மு.செ.மு.புகாரி, சித்தார்கோட்டை

மக்களுக்கு பணியாற்ற அமர்த்தப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் -அமைச்சர்கள் பொன்னான நேரத்தில் மணிக்கணக்கில் விசாரணை வலைக்குள் சிக்கிக் கொள்கிறார்களே?

பொன்னான நேரம் அனைத்தும் பொன்னாக மாறவேண்டும் எனக் கடுமையாக உழைப்பதனால் விசாரணை வலைகளில் சிக்கவும் செய்கிறார்கள். அந்த வலைகளை அறுத்துக் கொண்டு வெளியே வரவும் செய்கிறார்கள்.

பிரதீபா ஈஸ்வரன், தேவூர் மேட்டுக்கடை

Advertisment

"பொன்மாணிக்கவேல் நேர்மையான அதிகாரி என்று யார் சொன்னது' என்று அமைச்சர் சி.வி.சண்முகம் கேட்கிறாரே?

அதிகாரிகளை அமைச்சர்கள் அறிவார்கள். அமைச்சர்களை அதிகாரிகள் அறிவார்கள். சி.வி.சண்முகம், தான் அறிந்தவற்றைச் சொல்கிறார். ஏற்கனவே, ஓர் இரவு நேரத்தில் போயஸ் கார்டன் வாசலில் மீடியாக்கள் முன்பாக ஓ.பி.எஸ். பற்றியும் அவர் ஓப்பனாக பேசியது நினைவுக்கு வருகிறது.

சி.கார்த்திகேயன், சாத்தூர்

Advertisment

மு.க.ஸ்டாலின் அவசரப்பட்டு ராகுல்காந்தியை பிரதமர் வேட்பாளராக முன்மொழிந்து விட்டாரா?

"மோடிக்கு எதிராக யாருமில்லை' என்ற பா.ஜ.க.வுக்குப் பதில்தரும் வகையில், 3 மாநில தேர்தல் வெற்றிக்குக் காரணமான ராகுல்காந்தியை ஸ்டாலின் முன்மொழிந்தார். இந்தியாவில் மாநில அளவில் செல்வாக்குள்ள மற்ற கட்சிகளின் தலைவர்களுக்கு இது தர்மசங்கடம்தான். அவர்கள் ராகுலை ஏற்பார்களா மாட்டார்களா என்பது நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகுதான் தெரியும். ஆனால் தேர்தலுக்கு முன்பே, தமிழ்நாட்டில் காங்கிரசுக்கு ஒதுக்கப்படும் சீட்டுகளைக் கண்ட்ரோல் பண்ணுவதற்கு ராகுல் பெயர் ஸ்டாலினுக்கு வசதியாக அமைந்துவிட்டது.

mavalianswers

லட்சுமி செங்குட்டுவன், வேலூர்(நாமக்கல்)

தி.மு.க. சார்பாக வடிவேலுவை ஒரு தொகுதியில் நிறுத்தினால் அது தி.மு.க.வுக்கு கெத்து கொடுக்கும்தானே?

தி.மு.க.வுக்கு கெத்தா என்று தெரியாது. வடிவேலுக்கு ரிஸ்க் என்பது மட்டும் நிச்சயம். 2011-ல் தங்கள் கட்சிக்காக தமிழ்நாடு முழுக்க பிரச்சாரம் செய்த வடிவேலுவுக்கு தி.மு.க. தலைமைக் குடும்பத்தினர் உதவ நினைத்திருந்தால் ரெட் ஜெயிண்ட் மூவீசும், க்ளவுட் நைன் மூவீசும் எடுத்த படங்களில் வடிவேலுக்கு வாய்ப்பு கொடுத்திருக்கலாம். அப்படி செய்திருந்தால், மக்களைக் கவர்ந்த ஒரு கலைஞனைத் தமிழ்த் திரையுலகம் இந்தளவு இழந்திருக்காது.

உமரி பொ.கணேசன், மும்பை-32

கலைஞர் சிலை திறப்பு விழாவில் மு.க.அழகிரி கலந்துகொள்ளாதது ஏன்?

திறக்கப்பட்ட சிலை என்பது அறிவாலயத்தில் இருக்கிறது. அறிவாலயம் என்பது தி.மு.க.வின் தலைமையகமாக இருக்கிறது. அழகிரிதான் தி.மு.க.வில் உறுப்பினராகக்கூட இல்லையே!

எம்.செல்லையா, ஏழாயிரம் பண்ணை

ரஜினி சேனல் ஆரம்பிப்பதைப் பார்த்தால் கட்சி ஆரம்பிப்பார் போலத் தெரிகிறதே?

