திராதி, துடியலூர், கோவை
சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் வதந்தி குறித்து?
உயிர்க் கொல்லி நோயைவிட பயங்கரமானது இந்த மனக் கொல்லி நோய். இதனை பரப்புகிறவர்களும் வக்கிரம் நிறைந்த மனநோயாளிகளே!
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/mavalianswers_52.jpg)
பிரதீபா ஈஸ்வரன், தேவூர்மேட்டுக்கடை
இன்றைய தமிழக அரசைப் பாராட்ட வேண்டும் என்றால் எதற்காகப் பாராட்டுவீர்கள்?
பிளாஸ்டிக் ஒழிப்பை முழுமையாக மேற்கொள்ளாவிட்டாலும், 14 வகை பிளாஸ்டிற்குத் தடை என்ற வகையில், வாழை இலையில் மீண்டும் பார்சல் கட்ட வைத்ததற்காக!
மேட்டுப்பாளையம் மனோகர், கோவை-14
அரசு கல்விக் கூடங்களும் மருத்துவமனைகளும் ஏழை-எளிய மக்களுக்கு மட்டுமே என்ற நிலை பெருமையானதா?
ஏதுமற்ற ஏழையருக்கு உள்ள வாய்ப்பு அரசு கல்விக்கூடங்களும் அரசு மருத்துவமனைகளும் மட்டும்தான் என்பதே தற்போதைய நிலைமை. எவ்வளவு வசதியாக இருந்தாலும் இவை இரண்டுக்குமே வந்தாகவேண்டும் என்ற சூழல் உருவானால்தான் பெருமை.
கே.மணி, விஜயராகவபுரம்
புத்தகங்கள் வாங்குவதால் யாருக்கு லாபம்; எழுத்தாளருக்கா -பதிப்பாளருக்கா -வாசகருக்கா?
வாங்குபவர் வாசகர். அவரால் உடனடி லாபம் அடைபவர் பதிப்பாளர். வாங்கப்பட்ட புத்தகத்தில் இருப்பவை வாசகரைக் கவர்ந்தால் அவருக்கு லாபத்தைத் தருகிறார் எழுத்தாளர். அதன் காரணமாக, தொடர்ச்சியாகப் புத்தகங்கள் வாங்கி அந்த எழுத்தாளருக்கு லாபம் தருகிறார் வாசகர். புத்தகம் என்பது அனைவருக்கும் லாபம் தரக்கூடிய அறிவின் முதலீடு.
ஏழாயிரம் பண்ணை எம்.செல்லையா, சாத்தூர்
எஸ்.வி.ரங்காராவ், எஸ்.வி.சுப்பையா, சிவாஜி, மேஜர் சுந்தர்ராஜன், டி.எஸ்.பாலையா, டி.கே.பகவதி இவர்களில் அப்பா வேடத்தில் சிறப்பாக நடிப்பவர் யார்?
"தெய்வ மகன்', "தங்கப்பதக்கம்', "திரிசூலம்' என, பல படங்களில் அப்பா வேடத்தில் அசத்தியவர் சிவாஜி. அவரது ஜெராக்ஸ் காப்பி போல தன் நடிப்பாற்றலை வெளிப்படுத்தியவர் மேஜர் சுந்தர்ராஜன், நாடக மேடையில் சாதித்தவர்களான டி.கே.பகவதி, எஸ்.வி.சுப்பையா இருவரும் அதே பாணியைத் திரையில் வெளிப்படுத்தியவர்கள். டி.எஸ்.பாலையா குணச்சித்திரம் -நகைச்சுவை -வில்லத்தனம் என எல்லாவற்றிலும் தனி பாணியையும் தனித்துவமான குரலையும் வெளிப்படுத்தியவர். எனினும், அப்பா என்ற கதாபாத்திரத்திற்காகவே பிறந்தவர் போன்ற ஆஜானுபாகுவான தோற்றமும் அதிலிருந்து வெளிப்படும் கம்பீரம்+கனிவு கலந்த குரலும் எஸ்.வி.ரங்காராவையே முதலிடத்தில் நிறுத்துகிறது.
எம்.முஹம்மது ரபீக் ரஷாதீ, விழுப்புரம்
"இந்தியா, பொருளாதாரத்தில் சீனாவை மிஞ்சும்' என்கிறாரே தமிழிசை?
