேநேரத்தில், கோபாலகிருஷ்ண கோகலே தலைமையிலான அணியினர் மென்மையான போக்கைக் கடைப்பிடித்தனர். திலகர், கோகலே இருவருமே மகாராஷ்ட்ரா மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். இந்திய தேசிய காங்கிரஸ் (1885) தொடங்கப்பட்ட 4 ஆண்டுகளில் (1889) அதில் சேர்ந்த கோகலே, அடுத்த 6 ஆண்டுகளில் (1905) அதன் தலைவராகத் தேர்வானார். அவர்தான் காந்தியைக் கவர்ந்த தலைவராக இருந்தார்.
லண்டனில் படித்த போதும், தென்னாப்பிரிக்காவில் சத்யாகிரகத்தைத் தொடங்கியபோதும் காந்திக்கு ஆதர்சமான தலைவர் கோபாலகிருஷ்ண கோகலேதான். அவரை, தனது அரசியல் குரு என்பதை வெளிப்படையாகவே சொன்ன காந்தி, அதனைப் புத்தகமாகவும் எழுதியுள்ளார் (ஏர்ந்ட்ஹப்ங், ஙஹ் டர்ப்ண்ற்ண்ஸ்ரீஹப் ஏன்ழ்ன்). காந்தியின் அழைப்பை ஏற்று 1912-ல் தென்னாப்பிரிக்காவுக்குச் சென்றார் கோகலே. பல தரப்பையும் ஈர்க்கக்கூடியவராக கோகலே இருந்தார். காந்தியைப் போலவே ஜின்னாவுக்கும் கோகலேதான் அரசியலில் முன்னோடி. கோகலேவும் திலகரும் எதிரெதிர் துருவங்களாக இருந்தபோதும், 49 வயதில் கோகலே மறைந்தபோது... அவருடைய இறுதிச்சடங்கில் பேசிய திலகர், "இந்தியாவின் வைரம், மராட்டியத்தின் அணிகலன், தொழிலாளர்களின் இளவரசன் தெய்வீக உறக்கம் கொள்கிறார்' என புகழஞ்சலி செலுத்தினார்.