அவர் எதைச் செய்தாலும், கட்சி ஆரம்பிக்கத்தான் என்று எல்லாரும் எதிர்பார்க்கிறார்கள். கட்சி ஆரம்பிப்பதற்குள் இன்னும் என்னென்ன ஆரம்பிப்பாரோ!

பி.ஓம்பிரகாஷ், கொடுங்கையூர்

ஓட்டுப் போடுபவர்களின் மனநிலை எப்படி இருக்கவேண்டும்?

5 ஆண்டுகால ஜனநாயகத்தின் மன்னர்கள் நாம்தான் என்றும், ஒருநாள் வாக்குப் பதிவுக்காக பிச்சைக்காரர்களாகிவிடக்கூடாது என்றும் இருக்கவேண்டும்.

வண்ணை கணேசன், பொன்னியம்மன் மேடு

மம்தா -மாயாவதி -சந்திரபாபு நாயுடு இவர்களின் பிரதமர் கனவு எப்படி?

காங்கிரஸ் விழித்துக்கொள்ளும் வரை, அவர்களின் கனவு நீடிக்கும். ராகுலின் வியூகத்தில் இருக்கிறது மற்றவர்களின் கனவு நனவாகும் காலம்.

_______________

காந்தி தேசம்

பி.மணி, வெள்ளக்கோவில்

மகாத்மா காந்தி என்றதும் நினைவுக்கு வரும் ராட்டை தற்போது எந்த நிலையில் உள்ளது?

கைராட்டையை சுதேசியின் அடையாளமாகக் கையாண்டவர் காந்தி. கிராமப் பொருளாதாரத்தை மேம்படுத்த வேண்டும் என்பது அவரது கொள்கை. இங்கிலாந்தின் மில் துணிகள் இந்தியாவை ஆக்கிரமித்த வேளையில், பிரிட்டிஷ் அரசுக்கு எதிரான ஆயுதமாக ராட்டையைக் கையில் எடுத்தார் காந்தி. அந்நியத்துணி பகிஷ்கரிப்பு என்ற அடிப்படையில் வெளிநாட்டுத் துணிகளை அவர் எரிக்கச் சொன்னபோது, கிலோமீட்டர் நீளத்திற்கு துணிகள் குவிக்கப்பட்டு தீ வைக்கப்பட்டன. அதே நேரத்தில், சுதேசிப் பொருளாதாரத்தின் அடையாளமாகத் தன் ஒவ்வொரு போராட்டத்தின்போதும், "ராட்டைகள் சுழலட்டும்' என மக்களை வலியுறுத்தினார். அவருடன் சேர்ந்து பலரும் ராட்டையில் நூல் நூற்றனர். காந்தியவாதி என்றால் ராட்டையும் அதிலிருந்து உருவான கதர் நூலில் நெய்த துணிகளும் அடையாளமாயின.

இடுப்பில் அரை வேட்டியும், தோளில் துண்டும் ஆடையாக அணிந்த காந்திக்கு கதர்த் துணியே போதுமானதாக இருந்தது. அவரைப் பின்பற்றிய காங்கிரஸ் தலைவர்களுக்கு ஜிப்பா, பைஜாமா, குல்லா, உள்ளாடை என ஏராளமான அளவில் துணி தேவைப்பட்டது. ராட்டையில் நூற்று, தறியில் நெய்த கதராடைகள் நாடு முழுவதும் இருந்த காந்தியவாதிகளுக்கும் காங்கிரஸ் தொண்டர்களுக்கும் போதுமானதாக இல்லை. காந்தி காலத்திற்குப் பிறகு, அவரது நினைவாக கதர் வாரியங்கள் உருவாக்கப்பட்டு, ராட்டை சுழற்றுபவர்களுக்கு வாழ்வளிக்க பல திட்டங்கள் வகுக்கப்பட்டாலும் காலத்தின் வேகமும்-அறிவியல் வளர்ச்சியும் புதுப்புது துணி ரகங்களைக் கொண்டு வந்து சந்தையில் குவித்தன. கதர்கூட கதர் பாலியஸ்டராக உருமாற்றம் பெற்றது. ராட்டை என்பது ஸ்தாபன காங்கிரசின் சின்னமானது. இன்றைக்கு மியூசியத்திலும் பெருந்தலைவர் காமராஜர் நினைவிடத்தின் முகப்பிலும் காட்சிப் பொருளாக இருக்கிறது.