சீனாவை மிஞ்சட்டும்... அமெரிக்காவையும் மிஞ்சட்டும்... நான்கரை ஆண்டுகளாக கடும் பாதிப்புக்குள்ளாகியிருக்கும் இந்திய மக்களுக்கு என்ன மிஞ்சியுள்ளது என்பதை அவர் சொல்லட்டும்.
அயன்புரம் த.சத்தியநாராயணன், சென்னை-72
மஞ்சப் பை வாங்கி விட்டீர்களா?
ப்ளாஷ்டிக் டூத்பிரஷ், பிளாஸ்டிக் குப்பியில் அடைக்கப்பட்டுள்ள டூத்பேஸ்ட், வாய் கொப்பளிக்க பிளாஸ்டிக் மக், அதன்பின் சாப்பிட பிளாஸ்டிக் பையில் நிரப்பப்பட்ட சிப்ஸ், இன்ன பிற பொருட்களையும் வாங்கி, அதை எடுத்து வருவதற்காக மஞ்சப்பை வாங்கியாச்சு.
________________
காந்தி தேசம்
அண்ணா அன்பழகன், அந்தணப்பேட்டை
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/mavalianswers1_6.jpg)
காந்திஜி குறித்து தமிழரான ஏ.கே.செட்டியார் எடுத்த படத்திற்கும் அட்டன்பரோ எடுத்த படத்திற்கும் என்ன வித்தியாசம்?
காந்தி வாழ்ந்த காலத்திலேயே அவரது பொதுக்கூட்டங்கள், பொது நிகழ்வுகள், போராட்டங்கள் ஆகியவற்றை நேரடியாகப் படம் பிடித்து, "மகாத்மா காந்தி'’என்ற ஆவணப்படத்தை 1940-ல் வெளியிட்டவர் ஏ.கே.செட்டியார் என்கிற ஏ.கருப்பன் செட்டியார். காரைக்குடி அருகிலுள்ள கோட்டையூரில் பிறந்த ஏ.கே.செட்டியார், இந்த ஆவணப்படத்திற்காக 3 கண்டங்களுக்குப் பயணம் செய்தார். 3 ஆண்டுகள் கடுமையாக உழைத்தார். தென்னாப்பிரிக்காவில் காந்தி-கோகலே சந்திப்பு, ராட்டை சுற்றும் நேரு, உப்பு சத்தியாகிரகப் போராட்ட நிறைவு எனப் பல அரிய காட்சிகள் அப்படியே இடம்பெற்றிருந்தன. இதனைப் பின்னர் ஆங்கிலத்திலும் வெளியிட்டார். நீண்டகாலமாக இந்த ஆவணப்படம் கிடைக்காமல் இருந்த நிலையில், வரலாற்றுஆய்வாளர் ஆ.இரா.வேங்கடாசலபதியால் சான்பிரான்சிஸ்கோ பல்கலைக்கழகத்திலிருந்து பெறப்பட்டு, 2006-ல் திரையிடப்பட்டது. ரிச்சர்ட் அட்டன்பரோ என்ற இங்கிலாந்துக்காரர் எடுத்த காந்தி என்பது முழு நீளத் திரைப்படம். காந்தியின் அருகிலிருந்து கவனித்த லூயி ஃபிஷர் எழுதிய புத்தகத்தில் இருந்தவற்றின் அடிப்படையில் எடுக்கப்பட்ட உணர்வுப்பூர்வமான கலைப்படைப்பு. காந்தியாக நடித்த பென் கிங்ஸ்லீ உள்ளிட்டவர்களின் தோற்றப் பொருத்தமும் காட்சிகளும் 3 மணி நேரத்திற்கும் அதிகமாக ஓடக்கூடிய திரைப்படத்தைத் தொய்வின்றிப் பார்க்க வைத்ததுடன், ஆஸ்கர் உள்ளிட்ட சர்வதேச விருதுகளைப் பெற வைத்தது.
தமிழர் ஏ.கே.செட்டியார் எடுத்த படம், "மகாத்மா காந்தி' என்ற பெயரில் உண்மையான காந்தியைப் பதிவு செய்தது. பிரிட்டிஷ்காரர் அட்டன்பரோ எடுத்த படம், "காந்தி' என்ற பெயரில் அவரை மகாத்மாவாகக் காட்டியது. இரண்டும் வெவ்வேறு தளம். ஆனாலும், உழைப்பில் இரண்டும் உயர்ந்த தரம்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2019-01-08/mavalianswers-t.jpg)