எஸ்.பூவேந்தஅரசு, பெரியமதியாக்கூடலூர்

கட்சி நிர்வாகிகள் என்னதான் திறமைசாலிகளாக இருந்தாலும் தலைமையை மீறி செயல்பட முடியாத நிலை இருப்பதால்தானே வாரிசு அரசியலை ஏற்கவேண்டிய கட்டாயம் உருவாகிறது?

கட்சிக் கட்டுப்பாட்டுக்கும் உள்கட்சி ஜனநாயகத்திற்கும் இடையில் கட்டப்பட்டுள்ள பெருஞ்சுவரால் ஏற்படும் மோசமான விளைவு இது.

keelvenmani

Advertisment

நித்திலா, தேவதானப்பட்டி

கீழவெண்மணியில் 44 பேர் உயிரோடு கொளுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டதன் 50-ஆம் ஆண்டு நினைவு தினம் நமக்கு எதைக் கற்பிக்கிறது?

Advertisment

அரைப்படி நெல்தான் விவசாயத் தொழிலாளர்கள் கேட்ட கூலி உயர்வு. அதன் விளைவாக உருவான போராட்டத்தை ஒடுக்க நிலவுடைமையாளர்கள் கைக்கொண்ட கொடூரம்தான், விவசாயத் தொழிலாளர்கள் சேர்ந்திருந்த குடிசைக்கு வைக்கப்பட்ட தீ. போராட்டத்தை முன்னெடுத்தது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி. மாநிலத்தில் ஆட்சியில் இருந்தது தி.முக., மத்தியில் ஆட்சி செய்தது காங்கிரஸ். வர்க்க வேறுபாடு, வருண பாகுபாடு, சட்டம்-ஒழுங்கு பிரச்சினை அனைத்தும் உள்ளிட்டதுதான் 1968 டிசம்பர் 25-ல் நடந்த கீழவெண்மணி படுகொலைகள். குடிசையை எரித்து, மக்களின் உயிர் பறித்த நிலவுடைமையாளர்கள் நீதிமன்ற வழக்குகளில் விடுதலை ஆனார்கள். எனினும், இடதுசாரி விவசாயத் தொழிலாளர்களின் உயிர்த் தியாகமானது மத்திய-மாநில அரசுகளை விழிப்புறச் செய்தது. நிலச்சீர்திருத்தம், கூலி நிர்ணயம், பண்ணையடிமை முறையிலிருந்து மீட்பு, விவசாயத்தில் புதுமை, வாழ்வாதார நிலை உயர்வு என, பல மாற்றங்களை உருவாக்கியது. எனினும் முற்றிலுமாக எல்லாம் மாறிவிடவில்லை. சாதி ஒடுக்குமுறைக்கு எதிராகவும், அதைக் கட்டிக்காக்கும் மதவெறிக்கு எதிராகவும் முற்போக்கு -சமூகநீதி -மதச்சார்பற்ற சக்திகள் அனைத்தும் ஒருங்கிணைய வேண்டிய பாடத்தையும் கீழவெண்மணியின் 50-ஆம் ஆண்டு நினைவு கற்பிக்கிறது.

உமரி பொ.கணேசன், மும்பை-37

"ராகுல்காந்தியிடம் உள்ள பண்பு மோடியிடம் இல்லை' என சிவசேனா கட்சியின் பத்திரிகை "சாம்னா' கூறுகிறதே?

பக்கத்து, பக்கத்து வீடுகளில் இருக்கும் பங்காளிகளுக்குள் தகராறு வரும்போது, எதிர் வீட்டுக்காரர் எவ்வளவோமேல் என்று தோன்றும்.

சி.கார்த்திகேயன், சாத்தூர்

சோதனைகள் தொடர்ந்தாலும் டி.டி.வி.தினகரன் சிறிதும் கலங்காமல் சிரித்தபடி பேட்டி அளிக்கிறாரே?

பலவீனத்தை வெளிப்படுத்தாமல் இருப்பதே அரசியலில் பலம் என்பதை தினகரன் உணர்ந்திருக்கிறார்.

வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு

"மத்தியில் கூட்டணி அரசு ஏற்பட்டால் குழப்பங்கள் ஏற்பட்டு, நிலையான ஆட்சியை நடத்த முடியாது' என்கிறாரே மத்திய அமைச்சர் அருண்ஜெட்லி?

