எம்.முஹம்மது ரபீக் ரஷாதீ, விழுப்புரம்
கேள்வி கேட்பது ஒன்றும் மரியாதைக் குறைவான விஷயம் இல்லையே?
கேள்வி கேட்பதும் பதில் பெறு வதும் ஆரோக்கியமான உரையாடலின் அடையாளம். கட்சித் தலைவர்களும் மக்கள் பிரதிநிதிகளும் கேள்விகளுக் குள்ளாகும் போது அதுவே பெரிய செய்தியாகிவிடுகிறது. கடந்த பல பத்தாண்டுகளாக தலைவர்கள் என் றாலே வானத்திலிருந்து குதித்தவர் என நினைத்திருந்த மனநிலை மக்களிடம் மாறியிருப்பதே இதற்கான காரணம். ஆனால், கட்சித் தலைவரிடம் கேட்கப் பட்ட கேள்வியை திசை திருப்பி, மோசடியாக வெளியிடுவது கேவலம். துபாயில் ராகுலிடம் சிறுமி கேள்வி கேட்டு பதில் பெற்றதை திசை திருப்ப நினைத்து அவமானப்பட்ட ஆடிட்டர் குருமூர்த்திகளின் செயலைப்போல!
வண்ணை கணேசன், பொன்னியம்மன் மேடு
"தாஜ்மகாலைப் பார்த்து அன்பைக் கற்றுக்கொள்ளுங்கள்' என்று மோடிக்கு அகிலேஷ் யாதவ் அட்வைஸ் செய்திருக்கிறாரே?
பாபர் மசூதியைப் பார்த்து வெறுப்புணர்ச்சியை விதைத்த கட்சியினரிடம் தாஜ்மகாலைப் பார்த்து அன்பைக் கற்றுக் கொள்ளச் சொல்வது, கசாப்பு கடைக்காரரிடம் கருணையை எதிர்பார்க்கும் ஆட்டுக்குச் சமம்.
நெய்வேலி க.தியாகராசன், கொரநாட்டுக்கருப்பூர்
நிர்வாணமாகத் திரியும் அந்தமான் பழங்குடியினருக்கும் சாமியார்களுக்கும் என்ன வித்தி யாசம்?
உலகம் அறியாமல் காட்டு மிராண்டித்தனத்துடனேயே செயல்படுபவர்கள் அந்தமான் பழங்குடியினர். உலகின் நவீன வசதிகளையும் போதைகளையும் அனுபவித்தபடி காட்டுமிராண்டிகள்போல காட்டிக் கொள்பவர்கள் சாமியார்கள்.
நித்திலா, தேவதானப்பட்டி
ராகுலைப் பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தி விட்டு, மம்தா பானர்ஜியின் கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டது சரியா?
கண்ணதாசோ... யேசுதாசோ என்கிற வடிவேலு போலத்தான் இதுவும்! கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் ஜெயிக்கக்கூடாது என முடிவு செய்து விட்டால் இந்தியாவுக்கு கப் வாங்கும் வாய்ப்பு இல்லாவிட்டாலும் வெஸ்ட் இண்டீஸாவது வாங்கிட்டுப் போகட்டும் என்று நினைப்பது போலத்தான்! பா.ஜ.க. ஆட்சி மீண்டும் வரக்கூடாது என்பதுதான் இலக்கு. எதிர்க்கட்சிகள் ஒற்றுமையாக இல்லாவிட்டால் பா.ஜ.க.வுக்கு சாதகமாகிவிடும் என கொல்கத்தாவில் மு.க.ஸ்டாலின் பேசியது மிகச்சரி.
ஏழாயிரம் பண்ணை எம்.செல்லையா, சாத்தூர்
மோடிக்கு பிலிப்-கோட்லர் விருது அளிக்கப் பட்டிருக்கிறதே?
அரசியல்வாதியான மோடிக்கு மார்க்கெட்டிங்துறை வல்லுநரும் பொருளாதார எழுத்தாளருமான பிலிப் கோட்லர் உருவாக்கிய விருது வழங்கப்பட்டிருக்கிறது. மோடி அதற்கு முற்றிலும் பொருத்தமானவர். வெளிநாடுகளில் கட்டப்பட்டவைகளை "குஜராத் மாடல்' என அரசியல் களத்தில் மார்க்கெட்டிங் செய்து, மக்களின் மனதை வென்று, ஆட்சியையும் பிடித்த மோடியைவிட இந்த விருதுக்குப் பொருத்தமானவர் வேறு யார் இருக்க முடியும்?
