ஜி.மகாலிங்கம், காவல்காரபாளையம்

உர்ஜித் பட்டேலை ராஜினாமா செய்ய வைத்தது யார்?

மோடி அரசின் பொய்யான வாக்குறுதிகளும் பொறுப்பற்ற பொருளாதாரத் திட்டங்களும்.

mavalianswers

Advertisment

ஆர்.துரைசாமி, கணபதிபுதூர், கோவை-6

ம.பி. சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க.வை விடவும் குறைந்த சதவீத வாக்குகளைப் பெற்ற காங்கிரஸ் ஆட்சியமைப்பது எந்தவகை ஜனநாயகம்?

Advertisment

ஒரு மாநிலத்தில் ஒட்டுமொத்தமாக வாங்கிய வாக்குகள், தேர்தல் முடிவுகளைத் தீர்மானிப்பதில்லை. ஒவ்வொரு தொகுதியிலும் யார் அதிக வாக்குகள் வாங்கியிருக்கிறார்களோ அவர்தான் வெற்றி பெற்றவராவார். கடும் போட்டி நிலவிய மத்திய பிரதேசத்தில் தொகுதிவாரியாக நிலவிய முன்னிலையில், பா.ஜ.க.வை சற்று முந்திய காங்கிரசுக்கு, பகுஜன் சமாஜ் கட்சி கொடுத்த ஆதரவு ஆட்சியைப் பிடிக்க வைத்துவிட்டது. இதுதான் இன்றைய தேர்தல் அரசியல் ஜனநாயகம். பா.ஜ.க. இதில் பலத்த ஷாக் ஆகியுள்ள நிலையில், ம.பி.யின் துணைமுதல்வரான ஜோதிர்ஆதித்ய சிந்தியாவை ராஜஸ்தானின் முன்னாள் முதல்வரான வசுந்தரராஜே கட்டியணைத்து தந்துள்ள முத்தம், அரசியலுக்கு அப்பாற்பட்ட அத்தை-மருமகன் ரத்தப் பாசம்.

உமரி.பொ.கணேசன், மும்பை-37

எதிர்க்கட்சிகளைக் கண்டித்து ஆளும்கட்சி போராட்டம் நடத்துவது எங்கும் கேள்விப்படாத ஒன்றாகத் தெரிகிறதே?

ரஃபேல் விவகாரத்தில் உச்சநீதிமன்றத் தீர்ப்பையடுத்து காங்கிரசுக்கு எதிராக பா.ஜ.க. போராட்டம் நடத்துகிறது. தீர்ப்பு கொடுத்த நீதிபதியையே நாராசமாகத் திட்டி, போக்குவரத்தை முடக்கிப் போராட்டம் நடத்திய முன்னுதாரண ஆட்சியாளர்கள் தமிழ்நாட்டில் இருக்கிறார்கள்.

பி.மணி, வெள்ளக்கோவில், திருப்பூர்

கர்நாடகாவில் ஆட்சியில் இருக்கும் கர்நாடக கூட்டணி அரசு, தமிழகத்தை வஞ்சிக்கும்போது அதே காங்கிரஸுடன் தமிழகத்தில் தி.மு.க. கூட்டணி அமைக்கலாமா?

அரசியல் களத்தில் இதுபோன்ற தர்மசங்கடங்கள் ஏராளம். கர்நாடக காங்கிரஸ் மட்டுமா, கேரள மார்க்சிஸ்ட், ஆந்திர தெலுங்குதேசம் ஆகியவற்றுடனும் நமக்கு நதிநீர்ப் பிரச்சினை உள்ளது. எல்லாக் கட்சிகளுடனும் தி.மு.க. தோழமையுடன் உள்ளது.

அ.யாழினி பர்வதம், சென்னை-78

ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல்களில் பா.ஜ.க. தோல்வியடைந்தது ராகுல்காந்தியின் சாதனையாகுமா?