வாஜ்பாய் தலைமையில் 5 ஆண்டுகள் முழுமையாக நடந்த பா.ஜ.க.வின் கூட்டணி ஆட்சி மீது அருண்ஜெட்லிக்கு அப்படி என்ன கோபம்?

அயன்புரம் த.சத்தியநாராயணன், சென்னை-72

மாவலியின் புத்தாண்டு இலட்சியம் என்ன?

"எந்தப் புது இலட்சியத்தையும் தேடி அலையாமல், "ஒவ்வொருநாளும் புதுநாளே.. ஒவ்வொரு மணித்துளியும் நம் இலக்கை அடைவதற்கான கூடுதல் வாய்ப்பே' என நினைத்து செயலாற்றுவது என்கிற பழைய இலட்சியமே புத்தாண்டிலும் தொடரும்.

காந்தி தேசம்

keelvenmaniமல்லிகா அன்பழகன், சென்னை-78

பிள்ளைகளை சரியாக வளர்க்காததும், மனைவியும் தன் கொள்கைகளைக் கடைப்பிடிக்க வேண்டுமென நிர்பந்தித்ததும் "மகாத்மா'வுக்குரிய செயலா?

"தன்னைப் பின்பற்றுகிற அனைவரும் தன்னுடைய சத்யாக்கிரக வழியைக் கடைப்பிடிக்க வேண்டும்' என விரும்பியவர் காந்தி. தன் பிள்ளைகளையும் சிறுவயதில் அதற்குரிய கட்டுப்பாட்டுடன் வளர்க்க முயன்றார். ஆனால், அவர்கள் வளர்ந்தபோது, தந்தையின் கட்டுப்பாடுகளையும் நெருக்கடிகளையும் விரும்பாமல் அவற்றை மீறவும் செய்தனர். மூத்த மகன் ஹரிலால், இங்கிலாந்தில் வழக்கறிஞருக்குப் படிக்க விரும்பியதை காந்தி அனுமதிக்கவில்லை. அதுவே வெறுப்பாக மாறி, ஹரிலாலின் வாழ்க்கைப் போக்கையே முற்றிலுமாக மாற்றிவிட்டது. காந்தி கொல்லப்பட்டு 6 மாதம் கழித்து, ஹரிலால் காச நோய் பாதிப்பினால் இறந்துபோனார். "தோளுக்கு மேல் வளர்ந்துவிட்டால் தோழன்' என்பதுதான் காந்திக்கும் அவரது மகன்களுக்குமான உறவு.

அதேநேரத்தில், காந்தியின் மனைவி கஸ்தூரிபா, "கணவனே கண்கண்ட தெய்வம்' என்கிற மரபு வழியிலானவர். பிள்ளைகளைப் போல அவருக்கும் தனிப்பட்ட விருப்பங்கள் உண்டு. ஆனால், கணவரின் விருப்பத்துக்கேற்ப தன் வாழ்வை அமைத்துக்கொண்டார். தென்னாப்பிரிக்காவில் நிறவெறி அரசுக்கு எதிரான காந்தியின் போராட்டங்களிலும், இந்திய விடுதலைப் போராட்டத்திலும் கஸ்தூரிபாய் ஈடுபட்டு, சிறை சென்றார். காந்தியின் சபர்மதி ஆசிரம வாழ்க்கை, கஸ்தூரிபாவுக்கு ஆக சிரமமாக இருந்தபோதும் அதனை ஏற்றுக்கொண்டார். இதுபற்றி காந்தி குறிப்பிடுகையில், "நான் அவளிடம் கடுமையாக நடந்து கொண்டதற்கெல்லாம் அன்பே காரணம். மனைவி என்றால் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு அவள் உதாரணமாக விளங்கும்படி செய்யவே நான் விரும்பினேன்'“என்கிறார். இது காந்தியின் பார்வை. கஸ்தூரிபாவின் பார்வையிலிருந்து இதை நோக்கினால் எப்படி இருக்கும் என்பதை மைதிலி சிவராமன் தனிப்புத்தகமாகவே எழுதியிருக்கிறார். தனிப்பட்ட கெடுபிடிகளில் காந்தியும் நம்மைப் போன்ற மனிதரே! "மகாத்மா' என காந்தி போற்றப்படுவது பொதுவாழ்வின் உயர்ந்த நெறிகளுக்காகத்தான்.