உமரி பொ.கணேசன், மும்பை-37
பொதுப்பிரிவினரில் ஏழையருக்கு 10% இடஒதுக்கீடு என்கிற மத்திய அரசு, வேலையை எங்கிருந்து கொடுக்கப் போகிறது எனக் கேட்கிறதே சிவசேனா?
இதுதான் கரடியே காறித்துப்பிய மொமண்ட்... .. மண்டல் கமிஷன் அடிப்படையில் இதர பிற்படுத்தப் பட்டவர்களுக்கு 27% இடஒதுக்கீடு நடைமுறைக்கு வந்தபிறகு, அடுத்து வந்த மத்திய ஆட்சியாளர்களால் அரசு வேலைவாய்ப்புகள் குறைந்து கொண்டே வருகின்றன. இதில் உயர்சாதி ஏழையருக்கு 10% என்பதும் பெரிய ஏமாற்று வேலை.
_____________
காந்தி தேசம்
வீ.ஹரிகிருஷ்ணன், புத்தூர், திருச்சி-17
"காந்தி கணக்கு' என்ற சொல் எதனால் தோன்றி யது, இதற்கும் காந்திக்கும் தொடர்பு உண்டா?
செத்தவர்கள் பெயரில் உள்ள வரவு-செலவு கணக்கு பயனில்லாதது என்பது பொதுவான நடைமுறை. ஒருவர் வேறு யாருக்கும் தெரியாமல் தன் விருப்பத்துக்காக கடன் வாங்கிவிட்டு செத்துப் போனால் அந்தப் பணத்தை அவரின் குடும்பத்திடமிருந்தோ வாரிசுகளிடமிருந்தோ வசூலிப்பது கடினம். இந்தியா என்ற 125 கோடி மக்கள்தொகை கொண்ட குடும்பத்தின் தந்தை, காந்தி. அவர் இப்போது உயிருடன் இல்லை. எனவே, அவருடைய தேசத்தில் உள்ள வாரிசுகள் டீக்கடையில் தொடங்கி நகை அடமானக்கடை வரை வைக்கும் கடனைத் திருப்பி செலுத்த முடியாவிட்டால் அது "காந்தி கணக்கு' என்று சொல்லப்படுகிறது. உண்மையில், காந்திக்கும் இந்தக் கணக்குக்கும் சம்பந்தமில்லை.
காந்தியைப் பொறுத்தவரை, அவர் எதையும் கணக்கிட்டே செலவு செய்தார். எது வரவு என்பதைவிட எப்படிப்பட்ட வரவு என்பதை அறிந்தே இருந்தார். அதற்கேற்பவே செயல்பட்டார். செலவுக் கணக்குகளை சரியாகக் குறித்து வைத்தார். பணத்தை செலவு செய்வதைவிடவும், நேரத்தை செலவு செய்வதில் ரொம்பவும் அக்கறை செலுத்தினார். நேரத்தைவிட பெரிய செல்வம் இல்லை என்பதை உலகப் பெருந் தலைவர்கள் பலரும் தங்கள் வாழ்க்கையின் மூலம் உணர்த்தியிருக்கிறார்கள். காந்தியும் அப்படித்தான். தன்னுடைய பிரார்த்தனை நேரம், பேட்டி நேரம் உள்ளிட்ட எல்லாவற்றையும் கணக்கிட்டே செலவிட்டார். எல்லாவற்றிற்கும் நேரம் ஒதுக்குவது எப்படி என்பது அவருக்குத் தெரிந்திருந்தது. சுதந்திரப் போராட்டப் பணிகளுக்கு நடுவிலும் சபர்மதி ஆசிரமத்தில் சிறுகுழந்தைகளைப் பராமரிக்க அவருக்கு நேரம் கிடைத்தது. காந்தியின் கணக்கு பலவும் தவறியதேயில்லை. பிறப்பிலேயே ஏற்றத்தாழ்வு காட்டும் இந்து மதத்தின் வருணாசிரமத்தை ஆதரித்தபடி, மதநல்லிணக்கத்தை வளர்க்க முடியும் என்கிற அவரின் கணக்கு மட்டும், கோட்சேவின் துப்பாக்கித் தோட்டாவால் சிதைக்கப்பட்டது.