தனது பலத்தைவிட எதிரியின் பலவீனத்தை சரியாகப் பயன்படுத்தி ம.பி.யில் கமல்நாத்தையும், ராஜஸ்தானில் கெலாட்டையும், சட்டீஸ்கரில் பூபேஷ்பாகலையும் முதல்வராக்கியிருப்பது ராகுலின் சாதனைதானே!

எஸ்.பூவேந்த அரசு, பெரியமதியாக்கூடலூர்

காவிரி நீர் மேலாண்மை ஆணையம் ஒழுங்காகத்தான் செயல்படுகிறதா, என்ன?

வாரியத்திற்குப் பதில் ஆணையம் அமைத்தபோதே அதன் ஒழுங்கும் லட்சணமும் தெரிந்துவிட்டது.

அன்பு, சாத்தூர்

ஜெ. சிகிச்சையின்போது உணவுக்காக மட்டும் 1 கோடியே 17 லட்சத்து 4 ஆயிரத்து 925 ரூபாய் செலவானதாமே?

யார், யாரோ என்னென்னவோ தின்று, செத்துப்போன ஜெ. வாயால் ஏப்பம் விட்டிருக்கிறார்கள்.

_____________

காந்தி தேசம்

அண்ணா அன்பழகன், அந்தணப்பேட்டை

காந்தி வைத்திருந்த அந்த 3 குரங்கு பொம்மைகளின் பின்னணி என்ன? அதை எப்போது, எதற்காக மக்களிடம் அறிமுகப்படுத்தினார்?

தீயவற்றைப் பார்க்காதே -தீயவற்றைப் கேட்காதே -தீயவற்றைப் பேசாதே என்பதுதான் காந்தி வைத்திருந்த 3 குரங்கு பொம்மைகள் சொல்லும் தத்துவம். இந்திய மண்ணில் மலர்ந்த இந்தத் தத்துவத்தை புத்த மதத்தினர் பல நாடுகளுக்கும் கொண்டு சென்றனர். அதன் தொடர்ச்சியாக சீனா, ஜப்பான் போன்ற புத்த மதம் பரவிய நாடுகளிலும் மனித வாழ்க்கை நெறிகளை குரங்கு வடிவில் வெளிப்படுத்தும் பழக்கம் உருவானது. சீன தத்துவ அறிஞர் கன்ஃப்யூஷியஸ் வகுத்த வாழ்க்கை நெறிமுறைகளை அடிப்படையாகக் கொண்டு 17-ஆம் நூற்றாண்டில் ஜப்பான் நாட்டின் நிக்கோவில் உள்ள கோவிலின் கதவில் இந்த 3 குரங்கு பொம்மைகளை ஹிதாரி ஜிங்காரோ என்பவர் செதுக்கியுள்ளார்.

காந்தியின் வாழ்க்கை முறை என்பது நல்லவற்றைத் தேர்வு செய்வது. எனவே, தீயவற்றைத் தவிர்க்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் இந்த 3 குரங்கு பொம்மைகள், அவரைக் கவர்ந்ததில் வியப்பில்லை. அந்த பொம்மைகளை தனது சபர்மதி ஆசிரமத்தில் வைத்திருந்தார் காந்தி. ஆசிரமத்தில் காந்தி பயன்படுத்திய பலபொருட்கள் பாதுகாக்கப்படுகின்றன. சில முக்கியமான பொருட்கள் சென்ற இடம் தெரியவில்லை. மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த ராஜீவ்கரே என்ற தகவல் உரிமைச் செயல்பாட்டாளர் இது குறித்து பிரதமர் அலுவலகம், மத்திய அரசின் கலாச்சாரத் துறை அமைச்சகம் ஆகியவற்றுக்கு விண்ணப்பித்து, பதில் கிடைக்காமல் காத்துக் கொண்டிருக்கிறார். காந்தி வைத்திருந்த 3 குரங்கு பொம்மைகள் உயர்ரக உலோகத்தால் செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகமும் உள்ளது. "தீயவற்றை செய்யாதே' என்று சொல்லும் குரங்கு பொம்மை இல்லாததால், யாரேனும் எடுத்துச் சென்றுவிட்டார்களோ என்ற கேள்வியும் எழுந்துள்ளது.